ஞாபகம் வருகிறதா? சினிமாவில் 62 ஆண்டுகளை நிறைவு செய்த கமல்ஹாசன்!

களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகமான நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் 62 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
ஞாபகம் வருகிறதா? சினிமாவில் 62 ஆண்டுகளை நிறைவு செய்த கமல்ஹாசன்!

களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகமான நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் 62 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

பீம்சிங் இயக்கத்தில் நடிகர் ஜெமினி கணேசன், நடிகை சாவித்ரி நடிப்பில் 1960 ஆம் ஆண்டு  வெளியான களத்தூர் கண்ணம்மாவில் கையைக் கட்டிக்கொண்டு ‘அம்மாவும் நீயே.. அப்பாவும் நீயே’ எனப் பாடும் கமல்ஹாசன் உண்மையிலேயே சினிமாவை நினைத்துதான் தன் உதடுகளை அசைத்திருக்க வேண்டும்.

அந்தப் படம் சரியாக இதே நாளில் 62 ஆண்டுகளுக்கு முன் (12.08.1960) வெளியானது. அதில்,  பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தையாக  அறிமுகமான கமல் 62 ஆண்டுகளுக்குப் பின்பும் ரசிகர்களால் கைவிடப்படாத கலைஞராக உள்ளார்.

இந்திய சினிமா பிரபலங்களில், விக்கிபீடியா திணறும் அளவு தகவல்களையும், சாதனைகளையும் கொண்ட ஒரே நடிகர் கமல்ஹாசனாகத் தான் இருக்க முடியும்.

நடிகர், எழுத்தாளர்,  திரைக்கதை ஆசிரியர், நடன இயக்குநர், பின்னணி பாடகர், ஒப்பனைக் கலைஞர்,  இயக்குநர், தயாரிப்பாளர் என பல்வேறு துறைகளிலும் தன்னுடைய முழு ஈடுபாட்டைச் செலுத்திய கமல்ஹாசன் தன் 62 ஆண்டுகால சினிமா வாழ்வில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 230 படங்களுக்கும்  மேல் நடித்துள்ளார். 4 தேசிய விருதுகள், பிரான்ஸின் செவாலியே விருது உள்பட 110 விருதுகளுக்குச் சொந்தக்காரர்.

அவர் திரைக்கதை, வசனத்தில் வெளியான ராஜபார்வை, அபூர்வ சகோதரர்கள், மைக்கல் மதன காமராஜன்,  தேவர் மகன், மகாநதி, ஹேராம், அன்பே சிவம், விருமாண்டி , விஸ்வரூபம் போன்ற ஏராளமான படங்கள் தமிழ் சூழலில் பெரிய தாக்கத்தைச் செலுத்தியுள்ளதை சினிமாவைப் பற்றி பேசிக்கொண்டிருப்பவர்களிடம் இன்றும் காணலாம்.

அனைத்தையும் தாண்டி சமீபத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் மூலம் இந்தியாவில் ரூ.400 கோடி வசூல் சாதனையை நிகழ்த்தி மீண்டும் ஒருமுறை  ‘கோடாம்பாக்க’ உலகத்தில் தான் யார் என்பதையும் காட்டியிருக்கிறார்.

கமல் சொல்வது போலவே, சினிமா துறையில் அவருக்கு தோல்வியென்பதே கிடையாது. முதலீடு செய்த பணம் திரும்ப வர வேண்டும் என்பது முக்கியமென்றாலும் எத்தனை கோடிகளை செலவு செய்தாலும் ஒரு படைப்பை காலம் கடந்து நிற்க வைக்க முடியுமா? யோசித்தால், சில படங்களைத் தவிர்த்து தான் ஏன் படத்தை இயக்க வேண்டும் என்கிற கேள்விக்கு கமல் நல்ல பதிலையே அடைந்திருப்பார் என்றே தோன்றுகிறது. 

குழந்தை நட்சத்திரமாக தன் 5 வயதில் நடிப்பைத் துவங்கியவர் தன்னுடைய 67-வது வயது வரை ‘ஆரம்பிக்கலாமா’? என சினிமாவில் தான் செய்ய வேண்டியவை இன்னும் ஏராளம் என்பதை உணர்த்திக்கொண்டே இருக்கிறார்.

உலக நாயகனுக்கு வாழ்த்துக்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com