தினமணியும் நானும்

தினமணி நாளிதழ் எனது வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்தது என்ற தகவல் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம்.
ஏ.எம். ராஜகோபாலன்
ஏ.எம். ராஜகோபாலன்

தினமணி நாளிதழ் எனது வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்தது என்ற தகவல் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். ஏனெனில், நான் "ஹிந்து' பத்திரிகையின் விற்பனைப் பிரிவில் பொறுப்புள்ள பதவியில் இருந்தவன். மாதத்தில் 25 நாள்கள் வெளியூர் பயணத்தில் இருப்பேன். அந்த காலத்தில் அனைத்து நாளிதழ்களின் விநியோகத்தைப் பற்றி ஆராய்ந்து "ஹிந்து' நிர்வாகத்துக்குத் தகவல் அளிக்க வேண்டும். அதனால், ஒரு நாளிதழை மக்கள் ஏன் விரும்புகின்றனர் என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

தமிழ் பத்திரிகை உலகில் "சுதேசமித்திரன்', "தினமணி' நாளிதழ்களுக்கு என்று அந்த காலத்தில் மிகப் பெரிய வாசகர் கூட்டம் இருந்தது. தினமணியில் வெளியாகும் எந்த செய்தியும் அதிகாரப்பூர்வமானதாகவும், மிகச் சரியானதாகவும் இருந்ததால் அது வாசகர்களின் நம்பிக்கைக்கு உரிய நாளிதழாக இருந்ததில் வியப்பு ஒன்றுமில்லை.

தினமணியை நான் 55 ஆண்டுகளுக்கும் மேலாக உன்னிப்பாக கவனித்து வருகிறேன். ஏ.என்.சிவராமன் ஆசிரியராக இருந்தபோது தினமணி நாளிதழ் அதன் உச்சத்தையே எட்டியிருந்தது. புனைப் பெயர்களில் அவர் எழுதிய கட்டுரைகள் மிகப் புகழ் பெற்றவை. விடுதலைப் போராட்ட காலத்திலும் அதன் பிறகான நெருக்கடி காலங்களிலும் பல்வேறு சோதனைகளுக்கு ஆளானபோதிலும் தினமணி தனது தரத்தைக் குறைத்துக் கொண்டதில்லை.

பெரியவர் ராம்நாத் கோயங்கா தினமணியின் முன்னேற்றத்தில் விசேஷ கவனம் செலுத்தி வந்தவர். அதன் பிறகு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைவரான எனது நண்பர் மனோஜ்குமார் சொந்தாலியா அதே கவனத்தை தொடர்ந்து செலுத்தி வருகிறார்.

தினமணியின் ஆசிரியராக இருந்த இராம.திரு.சம்பந்தம் எனது நெருக்கமான நண்பராக இருந்தார். கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசை கைகூடாமல் இருந்தபோது, எனது 72-ஆவது வயதில் ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்போது என்னிடம் கடவுச்சீட்டு இல்லை.

அந்த இக்கட்டான நேரத்தில் என்னை கடவுச்சீட்டு அதிகாரியிடம் அழைத்துச் சென்ற சம்பந்தம், உடனடியாக எனக்கு விசேஷ கடவுச்சீட்டைப் பெற்றுக் கொடுத்தார். அதனால் நான் அந்தப் புனித யாத்திரையை மேற்கொண்டேன்.

தினமணி கதிர், வெள்ளிமணி இரண்டிலும் 11 ஆண்டுகள் ஜோதிடப் பகுதியில் எழுதும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. வாசகர்களின் ஆதரவே இதற்கு காரணம். அந்தப் பகுதியில், 12 ஆண்டுகளுக்கு முன்பே குஜராத்தில் இருந்து தேசபக்தி நிறைந்த தலைவர் பாரதப் பிரதமராக வருவார் என்று நான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி நாளிதழ் தமிழகத்தின் மிகப்பெரிய ஆன்மிக சக்தியாகவும், மக்களின் நம்பிக்கைக்கு உரிய நாளிதழாகவும் திகழுவதற்கு பல பெரியோர்கள் அதன் ஆசிரியர் பொறுப்பை ஏற்று கடினமாகப் பாடுபட்டதன் பலனேயாகும்.

தினமணியின் ஆசிரியர் என்ற மாபெரும் பொறுப்பை கி.வைத்தியநாதன் தற்போது ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவர் இரவு பகலாக ஓய்வின்றி உழைப்பதை நான் கண்டிருக்கிறேன்.

ஒரு முறை அவரிடம் இதுகுறித்து கேட்டபோது, "எனக்கு முன்பு எத்தனையோ ஆசிரியர்கள் அரும்பாடுபட்டு வளர்த்த தினமணி என்ற மாபெரும் தெய்வீக விருட்சத்தைக் கட்டிக் காக்கும் பொறுப்பு தற்போது என்னிடம் வழங்கப்பட்டுள்ளது. என் உடலில் சக்தி இருக்கும் வரை நான் இந்த பத்திரிகைக்காகவும், அதன் ஊழியர்களுக்காகவும், வாசக அன்பர்களுக்காகவும் உழைப்பேன். இதை இறைவன் எனக்குக் கொடுத்த பொறுப்பாகவும், என் கடமையாகவும் நினைக்கிறேன்' என்றார்.

அதைக் கேட்டதும், தீஞ்சுவைத் தமிழின் உயிர்நாடியாக விளங்கும் தினமணி நாளிதழின் எதிர்காலம் பாதுகாப்பாகத்தான் இருக்கிறது என்பதை அறிந்தேன். தமிழ் பத்திரிகை உலகம் உள்ளவரை ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் அருளுடன் தினமணி தொடர்ந்து பிரகாசிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com