"பயங்கரவாதம் பாகிஸ்தானில் வெளிப்படையான வர்த்தகம்' என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளது குறித்து...வாசகர்களிடம் இருந்து வந்த கருத்துகளில் சில...

Published on
Updated on
3 min read

அழிவுக்கு வழிகோலும்

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததற்கோ, ஒசாமா}பின்}லேடனுக்கு அடைக்கலம் கொடுத்ததற்கோ, மும்பை தாக்குதலை பின்னின்று இயக்கியதற்கோ, பாகிஸ்தான் என்றும் வெட்கித் தலைகுனிந்தது இல்லை. மாறாக, ஆப்கானிஸ்தானில் ரஷியப் படைகளின் இருப்பைக் காரணம் காட்டி, அமெரிக்காவின் நிதி மற்றும் ஆயுதங்களைப் பெற்றது அதன் வஞ்சகத்தன்மைக்கு அழிக்க முடியாத சான்று. வெளியுறவுத்துறை அமைச்சரின் கருத்துக்கு இதுவே அடிப்படை. இந்திய துவேஷம் அந்த தேசத்தை பயங்கரவாதத்துடன் கைகோக்க வைக்கிறது. இதுவே அந்த தேசத்தின் அழிவுக்கு வழிகோலும்.

செ.வீ.இராகவன், சென்னை.

நிரந்தரத் தீர்வாகாது...

நடந்து முடிந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை இன்னும் பல நாடுகள் எதிர்க்கவில்லை. இந்தியாவுக்கு வெளிப்படையான ஆதரவை வெளிநாடுகள் தெரிவிக்கவில்லை என்பதே நமது வெளியுறவுக் கொள்கையின் தோல்வி என்பதை எதிர்க்கட்சிகளும் நடுநிலையாளர்களும் கூறி வருகின்றனர். ஐ.நா. உள்பட எல்லோரும் உணர்ந்து பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதே நமது வெளியுறவுக் கொள்கையின் வெற்றி. வெறும் தாக்குதல் , பதில் தாக்குதல் என்பது நிரந்தரத் தீர்வாக இருக்காது.

கலைப்பித்தன், கடலூர்.

கூற்று சரிதான்...

பத்தாண்டுகளாக அமெரிக்கா தேடி வந்த பயங்கரவாதி பின்லேடனுக்கு அடைக்கலம் தந்தது பாகிஸ்தான்தான். இந்தியாவால் தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகள் "ஆபரேஷன் சிந்தூர்' மூலம் கொல்லப்பட்டனர். அவர்களது இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள், உளவு அமைப்பு அதிகாரிகள் கலந்து கொண்டு பயங்கரவாதிகள் உடலுக்கு பாகிஸ்தானின் தேசியக் கொடியை போர்த்தினர். பாகிஸ்தான் ராணுவமும் பயங்கரவாதமும் ஒட்டிப் பிறந்த இரட்டைச் சகோதரர்கள். நமது வெளியுறவுத்துறை அமைச்சரின் கூற்று சரியே.

சீ. காந்திமதிநாதன், கோவில்பட்டி.

பயங்கரவாத நாடு...

நாடுகளில் பயங்கரவாதம் காணப்படுவது உண்டு; ஆனால் பயங்கரவாதத்துக்கு என்று ஒரு நாடு இருக்கிறது என்றால் அது பாகிஸ்தான்தான்.1971 வரை தன் சொந்தப் பகுதியான வங்கதேசத்திலும் அதை அமல்படுத்திய பெருமைக்குரியது. பயங்கரவாதமும், ராணுவமும் கைகோத்து ஆட்சியாளர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நாடு பாகிஸ்தான். இந்தியாவுக்கு பயங்கரவாதம் மூலம் தொடர்ந்து தொல்லை கொடுத்துவரும் நாடு பாகிஸ்தான். எனவே , அமைச்சரின் கூற்று முற்றிலும் சரியே.

முகதி.சுபா, திருநெல்வேலி .

சரியே!

எந்த நாடும், ஆளுகின்ற அரசும் எந்த வடிவிலும் பயங்கரவாதிகளை ஆதரிப்பது கிடையாது. ஆனால், பாகிஸ்தானை எடுத்துக் கொண்டால் அந்நாடு வெளிப்படையாகவே ஆதரிப்பதையும் அவர்களுக்கு உதவி செய்வதையும் காண்கிறோம். அதற்கு நமது ராணுவம் தந்த பதிலடியின் மூலம் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் உடலுக்கு அந்நாட்டு அரசு சார்பில் தேசியக்கொடி போர்த்தப்பட்டு அஞ்சலி செலுத்தி அப்பட்டமாக பயங்கரவாத நாடாகக் காட்டிக் கொண்டது. எனவே, அந்த நாட்டைப் பற்றி நமது அமைச்சர் கூறியது சரியானதே.

சி.இரத்தினசாமி, திருப்பூர்.

கருத்து உண்மையே!

உலகம் முழுவதும் நிதி பெற்று அதன் மூலம் ஆயுதங்கள் வாங்கி அதை பயங்கரவாதிகளுக்கு அளித்தும், அவர்களுக்கு பயிற்சி முகாம்களை அமைத்துக் கொடுத்தும் பயங்கரவாதிகளை உற்பத்தி செய்வது பாகிஸ்தான்தான் என்பதை அனைவரும் அறிவோம். பாகிஸ்தானுக்கு நிதியுதவி செய்யும் நாடுகள் அனைத்தும், அதன் மூலம் ஆயுத வர்த்தகம் மற்றும் அனைத்து விதமான லாபங்களை அடைந்து வருகின்றன. உதாரணமாக சீனா, அமெரிக்கா மற்றும் துருக்கி போன்ற நாடுகளைக் கூறலாம். நமது மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ள கருத்து உண்மையே.

அ.குணசேகரன், புவனகிரி.

பயங்கரவாதத்தின் பிடியில்...

பாகிஸ்தான் அரசு ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவர்களால் ஜனநாயக முறைப்படி ஆட்சி செய்ய முடியவில்லை என்பதை உலக நாடுகள் அறியும் . சுதந்திரம் பெற்ற இத்தனை ஆண்டுகளில் இந்தியா அடைந்த வளர்ச்சியில் 50% கூட பாகிஸ்தான் எட்டவில்லை; அந்த அளவுக்கு அந்த நாடு பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கி இருக்கிறது. எனவே, அமைச்சர் கூறியிருப்பதை புறந்தள்ளி விட முடியாது.

தி. சேகர், பீர்க்கன்கரணை.

உண்மையானதே...

பாகிஸ்தான் நாட்டின் அதிபராக யார் பதவி ஏற்றாலும் அவர்களை ஆட்டுவிப்பவர்கள் அந்த நாட்டு ராணுவமும், அங்கு செயல்படும் பயங்கரவாதிகளும் என ஒரு குற்றச்சாட்டு பல காலமாகவே உண்டு. உலகில் எங்காவது பயங்கரவாதிகளின் தாக்குதல் நடந்தால் அதை எதிர்த்து பாகிஸ்தான் குரல் கொடுப்பதில்லை. அண்மையில் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் தாக்குதலை எதிர்த்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் குரல் கொடுத்ததில் இருந்தே இது தெளிவாகத் தெரிகிறது. அமைச்சரின் கூற்று நூற்றுக்கு நூறு உண்மை.

கோ.ராஜேஷ் கோபால் , மணவாளக்குறிச்சி.

ஏற்புடையதுதான்...

பாகிஸ்தான் தன்னுடைய நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த செய்கின்ற வர்த்தகம் என்பது பயங்கரவாதமாக இருக்கிறது. ஒவ்வொரு நாடும் தனக்கு எதிராகச் செயல்படும் நாட்டின் மீது மனித ஆயுதங்களாகப் பயன்பட பாகிஸ்தானை அணுகி அவர்கள் ஆதரவளிக்கும் பயங்கரவாதிகளைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். எனவே, பயங்கரவாதம் பாகிஸ்தானில் வெளிப்படையான வர்த்தகம் என ஜெய்சங்கர் கூறியுள்ளது ஏற்புடையதுதான் .

புஷ்பா குமார், திருப்போரூர் .

ஏற்க முடியாது

பாகிஸ்தானில் பயங்கரவாதம் என்பது ஜெய்சங்கர் பார்வையில் வேண்டுமானால் வெளிப்படையான வர்த்தகம் என்று தோன்றலாம் . ஆனால், அதை அப்படியே ஏற்க முடியாது. இன்னமும்கூட பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வரும் அரசியல் கட்சிகளை, பாகிஸ்தான் மக்கள் தேர்தலில் புறக்கணிப்பு செய்வதை பார்க்க முடியும். "என்றாவது ஒரு நாள் நாம் நிம்மதி அடைவோம்' என்ற நம்பிக்கையில் இருக்கும் பாகிஸ்தான் மக்கள் குறித்தும் ஒரு நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தெரியாமல் இருப்பது வருத்தம்தான்.

சி. கார்த்திகேயன், சாத்தூர்.

தனிமைப்படுத்த வேண்டும்

நம் நாட்டை படை பலத்தால் வெல்ல முடியாது என நன்கு உணர்ந்த பாகிஸ்தான், எல்லைப்புறங்களில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது. பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் தந்து அவர்களுக்கு ஆயுதப் பயிற்சியும், ஆயுதங்களும் தரும் வர்த்தகத்தை வெளிப்படையாகச் செய்யும் பாகிஸ்தானை பிற நாடுகள் தனிமைப்படுத்த நாம் முயற்சிக்க வேண்டும்.

வளவ.துரையன், கடலூர்.

நாம் சொன்னால் போதுமா?

பாகிஸ்தானில் பயங்கரவாதம் வெளிப்படையாக நடக்கிறது என்று அமைச்சர் கூறுவது உண்மைதான். ஆனால், இது நம்மால் மட்டுமே பேசப்பட வேண்டிய விஷயமா? ஐ.நா. போன்ற சர்வதேச அமைப்புகள் ஏன் இத்தனை ஆண்டுகளாக இது குறித்து பொருட்படுத்தவில்லை? பாகிஸ்தான் வளர்க்கும் பயங்கரவாதிகள், இந்தியா, ஆப்கானிஸ்தான், ஈரான் என எங்கும் ரத்தம் சிந்தவைக்கின்றனர். ஆனால், " தொடர்பில்லை ' என்று கூறும் அந்த நாட்டை உலக நாடுகள் நிதியுதவிகளால் வளர்க்கின்றன. இது எப்படியொரு நீதிமுறை? இரட்டை நிலைப்பாடுகளும், தற்காலிக நலன்களும் பயங்கரவாதத்துக்கு இடமளிக்கின்றன. உலகம் நடுநிலையாக குரல் கொடுக்கவில்லை என்றால், பயங்கரவாதம் தங்களது வாசலில் வந்து நிற்கும் என்பத உணரவேண்டும்.

ஜில் ஜில் சத்யா, சில்லத்தூர் .

மனிதகுலத்தின் எதிரி

பாகிஸ்தானில் பயங்கரவாதம் வெளிப்படையாகவே நடைபெறுவதாக அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருப்பது புதிதல்ல. பாகிஸ்தானின் அரசியல், ராணுவ அமைப்புகளில் சிலர் பயங்கரவாத அமைப்புகளுக்கு நேரடி ஆதரவு தருவது மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில், உலக நாடுகள், குறிப்பாக ஐ.நா. போன்ற அமைப்புகள், இதை ஒரு சர்வதேச அச்சுறுத்தலாக ஏற்று, ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். பயங்கரவாதம் என்பது ஒரு தேசத்தின் பிரச்னை மட்டும் இல்லை; அது மனிதகுலத்தின் எதிரி. பயங்கரவாதம் உலகுக்கே ஆபத்தான எச்சரிக்கையாகும்.

முகம்மது ஹுசைன், அறந்தாங்கி .

மீட்க வேண்டும்...

பயங்கரவாதத்தை வளர்த்து விடுவதில் சில நாடுகள் மறைமுக உதவிகளை மட்டுமே செய்யும். ஆனால், பாகிஸ்தான் நேரடியாக அவர்களுக்கு தேவையான பணம், இடம், ஆயுதம், ராணுவப் பயிற்சி ஆகியவற்றை வழங்குகிறது. தற்போது நம்முடைய அரசு எடுத்துள்ள பேச்சுவார்த்தை என்றால் ஆக்கிரமிப்பு காஷ்மீர்; பயங்கரவாதிகளை அழித்தல். அது சரியான முடிவு. பல ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை மீட்க நடவடிக்கை எடுத்திருக்கலாம். தாமதமான முடிவு என்றாலும், நாம் முதலில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை மீட்க வேண்டும்.

தி.ரெ.ராசேந்திரன், திருநாகேச்சரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com