தனியார் பல்கலை. சட்டத் திருத்த மசோதாவை தமிழக அரசு திரும்பப் பெற முடிவு செய்திருப்பது குறித்து...வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

தனியார் பல்கலை. சட்டத் திருத்த மசோதாவை தமிழக அரசு திரும்பப் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது.
Published on
Updated on
3 min read

ஜனநாயகத்தின் வெற்றி

தனியார் பல்கலை. சட்டத் திருத்த மசோதாவை தமிழக அரசு திரும்பப் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. பல்வேறு அரசியல் கட்சிகள், தலைவர்கள், ஆசிரியர் சங்கங்கள், அந்தச் சட்டத்தால் ஏற்படப் போகும் பாதிப்புகள் குறித்து பொதுவெளியிலும், பத்திரிகை மற்றும் ஊடகங்கள் மூலம் கருத்துகள் தெரிவித்தனர். இந்தச் சட்டத்தால் என்னென்ன சிக்கல்கள் உருவாகும் என்பதும் அது தேவையற்றது என்பதையும் வலியுறுத்தி அரசுக்குப் பல்வேறு தரப்பும் வைத்த கோரிக்கைகளை ஏற்று அறிமுக நிலையிலேயே சட்ட மசோதாவை திரும்பப் பெற்றிருப்பது ஜனநாயகத்துக்கு கிடைக்கப்பெற்ற வெற்றி.

மா. பழனி கூத்தப்பாடி.

வரவேற்புக்குரியது

தனியாருக்கு பல்கலைக்கழகங்கள் திறக்க அனுமதி அளித்தால், உயர் கல்வி முற்றிலும் அவர்கள் வசமாகிவிடும். எந்த ஒரு தனியார் கல்லூரியும் விரும்பினால் பல்கலைக்கழகமாக தங்களை மாற்றிக்கொள்ள வாய்ப்பாக அமையும். அப்படியானால், அவர்கள் வைப்பதுதான் சட்டம் என்றாகிவிடும். ஆசிரியர்கள், அலுவலர்கள் ஊதிய விகிதம் முதல் கல்வித் திட்டங்கள், மாணவர்களின் கட்டணம் மற்றும் சேர்க்கை முறை வரை எல்லாவற்றையும் தனியாரே தீர்மானிப்பார்கள். எனவே, தனியார் பல்கலை. சட்டத்திருத்த மசோதாவை அரசு திரும்பப் பெற முடிவெடுத்தது வரவேற்கக் கூடிய ஒன்று.

ப. தாணப்பன், தச்சநல்லூர்.

பாராட்டலாம்

நீண்ட நாள்களுக்குப் பிறகு ஒரு நல்ல நிகழ்வு, அந்த மசோதா பொது நலனுக்கு உகந்தது அல்ல என்பதை உணர்ந்து வீண் கெüரவம் பார்க்காமல் அதை திரும்பப் பெற்ற அரசு, கூட்டணியில் இருந்தாலும்கூட மசோதாவை எதிர்த்த கட்சிகள், ஆளும்கட்சி மீது பரிவு இருந்தாலும் இந்த விஷயத்தில் அதை எதிர்த்த கல்வியாளர்கள், காரண காரியங்களை விளக்கி அதன் தீமைகளை மக்கள் மனதில் பதிய வைத்த எதிர்க்கட்சிகள், இவற்றை எல்லாம் மக்களிடம் கொண்டுபோய் சேர்த்த பத்திரிகைகள் என அனைத்துத் தரப்பினரும் பாராட்டு பெறுகின்றனர்.

ந. சுந்தரேஸ்வர பாண்டியன், சென்னை.

கல்வியில் உயர...

தமிழக அரசின் இந்த முடிவை வரவேற்கலாம். இதனால் தனியார் பல்கலைக்கழகங்கள் புதிதாக தோன்றி பலரும் படிப்பினை மிக எளிதாக தொடரலாம். இப்படி தொடங்கப்படும் பல்கலைக்கழகங்களில் நல்ல தரமான விரிவுரையாளர்கள் இருக்க வேண்டும் என்று ஒரு நியதியை வகுத்தால் நன்றாக இருக்கும். சட்டத் திருத்த மசோதாவை தமிழக அரசு திரும்பப் பெற்றதற்குக் காரணம் தமிழகம் கல்வித் துறை செழித்து வளர வேண்டும் என்பதால்தான். இதை மற்ற கல்வித் துறை வல்லுநர்களைக் கலந்து ஆலோசித்துச் செய்தால் வெற்றி பெறுவது உறுதி.

உஷா முத்துராமன், மதுரை.

ஊழல் தடுக்கப்பட்டது

பல்கலைக்கழகத்தில் எழும் பிரச்னைகள்கூட தொடர்கதையாகி விட்ட நிலையில் தனியார் பல்கலை சட்டத்திருந்த மசோதாவைத் திரும்பப் பெறுவதுகூட 'ஏதிலார் குற்றம் போல்' எனத் தொடங்கும் குறளுக்குரிய வடிவம்தான்! அரசுப் பணிகளின் காலியிடங்கள் நிரப்பப்படாத நிலையிலும் புதிய வேலைவாய்ப்புகளை வழங்க முடியாத நிலையிலும் தனியார் பல்கலைக்கழகங்கள் மூலம் சமூகத்திற்கு இயல்பாகவே வாய்க்கப் பெறும் வாய்ப்புகளிலும் தலையிட்டு எங்கும் எதிலும் ஊழல் என்ற அவலங்களைப் பெருக்குவதைவிட அதைச் சுருக்குவது வரவேற்கத்தக்கதுதான் !

ஆர்.விநாயகராமன், திசையன்விளை.

தற்காலிகமானது

தனியார் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு எவ்வளவு இடம் இருக்க வேண்டும் என்று அந்த மசோதாவில் வரையறுக்கப்பட்டிருந்தது. அந்த இட அளவை குறைப்பதற்காகத்தான் மசோதா திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதனால் தனியார் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தனியார் கல்லூரிகள் பலவும் பல்கலைக்கழகங்களாக உயரும். கல்வி கட்டணங்கள் தாறுமாறாக ஏறும். கல்விக்காக ஆகும் அரசின் செலவினம் கணிசமாகக் குறையும்.

வளர்மதி ஆசைத்தம்பி, தஞ்சாவூர்.

திருத்தியமைக்கப்படும்

எதிர்கால நலன் கருதி பல்கலைக்கழகங்களை அதிகரிக்க வேண்டும் என்று அரசு எடுத்துள்ள முடிவு ஒரு கண்ணோட்டத்தின் அடிப்படையில் சரியாக இருக்கிறது. கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் இவர்களின் கண்ணோட்டத்தில் மசோதாவில் கொண்டுவரப்பட்டுள்ள சில பிரிவுகள் நிறைவேற்றவே வாய்ப்பில்லாத ஒரு நிலை. எனவே, பொதுமக்களிடமிருந்து வந்துள்ள கோரிக்கையை ஏற்று மசோதாவைத் திரும்ப பெற்று, பெறப்பட்டுள்ள கருத்துக்கள் அடிப்படையில் திரும்பக் கொண்டுவரப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

எம்.முஹம்மது ரபீக் ரஷாதீ , விழுப்புரம்.

தகுதிகள் உயர்ந்தால்...

பல்கலைக்கழகங்களின் பணி, பட்டதாரிகளை உற்பத்தி செய்வதல்ல. அவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பை வழங்கி இளைஞர் சக்தியை தேச வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்வதே நோக்கமாக இருக்க வேண்டும். அதை விட்டு தனியார் பல்கலைக்கழகங்களுக்கு சலுகைகளை அதிகரிப்பது, பல்கலைக்கழகங்கள் பெருகி வேலையில்லாப் பட்டதாரிகளைத்தான் பெருக்கும். பட்டம் பெறுவது பெருமையல்ல. பட்டதாரிகளின் தகுதிகளும் உயர வேண்டும். இதையெல்லாம் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்த, அதற்கேற்ப சட்டத் திருத்த மசோதாவை மேம்படுத்த அரசு திரும்பப் பெற்றது புத்திசாலித்தனமாகும்.

ஜ அ.யாழினிபர்வதம், சென்னை.

மறுபரிசீலனை தேவை

தமிழக அரசின் இந்த முடிவு ஒரு சிலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், இதில் பல சிக்கல்கள் உள்ளன. இப்படி சட்டத் திருத்த மசோதாவை தமிழக அரசு திருப்பப் பெற முடிவு செய்ததால் எதிர்காலத்தில் நல்ல தரமான பல்கலைக்கழகங்கள் வருமா என்பது கேள்விக்குறி. ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவ பலவித கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த சட்டத் திருத்த மசோதாவால் அந்த கட்டுப்பாடுகள் தகர்க்கப்படலாம். இதனால், புதிதாக நிறுவப்படும் அந்தப் பல்கலைக்கழகங்களில் தரமான கல்வி முறை இல்லாமல் போகலாம். அதனால், இதை தமிழக அரசு மறுபரிசீலனை செய்வது நல்லது.

நந்தினி கிருஷ்ணன், மும்பை.

சரியானது அல்ல

நிலப்பரப்பை மேலும் குறைப்பதற்காகவே தனியார் பல்கலைக்கழக சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சியினரும் பல்வேறு திருத்தங்கள் செய்ய வேண்டும் என குரல் கொடுத்தனர். இப்படி நிலப்பரப்பைக் குறைக்கும் நிலையில் அரசு உதவி பெறும் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களாக மாறினால் கட்டணம் உயர்ந்து ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவர் என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது சரியானதே. அரசு மேலும் நிலப்பரப்பை குறைக்காமல் இருப்பதே சாலச் சிறந்தது. எனினும், மசோதா திரும்பப் பெறப்பட்டது சரியானது அல்ல.

க.அருச்சுனன்,செங்கல்பட்டு.

கல்விப் பாதுகாப்பு

தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாவை அரசு திரும்பப் பெற எடுத்திருக்கும் முடிவு வரவேற்கப்படவேண்டிய ஒன்று. தேசிய அளவில் உயர் கல்வியைத் தொடரும் மாணவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இந்த எண்ணிக்கை உயர்வு மேலும் உயரவும் தக்கவைக்கப்படவும் அரசு மற்றும் உதவிபெறும் கல்லூரிகள் அதிக அளவில் உருவாக தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு முறைப்படுத்தப்பட வேண்டியது அவசியம். கல்விக் கட்டணம் மற்றும் கல்விப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசு செயல்படுவது அனைவருக்கும் உயர் கல்வியை எளிதாக்கும்.

எஸ்.பி.இளங்கோவன், தென்காசி.

அச்சம் நியாயம்

தனியார் கல்லூரிகளை, பல்கலைக்கழகங்களாக மாற்ற சட்ட திருத்தங்கள் மூலம் தமிழக அரசு எடுத்த முயற்சி, கல்வியாளர்கள், அரசியல் கட்சிகள் எதிர்ப்பின் காரணமாக கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே தனியார் பல்கலைக்கழகங்கள் புற்றீசல் போல் வளர்ந்துள்ளன. கல்வித் துறை மொத்தமும் தனியார்வசம் சென்று விடும் அபாயம் இந்த சட்டத் திருத்தத்தால் ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டது. ஏற்கெனவே அரசு பல்கலைக்கழகங்களின் தரம் குறைந்துள்ள நிலையில், தனியார் பல்கலைக்கழகங்களை அதிகரிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட இருந்த சட்டத் திருத்தம் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போன்றதாகும்.

ஜீவன்.பி.கே, கும்பகோணம்.

அபாயம் தவிர்க்கப்பட்டது

உயர் கல்வி தனியார்மயம் ஆவதால் ஏழை எளிய நடுத்தர பிரிவைச் சார்ந்த மாணவர்களின் இட ஒதுக்கீடு சேர்க்கை பறிபோகும். கல்விக் கட்டணம் தற்போதுள்ள நிலையில் இருந்து பல மடங்கு உயரும் அபாயம் உள்ளது. கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படுவர். தனியார் பல்கலைக்கழகமாக மாறினால் அரசின் மானியம் நின்று விடும். உயர் கல்வி முற்றிலும் வணிக மயமாவதற்கு வழி வகுக்கும். எனவே, பலவேறு தரப்பினரின் கருத்துகளின் அடிப்படையில் மசோதாவைத் திரும்பப் பெற்ற தமிழக அரசின் முடிவு வரவேற்கத்தக்கதாகும்.

டி. ஆர். பிரதாப் சந்திரன், மதுரை.

தனியாரின் நெருக்கடி...

புதிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் அமைய தற்போது நூறு ஏக்கர் நிலம் கிடைப்பதில்லை. அதனால் அவர்கள் அரசுக்கு நெருக்கடி கொடுத்து இந்த மசோதாவைத் தாக்கல் செய்திருக்கலாம். மேலும், தனியார் பல்கலைக்கழகங்கள் அமைவது இனி தவிர்க்க இயலாது. உயர் கல்வியில் அரசின் ஆர்வம் குறைந்து வருகிறது. தனியார் பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீடு மற்றும் கட்டணம், ஊதியம் ஆகியவற்றில் பல பிரச்னைகள் உள்ளன. தற்போதைய நிலையில் தேர்தலை மனதில் வைத்து மசோதாவை திரும்பப் பெற்றுள்ளதை ஏற்கலாம்.

தி.ரெ.ராசேந்திரன், திருநாகேச்சரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com