நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் மீண்டும் அமளியுடன் தொடங்கியுள்ளது குறித்து...வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

அமளி இல்லாமல் எந்தக் கூட்டத் தொடரும் தொடங்கியதில்லை. உலக அளவில் பெரிய நாடுகளில் ஒன்றான இந்தியா பல்வேறு மதங்கள், கலாசாரங்கள் கொண்டது.
Updated on
3 min read

தீர்வு வேண்டும்

அமளி இல்லாமல் எந்தக் கூட்டத் தொடரும் தொடங்கியதில்லை. உலக அளவில் பெரிய நாடுகளில் ஒன்றான இந்தியா பல்வேறு மதங்கள், கலாசாரங்கள் கொண்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மக்களின் பிரச்னைகளை முன்வைக்கும்போது அமளி ஏற்படுகிறது. இதற்குத் தீர்வு காணப்பட வேண்டியது அவசியம். பலரும் ஒரே நேரத்தில் குரல் கொடுப்பதால் அமளி அதிகமாகிறது. சில குறிப்பிட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படுவது தொடர்பாக விவாதம் நடத்த எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் நாடாளுமன்ற ஜனநாயகம் பாதுகாக்கப்படும்.

ப.பீர் இலாஹி, உத்தமபாளையம்.

விவாதம் அவசியம்

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற ஒரு மணி நேரத்துக்கு மக்கள் வரிப் பணம் ரூ.1.50 கோடி செலவிடப்படுகிறது. முன்பெல்லாம் நாடாளுமன்றம் அதிக முறை கூட்டப்பட்டுள்ளன. தற்போது அது குறைந்து விட்டது. அதுவும் பல நாள்கள் அமளியிலேயே கழிந்து விடுகின்றன. இதனால், கடைசி இரு நாள்களில் முக்கிய மசோதாக்களை ஆளும்கட்சி நிறைவேற்றி, தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கிறது. ஆளும்கட்சிக்கு பெரும்பான்மை பலம் இருந்தாலும், மசோதாக்கள் மீது எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்தி தங்களின் எதிர்ப்பையோ, ஆதரவையோ தெரிவிப்பது அவசியமாகும்.

கலைப்பித்தன், கடலூர்.

பொறுப்பை உணர வேண்டும்

அமளியை யார் ஏற்படுத்துகிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சியின் பேசும்போது அதை இரு தரப்பினரும் கவனத்துடன் கேட்டு பதில் தர முயற்சிக்க வேண்டும். அதை விடுத்து, கூச்சல் போட்டு அமளிக்கு காரணமாகக் கூடாது. மேலும், மக்கள் பிரதிநிதிகள் என்ற நிலையை உணர்ந்து செயல்பட வேண்டும். வாக்களித்த மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பவர்களாக இருக்க வேண்டும்.

தங்கள் தொகுதி உறுப்பினர் தங்களின் உரிமையை நிலைநாட்டுவார் என்ற எண்ணத்தை எம்.பி.க்கள் ஏற்படுத்த வேண்டும்.

வே.ஸ்ரீநிவாசன், பெருங்களத்தூர்.

ஆளும்கட்சியின் கடமை

ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளின் நோக்கம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது. எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்புடன் ஆளுங்கட்சி செயல்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பது ஆளும்கட்சியின் கடமை.

அவ்வாறு இல்லாமல் கடந்து செல்லும்போது அமளி, கூச்சல் போன்றவை ஏற்படுகின்றன. இதனால், எதிர்க்கட்சிகளின் வாய்ப்புகளும் வீணடிக்கப்படுகின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும்.

முனைவர் நா.இராசமோகன்,

ஜாம்புவானோடை.

அமளியால் யாருக்குப் பயன்?

நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்திச் செல்ல வேண்டும் என்ற அக்கறையுடன் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் செயல்பட வேண்டும். முக்கிய பிரச்னைகள், மசோதாக்கள் மீது விவாதங்கள் நடைபெற்றால்தான் அவற்றின் சாதக, பாதகங்களை நாட்டு மக்கள் அறிந்து கொள்ள முடியும். அதை விடுத்து, அமளியில் ஈடுபடுவதால் ஆளுங்கட்சிக்குத்தான் பலன். ஒரு மணி நேரம் நாடாளுமன்றம் செயல்பட ஆகும் செலவு குறித்து அறியாதவர்களா நம் மக்கள் பிரதிநிதிகள். இதையெல்லாம் மனதில் கொண்டு உறுப்பினர்களின் செயல்பாடு அமைய வேண்டும்.

எஸ்.வேணுகோபால், சென்னை.

வருத்தமளிக்கிறது

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் கூச்சல், குழப்பமின்றி அமைதியாக நடைபெற்றால்தான் ஜனநாயகம் வலுப்பெறும். ஆனால், அண்மைக்காலமாக கூச்சல், குழப்பத்துடனேயே கூட்டத் தொடர் நடைபெறுவது வருத்தமளிக்கிறது. எதிர்க்கட்சியினர் தங்களது பொறுப்புகளை உணர்ந்து நாடாளுமன்றத்தில் செயல்படும்போது, மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும். இரு தரப்புகளும் நல்ல விஷயங்களை எடுத்துக் கொண்டு செயல்பட்டால், நாட்டின் வளர்ச்சி வேகமெடுக்கும். ஆரோக்கியமான விவாதங்கள் நாடாளுமன்றத்தின் மாண்பை பிரதிபலிக்கும்.

கே.அனந்தநாராயணன், கன்னியாகுமரி.

பிழை தொடர்கிறது

எதிர்க்கட்சியாக யார் வந்தாலும் நாடாளுமன்றத்தில் அமளியும், வெளிநடப்பும், நாள் முழுவதும் ஒத்திவைக்கச் செய்வதும் வாடிக்கையாகி விட்டது. நாடாளுமன்றத்தின் நேரம், அவையை நடத்துவதற்கான செலவு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து யாரும் கவலை கொள்வதாகத் தெரியவில்லை. நாடாளுமன்றத்தை முடக்குவதோ, ஒத்திவைக்க செய்வதோ மட்டும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது. காலம் காலமாக இந்தப் பிழை தொடர்கிறது.

கோ.லோகநாதன், திருப்பத்தூர்.

இரு தரப்புக்கும் பொறுப்பு

அண்மைக் காலமாக நாடாளுமன்ற மாண்புகளை உறுப்பினர்கள் கடைப்பிடிப்பதே இல்லை என்று முன்னாள் உறுப்பினர்கள் அடிக்கடி கூறுவதைக் கேட்க முடிகிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்கள் நலனுக்காகவே கேள்வி எழுப்புகின்றனர் என்ற புரிதல் ஆளும் கட்சியினருக்கு வேண்டும். அவையை அமளியின்றி சுமுகமாக நடத்துவதில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என இரு தரப்பினரும் சம அளவில் பொறுப்பு உள்ளது. இதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

தி சேகர், பீர்க்கன்கரணை.

ஜனநாயகத்துக்கு நஷ்டம்

நமது நாட்டின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் இடத்தில் நேர விரயம் செய்வது நாட்டின் உண்மையான வளர்ச்சியைத் தடுக்கும். எதிர்க்கட்சிகளுக்கு ஆளும் தரப்பு மீது அதிருப்தி இருப்பின், நாடாளுமன்றத்தில் அது குறித்து ஆக்கபூர்வமாக விவாதிக்கலாம். மாறாக, ஒவ்வொரு முறையும் அமளியில் ஈடுபட்டு நாட்டு மக்களின் வரிப் பணத்தையும் நேரத்தையும் வீணடிக்கின்றனர். இதில் நஷ்டமடைவது ஆரோக்கியமான ஜனநாயகமே.

தோ.லட்சுமி நரசிம்மன்,

காட்டுமன்னார்கோவில்.

முடக்கம் தீர்வல்ல!

ஆளும் கட்சியின் செயல்பாடுகளை நாடாளுமன்றத்தில் முன்வைத்து விவாதம் செய்வது எதிர்க்கட்சிகளின் கடமை. அதைவிடுத்து, கூட்டத் தொடரையே முடக்கும் விதமாக அமளி, வெளிநடப்பில் ஈடுபடுவதால் மக்கள் பிரதிநிதிகளான அவர்களின் வாய்ப்புகள் வீணடிக்கப்படுகின்றன. நாடாளுமன்ற முடக்கத்தையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் நாம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

முடக்கம் மட்டுமே தீர்வாகிவிட முடியாது.

கா.ராமசாமி, கீழப்பனையூர்.

பணத்தை வீணடிக்கக் கூடாது

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அமளியுடன் தொடங்கி இருப்பது வருத்தமே. அமைதியான மற்றும் ஒழுக்கமான முறையில் அவையை நடத்த விரும்புவதாக ஆளும்கட்சி தெரிவித்தாலும், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பதில்லை. மக்கள் பிரச்னை தொடர்பாக விவாதம் நடத்த நோட்டீஸ் அளித்தாலும், அது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டையும் புறந்தள்ள முடியாது. ஆளும் தரப்பும், எதிர்க்கட்சிகளும் மக்கள் பணத்தை வீணடிக்காமல் அவையை சுமுகமாக நடத்த முன்வர வேண்டும். மக்கள் நலன் சார்ந்த முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

ங.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்.

ஆளும் கட்சியினரே...

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் என்பதே ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் அமர்ந்து அவர்களின் எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு நிகழ்வு. இதில் எதிர்க்கட்சியினர் தங்களின் கருத்துகளைக் கூறும் போது, அவற்றை ஆளும் கட்சியினர் அமைதியாகக் கேட்டு, அதற்குப் பதிலளித்தால் அமளி ஏற்பட வாய்ப்பு குறைவு. அதைவிடுத்து வாக்குவாதத்தில் ஈடுபடுவதால் அவையை நடத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. இது தொடரும் போது, நாள் முழுவதும் அவையை ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

கூடுதல் நாள்கள் முறையாக அவை நடைபெறும்போது, பல்வேறு நன்மைகள் மக்களைச் சென்றடயும் வாய்ப்புள்ளது.

நந்தினி கிருஷ்ணன், மும்பை.

மறந்து விடுகிறார்கள்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் அமளியுடன் தொடங்கியுள்ளது மிகவும் வருத்தத்துக்குரியது. தற்போதைய எதிர்க்கட்சியினர் எதிரிக் கட்சியாகவே செயல்படுவது ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல. ஆக்கபூர்வ விவாதங்களை முன்னெடுக்க வேண்டும். கூட்டத் தொடர் தொடங்கும் முன்பாக நடைபெறும் அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில், கூட்டத் தொடரை அமளி இல்லாமல் நடத்த ஒத்துழைப்போம் என்று எதிர்க்கட்சிகள் கூறுவது வாடிக்கையாகி விட்டது. ஆனால், அதை வசதியாக மறந்து விடுகிறார்கள்.

இதனால், பாதிக்கப்படுவது ஜனநாயகமே.

அ.பட்டவராயன், திருச்செந்தூர்.

நகைமுரண்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் போராடும் வேளையில், தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து மட்டுமே விவாதிக்கலாம் என ஆளும் கட்சி கூறுவது நகைமுரண். தேர்தல் ஆணையம் என்பது நிர்வாகம் சம்பந்தப்பட்டதால் அதில் மத்திய அரசு தலையிடுவது சரியாக இருக்காது எனவும் கூறப்படுகிறது. ஜனநாயக நாட்டில் வாக்குரிமை பற்றி பேசக்கூட அனுமதிக்காத போக்கு கண்டிக்கத்தக்கது. இத்தகைய செயல்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

கே.ஆர்.ராஜேந்திரன், திருப்பரங்குன்றம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com