வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் தினமணி

தினமணி நாளிதழை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக படித்து வருகிறேன். குறிப்பாக, ஏ.என்.சிவராமன் ஆசிரியராக இருந்த காலத்திலிருந்துதான் "தினமணி'யைப் படிக்கத் தொடங்கினேன்.
டி.கே. ரங்கராஜன்
டி.கே. ரங்கராஜன்

தினமணி நாளிதழை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக படித்து வருகிறேன். குறிப்பாக, ஏ.என்.சிவராமன் ஆசிரியராக இருந்த காலத்திலிருந்துதான் "தினமணி'யைப் படிக்கத் தொடங்கினேன்.

தலையங்கம், பொருளாதரத்தைப் பற்றிய அவருடைய பதிவுகள் சிறப்பாக இருக்கும். அன்றைய சூழலில் மற்ற பத்திரிகைகளில் இல்லாத பல விஷயங்களை "தினமணி'யில்தான் காண முடியும்.

தமிழகத்தில் ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒவ்வொரு விதமான பாணி உண்டு. அந்த வகையில் தினமணிக்கென தனி பாணி உண்டு. அதை எப்போதும் தினமணி கடைப்பிடித்து வருகிறது. குறிப்பாக அரசியல் நிர்பந்தங்களுக்காக தினமணி எப்போதுமே தனது தனித்தன்மையை விட்டுக்கொடுத்தது இல்லை.

தினமணி வளர்ச்சியில் அதன் ஆசிரியர்களின் பங்களிப்பு அளப்பறியது. ஆசிரியர் ஐராவதம் மகாதேவன் கால கட்டத்தில் தினமணியில் மிகப் பெரிய அளவில் எழுத்து மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. கல்வெட்டுகள் குறித்தும் அவர் அதிகம் எழுதினார்.

ஆசிரியர் மாலனைப் பொருத்தவரை, அவருடைய எழுத்துக்களில் அந்தக் காலத்திலேயே முற்போக்கு பார்வை இருந்தது. அவை படிக்கக்கூடிய வகையிலும் இருந்தன.

சம்பந்தத்தைப் பொருத்தவரை தன்னுடைய பணியில் ஒழுக்கத்துக்குத்தான் முன்னுரிமை அளித்தார். தனது சொந்த அரசியல் கருத்துக்களை திணித்ததில்லை. தீவிர கடவுள் மறுப்பாளராக இருந்தபோதும், தினமணியின் பாரம்பரியத்தை காக்கத் தவறியதில்லை.

ஆசிரியர் வைத்தியநாதனின் காலம் தினமணியின் நவீன காலம் என்றுதான் கூறவேண்டும். புதிய தமிழ் எழுத்துக்களை கொண்டுவந்தது, தமிழ் மேடைகளில் அதிகம் பங்கேற்று தாய்மொழியை வலியுறுத்துவது, தமிழ் அறிஞர்களை அதிகம் எழுத வைப்பது, தினமணி தில்லி பதிப்பைக் கொண்டுவருவதில் முக்கியப் பங்காற்றியது என தினமணியின் நவீன கால வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகிறார்.

குறிப்பாக வாசிப்புப் பழக்கம் இளைஞர்களிடையே வெகுவாகக் குறைந்து வரும் இன்றைய கால கட்டத்திலும், அவர்களை படிக்க வைப்பதற்காக பல்வேறு விஷயங்களை தினமணி அளித்து வருகிறது. எல்லா கட்சிகளுக்குமான இடமளிப்பதிலும், அனைத்து விதமான கருத்துக்களையும் நடுநிலையோடு வெளியிடுவதிலும் தினமணி தவறுவதில்லை. இப்படிப்பட்ட பாரம்பரியத்தைக் கொண்ட பத்திரிகைக்கு சோதனைக் காலம் என்றால் அது இந்திராகாந்தி கொண்டுவந்த அவசரநிலைக் காலம்தான். அவசரக் காலத்தில் தாக்குதலுக்கு ஆளான பத்திரிகைகளில் தினமணியும் ஒன்று.

அன்றைக்கு, நேர்மையாகப் போராடிய தினமணி நாளிதழுக்கு எதிரான அரசினுடைய ஆலோசனையை ஏற்க மறுத்து அப்போதைய அரசு தலைமை வழக்குரைஞராக இருந்த பராசரன், அந்தப் பதவியிலிருந்தே விலகினார்.

இப்படிப்பட்ட பாரம்பரியத்தை, தினமணி எப்போதும் தொடர வேண்டும். எழுத்துரிமை, பேச்சுரிமை, மதச்சார்பற்ற தன்மை, பொதுவான கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் தினமணி, 85 ஆண்டுகளைக் கடந்தும் அந்தப் பாரம்பரியத்தைத் தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com