தலையங்கத்துடன் ஒட்டி அமையும் திருக்குறள்!

எங்களது குடும்பத்தில் 1964- ஆம் ஆண்டு முதல் தினமணி இதழ் வாங்கி வருகிறோம்
சங்கர சீத்தாராமன்
சங்கர சீத்தாராமன்

எங்களது குடும்பத்தில் 1964-ஆம் ஆண்டு முதல் தினமணி இதழ் வாங்கி வருகிறோம். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் தினமணி இதழை வாசித்து வருகிறேன். தினமணியில் வெளியிடப்படும் செய்திகள் ஆதாரப்பூர்வமானவையாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. உண்மைக்குப் புறம்பான செய்திகளை தினமணி ஒருபோதும் வெளியிடுவதில்லை.

அதேபோல, இன்று கணினி பற்றி நாம் அதிகமாகப் பேசுகிறோம். கணினி பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே தினமணியில் அரைகுறை பாமரன், கணக்கன் என்ற புனைப் பெயர்களில் தினமணியின் முன்னாள் ஆசிரியர் ஏ.என்.சிவராமன், கட்டுரைகளை எழுதி வந்தார். அதையெல்லாம் படித்துள்ளேன்.

தற்போது ஆசிரியராக கி.வைத்தியநாதன் பொறுப்பேற்ற பிறகு பலவிதமான செய்திகளைத் தாங்கி வருவதாக தினமணி அமைந்திருக்கிறது. தினமணியின் எல்லையும் பரப்பும் விரிவடைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. குறிப்பாக தாமிரவருணி புஷ்கரத்தையொட்டி டாக்டர் சுதா சேஷய்யன் எழுத ஆரம்பித்த பொருணை போற்றுதும் தொடர் இன்றும் வளர்ந்து வருகிறது. மிக அரிய செய்திகளை அதில் அவர் எழுதி வருகிறார்.

தினமணியில் தினமும் வெளிவரக் கூடிய நடுப்பக்கக் கட்டுரைகள் விரும்பி படிக்கக் கூடியவை. பல அறிஞர்கள், பல்துறை வித்தகர்களின் கட்டுரைகள் இடம்பெறுவது பெருமைக்குரியது. ஆசிரியரின் தலையங்கம் மிக மிகச் சிறப்பாக இருந்து வருகிறது.

இரண்டொரு நாள்களுக்கு முன்புகூட, ஆந்திர மாநில அரசு, முந்தைய அரசு கொண்டு வந்த திட்டங்களையெல்லாம் எப்படி மாற்றப் பார்க்கிறது என்பதையும் அதன் நிறை, குறைகளையும் தினமணி தலையங்கம் விரிவாகச் சுட்டிக்காட்டியது. இதைப் போன்ற நடுநிலையான கட்டுரைகளை மற்ற நாளிதழ்களில் படிப்பது கடினம்.

ஒவ்வொரு நாள் தலையங்கத்திலும் அதற்குப் பொருத்தமான திருக்குறள் இடம்பெறும். திருக்குறளின் கருத்து, தலையங்கத்துடன் ஒட்டி அமைவதாகவும், உட்கருத்தாகவும் இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. ஞாயிற்றுக்கிழமைதோறும் வரும் தமிழ்மணியில் இலக்கியச் செய்திகள் உள்ளிட்ட அரிய பல விஷயங்கள் இடம்பெறுகின்றன. கலாரசிகன் பகுதியில் வரக்கூடிய தகவல்கள் மிகவும் சுவாரஸ்யமாகவும், பயனுள்ளதாகவும் இருக்கின்றன.

அதேபோல, தினமணி கதிர் நல்ல பல தகவல்களைத் தாங்கி வந்து கொண்டிருக்கிறது. அதில் இடபெறும் குறுங்கதைகள் தரம் வாய்ந்தவையாக இருக்கின்றன. மக்கள் உணர்ந்து, தெளிந்து தங்களைத் திருத்திக் கொள்ளவும், நாட்டு நடப்பை, இயல்பை மிகத் தெளிவாக வெளிப்படுத்துவதாகவும் இந்த படைப்புகள் இருக்கின்றன.

தினமணியுடனான தொடர்பு 50 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ந்து வருகிறது என்றால், அதற்காக மிகவும் பெருமைப்படுகிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com