மிக அக்கிரமமான, கொடூரமான செயல் - தலையங்கம்

பிரதமர் திருமதி இந்திரா காந்தி புதன்கிழமை காலையில் தன் இல்லத்தில் தன் மெய்க் காவலராலேயே ஸ்டென் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது மிக அக்கிரமமான, கொடூரமான செயல்.

மிக அக்கிரமமான, கொடூரமான செயல்

பிரதமர் திருமதி இந்திரா காந்தி புதன்கிழமை காலையில் தன் இல்லத்தில் தன் மெய்க் காவலராலேயே ஸ்டென் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது மிக அக்கிரமமான, கொடூரமான செயல். இதனால் உலகமே அதிர்ச்சியடைந்துள்ளது. இந்தப் படுகொலை பலமாகக் கண்டிக்கத்தக்கது. 16 குண்டு காயங்களுடன் நினைவற்ற நிலையில் அகில இந்திய மருத்துவ இயல் கழகத்தில் சேர்க்கப்பட்ட அவருக்கு மருத்துவ நிபுணர்கள் தீவிர அறுவை சிகிச்சை செய்தபோதிலும் அவர் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. நெஞ்சிலும், வயிற்றிலும் 16 குண்டுகளால் துளைக்கப்பட்ட அவருக்குப் பிராண வாயுவும், இரத்தமும் செலுத்தப்பட்டது. மருத்துவ நிபுணர்கள் அரும்பாடு பட்டபோதும் முற்பகல் 11 மணிவாக்கில் அவர் உயிர் பிரிந்தது நாட்டை துக்கத்தில் ஆழ்த்திவிட்டது. எந்தக் கொலையும் கண்டிக்கத்தக்கது. அதுவும் அரசியல் வன்முறை காட்டுமிராண்டித்தனமானது; நாகரீக ஜனநாயக வாழ்வுக்குச் சிறிதும் ஏற்றதல்ல. திருமதி இந்திரா காந்தி மீது சுட்டவர்களில் ஒருவர் சத்பர்த் சிங் என்பவர் என்று சொல்லப்படுகிறது. அவர் பயங்கரவாதிகளில் ஒருவரா என்பது இன்னும் புலப்படவில்லை. வன்முறைகள் மூலம், அதுவும் தலைவர்களைச் சுடுவதன் மூலம் அரசியல் லட்சியங்களை அடைய முடியும் என்று யாராவது நம்பினால் அந்த நம்பிக்கை பொய்த்து விடும். ஏனென்றால், பொதுவாக இந்திய மக்கள் வன்முறைச் செயல்களை வெறுப்பவர்கள். இத்தகைய வன்முறை செயல்களால் மக்கள் கருத்து வன்முறையாளர்களுக்கு எதிராகவே உருவாகும் என்பது நிச்சயம்.

பிரதமரின் வீட்டிலேயே அவருடைய இரு மெய்க்காவலர்களாலேயே அவர் சுடப்பட்டது வியப்பையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. நாட்டின் முக்கிய தலைவர்கள் தாக்கப்படுவார்கள் என்று வன்முறையாளர்களால் அச்சுறுத்தப்பட்டிருக்கிறது. அவர்களை "தாக்கும் பட்டியலும்'' தயாரிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. இவ்வாறு அவர்களுடைய உயிருக்கு ஆபத்து இருப்பது அறியப்பட்டிருக்கிறது. இருந்தபோதிலும் பிரதமரைப் பாதுகாக்க போதிய பந்தோபஸ்து ஏற்பாடுகள் செய்யப்படாதது அதிர்ச்சியை அளிக்கிறது. மத்திய அரசில் உளவு அமைப்புகள் இருக்கின்றன. ஆனால் எவ்வாறு இத்தகைய வன்முறையாளர்கள் பற்றித் தகவல் பெற இயலாமல் போயிற்று என்பதும் கவலை தரும் விஷயம். முக்கியஸ்தர்களின் உயிரைக் காக்க இனியாவது முனைப்பான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டியது அவசியம் என்று கருதுகிறோம்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது மெய்க்காவலர்களாலேயே படுகொலை செய்யப்பட்ட செயலை கண்டித்து எழுதப்பட்ட தலையங்கம். (1.11.1984)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com