என்றும் மாறாத நடுநிலைமை..

1969-ஆம் ஆண்டிலிருந்து தினமணி நாளிதழை தினமும் படித்து வருகிறேன். அதற்கு முன்னரும் படித்ததுண்டு. ஆனால், தினமும் தவறாமல் அதைப்படிப்பது 1969-ஆம் ஆண்டிலிருந்துதான்.
அமுதன் அடிகள்
அமுதன் அடிகள்

1969-ஆம் ஆண்டிலிருந்து தினமணி நாளிதழை தினமும் படித்து வருகிறேன். அதற்கு முன்னரும் படித்ததுண்டு. ஆனால், தினமும் தவறாமல் அதைப்படிப்பது 1969-ஆம் ஆண்டிலிருந்துதான். வெளிநாடு செல்லும்போது கூட என் ஐ-பேட் மூலம் தவறாமல் தினமணி படிப்பதை வழக்கமாக்கி கொண்டுள்ளேன்.

காலை உணவுக்கு முன்பே ஓர் ஆங்கில நாளிதழையும், தினமணியையும் படித்துவிடுவது எனது வழக்கம். தமிழ் நாளிதழ்களில் ஏன் தினமணியைத் தேர்ந்தெடுத்தேன் என்றால் உலகச் செய்திகளையும், இந்தியச் செய்திகளையும் தமிழகச் செய்திகளையும் அதிமிகுதியாகவும், முறையாகவும் வழங்குவதுதான் முக்கிய காரணம்.

தொடக்கத்தில் தினமணியில் வடமொழி மிகுதியாகக் கலந்த நடை இருந்தது. அது பெரியவர் ஏ.என். சிவராமன் ஆசிரியராக இருந்த காலம். அவரின் தலையங்கங்களையும், சிறப்பு கட்டுரைகளையும் நான் விரும்பிப் படிப்பேன். அவர் காலத்துக்குப் பிறகு தினமணியின் மொழி நடை மிகவே மாறிவிட்டிருப்பதை அனைவரும் அறிவர்.

ஆசிரியராக ஐராவதம் மகாதேவன் பொறுப்பேற்றதும் தினமணி புதுப் பிறப்பு எடுத்தது என்றுதான் சொல்ல வேண்டும். அத்தனை மாற்றங்கள்!.

செய்திகளை நடுநிலைமையோடு வழங்குவதில் தினமணி முதலிடம் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்வர். ஆசிரிய உரையிலும், நடுப்பக்க கட்டுரைகளிலும் ஒருசார்பின்மையை முழுமையாக கடைப்பிடிப்பது அத்தனை எளிதல்ல என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும், தினமணியின் மிக நீண்ட பாரம்பரியம் அத்தகைய போக்கினை எதிர்பார்க்க நம்மைத் தூண்டுகிறது என்பதை மறுக்க முடியாது.

பல ஆண்டுகளுக்கு முன் தீராத பிள்ளை விளையாட்டு, இனி ஒரு விதி செய்வோம், தமிழ் வளர்த்த தனிநாயகர் போன்ற என் கட்டுரைகள் தினமணியின் நடுப்பக்கத்தில் வெளிவந்ததுண்டு. நான் அனுப்பிய கட்டுரைகளுள் சில ஏற்றுக் கொள்ளப்படாமல் போனதும் உண்டு. அதுதொடர்பாக அப்போதைய ஆசிரியர் இராம. சம்பந்தத்துடன் நேருக்கு நேர் வாதிட்டதும் உண்டு. இறுதியில் அது இதழாசிரியரின் தனியுரிமை என்பதை தயங்காமல் ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.

நான், திருச்சிராப்பள்ளியில் தனிநாயக அடிகள் இதழியல் கல்லூரியின் முதல்வராகப் பணிபுரிந்துவந்த காலத்தில் எங்கள் மாணவர்களை கல்விச் சுற்றுலாவாக சென்னைக்கு அழைத்துச் செல்வது வழக்கம். அப்போது, தினமணி அலுவலகத்தையும், அச்சகத்தையும் எங்கள் மாணவர்களுக்கு காட்டுவதும், தினமணி ஆசிரியருடன் மாணவர்களை கலந்துரையாடச் செய்யும் வாய்ப்பை வழங்குவதும் அந்த சுற்றுலாவில் மாறாத அட்டவணையாக இருந்ததை இப்போதும் உளப்பூர்வமாக நினைத்து மகிழ்கின்றேன்.

எனது நடுப்பக்கக் கட்டுரைகள் பலரின் கவனத்தை கவர்ந்தன எனக் கூறப்பட்டதைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். ஒரு நிகழ்வில் மதுரை ஆதீனத்திடம் என் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டபோது, தினமணி நடுப்பக்கத்தில் கட்டுரை எழுதும் அமுதன் அடிகளா? என்று ஆதீனம் என்னைக் கேட்டு வியப்பில் ஆழ்த்தியதை நான் என்றும் மறக்க இயலாது.

தமிழில் வெளியாகும் நாளிதழ்களை ஒப்பிட்டுப் பார்த்து, அவற்றுள் தலை சிறந்தது தினமணிதான் எனக் கூறுவதில் எனக்கு தயக்கமே இல்லை. செய்திக் கட்டுரைகள் உரிய அளவிலும், உரிய இடத்திலும் அமைத்தல், ஓரளவு கல்வியறிவு பெற்றவர்களும் படித்துப் புரிந்து கொள்ளத்தக்க எளிமை, தகுந்த சொற்களையும், தலைப்புகளையும் கையாளுதல் எனப் பல இதழியல் விழுமியங்களைக் கடைப்பிடிக்கும் தினமணியின் நீண்ட நாள் வசாகர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமைப்படுகிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com