ராமகிருஷ்ண மடத்துடன் தினமணியின் தொடர்பு!

எனக்கு இப்போது 72 வயது ஆகிறது. எனது தந்தையார் தினமணி வாங்கிக் கொண்டிருந்தார். அதனால் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் தினமணி படித்து வருகிறேன்.
சுவாமி கமலாத்மானந்தர்
சுவாமி கமலாத்மானந்தர்

எனக்கு இப்போது 72 வயது ஆகிறது. எனது தந்தையார் தினமணி வாங்கிக் கொண்டிருந்தார். அதனால் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் தினமணி படித்து வருகிறேன்.

1968-ஆம் ஆண்டு ஜூன் முதல் தேதி, ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் துறவியாகச் சேர்ந்தேன். 1970-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவுச் சின்ன பாறை தொடக்க விழா நடைபெற்றது. சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவாற்றியதன் நினைவாக, அதே நாளான செப்டம்பர் 11-ஆம் தேதி நினைவுச் சின்ன பாறை திறக்கப்பட்டது.

திறப்பு விழா நடந்த வாரத்தில், தினமணியில் விவேகானந்தர் நினைவுச் சின்ன பாறை என்ற கட்டுரையை சத்திய காமன் என்ற புனைப்பெயரில் எழுதியுள்ளேன்.

1977 ஜனவரி மாதம் என்னை, "ராமகிருஷ்ண விஜயம்' பத்திரிகை ஆசிரியராக, சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் நியமித்தார். அப்போது எனக்கு 29 வயது இருக்கும். தினமணி ஆசிரியராக ஏ.என்.சிவராமன் இருந்தார். பத்திரிகை துறையில் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்பதற்காக அவரிடம் ஆசிபெறச் சென்றேன். எனக்கு ஆசிர்வாதம் வழங்கிய அவர், "ராமகிருஷ்ண மடம் வெள்ள நிவாரண பணிகளைச் சிறப்பாகச் செய்து வருகிறது. ராமகிருஷ்ண மடத்தில் இருந்து நிவாரணப் பொருள்கள் அனுப்பும் பணியை நானும் செய்திருக்கிறேன்' என்றார்.

ஆசிரியர் ஏ.என்.சிவராமனுக்கு உதவியாளராக ஏ.ஜி.வெங்கடாச்சாரியார் இருந்தார். பிரெஞ்சு அறிஞர் ரொமைன் ரோலண்ட் என்பவர் சுவாமி விவேகானந்தர் பற்றி எழுதிய நூலை ஏ.ஜி.வெங்கடாச்சாரி தமிழில் மொழி பெயர்த்துள்ளார். சாகித்ய அகாதெமி அந்த நூலை வெளியிட்டது. அதேபோல, சென்னை ராம

கிருஷ்ண மடத்தில் விவேகானந்தர் பற்றி, ஏ.ஜி.வெங்கடாசாரி சொற்பொழிவாற்றியுள்ளார்.

அதேபோல, தினமணியில் குமாரவாடி ராமானுஜசாரியார், அப்போது வெளிவந்த தினமணி சுடர் ஆசிரியராக இருந்தார். அவர் வைஷ்ணவத்தில் ஆழ்ந்த புலமை உடையவர். ராமகிருஷ்ண மடத்தில் பல முறை வைஷ்ணவ சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார்.

தினமணியில் ராமகிருஷ்ணர், விவேகானந்தர் பற்றி செய்திகள் ஏராளமாக வந்துள்ளன. ஒருமுறை சென்னை தி.நகரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் பள்ளியில் பாரதி விழா நடைபெற்றது. அதில் ஏ.என்.சிவராமன், ஏ.ஜி.வெங்கடாச்சாரி ஆகியோர் பாரதி குறித்து சிறப்புரையாற்றினர்.

தினமணி ஆசிரியராக ஏ.என்.சிவராமன் இருந்தபோது, தமிழகத்தில் பெரும் வெள்ள நிவாரணப் பணிகள் நடைபெற்று கொண்டிருந்போது, தினமணி ஆசிரியர் ஏ.என்.சிவராமன் அடுத்தடுத்த நாள்களில் இரு தலையங்கங்களை எழுதியிருந்தார். முதல் நாள் அரசுக்கும், ராமகிருஷ்ண மடத்துக்கும் நிதியுதவி செய்யுமாறு எழுதினார். இரண்டாம் நாள் ராமகிருஷ்ண மடத்தை மட்டுமே குறிப்பிட்டு நிதியுதவி அனுப்புமாறு எழுதினார். ராமகிருஷ்ண மடத்தின் வெள்ள நிவாரணப் பணிக்கு நிதி திரட்டும் பொறுப்பை இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் தான் எடுத்துக் கொண்டது.

தற்போது தினமணி ஆசிரியராக இருக்கும் கி.வைத்தியநாதன், சென்னை ராமகிருஷ்ண மடத்தில் சொற்பொழிவாற்றியுள்ளார். மதுரை ராமகிருஷ்ண மடத்தில் நடைபெற்ற விவேகானந்தர் விழாவில் உரையாற்றியுள்ளார். 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெரம்பலூரில் ராமகிருஷ்ண விவேகானந்தர் பக்தர்கள் மாநாடு பிரம்மாண்ட விழாவாக நடைபெற்றது. அதிலும் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.

சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது பிறந்தநாள் 2014-ஆம் ஆண்டு நாடு முழுவதும் நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் விவேகானந்தர் ரதம் பல ஊர்களுக்குச் சென்றது. அதைப் பற்றிய செய்திகளை தமிழகத்தில் பல பத்திரிகைகள் வெளியிட்டாலும், அதிகமாக வெளியிட்ட ஒரே பத்திரிகை தினமணி தான்.

தினமணியில் வெள்ளிமணி, தினமணி கதிர் பொறுப்பாசிரியராக இருக்கும் பாவை சந்திரன், 1983-ஆம் ஆண்டிலிருந்து அறிமுகம் உண்டு. வெள்ளிமணியில் மகான்கன் பொன்மொழிகளை தொகுத்து எழுதி வருகிறேன். 2 ஆண்டுகள் 5 மாதங்களாக வந்து கொண்டிருக்கிறது.

ராமகிருஷ்ண மடத்தின் பக்தர் சி.வி.சாமிநாத அய்யரின் மகன் எஸ்.சதானந்த் தொடங்கிய பத்திரிகை தான் தினமணி. ஆகவே, தினமணிக்கும் ராமகிருஷ்ண மடத்துக்கும் இடையிலான தொடர்பு மிகவும் நெருக்கமான அளவில் இருந்து கொண்டிருக்கிறது.

- சுவாமி கமலாத்மானந்தர், தலைவர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்,  மதுரை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com