அடிமை உணர்வில் இருந்து இந்தியா மீள வேண்டும் என்கிற பிரதமரின் கருத்து குறித்து...வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

இந்தியா சுதந்திரம் அடைந்தாலும் மனதளவில் இந்தியர்கள் அனைத்து விஷயங்களிலும் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள்,
Updated on
3 min read

துணிந்து நில்லுங்கள்!

இந்தியா சுதந்திரம் அடைந்தாலும் மனதளவில் இந்தியர்கள் அனைத்து விஷயங்களிலும் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள், பணக்காரனுக்கு ஏழை அடிமை; அதிகாரம் செய்பவனுக்கு நேர்மையாக உழைப்பவன் அடிமை. உண்மையைச் சொன்னால் ஏதாவது அசம்பாவிதம் தனக்கு ஏற்படுமோ என்று பயந்து வாய்மூடி மெüனியாய் இருப்பவன் அடிமை. இதில் எங்கே சுதந்திரம் இருக்கிறது? நாட்டை ஆள்பவர்களும் இந்தியர்களே; ஆளப்படுபவர்களும் இந்தியர்களே. இதில் அடிமை உணர்வுக்கு ஏன் அடிமையாக வேண்டும்? துணிந்து நில்லுங்கள் ; வெற்றி நமதே.

பா. பிரேமா, தஞ்சாவூர்.

உருவாக்கித் தர வேண்டும்...

பிரதமர் எதற்காக இப்படி குறிப்பிட்டுள்ளார் என்று தெரியவில்லை. சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் மக்கள் இன்னும் சுதந்திரம் பெறவில்லை என்பதை தான் குறிப்பிடுகிறாரோ என்று தெரியவில்லை. நாடும் மக்களும் சுதந்திர உணர்வோடு இருப்பதற்கும் செயல்படுவதற்கு ஆட்சியாளர்கள்தான் மக்களுக்கான வழிகாட்டுதல்களையும் திட்டங்களையும் உருவாக்கித் தர வேண்டும்.

மா. பழனி, கூத்தப்பாடி.

முடிந்தவற்றை செய்வோம்...

நம் பிள்ளைகளிடமே அடிமை உணர்வு இருக்கக் கூடாது என்ற நினைப்பு இருக்கும்போது ஒரு தேசத்தை ஆளும் தலைவருக்கு இதேபோல் ஆசை இருப்பதில் தவறே இல்லை. மோடி அவர்களின் நியாயமான ஆசையினால் நம் நாட்டிற்கும் பெருமை. இந்த தேசத்தில் வாழும் நமக்கும் பெருமை. இப்படி பெருமை சேர்க்கும் மோடி அவர்களை போல் நாமும் நம் இந்தியா அடிமை உணர்வில் இருந்து மீள நம்மால் முடிந்தவற்றை செய்வோம்.

நந்தினி கிருஷ்ணன், மும்பை.

உண்மையே!

விடுதலை அடைந்த பின்னர் முதலில்அரசாண்ட பெரியவர்கள் நம்மை அடிமை உணர்விலிருந்து மீட்க படிக்க வைத்தனர். அதன் பின் வந்தவர்கள் தங்கள் சுயநலத்திற்காக பல கவர்ச்சியான அறிவிப்புகளை கொடுத்து மக்களை மயக்கி மீண்டும் அடிமை உணர்விற்கு நம்மை ஆட்கொண்டுவிட்டனர். படித்திருந்தாலும் இவர்களால் மக்கள் இன்னமும் அடிமை உணர்விலிருந்து மீளவில்லை. கவர்ச்சி அறிவிப்புக்கும் இலவசத்திற்கும் இன்னமும் அடிமையாகி இருக்கிறோம் என்பதையே பிரதமர் கூறியுள்ளார். அவரது கருத்து உண்மையே

கோ.ராஜேஷ் கோபால், மணவாளக்குறிச்சி.

ஒரே நேரத்தில் நடக்க வேண்டும்...

பிரதமர் கூறும் அடிமை உணர்விலிருந்து மீள வேண்டும் என்பது காலனித்துவ சிந்தனை இன்னும் நிர்வாகம், கல்வி, மொழி ஆகியவற்றில் தாக்கம் செலுத்துகிறது என்பதை நினைவூட்டுகிறது; அதனால் தன்னம்பிக்கை, சொந்த அடையாளம், பாரம்பரிய அறிவு மீண்டும் வலுப்படுத்தப்படலாம். ஆனால் இதே நேரத்தில் வேலைவாய்ப்பு, சமத்துவம், கல்வித்தரம் போன்ற பிரச்னைகளையும் மறக்கக் கூடாது. உலகத்திலிருந்து கற்றுக்கொள்வது அடிமைத்தனம் அல்ல. ஒத்துழைப்பும், முன்னேற்றமும் தான். ஆகையால், வரலாற்று சங்கிலிகளை நீக்குவதும், நியாயமான தற்போதைய தேவைகளைச் சந்திப்பதும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும்.

சா. முகம்மது ஹுசைன், அறந்தாங்கி.

தேசபக்தி பெருகும்...

சுதந்திரப் போராட்டம் நடத்தி மக்களாட்சி அமைத்தாலும் இன்னும் நம் மரபணுக்களில் அடிமைத்தனம் மிச்சமிருக்கிறது. மொழி, கலாசாரத்திலும் உடை, உணவிலும்கூட உலகமயமாக்களால் மேலும் மேற்கத்தியத்திற்கு மோகமானோம். இதைத்தான் பிரதமர் அடிமை உணர்விலிருந்து இந்தியா மீள வேண்டும் என்று சுயமரியாதை, சுதேசியம் போன்ற அவசியங்களை உணர்த்தி இருக்கிறார். இதை பின்பற்றினால் தான் தேசபக்தி பெருகும்.

அ. யாழினி பர்வதம், சென்னை.

தேவையற்றது...

பிரதமரின் கருத்து தேவையற்றது. ஏனெனில் இந்தியா சுதந்திரம் பெற்ற புதிதில் வெளிநாட்டு மோகம் அதிக அளவில் இருந்தது உண்மைதான். ஆனால் தற்போது வெளிநாட்டு மோகம் மிகவும் குறைந்துவிட்டது. மக்கள் சுதேசி பொருள்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். வெகு சிலரே இன்னும் வெளிநாட்டு மோகத்தில் உள்ளனர். அந்த வெகு சிலரில் பலர் அரசியல்வாதிகள் தான். அவர்கள் தான் வெளிநாட்டு கார் உடைகள் மற்றும் பல பொருட்களையும் வெளிநாட்டு வங்கி சேவைகளையும் பயன்படுத்துகின்றனர். அடிமை உணர்வில் இருந்து இந்தியா எப்போதோ மீண்டு விட்டது.

ஆ ஜூட் ஜெப்ரி ராஜ், சோமனூர்.

வரவேற்கலாம்...

அந்நிய ஆட்சியின் போது பாரத மக்களிடம் ஜாதி மத வேற்றுமையின்றி நிலவிய அந்நியோன்யம் சுதந்திரம் பெற்ற சில காலம் வரை நீடித்துப் பின் ஆட்சி அதிகாரம் என்ற போதை கூட அநியாயத்துக்கு ஜாதி மதங்களை கையில் எடுத்துக் கொண்டார்கள் அரசியல்வாதிகள். சுய நலத்துக்காக சுதந்திரத்தை மெல்ல மெல்லவே மறந்து போனார்கள். ஜாதி மதத் தலைவர்களின் பின்னால் பலனடைந்த சிலரின் அணுகுமுறையால் மீண்டும் அவரவர் தலைவர்களுக்கே அடிமையாகி விட்டநிலை தான் இப்போது உள்ளது. தன் சொந்த உணர்வின் உந்து சக்தியால் இந்தியாவே மீள வேண்டும் என்று பறை சாற்றியுள்ளார். வரவேற்கலாம்.

ஆர்.ஜி .பாலன், மணலிவிளை.

பெருமையாக எண்ண வேண்டும்...

யாருக்குத்தான் அடிமையாக இருக்க பிடிக்கும். ஒரு கிளியை பிடித்து கூண்டில் அடைத்து அதற்கு பாலும் சோறும் கொடுத்தாலும் அதற்கு உல்லாசமாக வானில் பறக்கத்தான் பிடிக்குமே தவிர அந்த கூண்டுக்குள் அடைபட்டு வாழ பிடிக்காது. அது போலதான் இந்தியா என்ற உலகில் பல சாதனைகளை படைத்து வரும் நாடும் அடிமை உணர்விலிருந்து மீள வேண்டும் என்பதால் நம் பாரத பிரதமர் மோடி அவர்கள் சொல்லி இருக்கிறார். நம் நாட்டு தலைவருக்கு இப்படி ஒரு உணர்வு இருப்பதை பெருமையாக எண்ண வேண்டும். இவரைப் போன்றவரால்தான் நம் நாடு அடிமை என்ற சொல்லையே மறக்க முடியும்.

உஷா முத்துராமன், மதுரை.

அடிமை எண்ணம் கூடாது...

அடிமை என்ற மூன்றெழுத்தை மறந்து சுதந்திரம் என்ற ஆறு எழுத்தை அனுபவிக்க வேண்டும் என்று அன்று பலர் தன் உயிர்களை தியாகம் செய்து இருப்பதை நாம் வரலாற்று செய்தியாக படித்து இருக்கிறோம். இன்று நம்மிடையே அடிமை என்ற எண்ணமே இருக்கக் கூடாது என்பதாலேயே பிரதமர் நம் தேசம் அடிமை என்ற உணர்வில் இருந்து மீள் வேண்டும் என்று சொல்கிறார். அந்த எண்ணத்திலிருந்து மீள வேண்டும் என்பதே பிரதமரின் ஆசை. அவருடைய ஆசையால் மக்கள் மகிழ்ந்து செயல் படும் போது நம் நாடு முன்னேற்ற பாதையில் பீடு நடை போடலாம்.

பிரகதாம்பாள், கடலூர்.

சுயமாக முடிவெடுத்தால்தான்...

பிரதமரின் கருத்து மிகவும் சரியானதே. ஆங்கிலேயரின் அடிமை ஆட்சியிலிருந்து நாம் சுதந்திரம் பெற்று விட்டோமே அன்றி அவர்கள் நம் மீது திணித்த அடிமைத்தனத்திலிருந்து நாம் முழுமையாக விடுதலை பெறவில்லை. காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போடுவது, இலவசங்களுக்காக ஓட்டு போடுவது, மதத்திற்காக ஓட்டு போடுவது, ஜாதிக்காக ஓட்டு போடுவது என்ற பல்வேறு அடிமைத்தனங்கள் நம்மிடம் இன்றும் இருக்கிறது. இந்தியர்கள் என்று சுதந்திரமாக சிந்தித்து நன்மை, தீமைகளை பகுத்து அறிந்து சுயமாக முடிவெடுக்கிறார்களோ அன்று தான் அடிமை வாழ்விலிருந்து விடுதலை பெற்றவர்.

ஜீவன், கும்பகோணம்.

அகற்றுவோம்...

பாரம்பரியமும் நீண்ட வரலாறும் கொண்டது இந்தியா.மன்னராட்சியும் ஜனநாயகமும் சிறப்புற்றிருந்த நாடு. ஆனால் இடைப்பட்ட ஒரு நூற்றாண்டு காலம் ஆங்கிலேயர் ஆட்சிக்கு அடிமைப்பட்டிருந்தது. அது முதல் நமது பொருளாதாரம் , கல்வி, உறவு முறை, பண்பாடு, நாகரிகம் முதலியவற்றில் பிரிட்டீஷ் ஆதிக்கம் பரவத் தொடங்கியது. இந்திய கல்வி முறையை மாற்றியமைத்தனர். இந்திய மொழிகள் அடுக்கப்பட்டு ஆங்கிலம் கோலோச்சியது. இந்தியர்களிடம் அடிமை உணர்வு ஊட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போதும் அடிமை உணர்வை அகற்ற முடியாத நிலை. அகற்றுவோம் அடிமை உணர்வினை.

வீ.வேணுகுமார், கண்ணமங்கலம்.

மீள வேண்டியது அவசியம்!

பாரம்பரியம் மிக்க நமது நாடு அந்நியருக்கு அடிமைப்பட்டுக் கிடந்ததில் இழந்த தனது சுய உருவினை மீட்டெடுக்கப் பாடுபட வேண்டியதன் அவசியம் பற்றிய பிரதமரின் வாக்கு சத்தியமானது. சுதந்திரம் அடைந்து 77ஆண்டுகளுக்குப் பின்னும் மனித உயிருக்குப் பாதுகாப்பின்மை போன்ற தீய சக்திகளால் தனி மனித சுதந்திரம் பாதிக்கப்பட்டு, தனது விலைமதிப்பற்ற வாக்குரிமைதனை இலவசங்களுக்கு மயங்கி, தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு, அல்லல் வாழ்க்கையில் உழல்வது அடிமைத்தனத்தின் அடித்தளம். நாடு சுதந்திரம் பெற போராடிய வீரர்களையும், நமது பாரம்பரியங்களைக் கட்டிக் காத்த நமது முன்னோர்களையும் நினைவுகூரத் தவறியதே அடிமை உணர்விலிருந்து நாம் மீளவில்லை என்பதற்கான அடையாளம்! அதிலிருந்து நாம் மீள வேண்டியது மிக அவசியம் !

கே.ராமநாதன், மதுரை.

உண்மையான கருத்து..!

பிரதமராக நரேந்திர மோடி வெற்றி பெற்று என்று அரியணை ஏறினாரோ அன்று முதல் தற்போது வரை உலக வல்லரசு நாடுகள். எதற்கும் நாம் அடிமை இல்லை என்ற வகையில் ஆட்சி செய்து வருகிறார். இன்று நமக்கு எப்போதும் அச்சுறுத்தல் செய்து வரும் சீனாவையும், அண்மையில் நம் நாட்டுப் பொருள்கள் மீது அதிகளவில் வரிவிதிப்பு செய்து மிரட்டிய அமெரிக்காவையும் கண்டு பயப்படாமல் சுதந்திரமாக ஆட்சி செய்து வரும் நரேந்திர மோடி தான் இன்று உலகளவில் உண்மையான வலிமையான தலைவராக வலம் வருகிறார். இந்தியா யாருக்கும் அடிமை இல்லை என்பதை தனது ஆட்சியின் மூலம் நிரூபித்து வருகிறார். அந்த வகையில் நாம் அடிமை உணர்வில் இருந்து மீண்டு விட்டதாகவே நினைக்கிறேன்.

அ.குணசேகரன், புவனகிரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com