மக்களின் கருத்து
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் இறுதிக் கட்டத்தில் தேசப் பிரிவினை ஏற்பட்டபோது, பாகிஸ்தான் காஷ்மீரின் வடக்கு, மேற்கு பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்தது. அன்றைய காஷ்மீரின் மன்னர் ஹரிசிங் பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். ஆக்கிரமிப்புக்குப் பிறகு, மவுண்ட்பேட்டன் பிரபு ஆணையின்படி இந்தியாவுடன் ஒப்பந்தம் ஏற்பட்டு, இந்திய ராணுவம் ஜம்மு} காஷ்மீர் பகுதிக்குச் சென்று இந்தியா சில பகுதிகளைத் தனதாக்கிக் கொண்டது. ஆக்கிரமிப்புப் பகுதிகளை மீட்க வேண்டும் என்று கூறும்போது, ஆக்கிரமிப்புப் பகுதியில் வாழும் பெரும்பான்மை மக்களின் கருத்துக்கு மதிப்பு கொடுத்து, அதற்கேற்ப செயல்படுவதே பிரச்னைக்குச் சிறந்த தீர்வாக இருக்கும். காஷ்மீரை ஆக்கிரமித்த நாடுகளும் இதற்கு உடன்பட வேண்டும்.
சீனி.மணி, பூந்தோட்டம்.
சர்வதேச ஆதரவு
முழுமையான காஷ்மீரை இந்தியாவின் ஒரு பகுதியாகப் பார்க்கும் எண்ணம், ஒரு நாட்டின் இறையாட்சிக்கும், வரலாற்று நியாயத்துக்கும் அடிப்படைத் தளமாக உள்ளது. சச்சின் பைலட் தெரிவித்தது உணர்ச்சிபூர்வமானது மட்டுமல்ல; உண்மையைச் சார்ந்த ஓர் அரசியல் அடித்தளத்துடன் கூடியதுமாகும். பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்ட காஷ்மீர் பகுதிகள், இந்தியாவுக்கே உரியவை. ஆனால், அந்த இலக்கை அடைவதற்கு திட்டமிட்ட வெளிநாட்டு கொள்கையும், உள்நாட்டு ஒற்றுமையும் தேவை. இந்தக் கோரிக்கையை சர்வதேச அளவிலான ஆதரவுடன் முன்னெடுத்தால் மட்டுமே அது வலிமை பெறும்.
சகுந்தலா தேவி, உஞ்சியவிடுதி.
அமைதியே தேவை
கச்சத் தீவை மீட்க வேண்டும் என்று தமிழக அரசு கூறி வருகிறது. எனினும் அதை இலங்கை ஏற்றுக் கொள்ளாது. கச்சத் தீவை மீட்க போர்தான் செய்ய வேண்டும். அது சாத்தியமில்லை. அதுபோல பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க போர்தான் வழி. போரினால் பல உயிர்கள் மற்றும் பொருள் சேதம்தான் ஏற்படும். காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்புகிறார்களா என்பதையும் அறிய வேண்டும். எல்லையில் அமைதியே இன்றைய தேவை.
கே.அனந்தநாராயணன், கன்னியாகுமரி.
இருப்பதைக் காப்போம்
சுதந்திரம் பெற்ற பின்னர் காஷ்மீரை முழுமையாக இந்தியாவுடன் சேர்க்காமல் நேருவின் தலைமையிலான அன்றைய அரசு, காஷ்மீருக்கு தனி அந்தஸ்து கொடுத்தது. இதைச் சாக்காக வைத்து பாகிஸ்தான் கொஞ்சம் கொஞ்சமாக காஷ்மீரின் பல பகுதிகளை ஆக்கிரமித்துவிட்டது. முழுமையான காஷ்மீர் என்பது இனிமேல் நடைமுறையில் சாத்தியமில்லை. பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் பயங்கரவாதிகளின் பயிற்சிக் கூடங்கள் இருப்பதால், அதைக் கைப்பற்ற வேண்டுமானால் பாகிஸ்தானுடன் போர்தான் செய்ய வேண்டும். அதைவிட நம்மிடம் இருக்கிற காஷ்மீர் பகுதியை மட்டும் காப்பாற்றுவதே போதுமானது.
கலைப்பித்தன், கடலூர்.
புத்திசாலித்தனம்
சச்சின் பைலட் கூறுவது அவரது ஆசை; இந்தியர்களின் ஆசையும் கூடத்தான். கேட்பதற்கு நன்றாக உள்ளது. நடைமுறையில் சாத்தியமா? காஷ்மீரின் ஒரு பகுதி சீனாவிடம், மற்றொரு பகுதி பாகிஸ்தான் வசம். சீனாவும், பாகிஸ்தானும் அவர்களுடைய காஷ்மீரை நம்மிடம் தர எப்படி முன்வருவார்கள்? இதற்காகப் போரிடாமல் நம்மிடம் உள்ள காஷ்மீரைக் காப்பாற்ற நினைப்பதே புத்திசாலித்தனம்.
எம்.ராஜம்மாள், சென்னை.
விளைவுகள் வேறுமாதிரியாக...
முழுமையான காஷ்மீர் இந்தியாவுக்கு சாத்தியப்படுவது இந்திய அரசின் கைகளில்தான் உள்ளது. முதலில் காஷ்மீரில் உள்ள மக்கள் இந்தியாவை ஏற்றுக் கொள்ள அவர்களை மனதளவில் தயார்படுத்த வேண்டும். அதற்கு நல்ல மக்கள் நலன் சார்ந்த திட்டங்களையும், அவர்களுடைய முன்னேற்றத்துக்கான வழிவகைகளையும் செய்துதர வேண்டும். மேலும் அவர்கள் சுதந்திரமாக வாழ வழி வகுக்க வேண்டும். அப்படிச் செய்யும்போதுதான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வாழும் மக்களும் இந்தியாவோடு இணைய விரும்புவார்கள். அதைவிடுத்து வலுக்கட்டாயமாக இணைக்க முடிவு செய்தால், அதன் விளைவுகள் வேறு மாதிரியாகத்தான் இருக்கும்.
ப.சுவாமிநாதன், அம்பத்தூர்.
கிரீடம்
பாரத மாதாவின் கிரீடம் போல் அமைந்துள்ளது காஷ்மீர். இதைப் பிரிக்காமல் முழுமையாக நம் இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணம் முன்னாள் மத்திய அமைச்சர் சச்சின் பைலட்டிடம் உள்ளதை அவருடைய பேச்சு குறிக்கிறது. ஓர் அமைதியான சூழ்நிலை வேண்டுமென்றால் நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதனால் நம் முழுமையான காஷ்மீரை நம் நாட்டுடன் இணைத்து விட்டால், அது மிகவும் நல்லது என்ற அவருடைய இலக்கு சரியானதே .
நந்தினி கிருஷ்ணன், மும்பை
ஆணையிடுவார்கள்
முழுமையான காஷ்மீரே நமது இலக்கு என்பது முற்றிலும் சரியானது. நமது மக்களைக் காரணமில்லாமல் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றது அநியாயச் செயலாகும். அந்தப் பயங்கரவாதிகளைப் பூண்டோடு ஒழிக்க வேண்டும். அமெரிக்காவின் மத்தியஸ்தத்தை ஏற்கக் கூடாது. அவர்களின் தலையீட்டை நாம் ஏற்றுக் கொண்டால், பின்னர் அவர்கள் நமக்கு ஆணையிடுவார்கள். அதற்கு நாம் கட்டுப்பட வேண்டியிருக்கும்.
இரா.கோவிந்தராஜன், சென்னை.
மீளலாம்
இந்தியாவின் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் ஊறுவிளைவிக்கும் நிகழ்வுகள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாகவே அரங்கேறுகின்றன. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கி, நம் எல்லையோரப் பகுதி மக்கள்படும் இன்னல்களுக்கு ஒரு நல்ல தீர்வு வேண்டும். எனவே, முறையான பேச்சுவார்த்தையின் மூலம் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நமதாக்கிக் கொண்டால், பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுபடலாம்.
பா.சிதம்பரநாதன், கருவேலங்குளம்.
மாற்றிவிட்டது
இந்திய நாட்டின் ஓர் அடி நிலம் கூட அடுத்த நாட்டின் ஆக்கிரமிப்பில் இருக்கக் கூடாது என்பதே ஒவ்வோர் இந்தியரின் ஆசை. அந்த வகையில் பாகிஸ்தான் வசம் உள்ள ஆசாத் காஷ்மீரும் இந்தியாவுடன் இணைக்கப்பட வேண்டும். அண்மையில் இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய மக்களின் ஆசை நிறைவேற்றப்படும் என எண்ணியவர்கள் அதிகம். சூழல் அதனை மாற்றி விட்டது. ஆனாலும், விரைவில் மக்களின் ஆசை நிறைவேறும். காஷ்மீர் இந்தியாவின் சிரசு போன்றது. எனவே, முழுமையான காஷ்மீரே நமது இலக்கு என முன்னாள் மத்திய அமைச்சர் சச்சின் பைலட் வரவேற்கத்தக்கது.
ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
கண்டிக்கத் தக்கது
1994}ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதிகளை மீண்டும் இந்தியாவுடன் இணைத்துக் கொள்வதே முக்கிய இலக்காக வலியுறுத்தப்பட்டது. அதேசமயம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா}பாகிஸ்தான் இடையிலான சமீபத்திய சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை வர்த்தகத்துடன் தொடர்புபடுத்தியிருப்பது முற்றிலும் சிக்கலை ஏற்படுத்தக் கூடியது. மேலும், தனது அறிக்கைகளில் "பயங்கரவாதம்" என்ற முக்கியமான சொல்லை அவர் தவிர்த்திருப்பதும் கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் எல்லைப் பகுதியில் வாழும் மக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு செயல்படவேண்டும்.
ஆரோக்கியராஜ்பீட்டர் சந்தனம்,
குழிபிறை.
சேதத்தை உண்டாக்கும்
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 1947 }இல் இருந்து காஷ்மீர் பற்றிய பிரச்னை உள்ளது. ஐ.நா.விலும் இப்பிரச்னை அவ்வப்போது பேசப்படுகிறது. காஷ்மீரின் 55 சதவீதம் பகுதி இந்தியா வசமும் 30 சதவீதம் பகுதி பாகிஸ்தான் வசமும் 15 சதவீதம் பகுதி சீனா வசமும் உள்ளது. தனது வசமுள்ள காஷ்மீரில் இந்தியாவைத் தாக்குவதற்காக பயங்கரவாதிகளை வளர்க்கிறது பாகிஸ்தான். இப்போது இந்தியா நடத்திய சிந்தூர் தாக்குதலில் நான்கு இடங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளவையே. பயங்கரவாதத்துக்கு இந்தியா பதிலடி கொடுக்கும் என்பதை பாகிஸ்தான் உணரும்படி செய்வதே இந்தியாவின் கடமை. முன்னாள் மத்திய அமைச்சர் சச்சின் பைலட் கூறும் முழுமையான காஷ்மீரே நமது இலக்கு என்பது இரு பக்கமும் அதிக உயிர் மற்றும் பொருள் சேதத்தை உண்டாக்கும். எனவே, அவர் கருத்து ஏற்புடையது அல்ல.
நா.ஜெயராமன், பரமக்குடி.
பேச்சுவார்த்தை... போர்
ஆக்கிரமிப்பு காஷ்மீரை கையகப்படுத்துவதில் 1994- ஆம் ஆண்டு முதல் நாம் சொல்லி வருவதை இதுவரை அமல்படுத்த இயலாது போனதால், சச்சின் பைலட் இத்தகைய கருத்துகளைத் தெரிவிக்க வேண்டிய சூழலில் இருக்கிறார். இதை சர்வதேசப் பிரச்னையாக்காமல் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நமது என்பதனை நாம் மீண்டும் வலியுறுத்தி பெற வேண்டும். பெறுவதே இந்தியாவின் வெற்றியாகும். இத்தனை படைகளை வைத்துக் கொண்டு நாம் இன்னும் விட்டுக் கொடுத்திருப்பது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. பேசி தீர்த்து முடிவெடுக்க வேண்டும். இல்லையென்றால் போரிட்டு நமது ஆக்கிரமிப்பு காஷ்மீரை நாம் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.
ப. தாணப்பன், தச்சநல்லூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.