தினமணி வாசிப்பு தினசரி சுவாசிப்பு!

'எனது பள்ளி நாள்களில் மறக்க முடியாதது இந்தியன் எக்ஸ்பிரஸ் அதிபர் கோயங்கா அவர்களுக்கும், வளவனூர் கோவிந்தசாமி ஐயாவுக்கும் நடந்த தேர்தல் போட்டி.
சுந்தர. லட்சுமிநாராயணன்
சுந்தர. லட்சுமிநாராயணன்

'எனது பள்ளி நாள்களில் மறக்க முடியாதது இந்தியன் எக்ஸ்பிரஸ் அதிபர் கோயங்கா அவர்களுக்கும், வளவனூர் கோவிந்தசாமி ஐயாவுக்கும் நடந்த தேர்தல் போட்டி. அப்போது, தினமணி வாசிக்கத் தொடங்கி, அந்த நாளிலிருந்து தினமணியின் மணத்தைத் தொடர்ந்து சுவாசித்து வருபவர்களில் நானும் ஒருவன்.

தேசியமும் தெய்வீகமும் இரு கண்களாக, பாவித்து இயங்கிவரும் தினமணி பல மணிகளைக் கொண்டு எழுப்பும் இன்னோசை, மனத்துக்கினியதாகப் பரிமளிக்கிறது. ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சிகளாக இருந்தாலும் சரி, தனது கருத்தோட்டங்களைத் தங்குதடையின்றி அகண்ட காவிரியாய், சில நேரங்களில் விரிவாகவும், ஆடுகூடத் தாண்டும் தலைக்காவிரியாய்ச் சுருக்கமாகவும் பளிச்சென்று வெளியிட்டு வாசகர்களைத் தன் அணைப்புக்குள் கட்டிப்போட்டு விடுகிறது.

"தமிழ்மணி"யாய் ஒலிக்கும் தினமணி, வெள்ளிமணியாகவும் சுடர்கிறது. மகளிர் மணியாய் ஒளிர்கிறது. இளைஞர் மணியாய் மிளிர்கிறது. இலக்கிய வாணர்கள், அரசியல்தலைவர்கள், கல்வியாளர்கள், விவசாயிகள், சாதனைபுரியும் விளையாட்டு வீரர்கள், தலைசிறந்த மாணவர்கள் ஆகிய எல்லாரையும் நன்கு வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் தினமணியின் ஈடுபாடு சிறப்பானது.

அதுமட்டுமல்ல, பொழுதுபோக்குக்கான திரைப்படங்களையும் துல்லியமாக விமர்சனம் செய்து குடும்பத்துடன் பார்க்கச் செய்கிறது (எடுத்துக்காட்டாக, அறம், 96 படங்கள்). ஆன்மிகச் செய்திகள், நடுப்பக்கக் கட்டுரைகள், ஆசிரியர் கடிதங்கள், தினமணியினுடைய தனித்தன்மை வாய்ந்த பகுதிகள்.

இளவயதிலேயே நான் விழுந்து விழுந்து படித்த கண்ணதாசனின் "அர்த்தமுள்ள இந்துமதம்' வாரந்தோறும் தினமணி கதிரில் வெளியாகி, சமுதாயத்தின் எல்லாத்தரப்பினரையும் படிக்கச் செய்தது. அது பின்னர் புத்தகமாகி வெளிவந்தபோது, நாத்திகம் பேசியவர்களையும் திரும்பிப் பார்க்கச் செய்தது.

அதுபோல், கவிஞர் முத்துலிங்கத்தின், "ஆனந்தத் தேன் காற்றுத்தாலாட்டுதே தொடரும் அமைந்தது.

அண்ணல் காந்தியடிகளின் 150-ஆவது பிறந்த ஆண்டை ஒட்டி, சிறப்புப் பகுதியாக வெளிவந்த செய்திகளைப் பத்திரப்படுத்திப் படித்து வருவதில் ஆனந்தம் அடைகிறேன். அரசியல் அரிச்சுவடி அறியாதவர்கள்கூடத் தினமணியின் தலையங்கங்களைத் தொடர்ந்து படித்து வந்தால் பாராளுமன்ற உறுப்பினராகத் தாராளமாகப் பணியாற்றலாம். அவ்வளவு தெளிவு, ஆழம்.

அதற்கெல்லாம் மணிமுடியாக, தமிழர்களின் வாழ்வில் அகமாகவும் முகமாகவும் விளங்குகிற திருக்குறளைக் கொண்டு முடிப்பது தினமணியின் தமிழ்ப் பற்றைப் புலப்படுத்துகிறது. "தினமணி' ஆசிரியர் முதல்நாள் எழுதி வெளியிட்ட உலகத் தமிழ் மாநாடு பற்றிய செய்தியைப் படித்த அந்நாளைய முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள், அடுத்தநாளே கோவையில் மாநாடு நடத்தப்போவதை அறிவித்தது தினமணிக்குக் கிடைத்த மகத்தான வெற்றி.

திருக்கோவலூரில் படித்த நான், அவ்வூரில் ஆண்டுதோறும் நடைபெறும் கபிலர் விழாச் செய்திகளையும், புதுவையில் வாழ்ந்து வருவதில் இருந்து கம்பன் விழாச் செய்திகளையும், எட்டயபுரத்தை எப்போதும் நினைவில் வைத்திருக்கும் பாரதி விழாச் செய்திகளையும் மற்றும் எங்கெல்லாம் தமிழ் விழாக்கள் நடக்கின்றனவோ, அங்கெல்லாம் இன்றைய தினமணி ஆசிரியர் பங்கேற்று உரையாற்றும் செய்திகளையும் "தினமணி' வாயிலாக வாசிப்பதில் மகிழ்ச்சி அடைவேன்.

காலையில் எழுந்ததும் நன்றாகச் சுவாசிப்பதைப்போலவே விடாமல் நான், வாசிக்கும் பத்திரிகை தினமணி.

85 ஆண்டுகள் நிறைவடைந்து, 86 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தினமணியின் நூற்றாண்டு நிறைவுச் சிறப்பு மலரை, ஆசிரியர் கி.வைத்தியநாதன் வெளியிடுகிறபோது, அதிலும் வாசக அனுபவத்தை "ஒன்ஸ்மோர்' எழுதுகிறவாய்ப்பை எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com