புதுப் பாதை வகுத்த தொல்லியல் அறிஞர்!

'தினமணி' நாளிதழின் 85 ஆண்டுகால நீண்ட வரலாற்றில், ஐராவதம் மகாதேவன் ஆசிரியராக இருந்தது என்னவோ நான்கே நான்கு ஆண்டுகள்தான்.
ஐராவதம் மகாதேவன்
ஐராவதம் மகாதேவன்

'தினமணி' நாளிதழின் 85 ஆண்டுகால நீண்ட வரலாற்றில், ஐராவதம் மகாதேவன் ஆசிரியராக இருந்தது என்னவோ நான்கே நான்கு ஆண்டுகள்தான். ஆனால், "தினமணி' நாளிதழின் போக்கில் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியவர் என்கிற பெருமைக்குரியவரும் அவர்தான். அவர் அடிப்படைக் கொள்கைகளில் இருந்து சற்றும் வழுவாமல், அதே நேரத்தில் மாறிவிட்ட சூழலுக்கேற்ற புதிய இலக்குகளை நிர்ணயித்து அதன் பயணத்தை வழிநடத்திய பெருமை ஐராவதம் மகாதேவனுக்கு உண்டு.

மத்திய அரசின் முதுநிலை ஆட்சி நிர்வாகப் பணிகளிலும், தமிழக அரசின் முதுநிலை ஆட்சி நிர்வாகப் பணிகளிலும் உயர் பதவிகளை வகித்தவர் ஐராவதம் மகாதேவன். பணிக் காலத்தில் நேர்மை, கடின உழைப்பு, திறமைக்காகப் பெயர் பெற்றவர். கல்வெட்டியல் ஆராய்ச்சி உள்ளிட்ட முழு நேர தமிழ்ப் பணிகளை மேற்கொள்ள ஐ.ஏ.எஸ். பணியிலிருந்து 1980-இல் விருப்ப ஓய்வு பெற்றார். பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

ஐ.ஏ.எஸ். பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு "இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் செயல் இயக்குநராக 1980-களில் பணியாற்றினார். தொடர்ந்து 1987-ஆம் ஆண்டு முதல் 1991-ஆம் ஆண்டு வரை "தினமணி'யின் ஆசிரியராகப் பணியாற்றினார். "தினமணி'யின் ஆசிரியராகப் பொறுப்பேற்றவுடன் "தினமணி'யின் முதல் பக்க முகப்பில் மாற்றத்தைக் கொண்டுவந்தார். தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தினார். தமிழின் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு தினமணியில் "தமிழ்மணி' பகுதியை அறிமுகப்படுத்தினார்.

"தினமணி' நாளிதழுடன் அப்போது "தினமணி சுடர்' என்கிற இணைப்பு வெளிவந்து கொண்டிருந்தது. மாறிவரும் சூழலுக்கு ஏற்ப, "தினமணி'யில் அறிவியலுக்கும் இடம் தர வேண்டும் என்று கருதினார் ஐராவதம் மகாதேவன். "தினமணி சுடர்' இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. சுடர் எட்டு பக்கங்களில் நான்கு பக்கங்கள் அறிவியலும், நான்கு பக்கங்கள் தமிழ்மணியும் வெளிக்கொணர்வது என்று முடிவு செய்தார் ஐராவதம் மகாதேவன்.

"தமிழ்மணி' என்ற தலைப்பில், 1989 ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி "தினமணி' இதழில் ஓர் அறிவிப்பை வெளியிட்டார் ஆசிரியர் ஐராவதம் மகாதேவன். ""தமிழ்ப் படைப்பிலக்கியத்திற்கான கலனை அமைப்பதில் சிறு சிறு பத்திரிகைகள் லாப நோக்கம் கருதாது தம்மை அர்ப்பணித்து பணிபுரிந்து வருகின்றன. அவற்றின் திறனாய்வு நோக்கிலான அம்சங்கள் மிகக் குறைவு என்றே சொல்லலாம். எனவே, தமிழ் இலக்கியத்தின் திறனாய்வுத் துறைக்கு ஒரு சவாலாகத் திகழ்வதையே "தமிழ்மணி' தன் பிரதான குறிக்கோளாகக் கொண்டு இயங்கும்'' என்று அறிவித்தார்.

ஓராண்டு காலம் "தினமணி' சுடரின் ஒரு பகுதியாக சனிக்கிழமைதோறும் வெளிவந்த "தமிழ்மணி', 1990-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி முதல் எட்டு பக்கம் தனி இணைப்பாக அடுத்த ஆண்டு வரை வெளிவந்தது. எட்டு பக்கங்களுடனான தனி இணைப்பாக வெளிவந்து கொண்டிருந்த "தமிழ்மணி', 1991 டிசம்பர் 12 முதல், மீண்டும் சுடருடன் இணைக்கப்பட்டது. "தினமணி' சுடரின் முதல் மூன்று பக்கங்கள் அறிவியலுக்கும், ஐந்து பக்கங்கள் "தமிழ்மணி' பகுதிக்கும் ஒதுக்கப்பட்டன. பிறகு அதுவே ஒரு பக்கமாகச் சுருங்கி, 1993 மே 22 "தினமணி கதிரில்' வெளியாகி நிறைவு பெற்றது.

"தமிழ்மணி'யில் அப்போது வெளியான தமிழண்ணல் எழுதிய "உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள்' பகுதி வாசகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற தொடர். இலக்கியம், வரலாறு, திறனாய்வு தொடர்பான பல கட்டுரைகள் "தமிழ்மணி'யில் வெளிவந்தன. தமிழ் இலக்கியத்திற்கு இடமளித்த ஒரே நாளிதழ் என்கிற பெருமையை "தினமணி'க்குப் பெற்றுத் தந்தவர் ஐராவதம் மகாதேன்.

நூல் மதிப்புரை எப்படி அமைய வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக "தமிழ்மணி' பகுதியில் "ஐந்திறம்' என்கிற நூலுக்கு அவர் எழுதிய மதிப்புரை இன்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. 1990, பிப்ரவரி மாதம் எழுதப்பட்ட அந்த மதிப்புரை பெரும் சர்ச்சையை எழுப்பியது. "ஐந்திறம்' என்கிற இலக்கிய (இலக்கண) மோசடி என்று துணிந்து தலைப்பிட்டு விமர்சித்திருந்தார் ஐராவதம் மகாதேவன். தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் மூலம், அரசு நிதியுதவியுடன் வெளியிடப்பட்டிருந்த அந்த நூலின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கியது அந்த விமர்சனம்.

"தினமணி' தலையங்கங்களில் எந்தப் பொருள் குறித்தும் துணிவுடன் எழுதி வாசகர்களிடையே முத்திரை பதித்தார் ஐராவதம் மகாதேவன். குறிப்பாக, ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்தபோது, "ஒரு சொல் கேளீர்' எனத் தலையங்கம் எழுதினார். இந்தத் தலையங்கத்தை எதிர்த்து ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் ஐராவதம் மகாதேவனை வசைபாடி கடிதங்கள் எழுதியபோது, "என்னை வாழ்த்தி நிறைய கடிதங்கள் வந்துள்ளன' என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். திரிபுரா முதல்வராக இருந்த நிருபேந் சக்கரவர்த்தி பதவியிலிருந்து விலகி ஒரு பெட்டியுடன் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்துக்குப் புறப்பட்டுச் சென்றதை "அதிசயம் ஆனால் உண்மை' என துணைத் தலையங்கம் எழுதி காமராஜரையும் கக்கனையும் நினைவுகூர்ந்தார்.

தினமணி செய்திகள், செய்தி விமர்சனங்கள் என எதிலும் எழுத்துப் பிழை, பெயர் பிழை உள்பட எந்தப் பிழையும் வெளியாகிவிடக் கூடாது என்பதில் நாள்தோறும் அக்கறையுடன் செயல்பட்டார் ஐராவதம் மகாதேவன். பெயர்ச் சொற்களை எப்படி எழுத வேண்டும் என்பதில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். வங்கிகள் உள்பட எந்த அமைப்புகளாக இருந்தாலும் தனி நபருக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், "தினமணி' செய்திகளில் அந்த அமைப்புகளுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
 அவர் ஆசிரியராக இருந்தபோது, தினமணியில் தொடர்ந்து அணு உலையின் பாதிப்புகள் குறித்து கட்டுரைகள் வெளிவந்தன. அணு உலையின் கழிவுகளைக் குற்றாலம் மலையில் புதைக்க வேண்டும் என்று பிரதமர் இந்திரா காந்தி முடிவு செய்தார். அந்தச் சமயத்தில், இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பது பற்றி ஐராவதம் மகாதேவன் தினமணியில் ஒரு விரிவாக கட்டுரை எழுதினார். இதனை அடிப்படையாக வைத்து, இந்தத் திட்டத்திற்கு ஒப்புக் கொள்ள முடியாது என்று அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

"தினமணி' ஆசிரியராக ஐராவதம் மகாதேவன் பணியாற்றிய காலம் நான்கு ஆண்டுகள் மட்டும்தான் என்றாலும், ஏ.என். சிவராமனுக்குப் பிறகும் "தினமணி' தொடர்ந்ததற்கு அவர்தான் காரணம். 43 ஆண்டுகள் ஏ.என். சிவராமன் வகுத்திருந்த பாணியிலிருந்து "தினமணி' நாளிதழை மாறிவிட்ட சூழலுக்கேற்ப திசைதிருப்பி, அதன் அடிப்படைக் கூறுகள் சிதைந்துவிடாமல் பயணிக்க வைத்தது என்பது மிகப் பெரிய சாதனை.

ஐராவதம் மகாதேவன் தலைமையில், "தினமணி'யின் முகப்புத் தோற்றம் மாறியது. மொழிகளை மாற்றியது, பிரச்னைகள் குறித்த அணுகுமுறை மாறியது. ஆனால், "தினமணி'யின் "நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்' மாறவில்லை. "தினமணி'க்குப் புதுப் பாதை வகுத்துத் தந்த பெரும் பணி ஆசிரியர் ஐராவதம் மகாதேவனுடையது.

- ஜே.ரங்கராஜன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com