ஓடிடியில் வெளியாவதை கதாநாயகர்கள் ஏன் விரும்புவதில்லை? - விரிவான அலசல்

தமிழ் நடிகர்கள், தங்கள் படங்கள் ஓடிடியில் வெளியாவதை விரும்புவதில்லை -  ஏன் என்பது பற்றிய அலசல் இங்கே.
ஓடிடியில் வெளியாவதை கதாநாயகர்கள் ஏன் விரும்புவதில்லை? - விரிவான அலசல்

திரைப்படங்களைத் திரையரங்குகளில் காண்பதுதான் பலருக்கும் நிறைவான அனுபவமாக இருக்கும். அதுவும் பெரிய நடிகர்களின் படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்ப்பது என்பது எதையோ சாதித்ததைப் போன்ற உணர்வை ரசிகர்களுக்கு அளிக்கும்.

ஒரு படத்தின் முக்கிய காட்சிகளை நண்பர்களுடன் சேர்ந்து சப்தம் போட்டுத் தங்கள் உணர்வுகளைப் பிறருக்கும் கடத்திப் பார்ப்பது என்பது வாழ்வின் மிகச் சிறந்த அனுபவமாக இருக்கும். வெளியில் நமக்கு எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும், அவற்றை இரண்டு மணி நேரம் மறந்துவிட்டு வேறு உலகத்துக்கு நம்மைக் கூட்டிச் செல்லும் வல்லமை திரையரங்குகளுக்கு  உண்டு. 

சமீபத்தில் ஒரு மருத்துவமனையில் அடிபட்ட ஒரு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க முயற்சித்திருக்கிறார் மருத்துவர் ஒருவர். அந்த சிறுவனுக்கு பயத்தின் காரணமாக, சிகிச்சை பெற சம்மதிக்கவில்லை. அப்போதுதான் அச்சிறுவனின் உறவினர்கள் மூலம் அவன் நடிகர் விஜய்யின் ரசிகன் என்பது தெரிய வந்திருக்கிறது. பின்னர் அச்சிறுவனுக்கு பிகில் படத்தைத் தனது கைபேசியில்  காண்பித்து மெல்ல சிகிச்சையை மேற்கொண்டிருக்கிறார் மருத்துவர். திரைப்படங்களின் வீரியத்தை உணர இந்த ஒரு சம்பவம் போதும்.

திரையரங்குகள் ஏன் முக்கியம்?

ஓடிடியில் படங்கள் பார்க்கும்போது, பாதியில் நிறுத்திவிட்டு மீண்டும் பார்க்கும் வசதி இருக்கும். பிடிக்கவில்லை என்றால்கூட, பாதியிலேயே அந்தப் படத்தை பார்ப்பதைத் தவிர்க்க முடியும். ஆனால், திரையரங்குகளில் பார்க்கும்போது நமது முழுக் கவனமும் திரையில்தான் இருக்கும். அதனால் ஒரு படத்தை முழுமையாக ரசிக்க முடியும்.

மிகவும் மெனக்கெட்டு முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் படங்கள்  சரியில்லை என்றால் அல்லது சலிப்பை ஏற்படுத்தினால், அதனை  நண்பர்களுடன் கிண்டலடித்து, விமரிசித்து பார்ப்பது என்பது அலாதி அனுபவமாக இருக்கும். சில நேரங்களில் திரையைவிட, திரையரங்குகளில் நடக்கும் நிகழ்வுகள் அதிக சுவாரசியமானதாக இருக்கும். 

இப்படி திரையரங்குகளில் மட்டுமே படங்களை பார்க்க முடியும் என்ற நிலை மாறி, இப்போது பல தளங்களில் நாம் திரைப்படங்களை  ரசித்துக்கொண்டிருக்கிறோம். தொலைக்காட்சி, ஓடிடி என அது பல்வேறு  பரிணாமங்களைச் சந்தித்து வருகின்றன. 

ஓடிடியினால் திரையரங்குகளுக்கு ஆபத்தா?

ஒரு காலத்தில் தொலைக்காட்சிகள் வருகையின்போது திரையரங்குகளில் திரைப்படங்களை ரசிகர்கள் பார்ப்பது குறையும் என்று திரையரங்க உரிமையாளர்கள் கவலை தெரிவித்ததாகக் கூறுவர்.

பின்னர் திருட்டு விசிடிக்கள் பிரச்னை தலைதூக்கியதும் திரையரங்குகள் பாதிக்கப்படும் என்று கூறப்பட்டது.

பின்னர் ஓடிடியில் படங்கள் வெளியாகும்போது திரையரங்க உரிமையாளர்கள் கண்டனம் தெரிவித்தார்கள்.

ஆனால் இவ்வாறு பட்டியலிட்ட அனைத்து பிரச்னைகளின் போதும் மக்கள்  திரையரங்குகளுக்கு வருவது தடைப்படவில்லை. அதற்கு சமீபத்திய உதாரணம் நடிகர் விஜய்யின் மாஸ்டர். 

கரோனா தொற்று பரவல் காரணமாக மூடியிருந்த திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டு வெளியான திரைப்படம் மாஸ்டர்.

'கரோனா அச்சம் காரணமாக மக்கள் திரையரங்குகளுக்கு வரமாட்டார்கள், மக்கள் ஓடிடியில் படம் பார்த்து பழகிவிட்டார்கள். இதனால் திரையரங்குகளின் படம் பார்க்கும் எண்ணம் குறைந்து விட்டது, திரையரங்குகளில் படம் பார்ப்பதால் செலவு அதிகம். எப்படியும் ஓடிடியில் படம் வெளியாகும், அதிலேயே பார்த்துக்கொள்ளலாம் என மக்கள் திரையரங்குகளுக்கு வரமாட்டார்கள்' என்ற அத்தனை கூற்றுகளையும் பொய்யாக்கியது மாஸ்டர் திரைப்படம். ஆனால் அதன் பிறகு வந்த படங்கள் மாஸ்டர் அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை. 

மாஸ்டருக்கு கிடைத்த வரவேற்பு, மற்ற படங்களுக்கு ஏன் இல்லை?

முதன் முதலாக விஜய் - விஜய் சேதுபதி இணையும் படம், 'கைதி' படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம், அனிருத்தின் பாடல்கள், இப்படி மக்களைத் திரையரங்குகள் நோக்கி ஈர்ப்பதற்கு மாஸ்டரில் பல்வேறு காரணிகள் இருந்தன. ஆனாலும் மாஸ்டருக்கு பிறகு வெளியான படங்கள் விமரிசன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெறவில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. 

மாஸ்டர் படத்துக்குப் பிறகு தெலுங்கில் வெளியான 6 படங்கள் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றன. ஆனால் தமிழில் மாஸ்டர் படத்துக்குப் பிறகு எந்தப் படமும் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியைப் பெறவில்லை. ஏனெனில் மக்கள் படங்களைப் பார்ப்பதில் விமரிசனங்கள் ஒரு பெரிய பங்கு வகிக்கின்றன என்பதை நாம் மறுப்பதற்கில்லை.

ஆனால் கலவையான விமரிசனங்களைப் பெற்றிருந்தாலும் மாஸ்டர் படத்தின் வெற்றி, விஜய் கொண்டிருக்கும் ரசிகர்களின் பலம் என்ன என்பதை உலகுக்கு மிகுந்த வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறது.

தமிழக அளவில் மட்டுமல்ல, இந்திய அளவில் மட்டுமல்ல, உலகையே திரும்பி பார்க்க வைத்தது மாஸ்டர். அந்த நேரத்தில் உலக அளவில் திரையரங்குகளில் வெளியான படங்களில் மாஸ்டர் மட்டுமே வசூலில் முதலிடத்தில் இருந்தது. கரோனா தொற்று பரவும் காலத்தில் மக்கள் திரையரங்குகளுக்கு வருவதற்கு தயங்கிக்கொண்டிருந்த காலம் அது என்பது குறிப்பிடத்தக்கது. 

திரையரங்குகளில் படம் வெளியாவது ஒரு நடிகருக்கு ஏன் முக்கியம்?

திரையரங்குகளில் படங்கள் வெளியானதால்தான் எம்ஜிஆர் மக்கள் திலகமாகவும், சிவாஜி கணேசன் நடிகர் திலகமாகவும், ரஜினிகாந்த் ஒரு சூப்பர் ஸ்டாராகவும் கமல் உலக நாயகனாகவும், அஜித் மற்றும் விஜய் தல, தளபதியாகவும் ஆக முடிந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

ஒரு நடிகர் மாநிலத்தின் முதல்வரானதும், அதன் பிறகு வரும் நடிகர்கள் முதல்வராக துடிப்பதும் திரையரங்குகளில் மக்கள் தங்கள் படங்களுக்கும் கொடுக்கும் வரவேற்பை பார்த்துத்தான். 

ஒரு நடிகரின் பலம் என்ன என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டுமானால் அவரது படங்கள் வெளியாகும் திரையரங்குகளைப் பார்த்தாலே போதும். பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகிவிட்டால், ஆள் உயர கட் அவுட்கள் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது, பட்டாசு வெடிப்பது எனத்   திரையரங்குகள் திருவிழா கோலம் பூணும். 

தற்போது ஆன்லைனிலேயே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துவிடலாம். ஆனால் ஒரு காலத்தில் திரையரங்குகளில் சென்றுதான் டிக்கெட்டுக்கள் வாங்க முடியும். இதனால் படங்கள் வெளியாகும் முதல் நாள் இரவே திரையரங்குகள் முன் ரசிகர்கள் வரிசைகட்டி நிற்க ஆரம்பித்துவிடுவார்கள். ரசிகர்களின் வரிசை திரையரங்குகளுக்கு அருகில் இருக்கும் சாலைகளை மறித்துச்செல்லும் அளவுக்கு இருக்கும். இதன் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து தடைப்பட்டதை நாம் செய்திகளில் படித்திருப்போம். 

சூர்யா ஏன் ஓடிடியைத் தேர்ந்தெடுத்தார்?

நடிகர் சூர்யாவின் 'சூரரைப்போற்று' திரைப்படமும், பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வெளியான 'சார்பட்டா பரம்பரை' திரைப்படமும் ஓடிடியில் வெளியாகி நல்ல விமரிசனங்களைப் பெற்றன. மேலும் ரசிகர்களையும் கவர்ந்தன. ஒருவேளை இந்தப் படங்கள் திரையரங்குகளில்  வெளியாகியிருந்தால் மேலும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும். அந்தப் படங்களின் வசூல் விவரமும் நமக்கு தெரியவந்திருக்கும். 

ஒரு படம் ஓடிடியில் வெளியானால் தயாரிப்பாளர்களுக்கு லாபகரமானதாக  இருக்கலாம். ஆனால் திரையரங்குகளில் வெளியானால் மட்டுமே அந்தப் படத்தின் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு உதவிகரமானதாக இருக்கும். காரணம், ஒரு படத்துக்கு ரசிகர்கள் அளிக்கும் வரவேற்பு, அதன் வசூல் விவரம் ஆகியவை அந்தப் படத்தில் பணிபுரிந்த கலைஞர்களுக்கு, திரைப்படச் சந்தையில் அவர்களது சம்பளம் உயர்வதற்கும், அவர்களது  அடுத்த படத்துக்கான பட்ஜெட் உயர்வதற்கும் காரணமாக இருக்கும். இதனாலேயே பெரும்பாலான நடிகர்கள் தங்கள் படங்கள் திரையரங்குகளில் வெளியாவதையே விரும்புகின்றனர். 

நடிகர் சூர்யாவும் தனது படம் திரையரங்குகளில் வெளியாவதையே விரும்பியிருப்பார். ஆனால் சூரரைப் போற்று படத்துக்கு அவர்தான் தயாரிப்பாளர். மேலும் அந்த நேரத்தில் 'பொன்மகள் வந்தாள்' உள்ளிட்ட  படங்கள் அவரது தயாரிப்பில் இருந்தன. தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் வெளியில் இருந்தே கடன்களைப் பெற்று படங்களைத் தயாரித்து வருகிறார்கள். அந்தக் கடனுக்கு அவர்கள் வட்டி கட்டியாக வேண்டும். 

அந்தப் படம் விரைவில் வெளியாகி நல்ல வசூலைப் பெற்றால்தான் அவர்களால் அந்தக் கடனைத் திரும்ப அளிக்க முடியும். இல்லையன்றால் படம் வெளியாகும் வரை அவர்கள் வட்டி கட்டியாக வேண்டும். ஒருவேளை அவர்கள் மற்ற படங்களை தயாரித்து வந்தால் முந்தைய படங்களுக்கு அவர்கள் வாங்கிய கடன் தற்போதைய படங்களின் வெளியீட்டைப் பாதிக்கும். நடிகர் சூர்யாவுக்கும் அந்த நிலைதான் எனக் கூறப்படுகிறது. 

இதேதான் நடிகர் சிவகார்த்திகயேனுக்கும் என்று தெரிகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் தான் தயாரித்து நடித்துள்ள 'டாக்டர்' படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இப்பொழுது உள்ள சூழ்நிலையில் திரையரங்குகள் எப்பொழுது திறக்கப்படும் என யாராலும் உறுதிபட தெரிவிக்கமுடியவில்லை. இதன் காரணமாகவே அவர் தனது 'டாக்டர்' படத்தை ஓடிடியில் வெளியிட முடிவெடுத்திருக்கலாம். அவரது தயாரிப்பில் உருவாகியிருந்த 'வாழ்' திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

இதனைப் போல ஜகமே தந்திரம் படம் ஓடிடியில் வெளியாவதாகக் கூறப்பட்டபோதும், தனுஷ் தனது சுட்டுரைப் பக்கத்தில் படம்  திரையரங்குகளிலேயே வெளியாகும் என தனது ரசிகர்களுக்கு உறுதி தெரிவித்திருந்தார். இது அந்தப் படம் திரையரங்குகளில்தான் வெளியாக வேண்டும் என்பது தனுஷின் விருப்பமாகவும் இருந்துள்ளதைக் காட்டுகிறது. இருப்பினும் அந்தப் படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில்தான் வெளியாகியிருந்தது. இது மட்டுமல்லாமல் பல படங்கள் திரையரங்குகள் திறக்கப்படுவதை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன. அவற்றைக் காலமும் கரோனாவும்தான் தீர்மானிக்கவேண்டும். 

ஓடிடி தயாரிப்பாளர்களுக்கு ஏன் முக்கியம்?

கரோனா எனும் பெருந்தொற்று காலத்தில் மக்களின் உயிர் அரசுக்கு மிக முக்கியம். தற்போது மூன்றாவது அலை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மற்றொருபுறம் திரைப்படங்களில் கோடிக்கணக்கான பணத்தைத் தயாரிப்பாளர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள். ஒரு படம் தாமதமானால், அந்தப் படத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகளின் வீரியம் குறைய வாய்ப்பிருக்கிறது. அல்லது அதே கதையம்சத்துடன் வேறு படங்கள் உருவாக வாய்ப்பிருக்கிறது. திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில் ஓடிடி அவர்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதனால் ஒரு படத்தைத் தகுந்த காலத்தில் வெளியிட முடியும்.  ரசிகர்களாலும் அந்தப் படத்தை உடனடியாகக் காண முடியும். 

'தூதன் வருவான்... மாரி பெய்யும்..' என ஆயிரத்தில் ஒருவன் பட வசனம் போல்,  நிச்சயம் இந்த நிலை மாறும். திரையரங்குகளில் படங்களைக் காணும் நிலை மீண்டும் உருவாகும். நம்புவோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com