எழுத்துச் சீர்திருத்தம் தமிழ் வளர்ச்சியில் தினமணி!

மிகவும் தொன்மையான மொழி தமிழ் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய தமிழ் இன்னமும் நீடித்து நிலைத்திருக்கிறது
ஐராவதம் மகாதேவன்
ஐராவதம் மகாதேவன்

மிகவும் தொன்மையான மொழி தமிழ் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய தமிழ் இன்னமும் நீடித்து நிலைத்திருக்கிறது என்றால், அது காலத்துக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொண்டு எழுத்து வரி வடிவத்தில் சீர்திருத்தங்களையும் மாற்றங்களையும் ஏற்றுக்கொண்டதுதான் முக்கியக் காரணமாகும்.

தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்துக்கு பண்டைக்காலம் தொட்டே தமிழறிஞர்கள் பாடுபட்டிருந்தாலும், அவர்களைப் பற்றிய முழுமையான தகவல்களோ, ஆவணப் பதிவுகளோ நம்மிடையே இல்லை என்பது ஒரு பெரும் குறையாகும். இதனால், தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்துக்கு வித்திட்ட நமது முன்னோர்களின் பட்டியலைத் தயாரிக்க முடியாத நிலையே உள்ளது. எனினும், தற்காலத் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தியதோடு, அதைத் தனது "குடியரசு' நாளிதழில் நடைமுறைப்படுத்திக் காட்டியவர் திராவிடர் கழக நிறுவனர் பெரியார்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

ஆனால், பெரியாரின் சமூகச் செயல்பாடுகளால் அவரது கருத்துகளை ஏற்க பெரும்பாலானோர் தயங்கியதால், இந்த எழுத்துச் சீர்திருத்தம் முதலில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பெரியாரின் இயக்கத்திலிருந்து பிரிந்து வந்த திராவிடக் கட்சிகளின் நாளிதழ்களும் இதை நடைமுறைப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை என்ற குறை இருந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். தனது ஆட்சிக்காலத்தில் எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த விரும்பி, ஆணை பிறப்பித்தார். ஆனாலும், உடனடியாக நாளிதழ்கள் இதனை பின்பற்றவில்லை.

அதே நேரத்தில், தமிழக அரசின் பள்ளிப் பாடநூல்கள் பெரியாரின் சீர்திருத்த எழுத்துகளில் அச்சடித்து வெளியிடப்பட்டன. இதனால், இளம் தலைமுறை மாணவர்கள் புதிய எழுத்து வடிவத்துக்கு மாற வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டது.

இந்தப் பின்னணியில் "தினமணி' ஆசிரியராக 1987-இல் பொறுப்புக்கு வந்த ஐராவதம் மகாதேவன், முதல் பணியாக பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை நாம் பின்பற்றியாக வேண்டும் என துணிந்து உத்தரவிட்டார்.

பெரியாரின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை என்பதற்காக, அவரது எழுத்துச் சீர்திருத்தங்களை தினமணி ஏற்றுக் கொள்ளாமல் போனால், இன்றைய இளம் மாணவர்கள் இன்னும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நமது நாளிதழை படிக்க முடியாமல் போகும் ஆபத்து ஏற்படும்.

அதோடு, "கணினி விசைப் பலகையில் பெரியாரின் சீர்திருத்த எழுத்துகளை உள்ளீடு செய்வது சுலபமானது. எனவே, பெரியாரின் இந்த எழுத்துச் சீர்திருத்தங்களை ஏற்றுக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் என' விளக்கம் அளித்தார் ஐராவதம் மகாதேவன்.

இந்த எழுத்துச் சீர்திருத்தங்கள் தினமணியில் நடைமுறைக்கு வந்த பிறகுதான் முரசொலி உள்ளிட்ட கட்சி நாளேடுகளும், அரசியல் சார்பற்ற பிற நாளிதழ்களும் இவற்றைப் பின்பற்றத் தொடங்கின. இந்த எழுத்துச் சீர்திருத்தங்கள் இன்றைக்கு அனைத்துத் தளங்களிலும் நடைமுறைக்கு வந்துள்ளதற்கு தினமணிதான் காரணம் என்றால் அது மிகையல்ல.

தமிழ் வளர்ச்சி

காங்கிரஸ் மாநாட்டில் அக்ராசனர் பிரசங்கம், காங்கிரஸ் காரியக் கமிட்டி இன்று கூடுகிறது, கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ கூட்டத்தில் முடிவு, வைகை ஜல சப்ளை ரத்து, பஸ் ரஸ்தாவில் குடை சாய்ந்து நால்வர் காயம், நடு ரோட்டில் ரெளடி வெட்டிக் கொலை, பார்லிமெண்டில் எதிர்க்கட்சி அங்கத்தினர்கள் அமளி- சபாநாயகர் அதிருப்தி, லோக்சபா, ராஜ்யசபா தேர்தல்கள் அறிவிப்பு, மந்திரிசபையை விஸ்தரித்தார் பிரதம மந்திரி- நான்கு பேருக்கு கேபினெட் அந்தஸ்து, 6 பேருக்கு ராஜாங்க மந்திரி அந்தஸ்து, ராஷ்டிரபதி அயல்நாடு விஜயம், ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய கவர்னர் சிபாரிசு, சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சஸ்பெண்ட், பிகார் அரசு டிஸ்மிஸ், ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் கனத்த மழை, யுனிவர்சிட்டி சிண்டிகேட், செனட் அங்கத்தினர்கள் கூட்டம், விசாரணை கமிஷன் - இப்படித்தான் தினமணியின் ஆரம்ப காலத்திலிருந்து 1987-இல் ஐராவதம் மகாதேவன் ஆசிரியராகப் பொறுப்பேற்கும் வரை செய்திகள் வெளியிடப்பட்டு வந்தன.

"தினமணியில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தமிழ்ச் சொற்கள் இன்றைக்கு அரசுத் துறைகளிலும், காட்சி ஊடகங்களிலும் பரவலாகப் பின்பற்றப்பட்டு வருவது நமது நாளிதழுக்குக் கிடைத்த பெருமையாகும்."

இந்த எழுத்து நடையை மாற்றி அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில், சிறு வாக்கியங்களில் எளிய தமிழில் செய்திகளைத் தயாரித்து வெளியிட வேண்டும் என ஐராவதம் மகாதேவன் அறிவுறுத்தினார். அதோடு, புதிய தமிழ்ச் சொற்களை அவரே உருவாக்கித் தந்ததோடு, அவற்றை தினமணியில் கட்டாயம் நடைமுறைப்படுத்தவும் வழிகோலினார்.

நாடாளுமன்றம், மக்களவை, மாநிலங்களவை, சட்டப்பேரவை, அவைத் தலைவர், மத்திய அமைச்சர், இணை அமைச்சர், குடியரசுத் தலைவர், ஆளுநர், இடைநீக்கம், பணிநீக்கம், பதவி நீக்கம், மருத்துவக் கல்வி இயக்ககம், பல்கலைக்கழக ஆட்சிக் குழு, ஆட்சிப் பேரவை, நிதி நல்கைக் குழு, மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு, காங்கிரஸ் செயற் குழு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம், விசாரணை ஆணையம் என தினமணி செய்திகளில் புதிய தமிழ்ச் சொல்லாக்கங்கள் இடம்பெறத் தொடங்கின.

அரசு பெண் அலுவலர் இடைநீக்கம் என தினமணியில் குறிப்பிட்டதை மற்றொரு நாளிதழ் கிண்டல் செய்தது. இதையறிந்த ஆசிரியர் ஐராவதம் மகாதேவன், இனி இடைநீக்கம் என்பதை இடத்துக்கு தகுந்தவாறு பணியிடை நீக்கம் என மாற்றி வெளியிடலாம் என அறிவுறுத்தினார்.

இதேபோல, பெயர்களைக் குறிப்பிடும் போது ஜயேந்திரர், ஜயலலிதா, ஜகந்நாத் மிஸ்ர, நிருபேந் சக்கரவர்த்தி, தேவெ கெளட, வெங்கய்ய நாயுடு, ரவீந்திரநாத் தாகூர், மனோன்மணீயம் சுந்தரனார், மேற்கு வங்கம் என எழுத வேண்டும் என்றார். ஜயலலிதா எனக் குறிப்பிட வேண்டாம் என ஜெயலலிதாவே வேண்டுகோள் விடுத்ததால், தினமணி செய்திகளில் மீண்டும் ஜெயலலிதா என்றே வெளியிடலாம் என்றார் ஐராவதம் மகாதேவன்.

ஆங்கிலச் சொற்களைத் தமிழாக்கம் செய்யும்போது அப்படியே சொல்லுக்கு சொல் மொழிபெயர்க்காமல், அவற்றின் அர்த்தத்தை உணர்ந்து செய்திகளை வெளியிட வேண்டும் என அறிவுறுத்தினார். ரீபுரொடக்ஷன் என்ற ஆங்கிலச் சொல்லை மறு உற்பத்தி, இனவிருத்தி என இடத்துக்கு ஏற்றவாறு தமிழாக்கம் செய்ய வேண்டும் என்றார். இதேபோல, அமெரிக்கா, ரஷியா இடையே நிலவி வந்த "கோல்டு வார்' என்பது பனிப் போர் என தினமணியில் வெளியிடப்பட்டு வந்தது. ஆனால், பனிப் போர் என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக கெடுபிடிப் போர் என்று குறிப்பிடுவதுதான் சரியாக இருக்கும் என்றார் அவர். தினமணி ஆசிரியர் பொறுப்பிலிருந்து அவர் விலகினாலும், அவரது வழிகாட்டுதலின்படியே செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட வேண்டும் என அவருக்குப் பிறகு ஆசிரியராகப் பொறுப்பேற்ற கஸ்தூரி ரங்கன், இராம.திரு.சம்பந்தம் ஆகியோர் அறிவுறுத்தினர்.

தினமணியில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தமிழ்ச் சொற்கள் இன்றைக்கு அரசுத் துறைகளிலும், காட்சி ஊடகங்களிலும் பரவலாகப் பின்பற்றப்பட்டு வருவது நமது நாளிதழுக்குக் கிடைத்த பெருமையாகும்.

ஆசிரியர் கி. வைத்தியநாதன்

கடந்த 12 ஆண்டுகளாக "தினமணி' ஆசிரியராகப் பணியாற்றிவரும் கி.வைத்தியநாதனும் தமிழ் வளர்ச்சியில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக உள்ளார். அவர் ஆசிரியராகப் பொறுப்பேற்ற சிறிது காலத்திலேயே, ஐராவதம் மகாதேவன் காலத்தில் கொண்டு வரப்பட்டு, இடையில் நிறுத்தப்பட்டிருந்த "தமிழ்மணி' சிறப்புப் பக்கத்தை ஞாயிறுதோறும் மீண்டும் வெளியிடுவதற்கு ஏற்பாடு செய்தார். "தமிழ்மணி' சிறப்பாக வெளிவருவதற்கு ஆசிரியர் கி.வைத்தியநாதன் மிகுந்த அக்கறையும் அதீத கவனமும் செலுத்தி வருகிறார்.
புதிய ஆங்கிலச் சொற்களுக்கு தகுந்த தமிழ்ச் சொற்களை உருவாக்க தமிழ் அறிஞர்களைக் கொண்டு தமிழ்மணியில் அவர் மேற்கொண்ட முயற்சி அனைவரது பாராட்டையும் பெற்றது.

செல்போன் என்பதைத் தமிழாக்கம் செய்யாமல் தினமணியில் அப்படியே பயன்படுத்தப்பட்டு வந்தது. செல்போன் நாம் செல்லும் இடமெல்லாம் உடன் வருவதால், அதை செல்லிடப்பேசி என தமிழாக்கம் செய்வதுதான் பொருத்தமாக இருக்கும் என்றார் ஆசிரியர் கி.வைத்தியநாதன். இதேபோல, தலையங்கத்தில் கார் என்பதற்கு மகிழுந்து என்றே அவர் குறிப்பிடுகிறார். சுட்டுரை (டுவிட்டர்), முகநூல் (பேஸ்புக் ), மின்னேற்றி (சார்ஜர்) உள்ளிட்ட புதிய தமிழ்ச் சொற்களை உருவாக்குவதிலும் அவர் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

பேருந்து (பஸ்), சிற்றுந்து (மினி பஸ்), செவிலியர் (நர்ஸ்), பட்டயம் (டிப்ளமோ), சரக்குப்பெட்டகம் (கண்டெய்னர்), கடைவீதி (மெயின் பஜார்), பதிவேற்றம் (அப்லோட்), பதிவிறக்கம் (டவுன்லோட்), சமையல் எரிவாயு உருளைகள் (கேஸ் சிலிண்டர்கள்) போன்ற எண்ணற்ற புதிய தமிழ்ச் சொற்களை பரவலாக்கியதில் தினமணியின் பங்கு அளப்பரியது. தினமணியின் இந்தப் பணி தொடர்ந்து நீடித்தால் மட்டுமே தமிழ் மேலும் வளரும் என்பது திண்ணம்.

- நா. குருசாமி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com