"சமூக ஊடகப் பயன்பாட்டாளர்களுக்கு சுயக் கட்டுப்பாடு அவசியம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது' குறித்து...வாசகர்களிடம் இருந்து வந்த கருத்துகளில் சில...

Published on
Updated on
3 min read

அச்சுறுத்தல்

சமூக ஊடகப் பயன்பாட்டாளர்களுக்கு மட்டுமல்ல, அனைத்துத் தரப்பினருக்குமே சுயக் கட்டுப்பாடு மிகவும் அவசியம் என்பதை நாம் உணர வேண்டும். ஆதாரம் இல்லாமல் வெளியிடப்படும் செய்திகள் சமூகத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற சிந்தனை சமூக ஊடகப் பயன்பாட்டாளர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். செய்திகளைத் தாண்டிய சமூகப் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். இது ஒவ்வொரு ஊடக பயன்பாட்டாளருக்கும் பொருந்தும்.

உதயா ஆதிமூலம், திருப்போரூர்.

மோசமான விளைவுகள்

சமூக ஊடகப் பயன்பாட்டாளர்களுக்கு சுயக் கட்டுப்பாடு நிச்சயம் தேவை. தவறான தகவல், தவறான செய்தி ஏற்படுத்தும் விளைவுகள் சில நேரங்களில் உயிரிழப்புகளைக்கூட ஏற்படுத்தும். ஜாதி, மத மோதல்களின் முக்கியக் காரணமே தவறான தகவல்கள் பரவுதலே. இந்த அவசர உலகில் சரிபார்ப்புப் பணியை பெரும்பாலானோர் மேற்கொள்வதில்லை. காற்றைவிட வேகமாக எதிர்மறைச் செய்திகள் பரவுகின்றன. சுயக் கட்டுப்பாட்டுடன் ஒவ்வொருவரும் செயல்பட்டால் மட்டுமே இதற்கான தீர்வு கிடைக்கும்.

ஜீவன்.பி.கே., கும்பகோணம்.

எல்லை மீறி...

அண்மைக்காலங்களில் சமூக ஊடகப் பயன்பாட்டாளர்கள் ஊடகச் சுதந்திரம் என்ற பெயரில் எல்லை மீறிச் செல்வதாகவே தெரிகிறது. சமூக நல்லிணக்கத்தை சீரழித்து மக்களிடையே கலவரத்தைத் தூண்டும் பதிவுகள் அதிகரித்து வருகின்றன. மாற்றுக் கருத்துடையோரின் பதிவுகளுக்கு கண்ணியமாக பதில் அளிக்காமல், அநாகரிகமான வார்த்தைகளால் எதிர்வினையாற்றுவது அதிகரித்து வருகிறது. ஜாதி, மதம், இனம் சார்ந்த தேவையற்ற பதிவுகளில் பிரிவினைவாதத்தைத் தூண்டும் விதமாக உள்ளன.

பா.சிதம்பரநாதன், கருவேலன்குளம்.

வரையறைக்குள்...

கருத்துச் சுதந்திரம் அனைவருக்கும் உள்ளது. அது சுதந்திரம் என்ற வரையறைக்குள் அடங்கியதாக இருக்கும் வரையே ஆகும். வரையறையை மீறினால் அது கருத்துச் சுதந்திரமாக இருக்காது. சமூக ஊடகங்களில் கருத்தைப் பதிவிடுவது அந்தக் கருத்தினால் பாதிப்பு அதிகமாகும்போது "நான் பதிவிடவில்லை எனது அட்மின் பதிவிட்டார்; அவரை நீக்கி விட்டேன்' எனச் சொல்வது இன்று சர்வசாதரணமாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டே உச்சநீதிமன்றம் சுயக் கட்டுப்பாடு குறித்து அறிவுறுத்தியுள்ளதுபோலும்.

சீனி.மணி, திருவாரூர்.

ஆணையாகுமா?

சமூக ஊடகப் பயன்பாடு என்பது யார் வேண்டுமானாலும் தகவல்களைப் பதிவேற்றம் செய்யலாம் என்ற நிலைக்கு வந்த பிறகு, இரட்டை அர்த்த வசனங்கள், அதற்கு ஏற்றாற்போல உடல்மொழி போன்றவை விபரீதங்களை விலை கொடுத்து வாங்க வைக்கிறது. கரோனா காலத்துக்குப் பிறகு அறிதிறன்பேசியும், அதைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கிறது. மேலும், அதைப் பயன்படுத்துவோர் குறைந்த வயதினரே; அறிவுறுத்தலைத் தாண்டி உச்சநீதிமன்றம் ஆணையாகவே பிறப்பித்திருக்கலாம்.

க.சிவக்குமார், பி.அக்ராகரம்.

நோக்கம் சிதையும்

சாலையில் வாகனத்தை ஓட்டிச் செல்பவருக்கு இருக்கும் சுயக் கட்டுப்பாடுதான் செல்ல வேண்டிய இடத்துக்கு கண்டிப்பாக கொண்டுபோய் சேர்க்கும். அது இல்லையென்றால், சேரவேண்டிய இடத்துக்குப் போய் சேராததுடன் விபத்தை சந்திக்க வாய்ப்புண்டு. அதேபோல்தான், சமூக ஊடகப் பயன்பாட்டாளர்களுக்கும் சுயக் கட்டுப்பாடு இருந்தால்தான் அது சரியான இலக்கை அடையும். தவறும்பட்சத்தில், நோக்கம் சிதையும்; சுயக் கட்டுப்பாடு இல்லாதவர்களுக்காக உச்சநீதிமன்றம் அதன் அவசியத்தைப் புரிய வைத்திருப்பது மிகவும் நல்ல செய்தியே.

உஷா முத்துராமன், மதுரை.

பாராட்டுகள்

உச்சநீதிமன்றம் அதன் கடமையை சரிவரச் செய்திருக்கிறது. ஒழுக்கத்துக்கு சுயக் கட்டுப்பாடு எப்படி மிகவும் அவசியமோ, அதேபோல், சமூக ஊடகப் பயன்பாட்டாளர்களுக்கும் சுயக் கட்டுப்பாடு மிகவும் அவசியம். சமூக ஊடகங்கள் சமூகத்தில் நல்லவற்றை மட்டுமே சொல்ல முயல வேண்டும். அதைவிட்டு, பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு சுயக் கட்டுப்பாடு இல்லாமல் நடப்பதைக் கண்டிக்கவே உச்சநீதிமன்றம் சுயக் கட்டுப்பாடு அவசியத்தை அறிவுறுத்தி தனது கடமையை சரியாக செய்திருப்பதாக பாராட்டலாம்.

பிரகதாம்பாள், கடலூர்.

தேவை கடிவாளம்

சமூக ஊடகங்கள் சிலவற்றின் பதிவுகள் முகம் சுளிக்க செய்வனவாக உள்ளன. இது சமூகக் கட்டமைப்பைச் சீரழிக்கலாம். சமூக ஊடகப் பயன்பாட்டாளர்களுக்கு சுயக் கட்டுப்பாடு மிகவும் தேவை. ஆனால், அதை யாரும் கண்டு கொள்வதே இல்லை. செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியால் நிலைமை மேலும் கட்டுக்குள் இல்லாமல் போகலாம். ஆதலால், தற்போதைய தேவை கடிவாளம் மட்டுமே; சமூக ஊடக நிறுவனங்களும், தகவல் தொடர்பு அமைச்சகமும் இணைந்து செயல்பட்டு சமூகத்தை நல்வழிப்படுத்த முயல வேண்டும்.

வீ.வேணுகுமார், கண்ணமங்கலம்.

அறிவுக் கண்

உச்சநீதிமன்ற அறிவுறுத்தலை சிவப்புக் கம்பளமிட்டு வரவேற்கலாம். இப்போது ஊடகங்கள் குக்கிராமங்களுக்கும் தங்கள் செய்திகளைக் கொண்டு செல்வதால், அவர்களுக்கு சுயக் கட்டுப்பாடு இல்லை என்றால், சமூகம் அவர்கள் சொல்வதை அப்படியே உண்மை என்று நம்பும் ஒரு வாய்ப்பு உள்ளது. இதனால், சமூக ஊடகப் பயன்பாட்டாளர்கள் சுயக் கட்டுபாட்டுடன் செயல்படுவது அவர்களுக்கும் நல்லதுதான். இதை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தாமலேயே செய்திருக்க வேண்டும். சமூக ஊடகப் பயன்பாட்டாளர்களின் அறிவுக் கண்ணைத் திறந்த உச்சநீதிமன்றத்துக்கு கோடி நன்றி.

நந்தினி கிருஷ்ணன், மும்பை.

கண்காணிக்க வேண்டும்

மக்கள் குழு மனநிலைக்கு அடிமைகள்; இதைச் செயல்படுத்துவது சிக்கல் மற்றும் சவாலானது. அவர்கள் தங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு பிரபல பதிவுக்கும் உண்மையா அல்லது பொய்யா என்று ஒரு விநாடி பகுப்பாய்வு செய்யாமல் பழிச்சொல்லோ, வெறுப்புப் பேச்சோ அல்லது புகழாரமோ சூட்டிவிடுகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், பொறுப்பான இணையச் செயல்பாட்டின் சுய உணர்தலை ஊக்குவிப்பதற்கு முறையான அணுகுமுறை தேவை. அரசு வழிமுறையை உருவாக்கும்; ஆனால், பயனர்களை எப்படிக் கண்காணிக்கும்?

உ.மங்கள வைஷ்ணவி, ஆவடி.

அலட்சியம் வேண்டாம்

சமூக ஊடகம் என்பது அறிவியலைப் போல இரு பக்கங்களும் கூரான கத்தி போன்றது. எனவே, சுயக் கட்டுப்பாட்டுடன் எதையுமே நன்மைக்குப் பயன்படுத்தினால் நல்லது. சுய சிந்தனை, சுயக் கட்டுப்பாடு, சுய ஒழுக்கம் கொண்ட மக்கள் யாரும் சமூக ஊடகத்தைத் தவறாக பயன்படுத்த மாட்டார்கள். சிலர் தவறான கண்ணோட்டத்தில் எதையுமே சித்தரிக்கிறார்கள். மொத்தத்தில் உச்சநீதிமன்ற அறிவுரை சிறந்தது மட்டுமல்ல, மிக அவசியமும் கூட.

அறிவுரைதானே என அலட்சியம் காட்டாமல் செயல்படுத்துதலே சமுதாயத்துக்கான சீரிய வழி.

மருத்துவர்.கே.விஸ்வநாதன், கோவை.

ஒளிர வேண்டும்

ஒரு தனிநபரின் கருத்தை உலகமெங்கும் ஒரு விநாடியில் கொண்டு சேர்க்கும் வல்லமையை சமூக ஊடகங்கள் பெற்றுள்ளன. ஆனால், இதே சாதனம் சிந்தனையற்ற முறையில் பயன்படுத்தப்படும் போது, அது பெரிய சமூகப் பின்னடைவுகளை ஏற்படுத்தும். சுயக் கட்டுப்பாடுதான் சமூகப் பாதுகாப்பின் மூலக் கொள்கையாக இருக்க முடியும். பகிரும் ஒவ்வொரு தகவலும், யாரையும் உணர்ச்சிவசப்பட வைக்கும் வகையில் இருக்கக் கூடாது. இன்றைய சூழலில், சமூக ஊடகப் பயனாளரும் மறைந்து பேசுபவராக அல்ல; ஒளிரும் சிந்தனையாளராக மாற வேண்டும்.

சா.முகம்மது ஹுசைன், அறந்தாங்கி.

தணிக்கை தேவை

கைப்பேசியில் யூடியூப், முகநூல் வழியாக ஆலோசனைகள் என்ற பெயரிலும், விளம்பரங்கள் மூலமாகவும் வேண்டாத பல செய்திகள் இடம்பெறுகின்றன. இப்போது, பெரியவர் முதல் அனைவரும் குறிப்பாக இளைய தலைமுறையினர் அதிக நேரம் கைப்பேசியிலேயே பொழுதைக் கழிக்கின்றனர். வேண்டிய செய்திகளைக் குறைவாகவும், வேண்டாத செய்திகளைஅதிகமாகவும் தெரிந்து கொள்கின்றனர். பிற ஊடகத்துக்கு இருப்பதைப் போல சமூக ஊடகத்துக்கும் தணிக்கை தேவை; அதைத்தான் தனது அறிவுறுத்தலுடன் உச்சநீதிமன்றம் தொடங்கியுள்ளது என்பதை மனதில் கொள்ளலாம்.

அ.கருப்பையா,பொன்னமராவதி.

பயனாளர்களும்...

ஊடகப் பயன்பாட்டாளர்கள் சிலர் கருத்துச் சுதந்திரம் எனும் அரிய பொக்கிஷத்தின் மதிப்பறியாமல், அன்றாடம் அசுர வளர்ச்சி கண்டு வருகின்றனர்.இன்றைய தகவல் தொழில்நுட்பத் துறை அளித்திடும் வசதிகளால் தவறான செய்திகளை வெளியிடும்போது, அவை ஏற்படுத்தும் சமுதாயத் தாக்கங்களை சிறிதும் அவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை. மத்திய, மாநில அரசுகள் இதற்கான ஒழுக்க விதிமுறைகளை முறைப்படுத்த வேண்டும். சமூக ஊடகங்களின் பயனாளர்களும் சுயக் கட்டுப்பாட்டுடன் இருப்பது மிக முக்கியமானது!

கே.ராமநாதன், மதுரை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com