""கோவில்களில் விஐபி தரிசனங்கள் தேவைதானா...'' என்ற கேள்விக்கு வாசகர்களிடம் இருந்து வந்த கடிதங்களில் சில...

வி.ஐ.பி. தரிசனங்களால் கோவில்களின் புனிதம் கெட்டுப்போகிறது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை கோவில்களிலும் அரங்கேற்ற வேண்டுமா? பொருள் வசதியற்ற ஏழைகள் மீதான இந்தத் தீண்டாமை கோவில்களில் தேவையா?
Updated on
3 min read

தேவைதானா?

வி.ஐ.பி. தரிசனங்களால் கோவில்களின் புனிதம் கெட்டுப்போகிறது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை கோவில்களிலும் அரங்கேற்ற வேண்டுமா? பொருள் வசதியற்ற ஏழைகள் மீதான இந்தத் தீண்டாமை கோவில்களில் தேவையா?

இரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

சரிநிகர் சமானம்

இறைவன் சன்னதியில் அனைவரும் சரிநிகர் சமானம். மணிக்கணக்கில் கால்கடுக்க நிற்கும் சாதாரண, நடுத்தர மக்களை மேலும் காக்கவைத்துவிட்டு வி.ஐ.பி. என்ற போர்வையில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு கோவில் நிர்வாகம் காட்டும் முன்னுரிமைகள், சலுகைகள், மாலை - பரிவட்டம் போன்ற மரியாதைகள் முகம் சுளிக்க வைக்கின்றன. ஏன் கோவிலுக்கு வந்தோம் என்றுகூட எண்ணவைத்துவிடுகின்றன.

எஸ். குமரவேல், அம்மையப்பன்.

மன்னர்களின் எளிமை

திருக்கோயில்களை மன்னாதிமன்னர்கள் வலிவுற, பொலிவுற அமைத்தனர். தங்கள் இல்லங்களைப் பெரிதாக அமைத்துக்கொள்ளவில்லை. வெகு தொலைவிலிருந்து பார்த்தாலும் கோயில் கோபுரம் எளிதில் தெரியும்வண்ணம் அக் காலத்தில் மாட மாளிகைகளை உயரம் குறைவாகவே கட்டினர். திருப்பதி - திருமலைக் கோவில்களைச் சீரமைத்த ஸ்ரீ கிருஷ்ண தேவராயர், பக்தர்கள் செல்லும் வழியில் அவர்களை வணங்கி வரவேற்கும் நிலையிலேயே தன் சிலையை அமைத்துள்ளார். மதுரை மீனாட்சி கோயில் வாயிலில் திருமலை நாயக்கர் சிலை கைகூப்பி பக்தர்களை வரவேற்கும் விதத்திலேயே அடக்கமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. இதை இன்றைய வி.ஐ.பி.க்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஆ. ஜெயப்பிரகாசம், சென்னை.

குற்றமாகும்

கடவுளை வணங்க ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் பார்ப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும். பயபக்தியோடு வணங்குகிறவனையே இறைவன் மிகவும் பிரியமாக வைத்திருக்கிறான். இறைவன் தன்னுடைய அடியார்களிடத்தில் எந்த பேதத்தையும் பார்ப்பதில்லை. வி.ஐ.பி. தரிசன முறையை உடனடியாகக் கைவிட வேண்டும்.

க. சுல்தான் ஸலாஹுத்தீன் மழாஹிரி,
காயல்பட்டினம்.

பாகுபாடு கூடாது

ஆலயங்களில் வி.ஐ.பி. தரிசனம் இருப்பதும் கட்டணம் வசூலிப்பதும் முறையற்றது. இறைவனை தரிசிக்க விரதம் பூண்டு, பல மைல்தூரம் நடந்தே வந்து, பக்தியோடு வழிபட வருகிறவரை கெடுபிடிகள் ஏதும் இல்லாமல், கட்டணம் வசூலிக்காமல் தரிசிக்க அனுமதிக்க வேண்டும். மசூதிகளிலும் தேவாலயங்களிலும் இந்த முறைகள் கிடையாது. ஆலயத்துக்குள் உள்ள அனைவரையும் சமமாக நடத்த அரசும் ஆலய நிர்வாகங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மு.க. இப்ராஹிம், வேம்பார்.

தனி தரிசனம் அவசியமே

பொது தரிசன வழியில் வி.ஐ.பி.க்களை அனுமதித்தால் அவர்களைக் காணும் ஆர்வத்தில் கூட்டத்தில் நெரிசல் ஏற்படும். இதனால் குழந்தைகள், முதியோர், பெண்களுக்கு இன்னல் அதிகரிக்கும். வி.ஐ.பி.களின் உயிருக்கு அச்சுறுத்தல்களும் இருப்பதால் உரிய பாதுகாவலர்களுடன் அவர்கள் தனி வழியாக வந்து வழிபடுதல் அவசியம். எனவே தனி தரிசனம் அவசியமே.

கோ. ராஜேஷ் கோபால், சென்னை.

வரன்முறை அவசியம்

கோவில்களில் வி.ஐ.பி. தரிசனம் தேவையானதுதான்; இதனை முற்றிலுமாகத் தடை செய்ய முடியாது. ஆனால் வி.ஐ.பி. யார் யார் என்பதனை வரன்முறைப்படுத்துவது கட்டாயமாகின்றது. வி.ஐ.பி.கள் நேரில் வரும்போது அவருக்கு முன்னுரிமை வழங்கவேண்டும். வி.ஐ.பி.களிடமிருந்து கடிதம் கொண்டுவருவோர், அவர்களுடைய பெயர்களைக் கூறுவோர், இடைத் தரகர்கள் ஆகியோருக்கும் சிறப்பு தரிசன அனுமதி வழங்கத் தேவையில்லை. கோவிலில் பக்தர்களுக்குத்தான் முன்னுரிமை என்பதில் நிர்வாகம் உறுதியாக இருக்க வேண்டும்.

வீ. வேணுகுமார், கண்ணமங்கலம்.

தவிர்க்க முடியாது

கோவில்களில் வி.ஐ.பி. தரிசனம் தவிர்க்க முடியாதது. இறைவனை வழிபட நூற்றுக்கணக்கான மைல் தொலைவிலிருந்து பல்வேறு துயரங்களுக்கு இடையேயும் கோவிலுக்கு வரும் பக்தர்களின் நிலையை ஆலய நிர்வாகிகள், ஊழியர்கள் மனதில் கொள்ள வேண்டும். ஒரு சில விநாடிகளே கருவறையில் அனுமதிக்கப்படும் பக்தர்கள் இடையூறுகள் இல்லாமல் தரிசனம் செய்வதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். ஆலயங்களின் பெருமை கடவுளரின் அருள் தன்மையாலும் அவருடைய பக்தர்களின் பெருமைகளாலும்தான் சிறப்படைகின்றது. பண்டிகைக் காலங்களில் வி.ஐ.பி.க்களுக்குத் தரப்படும் சலுகை, பக்தர்கள் மனம் நோகும் அளவுக்குப்போகாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

வலியவீட்டில் லதா, வெள்ளிச்சந்தை.

வாரத்தில் ஒரு நாள்

வி.ஐ.பி.களுக்கு தினந்தோறும் நேரம் ஒதுக்குவதைவிட வாரத்தில் ஒருநாள் குறிப்பிட்ட சில மணி நேரங்களை ஒதுக்கலாம். தினந்தோறும் பல ஊர்களிலிருந்து ரயில், பஸ் பிடித்துவரும் பக்தர்களின் சிரமத்தை இதன் மூலம் குறைக்கலாம். வி.ஐ.பி.களின் பாதுகாப்புக்காக வரும் காவல்துறையினர் இதர பக்தர்களிடம் காட்டும் கெடுபிடியால் அஞ்சி, எப்போது கோவிலைவிட்டு வெளியேறுவோம் என்று பக்தர்கள் நினைக்கின்றனர்.

என்.வி. சீனிவாசன், புது பெருங்களத்தூர்.

தவறேதும் இல்லை

நல்ல நாளில் கோவிலுக்கும் செல்ல வேண்டும், அதே சமயம் வேலைக்கும் செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சிறப்புக் கட்டணம் மூலம் தரிசிக்க வாய்ப்பு ஏற்படுத்தித்தருவதில் தவறேதும் இல்லை. கருவறைக்கு முன்னால் தரும தரிசன வரிசையும் சிறப்புக் கட்டண வரிசையும் ஒன்றாக்கப்பட்டு அதன் பிறகு இருவகை பக்தர்களும் சமமாக நடத்தப்பட வேண்டும். ஒரு சிலருக்கு மட்டும் மூலவர் அருகில் நின்று நீண்ட நேரம் வழிபட அனுமதி தரும் தனிச்சலுகைகள் கூடாது.

ப. வெங்கடாசலம், கிருஷ்ணகிரி.

சரிதான்

தேசியத் தலைவர்கள், மாநில முதல்வர், அமைச்சர்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு ஆலய தரிசனத்தில் முன்னுரிமை அளிப்பது சரிதான். அவருடைய பெயரைச் சொல்லி உடன் வரும் வட்டம், மாவட்டம், நகரம் ஆகியோருக்கும் அதே சலுகைகளை வழங்கி பரிவட்டம் கட்டுவது போன்றவற்றை நிறுத்த வேண்டும். அதிக கட்டணம் வாங்கிக்கொண்டு விரைந்து வழிபட அனுமதிப்பதைக் கைவிடவேண்டும்.

வீ. கணேசன், கோவில்பட்டி.

தேவைதான்

வி.ஐ.பி.களுக்கு சிறப்பு தரிசன அனுமதி தேவைதான். மாவட்ட நீதிபதிகள், ஆட்சியர், கோட்டாட்சியர், காவல்துறை, தீயணைப்புத்துறை அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள், ரயில் நிலைய மேலாளர்கள், டாக்டர்கள் என்று சமூகத்தின் உயர் பதவிகளில் இருக்கும் பிரமுகர்களுக்கு நேரம் மிகவும் முக்கியமானது. அவர்களையும் மற்றவர்களைப் போலவே வரிசையில் மணிக்கணக்கில் நின்று வழிபடச் சொல்வது சரியல்ல. முதியோர், பெண்கள், குழந்தைகள் கோயிலுக்கு வருவதை மனதில் கொண்டு அவர்களும் விரைந்து தரிசனம் செய்ய திருப்பதியில் உள்ளதைப்போல தமிழ்நாட்டில் உள்ள பெரிய கோவில்களிலும் வழிகாண வேண்டும்.

எஸ். புருஷோத்தம்ராஜன், பரமக்குடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com