சைபர் குற்றங்கள் என்பன, தகவல் தொடர்புக் கருவிகள் மூலம் நிதி மோசடி உள்ளிட்ட எந்தவொரு சட்டவிரோத செயலையும் மேற்கொள்வது என்று வரையறுக்கப்படுகிறது. ஒரு கணினி அல்லது ஒருங்கிணைக்கப்பட்ட கணினிகளைப் பயன்படுத்தி, தனிநபர்கள், வணிக நிறுவனக் குழுக்கள், அரசுகளைக் குறிவைத்து சைபர் குற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன. பயன்படுத்தப்படும் கருவி, இலக்கு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இது வகைப்படுத்தப்படுகிறது.
வளரும் தகவல்தொழில்நுட்பத்துக்கு ஏற்ப, சைபர் குற்றங்களும் அதிகரிக்கின்றன. கணினி அல்லது எந்தவகையான தகவல்தொடர்பு சாதனங்கள் மூலம் மோசடி நடந்தாலும் அது சைபர் குற்றமாக வரையறுக்கப்படுகிறது. சைபர் மோசடிகளிலிருந்து தற்காத்துக்கொள்ள, அது தொடர்பாக காவல்துறை விடுக்கும் முன்னெச்சரிக்கைகளை ஒருவர் அறிந்திருப்பது, இந்த பாதுகாப்பற்ற ஆன்லைன் உலகில், தனிநபர் மற்றும் குடும்பத்தினரின் தரவுகள், சொத்துகளை பாதுகாக்க உதவும்.