சமூகப் பொறுப்பில்லாத...
தேர்தல் காலத்தில் மேற்கொள்ளப்படும் தெருமுனை பரப்புரையைப்போல் கூட்டத்தை நடத்தியுள்ளார் விஜய். ஒரு நடிகரின் பரப்புரையில் வசீகரத்தால் கூட்டம் கூடுவது இயல்பே. ஆனால், இங்கே கூடியவர்கள் சமூகப் பொறுப்புணர்வு இல்லாதவர்கள். பொதுவாழ்வில் தனிமனித பொறுப்புணர்வு மிக முக்கியம். இது துளியும் இல்லாத நடிகர் விஜய் எவ்வித குற்ற உணர்வும், இரக்கவுணர்வும் இல்லாமல் காணொலி வெளியிட்டு நடிக்கிறார். பரிதாபத்துக்குரிய மக்கள்தான் பாவப்பட்டவர்கள்.
ஜானகி.இராஜா, கடலூர்.
அதிகாரிகள் ஒருங்கிணைந்து
திரையுலகக் கவர்ச்சி தந்த ஈர்ப்பில் மதிமயங்கி, அதீத ஆர்வத்தால் தன்னை மறந்து கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த கரூர் சம்பவம் துயரத்தின் உச்சம். திருச்சியில் த.வெ.க.வினரின் ஊர்வலம் அரசு அதிகாரிகளுக்கு முன்னெச்சரிக்கையைத் தந்திருக்க வேண்டும். இப்போது, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் ஒருங்கிணைந்து, தங்கள் மீது தவறில்லை எனக் கூறுகின்றனர். இந்த மனோபாவம் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இருந்திருந்தால் பெருந்துயரம் நிகழ்ந்திருக்காது.
கே.ராமநாதன், மதுரை.
எல்லோரும் காரணம்
கரூர் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசல் உயிரிழப்புகளுக்குக் காரணம், அனுமதி அளித்த அரசு; தாமதமாக வந்த நடிகர் விஜய்; சூழ்நிலையைப் புரிந்து கொள்ளாத பொதுமக்கள். ஆளுங்கட்சியின் மாவட்ட அமைச்சராய் இருந்த செந்தில் பாலாஜி நடத்திய கூட்டங்களுக்கு வந்த கூட்டத்தினரைவிட அதிக எண்ணிக்கையில் பொதுமக்களை வரவழைத்துக் காட்ட வேண்டும் என நினைத்த நடிகர் விஜய், தாமதமாய் வந்ததின் விளைவே கட்டுக்கடங்காத கூட்டம். அதைவிட கட்டுப்பாடற்ற அந்தக் கட்சி உறுப்பினர்களின் செயல்பாடுகள். நாமாக திருந்தாதவரை இழப்புகளைத் தவிர்க்கவே முடியாது.
ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
தேசத்துக்கே ஆபத்து
கரூர் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மீளமுடியாத துயரத்தில் இருப்பார்கள். இத்தகைய சூழலில் தமிழக அரசியல்வாதிகள், பொதுமக்கள் இறப்புகள் குறித்து வருந்துவதைக் காட்டிலும் ஒருவர் மீது ஒருவர் பழிபோடுதல்; இதற்கெல்லாம் யார் காரணம் என்று மக்களுக்குத் தெரியும் என பேசுதல்; வாய்க்கு வந்தபடி மனம் போன போக்கில் பேசுவது, அறிக்கை விடுவது என்பது ஏற்புடையதல்ல. ஜனநாயக நெறிமுறை தவறாகக் கையாளப்படுவது தேசத்துக்கே ஆபத்தான செயலாகும்.
ந.கோவிந்தராஜன், ஸ்ரீமுஷ்ணம்.
மக்களுக்கு விழிப்புணர்வு
கும்பகோணம் மகாமகக் குளத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் உயிரிழக்கவில்லையா? எந்த ஒரு கூட்டத்தில் அளவுக்கு அதிகமாக மக்கள் கூடினால், காவல் துறை பாதுகாப்பு இருந்தாலும் மக்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும் போது, நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்து விடுகின்றன. அதுபோலத்தான், கரூரில் விஜய்யின் பிரசாரக் கூட்டத்திலும் நிகழ்ந்துள்ளது. இனி இதுபோன்ற கூட்டத்துக்குச் செல்லக் கூடாது என்கிற விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நந்தினி கிருஷ்ணன், மும்பை.
அனைவருக்குமான பாடம்
இப்போதெல்லாம் எல்லா கட்சிக் கூட்டங்களுக்கும் உணவும், பணமும் கொடுத்து மக்கள் அழைத்து வரப்படுகின்றனர். அவர்கள் தொழில்முறையாக இதைச் செய்து எல்லா கட்சிக் கூட்டங்களுக்கும் பாரபட்சமின்றி செல்கின்றனர். பல கூட்டங்களுக்குச் சென்றிருப்பதால், அங்கு ஏற்படும் பிரச்னைகள் அவர்களுக்கு நன்றாக தெரியும். பல ஆண்டுகளுக்குப் பிறகு, விஜய்க்கு தன்னிச்சையாக கூட்டம் கூடுகிறது. அவர்களுக்கு பொதுக்கூட்ட நெரிசல், நெருக்கடி போன்றவை தெரியவில்லை. விஜய்க்கும் தெரியவில்லை. அனைவருமே இந்த சம்பவத்தில் இருந்து பாடம் கற்க வேண்டும்.
ந.சுந்தரேஸ்வர பாண்டியன், கோவூர்.
வில்லனான கதாநாயகன்
தனது அரசியல் விளம்பரத்துக்காக-மாபெரும் தலைவன் என்ற பிம்பத்துக்காக கட்டுப்பாடற்ற மக்கள் கூட்டத்தை உருவாக்கி, அதை தன் திரைப்படக் கவர்ச்சிப் பேச்சால் உற்சாகப்படுத்தி இருக்கிறார். சம்பவம் நிகழ்ந்தது குறித்து அவரோ, அவரது கட்சியின் பொறுப்பாளர்களோ எந்தவிதக் கவலையும் படாமல் பார்வையாளராக வேடிக்கை பார்த்துள்ளனர். இதிலிருந்தே அவர்கள் நோக்கம் விளம்பரம் மட்டும்தான் என்பது தெளிவாக புரிகிறது. திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்கும் விஜய், பொதுமக்களுக்கு வில்லனாகிவிட்ட சோகக் கதைதான் கரூரில் அரங்கேறியுள்ளது.
க.ரவீந்திரன், ஈரோடு.
திரைப்பட மோகம்
திரைப்பட மோகம் இளைஞர்கள் மத்தியில் தலைவிரித்தாடுவது நாட்டுக்கு நல்லதல்ல. ஒரு திரைப்படத்துக்கு ரூ.100 கோடி ஊதியம் பெறுகிற நடிகர்களின் திரைப்படத்துக்காக செலவிடும் சாமானியனின் ஆண்டு வருமானம் மிகச் சொற்பமே. பாலுக்காக அழும் பச்சிளங் குழந்தைகள் மத்தியில் நடிகரின் கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யும் கொடுமையை என்னவென்று சொல்வது. திரைப்படத்தில் கிடைத்த ஊதியம் முழுவதையும் கொடுத்தாலும் போன உயிர்கள் மீண்டும் வருமா? மக்கள் சிந்திக்க வேண்டிய முக்கியமான தருணம்.
செய்யது முகம்மது, மேலப்பாளையம்.
கணிக்காத உளவுத் துறை
கரூரில் விஜய்யின் பிரசாரக் கூட்டத்துக்கு இவ்வளவு பேர் கூடுவார்கள் என்பதை தமிழக உளவுத் துறை சரியாக கணிக்காததே முதல் குற்றம் ஆகும். இரண்டாவது, தனக்கு வரும் கூட்டம் கட்டுப்பாடற்றக் கூட்டம் என்பதை விஜய் கணிக்கத் தவறியதும் மிகப் பெரிய குற்றம். கூட்டத்துக்கு வந்தவர்களுக்கு குடிநீர்கூட வழங்காமல் காலைமுதல் இரவுவரை காத்திருக்க வைத்ததும்; குழந்தைகளை அழைத்துச் சென்ற பெற்றோரும் குற்றவாளிகள்தான். இந்த 41பேரின் உயிரிழப்புகளுக்கு விஜய் முதல் காவல் துறையினர் வரை அனைவருமே காரணம்.
அ.குணசேகரன், கடலூர்.
வரலாற்றில் இல்லாதது
நடிகர் விஜய் பிரசாரத்தால் கரூரில் நடைபெற்ற கொடூரம் இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை நடைபெறாத ஒன்றாகும். தனது பிரசார வாகனத்தை பின்தொடர்ந்து, சூழ்ந்து வரும் தன் கட்சிக்காரர்கள் அதன் முன்பக்க சக்கரத்தில் சறுக்கி விழுவதைப் பார்த்தும் வாகனத்தை நிறுத்தவில்லை. தன் கண்முன்னே பொதுமக்கள் மயங்கி விழுவதைப் பார்த்ததும் தன் பேச்சை நிறுத்தவில்லை. பலர் உயிரிழந்து விட்டனர் என்ற செய்தியை அறிந்தும், தனி விமானத்தில் சென்னைக்கு விஜய் புறப்பட்டுச் சென்றதை ஏற்க முடியாது.
பூ.சி.இளங்கோவன், சிதம்பரம்.
தடை விதிக்க வேண்டும்!
இது முழுக்க முழுக்க தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது கட்சியினரின் அலட்சியத்தால் நிகழ்ந்த பேரவலம். முறையான திட்டமிடலின்றி மக்களை பல மணிநேரம் காக்கவைத்து கூட்டத்தைக் காட்டி திமுக, அதிமுகவுக்கு இணையான மக்கள் செல்வாக்கு கொண்டவன் நான் என்பதை வெளிக்காட்ட வேண்டும் என்ற சுயநல நோக்கமே இத்தகைய பேரழிவுக்கு முதன்மைக் காரணம். இதுபோன்ற நிகழ்வுகளைத் தவிர்க்க முறையான வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க வேண்டும். சாலைப் பேரணி போன்ற நிகழ்வுகளுக்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும்.
க.சக்திவேல், கும்பகோணம்.
மாற வேண்டியது மக்களே...
நடந்து முடிந்த கரூர் துயர சம்பவம் தமிழக மக்களின் மந்தை மனநிலையைத் தெளிவாகக் காட்டுகிறது. திரைப்படம் எனும் மாயக் கவர்ச்சி மக்களை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்பதற்கு இந்தப் பேரவலமே சாட்சி. திரையில் வரும் கதாநாயக பிம்பம் தனது வாழ்வியலை மாற்றிவிடும் என்ற நினைப்பில் உயிரைப் பறிகொடுத்து பரிதவிக்கும் கொடூர நிகழ்வு இது. பொறுப்பற்ற தலைவன் ஒருவன் ஆட்சிக்கு வர நினைத்த அதிகாரப் பசிக்கு பலிகடாவாயின 41 உயிர்கள். மாற வேண்டியது தலைவர்கள் அல்ல; பாமர மக்களே...
அ.கார்த்திகேயன், சேலம்.
திட்டமிடலில் தவறு
ஒரு நடிகரை இப்படி காத்திருந்து பார்ப்பதை மக்கள் தவிர்த்திருக்க வேண்டும். சிறுவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் கூட்டத்துக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களும் சென்றுள்ளனர். 10,000 பேர் வருவார்கள் என்கிற எதிர்பார்ப்பை மீறி 25,000-க்கும் அதிகமானோர் கூடியதாகத் தெரிகிறது. எதிர்பார்த்த எண்ணிக்கையைவிட அதிக அளவில் மக்கள் கூடியது முதல் காரணம். விஜய் ஏழு மணி நேரம் தாமதமாக வந்தது மற்றொரு காரணம். பாதுகாப்புக்கான போலீஸôரின் எண்ணிக்கையும் போதாது. திட்டமிடலில் தவறுள்ளது.
பா.ராமகிருஷ்ணன், திருநெல்வேலி.
காவல் துறையின் பொறுப்பு
விஜய் ஏற்கெனவே தான் நடத்திய மாநாட்டிலும், கரூரில் நடைபெற்ற கூட்டத்திலும் கர்ப்பிணிகள், முதியோர், மாணவர்கள், குழந்தைகள் வரவேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். மக்கள் அவரைக் காண ஆர்வமுடன் வந்துள்ளனர். மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு காவல் துறைக்கு உண்டு. அதைத் தட்டிக் கழித்து இவ்வளவு பேர்தான் வரவேண்டும் என்று கட்டளை பிறப்பிப்பது சர்வாதிகாரப் போக்கை காட்டுகிறது. ஆகையால், உயிரிழப்புக்கு அரசே முழு பொறுப்பேற்க வேண்டும்.
முத்துபேச்சியப்பன், தூத்துக்குடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.