'ஹே ராம்' - நம் மனசாட்சியுடன் உரையாடிய ஒரு காவியம் !

1947-ல் சுதந்திரம் கிடைப்பதற்கு முன் இந்தக் கதை நடந்து முடிந்திருந்தால் இது ஒரு சாதாரணக் கதையோடு நின்றிருக்கும் .
'ஹே ராம்' -  நம் மனசாட்சியுடன் உரையாடிய ஒரு காவியம் !

காந்தியைக் கொல்ல ஆயிரம் வழிகள் இருக்கிறது . ஆனால் அதற்கானக் காரணம் ஒன்றுதான். ’வெறுப்பு’. சாகேத் ராம் படித்தவன் . புத்திசாலி . எல்லாவற்றையும் விட எதார்த்தவாதி. புரட்சியைப் பற்றியோ விடுதலையைப் பற்றியோ எந்தத் தேவையும் வெறியும் அவனுக்குள் இல்லை. 

தமிழகத்தில் பிறந்து மொகஞ்சதாரோவில் வேலை செய்து கொண்டு பெங்காலிப் பெண்ணைக் காதலிக்கும் ஒரு இந்தியன் . காந்தியைக் கொல்லவதற்கு இது அடையாளம் இல்லை. பின் என்ன? காதலியை இஸ்லாமியர்கள் கற்பழித்துக் கழுத்தை அறுத்துக் கொல்கிறார்கள். இந்தக் கொடுமையை சராசரியானவன் எப்படி எதிர்கொள்வான்? சாகேத் ராம் உடைந்து நிற்கிற நேரத்தில் அவனிடம் ஒரு கருத்து வருகிறது. 

இதற்கெல்லாம் காரணம் ‘மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி’. துப்பாக்கியை வாங்குகிறான். காந்தியைச் சுட கிளம்புகிறான். முக்கியமாக இது இஸ்லாமிய வெறுப்பை உமிழ்ந்து கொட்டியக் கதை என பல ஆண்டுகளாக ‘ஹே ராம்’-யை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள் . உண்மையில் அப்படம் பேசியது ஒரு கோட்சே சுட்டான் ஆயிரம் கோட்சேக்கள் சுடுவதிலிருந்து விலகிக்கொண்டோம் என்பதைத் தான்.

மத வெறிபிடித்தவர்களுக்கும் காந்திக்கும் ஆயிரம் வித்தியாசம் இருக்கிறது என்கிற எளிய உண்மையை, படித்த சாகேத் ராமால் ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை? இந்தக் கருத்துப் புரிந்தவர்களுக்கு இந்தப் படம் எதைப் பேசியது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. முன் சொன்னது போல அவன் ஒரு சராசரி. அவன் காதலி அபர்ணா இறக்காமல் இருந்திருந்தால் நிச்சயமாக அவனுக்கு காந்தி தேவையில்லை. ஒரு முட்டாள்த் தனமான கருத்தைக் கூட பரிசீலிக்காமல் காந்தியைச் சுடக் கிளம்புகிறான். எந்த இடத்தில் அந்த வெறுப்பைக் கைவிட்டான்? 

இஸ்லாமியனான அம்ஜத் (ஷாருக்கான்) மரணம். ஒருவகையில் அவனுடைய சகோதரனைப் போல அவன் இருந்தான். அம்ஜத் தலையில் ரத்தம் வடிந்ததும் ஒரு உண்மையை நெருங்குகிறான். இந்துவான நானும் இஸ்லாமியனான நீயும் மோதிக் கொள்வதற்கு எந்த விதத்தில் காந்தி பொறுப்பு? இந்தக் கேள்வியை நம்பாதவர்களுக்காகவே ‘ஹே ராம்’ உருவாக்கப்பட்டிருக்கிறது. 

1947-ல் சுதந்திரம் கிடைப்பதற்கு முன் இந்தக் கதை நடந்து முடிந்திருந்தால் இது ஒரு சாதாரணக் கதையோடு நின்றிருக்கும் . 2000-ஆம் ஆண்டில் வயோதிகத்தின் இறுதிப் பிடியில் உயிருக்குப் போராடும் சாகேத் ராம் இந்து - முஸ்லீம் கலவரத்தில் இறந்து போகும் போதுதான் அதன் மொத்த சித்திரமும் நிறைவு பெருகிறது. ஒருவகையில் கமல் திரைக்கதையின் மூலமும் காட்சியமைப்பினாலும் ஹே ராம்-மில் நிகழ்த்திக் காட்டியதெல்லாம் அற்புதம் தான்.

அபர்ணா இறந்த போது வெறியுடன் வீதிக்கு வருகிற சாகேத் கண்ணில் படும் இஸ்லாமியர்களைச் சுட்டுக் கொல்கிறான். தூரத்தில் ஒரு இந்து இளைஞன் வயதான இஸ்லாமியரைக் குத்திக் கொலை செய்து விட்டு ‘அல்லா-கூ- அக்பர்’ என ஒளிந்து கொள்கிறான்.

வரலாற்றின் நிஜத்தின் காந்திக்கு நடந்தது இதுதானே? அடுத்த நொடியில் இறந்த முதியவரின் கண் தெரியாத பேத்தி கையில் பொம்மையை வைத்துக் கொண்டு தடுமாறும் காட்சி நம் மனசாட்சியை உலுக்கக் கூடியது. ‘ஹே ராம்’ அந்த ஒரு காட்சியிலேயே தான் பேச வந்தததை சரியாகச் சொல்லிவிட்டது. சுதந்திரம் கையில் இருக்கிறது. ஆனால் அதை வழிநடத்த யாருக்கும் கண் தெரியவில்லை.

துணுக்குற்று சாகேத் அடுத்த தூணிற்கு வரும் போது பாகன் இறந்து கிடக்க அங்குசத்தைத் தூக்கிக் கொண்டு யானை நடந்து வருகிறது. இவையெல்லம் வெறும் காட்சிப் போதாமைக்காக வைக்கப்பட்டவை அல்ல. சிந்தனை துளிர்க்கத் தயாராகும் தலைகளுக்கு அவர் சொல்ல வந்தது சரியாகச் சென்றிருக்கிறது. எல்லாவற்றையும் விட வசனங்கள் அபாரமாகக் கை கூடியிருப்பது தான் இப்படத்தின் பெரிய பலம்.

முக்கியமாக படத்தில் வரும் பெண்கள் காந்தியை உணர்ந்தவர்கள். எந்த சூழலிலும் அவர்களுக்கு காந்தியின் செயலின் மீது அவநம்பிக்கை வரவில்லை. அதற்கான காரணம் அவர்கள் யாரும் தரவுகளால் காந்தியை அளக்கவில்லை. ஆயுதத்தை விடச் சொன்னவன் அன்பை நோக்கித்தானே நகர முடியும் என்கிற ஒரு உள்ளுணர்வு. ஆனால் ஆண்களின் உலகில் காந்தி சிலருக்கு அசாதாரணமானவர். இன்னும் சிலருக்கு சாக வேண்டியக் கிழவன். 

இஸ்லாமியர்கள் மீதான மன வெறுப்பை சாகேத் ராம் அம்ஜத் உடனான உரையாடல் மூலமே வென்று வந்ததைத் தான் இறுதிக் காட்சியில் காந்தியின் ஓவியத்தின் கதவுகளைத் திறக்கும் போது ' நான் எதையும் மறைக்கவில்லை. எல்லா வகையான உரையாடலுக்கு தயாராகத் தான் இருந்தேன் ' என்கிற ஒரு காட்சி போதும் கமல்ஹாசன் ஏன் ஒரு மகா கலைஞன் என்பதற்கு. உண்மையில் 'ஹே ராம்’ செய்ய முயற்சி செய்ததெல்லாம் ஒரு நீண்ட உரையாடலைத் தான். 

மேலே சொன்னது எல்லாம் சாகேத் ராம் காந்தியை வந்தடைந்த பாதையைத் தான்.

 ஆனால் ஹே ராமை அப்படி ஒரு பகுதிக்கு மட்டும் தொகுத்துக் கொள்ள முடியவில்லை. அபயங்கர், மகாராஜா, லால் வாணி, வசுந்தரா என நீண்டு செல்கிற கதாப்பாத்திரங்கள் வழியே பேசப் பட வேண்டியவை ஏராளம்.
 தொழிற்நுட்பம், பின்னணி இசை, எங்கேயும் உடையாத திரைக்கதை என கமல் செய்தது எல்லாம் மேஜிக். எந்தக் காலத்திலும் தவிர்க்க முடியாத, கமல் நினைத்ததை சரியாகக் திரைமொழியாக மாற்றியப் படங்களில் ஹே ராம் இருக்கிறது. அந்தப் படத்தில் வருவதைப் போலவே ' சரீரத்திற்கும் ஆத்மாவுக்குமான உறவு' என்பதைப் போலத்தான் கலைக்கும் கமலுக்குமான உறவு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com