"அகதிகளை வரவேற்க இந்தியா தர்ம சத்திரம் அல்ல' என்று உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில் கூறியது குறித்து வாசகர்களிடம் இருந்து வந்த கருத்துகளில் சில...

Published on
Updated on
3 min read

பாராட்ட வேண்டிய முடிவு...

ஒரு வீட்டுக்கு வரும் விருந்தினர் போன்றவர்கள் அகதிகள். சில காலம் இருந்துவிட்டு பின்னர் அவர்கள் தங்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டிருக்க வேண்டியவர்கள். நாம் அவ்வாறு செய்யாததால்தான் பர்மா, வங்கதேசம் மற்றும் இலங்கை அகதிகள் எனப் பல அகதிகள் நம் நாட்டில் குடியேறி கல்வி வேலைவாய்ப்பு எனப் பல துறைகளிலும் ஒதுக்கீடு பெற்று இங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டனர். அவ்வாறு ஒதுக்கீடு செய்தால் நம் நாட்டில் கல்வியும், வேலையும் எல்லோருக்கும் எப்படி கிடைக்கும். எனவே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்க வேண்டியது மட்டுமல்ல பாராட்டப்பட வேண்டிய முடிவு .

கோ.ராஜேஷ் கோபால், மணவாளக்குறிச்சி.

இந்தியாவுக்கே நல்லது...

உச்சநீதிமன்றத்தின் இந்த கருத்து உகந்ததல்ல. அகதிகள் அங்கே தங்களது நாட்டின் போர் மற்றும் பொருளாதார பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாமல் மிகுந்த வேதனையுடன்தான் இங்கு வருகிறார்கள். புலம்பெயர் அகதிகள் வறுமையை தாங்கி எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் வளரும் திறன் கொண்டவர்கள்; இலங்கைத் தமிழ் அகதிகளை வரவேற்றால் தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவுக்கே நல்லது.

ஆ. ஜுடு ஜெப்ரி ராஜ், கோயம்புத்தூர்.

உன்னதத் தீர்ப்பு...

உலக அளவில் மிக அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட நாடு இந்தியா. மக்கள்தொகைக்கு ஏற்ப சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டியது அரசின் கட்டாயத் தேவை. இலங்கை தமிழரின் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் "அகதிகளை வரவேற்க இந்தியா தர்ம சத்திரம் அல்ல' என்று உன்னத தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அகதிகள் என்ற பெயரில் பலரையும் நம்நாடு ஏற்றுக்கொள்ளும்போது நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதுடன் பிரிவினைவாத எண்ணங்களும் தலைதூக்கி விடுகின்றன.

வீ.வேணுகுமார், கண்ணமங்கலம் .

அமைதிக்கு முதன்மை

அகதிகளை வரவேற்கும் பாரம்பரியம் இந்தியாவுக்கு பண்டைய காலம் முதல் உண்டு. மனிதநேயத்தின் அடிப்படையில் பலர் நம் நாட்டில் அடைக்கலம் பெற்றுள்ளனர். ஆனால், தற்போதைய சூழ்நிலைகள் வேறு மாதிரியானவை. எல்லை பாதுகாப்பு, உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம், வேலைவாய்ப்புகள் மற்றும் வளங்களின் பகிர்வு ஆகியவை சிக்கலான கட்டங்களில் இருக்கின்றன. இந்தியா ஒவ்வொரு உயிரையும் மதிக்கிறது என்பதே உண்மை. ஆனால், ஒரு நாட்டு மக்களாக, நமது சட்டம் மற்றும் அமைதிக்கு முன்னுரிமை கொடுப்பதும் அவசியம்.

ஜில்ஜில் சத்யா, சில்லத்தூர்.

சிந்தனை மாற்றம்

'அகதிகளை வரவேற்க இந்தியா தர்ம சத்திரம் அல்ல' என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது, அந்த ஒரு குறிப்பிட்ட வழக்கில் சரியாக இருக்கலாம். ஆனால், இந்தியாவின் பாரம்பரியத்தை மாற்ற முடியுமா? நாம் எல்லோரையும் வரவேற்று பழக்கப்பட்டவர்கள். திபெத் தலாய் லாமாவை வரவேற்றோம், வங்கதேச ஷேக் ஹசீனாவை வரவேற்றோம், இலங்கை அகதிகளுக்கு முகாம்கள் அமைத்துக் கொடுத்துள்ளோம். மியான்மர் ரோகிங்கியாக்கள் இந்தியாவுக்கு வந்தபிறகுதான் நமது அரசின் சிந்தனை மாறிவிட்டதாக கருதுகிறேன்.

ந.கோவிந்தராஜன், ஸ்ரீமுஷ்ணம்.

தனக்கு மிஞ்சித்தான்....

நம் நாட்டில் ஏற்கெனவே மக்கள்தொகை அதிகமாக உள்ள நிலையில், அகதிகளுக்கு எதற்கு இடம் கொடுக்க வேண்டும்? உச்சநீதிமன்றம் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை. "தனக்கு மிஞ்சித்தான் தானமும் தர்மமும்' என்பதால் நம் இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் இல்லை என்ற ஒரு நல்ல சொல்லை சொல்லி அகதிகளை வரவேண்டாம் என்று சொன்னதை ஆதரிப்போம்.

உஷா முத்துராமன், மதுரை.

துரதிருஷ்டவசமானது...

"அகதிகளை வரவேற்க இந்தியா தர்ம சத்திரமல்ல' என்று உச்சநீதிமன்ற நீதிபதி கூறியிருப்பது துரதிருஷ்டவசமானது . உலகம் முழுவதும் ஒரு குடையின்கீழ் வாழ்கின்ற மனிதர்களாய் வாழ்ந்துவரும் சூழலில், சிலரின் ஆதிக்க வெறியும் பேராசையும் போருக்கு அழைத்துச் செல்கின்றன. அதன்காரணமாக மனிதநேயம் சிறுகச் சிறுக மறைந்து சொந்த நாட்டு மக்களே அகதிகளாக புலம்பெயர்கின்றனர். நீதியரசரின் தீர்ப்பு எதிர்பாராதது. "இந்தியா தர்மசத்திரமல்ல' என்று சொன்னவர்கள் எங்கு செல்ல வேண்டும் என்பதற்கான வழிகளைக் கூறி இருக்கலாம்.

உதயா ஆதிமுலம், திருப்போரூர்.

சரியான தீர்ப்பு...

1947-இல் பாகிஸ்தானிலிருந்தும், வங்கதேசத்திலிருந்தும் அகதிகள் இந்தியாவில் குடியேறியனர். சுதந்திரத்துக்குப் பின் இலங்கையிலிருந்தும் தமிழர்கள் அகதிகளாக வந்தனர். ஆனால், இன்று இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட பல நாட்டவர் இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ளனர். வெளிநாட்டவர்கள் ஐக்கிய நாடு, இந்திய அரசின் உதவியுடன் அகதிகளாக வந்து வாழ்கின்றனர். இதனால்தான் உச்சநீதிமன்றம் , நம் நாடு அனைத்து அகதிகளையும் வரவேற்கும் தர்ம சத்திரம் அல்ல என தீர்ப்பில் கூறியுள்ளது. இது எதிர்கால நலம் கருதிய நல்ல தீர்ப்பு; வரவேற்போம்.

எம். குணசேகர், சென்னை-29.

பொருளாதாரம் இல்லையே...

அகதிகளை எல்லாம் வரவேற்க நம் இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல என்று ஒரு தீர்ப்பினை சொல்லி இருக்கிறது. தர்ம சத்திரம் என்றால் பொருள் என்ன? ஒருவர் பணம் கொடுக்க அதில் ஒன்றுமே இல்லாத நிர்க்கதியானவர்கள் தங்குவதாகும். அதுபோல இந்த அகதிகள் இந்தியாவில் வந்து தங்கினால் அவர்களை ஆதரிக்க நமக்கு பொருளாதாரம் வேண்டுமல்லவா? இதையெல்லாம் யோசித்துத்தான் இந்தியா தர்மசத்திரம் இல்லை என்ற ஒரு தீர்ப்பை உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

நந்தினி கிருஷ்ணன், மும்பை .

கருத்து சரியானதே!

இந்தியா விடுதலை பெற்றபோது மக்கள்தொகை 35 கோடி. அது இன்று 140 கோடியைத் தொட்டு வளர்ந்துவரும் நாடாக இருந்து வருகிறது. என்னதான் எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டாலும், அகதிகளின் வருகையை தடுக்கமுடியவில்லை. பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் அடைந்த நாடாக நம் நாடு எவ்வளவுதான் முயற்சித்தாலும், ஒரு பக்கம் மக்கள்தொகைப் பெருக்கம், மறுபுறம் கணக்கில்லாத அகதிகளின் வருகை. இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது உச்சநீதிமன்றம் கூறியதுபோல இந்தியா தர்மசத்திரம் அல்ல என்ற கருத்து சரியானதே.

என் வி சீனிவாசன், புது பெருங்களத்தூர்.

மறுபரிசீலனை செய்ய வேண்டும்...

உச்சநீதிமன்றம் கூறியுள்ளது ஏற்புடையது அல்ல. நமது இந்தியாவுக்கு வந்தாரை வாழவைக்கும் கலாசாரம் உண்டு. நமது நாடு முழுமையான ஜனநாயக நாடு. உண்மையான மக்களாட்சி உள்ள நாடு. தன் சொந்த வீடு, நாட்டை விட்டு வெளியேறி வருகிற அகதிகளுக்கு தேவை அன்பும், அரவணைப்பும்தான். வெளியேறி வருகிற அகதிகளுக்கு ஆதரவு கொடுக்க மனித சமுதாயம் இருக்கிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை தகர்த்திடக் கூடாது. அமைதியாக, நிம்மதியாக சொந்த நாட்டில் வாழமுடியாத இக்கட்டான சூழ்நிலையில், நமது நாட்டுக்கு அகதிகளாக வரும்போது ஆதரவு அளிப்பதுதான் முறை, மனிதநேயமும் கூட. இத்தீர்ப்பை உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

ச.ந.சண்முகம், தேவராயபுரம் .

காலத்தின் கட்டாயம்...

நமது எல்லையின் வழியாக பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து பல ஆயிரம் பேர் வந்து நம்மிடையே இரண்டறக் கலந்து வசித்து வருகின்றனர். மேலும், இவர்கள் சட்டவிரோதமாக அனைத்து ஆவணங்களையும் இந்திய நாட்டின் பிரஜைகள் போன்று தயார்செய்து நம்மிடையே அனைத்துவிதமான சலுகைகளையும் பெற்று வாழ்ந்து வருகின்றனர். அகதிகள் மட்டுமல்ல; நாடு முழுவதும் சட்ட விரோதமாக குடியேறியுள்ள அனைவரும் கண்டறியப்பட்டு வெளியேற்றப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

அ.குணசேகரன், புவனகிரி.

தேவை ஒத்துழைப்பு...

பிறநாட்டவர்கள் பாரதத்தின் சேவையைப் பயன்படுத்தவோ(மருத்துவம்), இடைக்காலத் தேவைகளுக்காகவோ தற்காலிகமாக தங்கிச் செல்வது வேறு; தங்கள் வசதியான வாழ்க்கைக்காக நிரந்தரமாக இங்கேயே சட்டவிரோதமாகத் தங்கிவிடுவது வேறு. இரண்டாம் வகை ஊடுருவலைத்தான் உச்சநீதிமன்றம் தனது கடினமான வார்த்தைகளால் கண்டித்துள்ளது. இவ்வகை ஊடுருவல் பாரதத்தின் பொருளாதாரத்தைப் பாதிப்பதுடன், பாதுகாப்புக்கும் மிகுந்த அச்சுறுத்தலாக விளங்கக் கூடியது. எனவே, சட்டவிரோத பிறநாட்டுக் குடிமக்களை வெளியேற்ற அனைவரும் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்.

முகதி.சுபா, திருநெல்வேலி .

சமநிலை பேணப்பட வேண்டும்

இந்தியா வரலாற்று ரீதியாக அகதிகளுக்கு உதவியுள்ளது. ஆனால், தேசிய பாதுகாப்பு மற்றும் சட்டம்- ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில் விதிமுறைகள் தெளிவாக இருக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு சட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. அகதிகளின் மனிதாபிமான நிலைப்பாட்டை கவனிக்க வேண்டியது அவசியமானாலும், தேச பாதுகாப்பு முக்கியம். மனிதாபிமான உதவிகள் தொடர வேண்டியது அவசியமாயினும், சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பதும் கடமையாகும். இந்த சிக்கலான விவகாரத்தில் அகதிகளின் உரிமைகள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு இடையே சமநிலை பேணப்பட வேண்டும்.

முகம்மது ஹுசைன் , ஊரணிபுரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com