அமெரிக்க குடியுரிமைக்கு ஒரு மில்லியன் டாலர் (ரூ.9 கோடி) என அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்ணயித்துள்ளது குறித்து... வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

அமெரிக்காவில் வேலை என்பது பெருமை; உள்ளூர் வேலையை மதிக்காமை; பெற்றோரை மறத்தல்; உறவினர் உறவு முறிதல்;
Updated on
3 min read

சவுக்கடி அறிவிப்பு

அமெரிக்காவில் வேலை என்பது பெருமை; உள்ளூர் வேலையை மதிக்காமை; பெற்றோரை மறத்தல்; உறவினர் உறவு முறிதல்; இந்திய கலாசாரத்தை துறத்தல்; அமெரிக்க கலாசாரத்தைப் புகுத்துதல் மற்றும் இந்திய உள்கட்டமைப்பை ஏளனம் செய்வது, குழந்தைகளை அமெரிக்கப் பாணியில் வளர்ப்பது, இந்தியா தனது தேசம் என்பதை மறந்து செயல்படுவோருக்கு அதிபர் டிரம்ப்பின் அறிவிப்பு சவுக்கடி போன்றது. எங்கு பணியாற்றினாலும் தன் நாடு, உறவுகளை மறந்து செயல்படுவோருக்கு இந்த அறிவிப்பு அதிர்ச்சியை அளித்திருக்கும். அவர்களைப் போன்றோருக்கு ரூ.9 கோடி நிர்ணயித்தது சரிதான்.

நா.குழந்தைவேலு, மதுரை.

கட்டுப்படுத்தும் நோக்கில்...

அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கான கட்டண உயர்வு இந்தியர்கள் உள்பட வெளிநாட்டுப் பணியாளர்கள் குடியேறுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் உள்ளது என்று கூறப்பட்டாலும், அமெரிக்காவின் பொருளாதாரம், வேலைவாய்ப்பில் மிகப் பெரிய எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுவதையும் புறந்தள்ளிவிட முடியாது. கட்டண உயர்வு, புதிய கொள்கைகளுக்கு எதிராக அங்குள்ள பல மாகாணங்கள் வழக்கு தொடுத்துள்ளன. அதற்கான தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மவ்லவீ ங.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்.

அவசியமில்லை

அமெரிக்க அதிபரின் இந்த உத்தரவு அங்கு வாழும் வெளிநாட்டினருக்கு அதிர்ச்சியையும், மன உளைச்சலையும் தந்துள்ளது.

ரூ.9 கோடி செலுத்தி நிரந்தர குடியுரிமைக்கான "தங்க அட்டையை' வாங்க வேண்டிய அவசியமில்லை. அங்கு இதுவரை வாழ்ந்த ஒருவர், இந்தியாவுக்கு வந்து இந்தத் தொகையை ஒரு வங்கியில் முதலீடு செய்தாலே மாதம் ரூ.5 லட்சம் வரை பெறலாம். வேறு ஏதாவது தொழில் தொடங்கி பொருளீட்டலாம். இந்த உத்தரவு அமெரிக்காவுக்கு எந்த விதத்திலும் நீண்ட கால ஆதாயத்தைத் தராது. மாறாக, எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.

வ.மகாலிங்கம், தாரமங்கலம்.

அதிர்ச்சியளிக்கிறது

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறை பதவியேற்ற பின்னர் அமெரிக்க குடியுரிமையைப் பெற கடும் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கினார். தற்போது, புதிதாக அறிமுகம் செய்திருக்கும் "தங்க அட்டை' திட்டத்தைப் பெற ரூ.9 கோடி செலுத்த வேண்டும் என்பது ஏற்கத்தக்கதல்ல. இது பிற நாட்டவர் மூலம் அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், அந்நாட்டு பொருளாதாரம் மேம்படவும் உதவும். வசதிபடைத்தவர்கள் அமெரிக்க குடியுரிமையை விரைவாகப் பெறுவதற்கு இது வழிவகுக்கும். ஆனால், இந்த நடைமுறை இந்திய இளைஞர்களுக்கு அதிர்ச்சியூட்டும் செய்தியாகும்.

கே.ஆர்.ராஜேந்திரன், திருப்பரங்குன்றம்.

பொருளாதாரச் சரிவு

இந்த அறிவிப்பு அமெரிக்கப் பொருளாதாரம் சீரற்ற நிலையில் உள்ளதைக் காட்டுகிறது. இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் குடியேறியதால் உயர்ந்த நிலையை அடைந்த அமெரிக்கா இன்று, தனது நாட்டில் குடியேற கோடிகளை விரும்புகிறது என்றால், அதன் பொருளாதார ஸ்திரமற்ற நிலை தெரிய வருகிறது. டிரம்ப்பின் இந்த நடவடிக்கை அந்த நாட்டை உலக அரங்கில் சிறுமைப்படுத்துவதாக உணர முடிகிறது. சரிந்துள்ள பொருளாதாரத்தைத் திட்டமிட்டு சீராக்குவதை விடுத்து, தனது பலவீனத்தை உலகறியச் செய்வது பரிதாபத்துக்குரியது.

ஆர்.விநாயகராமன், திசையன்விளை.

பிளவுகள் அதிகரிக்கும்

அமெரிக்க குடியுரிமைக்கு ரூ.9 கோடி என விலை நிர்ணயிப்பது குடியுரிமை என்பது உரிமையா, வணிகப் பொருளா என்ற கேள்வியை எழுப்புகிறது. பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு என்றால் சமத்துவம், மனித உரிமை போன்ற மதிப்புகள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. இது திறமை, உழைப்பு, மனிதநேயத்தைவிட பணமே முதன்மை என்ற எண்ணத்தை வலுப்படுத்தும். உலக நாடுகள் பொருளாதார வேறுபாடுகளைக் குறைக்க முயலும் வேளையில் இத்தகைய முடிவுகள் சமூகப் பிளவுகளை அதிகரிக்கலாம். குடியுரிமை என்பது விலைச் சீட்டுடன் அல்ல, மனித மரியாதையுடன் இணைக்கப்பட வேண்டும்.

சா.முகம்மது ஹுசைன், அறந்தாங்கி.

கஜானா நிரம்பும்

அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு வேலைக்காகச் செல்கிறவர்கள் அங்குதான் எல்லாம் நன்றாக உள்ளது என்ற எதிர்பார்ப்புடன், அங்கேயே குடியுரிமை பெற்றுவிட எண்ணு

கின்றனர். இதைச் சரியாக டிரம்ப் பயன்படுத்திக் கொள்கிறார். குடியுரிமைக்கான கட்டணத்தை உயர்த்தினால் அமெரிக்காவுக்கு திறமையான பணியாளர் கிடைப்பதுடன், அரசின் கஜானாவுக்கும் வருமானம் கிடைக்கும் என்று நினைத்து அந்த அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டிருக்கிறார் எனக் கருதத் தோன்றுகிறது. இதைப் பார்த்தாவது நம் மக்கள் விழித்துக் கொண்டு குடியுரிமை வேண்டாம் என்று தீர்மானித்தால். லாபம் அடையப் போவது நாம்தான்.

பிரகதாம்பாள், கடலூர்.

நியாயமில்லை

டிரம்ப் ஒரு தொழிலதிபர்; பிறகுதான் அமெரிக்க அதிபர். இரண்டாவது முறையாக அவர் பதவியேற்றதுமுதல் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் அவர் கொண்டுவந்த சட்டங்கள், திட்டங்கள், வரி விதிப்பு போன்ற அனைத்துமே விமர்சனத்துக்கு உள்ளாயின. மனித நேயம், மக்கள் நலன், நல்லுறவு இவற்றைத் தாண்டி வரி விதிப்பு, அடக்குமுறை, தடை, மிரட்டல் போன்றவையே அவரது கொள்கைகளாக உள்ளன. தனது நாட்டுக்கு நன்மை தரும் முடிவு என்றாலும் அதில் ஒரு நியாயம் இருக்க வேண்டும். இவரைப் போன்றவர்களை காலம் அவ்வப்போது அடையாளம் காட்டத் தயங்குவதில்லை.

உதயாஆதிமுலம், திருப்போரூர்.

பெற்றோர் மகிழ வாய்ப்பு

அமெரிக்க குடியுரிமையை விரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை அறிந்த டிரம்ப், அவர்களைக் கட்டுப்படுத்தும் வகையில் கட்டணத்தை ரூ.9 கோடியாக உயர்த்தி அறிவித்திருப்பதாகத் தோன்றுகிறது. இதனால், குடியுரிமைக்காக விண்ணப்பிப்போர் எண்ணிக்கை குறையும் என அவர் நினைத்திருக்கலாம். மேலும், அமெரிக்காவின் வல்லமையை உலகுக்குக் காட்டவும் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம். இதனால், அங்கு குடியுரிமை வேண்டாம் எனப் பலரும் முடிவெடுத்து சொந்த நாட்டுக்குத் திரும்பினால், அவர்களின் வயதான பெற்றோர் மகிழ்வர்.

நந்தினி கிருஷ்ணன், மும்பை.

அதிரடி முடிவு

எந்த ஒரு நாடும் தங்கள் நாட்டு குடியுரிமை தொடர்பாக எந்த ஒரு முடிவும் எடுப்பது சரிதான். இருப்பினும், அமெரிக்காவில் கணினித் தொழில்நுட்பம் உள்பட பல்வேறு துறைகளில் இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், குடியுரிமைக்கு ரூ.9 கோடியை அந்த நாட்டுக்குச் செலுத்த வேண்டும் என்பது அதிரடி முடிவுதான். இதுகுறித்து மறுபரிசீலனை செய்தால் நல்லது. அந்த நாட்டின் வளர்ச்சியில் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினரின் பங்கு அளப்பரியது.

சி. கார்த்திகேயன், சாத்தூர்.

முற்றுப்புள்ளி

அமெரிக்க குடியுரிமைக்கான கட்டணத்தை ரூ. 9 கோடியாக நிர்ணயித்திருப்பது அனைவரும் எதிர்பார்த்ததுதான். முதலில் இதைவிட அதிகமாக நிர்ணயம் செய்ய நினைத்து, அது ரூ.9 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க குடியுரிமை பெற்றே ஆக வேண்டும் என நினைப்போர் எவ்வளவு தொகை கொடுத்தும் வாங்கி விடுவர். படிப்பு, பணி நிமித்தமாக வெளிநாடு செல்வோர் அந்த நாடு என்றுமே நமக்கானது அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அந்நியர் குடியேற்றத்தால் அமெரிக்கர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்ற நிலையில், இந்த அறிவிப்பு வரவேற்கக்கூடியது. நாமும் அமெரிக்காவை மட்டும் நம்பியிருக்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தருணம்.

சோ.உலகநாதன், உச்சிப்புளி.

இந்தியர்களுக்குப் பாதிப்பு

அமெரிக்க குடியுரிமைக்கு ரூ.9 கோடி நிர்ணயித்தது டிரம்ப்பின் அச்சத்தின் வெளிப்பாடு. புதிய விதியால் இந்தியர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. திறமை வாய்ந்த பணியாளர்களை அந்த நாட்டு தொழிலதிபர்களும், நிறுவனங்களும் இழக்க விரும்புவதில்லை. அவர்களைத் தங்கள் நாட்டிலேயே வைத்துக்கொள்ள விரும்புவர். எனவே, இது விஷயத்தில் தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. அப்போது, குடியுரிமை விதிகள் எளிதாக்கப்படவும் வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

ஆ.லியோன், மறைமலைநகர்.

நிராகரிக்கும் உரிமை

தனது நாட்டில் அனைத்து வசதிகளும் உள்ளன; அங்கு குடியேற நினைப்போர் ரூ.9 கோடி செலுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததில் தவறில்லை. நம் நாட்டில் இருப்பதை வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வோம் என்று எண்ணினால், அமெரிக்க குடியுரிமைக்கு எத்தனை கோடிகளை நிர்ணயித்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. டிரம்ப்புக்கு கட்டணத்தை நிர்ணயிக்க உரிமை இருப்பதைப்போல, அதை நிராகரித்து "என் நாட்டிலேயே இருப்பேன்' என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்ல நமக்கும் உரிமை உண்டு.

உஷா முத்துராமன், மதுரை.

மேலும் மாற்றம் வருமா?

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பசுமை அட்டையைவிட சிறப்பு வாய்ந்தது என்றும், இதைப் பெறுவதற்கான வழிமுறைகள் எளிமையானவை என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார். ரூ.9 கோடி என்று கட்டண நிர்ணயம் செய்யப்பட்டதால், அவர்களை அங்கேயே தங்கவைக்கும் ஏற்பாடாகத்தான் இருக்கும். அதேநேரத்தில் இனி வருங்காலத்தில் குடியுரிமை விதிகளில் டிரம்ப் என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவருவார் எனத் தெரியாது. எனவே, அவரது நடவடிக்கையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அ.கருப்பையா, பொன்னமராவதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com