இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்: டிரம்ப்பின் திட்டம் வெற்றி பெறுமா? என்பது குறித்து...வாசகர்களிடம் இருந்து வந்த கருத்துகளில் சில...

காஸா மீதான போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே அதிபர் டொனால்ட் டிரம்ப் தலையீட்டால் அமைதி ஏற்பட்டால் வரவேற்கத்தக்கதே.
Published on
Updated on
3 min read

வரவேற்கத்தக்கதே

காஸா மீதான போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே அதிபர் டொனால்ட் டிரம்ப் தலையீட்டால் அமைதி ஏற்பட்டால் வரவேற்கத்தக்கதே. இப்போதைய சூழலில் போர் முடிவுக்கு வருவது கடினமானதே. ஏனெனில், காஸாவில் உள்ள அப்பாவி பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்கள் தொடர்வதாலும், ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய வேண்டும் என்பதாலும், காஸாவின் எதிர்கால ஆட்சியில் ஹமாஸின் பங்கு தொடர்பான நிச்சயமற்ற சூழலே உள்ளது.

சுவாமிநாதன், திருவானைக்கோவில்.

சாத்தான் ஓதும் வேதம்

மிகப் பெரிய ஆயுத வியாபார நாடான அமெரிக்கா, தனது ஆயுதங்களைச் சோதித்துப் பார்க்க உலகின் ஏதாவது ஒரு மூலையில் போர் நடந்து கொண்டே இருக்க வேண்டும் என விரும்புகிறது. அந்த சோதனைக் களங்களில் ஒன்றுதான் பாலஸ்தீனம். டிரம்ப்பின் இந்த அமைதி முயற்சியை சாத்தான் ஓதும் வேதம் என்றுதான் பார்க்க வேண்டும். உண்மையில் அமைதியை விரும்பினால் டிரம்ப் சுதந்திர பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வேண்டும். அதற்கு வாய்ப்பு இல்லையெனில் இந்த அமைதி முயற்சி வெற்றி பெற வாய்ப்பு இல்லை.

ஜானகி.இராஜா, கடலூர்.

தீர்வு கிடைக்கும்

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இறுதியில் இந்தப் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் 20 அம்சங்கள் கொண்ட ஒரு திட்டத்தை முன்மொழிந்துள்ளார். அதன்படி, போரை முடிவுக்குக் கொண்டு வர இஸ்ரேல் அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் நிலையில், ஹமாஸ் அமைப்பும் ஒரு சிலவற்றை ஏற்கிறது. எனவே, தீர்வு கிடைக்கும் என உறுதியாக நம்பப்படுகிறது.

டி.ஆர்.பிரதாப் சந்திரன், மதுரை.

சமமான நீதி

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் சூழலில் டிரம்ப் முன்வைத்த மத்திய கிழக்கு அமைதித் திட்டம் நடைமுறையில் வெற்றி பெறவில்லை. அந்தத் திட்டம் பெரும்பாலும் இஸ்ரேலின் பாதுகாப்பு நலன்களை முன்னிலைப்படுத்தி, பாலஸ்தீனர்களின் உரிமைகள், அரசியல் சுயாட்சி குறித்த கேள்விகளைப் புறக்கணித்தது. இதனால், பாலஸ்தீனர்கள் அதை முழுமையாக நிராகரித்தனர். அதன் விளைவாக, மோதல்கள் குறையாமல் மேலும் தீவிரமடைந்தன. நிலையான அமைதி பெற, இரு தரப்புக்கும் சமநிலையுடன் கூடிய நீதி கிடைக்கும் பேச்சு

வார்த்தையே தீர்வு.

சா.முஹம்மது ஹுசைன், அறந்தாங்கி.

டிரம்ப்புக்கு பாராட்டு

இருதரப்பும் பல இழப்புகளையும் பொருளாதார நெருக்கடிகளையும் சந்தித்த பின்னர் இந்தத் திட்டத்துக்கு இணங்கிவந்து சில நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதால் பல நாடுகளின் உதவியோடு மீண்டுவர வாய்ப்புகள் அதிகம். இதைப் பயன்படுத்திக் கொண்டால் இருதரப்புக்குமே வெற்றிதான். வரி விதிப்புக் கொள்கையில் பல நாடுகளின் அதிருப்திக்கு உள்ளான டிரம்ப், இந்தத் திட்டத்தை அறிவித்ததால் உலக நாடுகள் பலவற்றின் பாராட்டுக்கு உரியவராகிறார். காஸாவில் அமைதி திரும்பி முன்னேற்றம் ஏற்படட்டும்.

அ.கருப்பையா, பொன்னமராவதி.

ஆதரிக்க வேண்டும்

பச்சிளம் குழந்தைகளும் முதியவர்களும் உணவு, அடிப்படை மருத்துவத் தேவைகளுக்காகக்கூட கையேந்தி நிற்கும் அவல நிலையை இந்த மனிதம் சந்தித்துக் கொண்டிருக்கிறது. மனித உரிமைகள் குறித்து பேசும் அமைப்புகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதால் நாம் இந்த உலகத்தில்தான் இருக்கிறோமா என்று எண்ண வேண்டி உள்ளது. இஸ்ரேல்-

ஹமாஸ் இடையே அமெரிக்க அதிபர் ஏற்படுத்த இருக்கும் சமாதான உடன்படிக்கைகளை உலக நாடுகள் தயக்கமின்றி ஆதரிக்க வேண்டிய முக்கிய தருணம் இது.

சோ.உலகநாதன், ராமேசுவரம்.

போர் தீர்வாகாது

எந்தவொரு போரும் அமைதியான வாழ்வுக்குத் தீர்வாகாது. இரண்டு தரப்பினரும் விட்டுக் கொடுக்காமல் இருப்பதே இந்த உயிரிழப்புக்கு முக்கியக் காரணம். உலக நாடுகளின் பிரச்னைகள் அனைத்திலும் தனது பஞ்சாயத்து மூலம் சமாதானம் கிடைப்பதாகக் கூறிக்கொள்ளும் அதிபர் டிரம்ப் இஸ்ரேல் பிரதமர்

நெதன்யாகுவை வெள்ளை மாளிகையில் சந்தித்த போது, 20 அம்சத் திட்டத்தை அறிவித்துள்ளார். இதை ஏற்று ஹமாஸ் மட்டும் அல்லாமல் இஸ்ரேலும் ஒப்புக்கொண்டு போரை நிறுத்தினால் மகிழ்ச்சியே.

அ.குணசேகரன், புவனகிரி.

முயற்சி வெல்லட்டும்

பாலஸ்தீனம் என்றொரு பகுதியே உலக வரைபடத்தில் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக

இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 67,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பசிக் கொடுமையால், உணவுக்காக வரிசையில் நின்ற குழந்தைகளைக் கொன்றது மன்னிக்க இயலாத

குற்றம். அமெரிக்க அதிபரின் முயற்சி வெற்றி பெற வேண்டும். இல்லையெனில் ஹிட்லரைப் பற்றிய புரிதல் தவறானதோ என்கிற ஐயம்

எழுகிறது.

பூ.சி. இளங்கோவன், சிதம்பரம்.

சந்தேகமே...

இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் விவகாரத்தில் டிரம்ப் திட்டம் வெற்றி பெறுவது கடினம்தான். உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு கூடுதல் வரிகளை விதித்து வெறுப்பை சம்பாதித்து வைத்திருக்கும் டிரம்ப், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே மோதலை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிப்பது தோல்வியில் முடியத்தான் வாய்ப்புகள் அதிகம். அமெரிக்க அதிபராக 2-ஆவது முறையாக பதவியேற்றதில் இருந்து அவரது செயல்பாடுகள் பாராட்டும் விதத்தில் இல்லை. அவரது சமாதானத் திட்டத்தை அந்த நாடுகள் ஒரு மனதாக ஏற்றுக் கொண்டால் அப்பாவி மக்கள் பலன் பெறுவர்.

உஷா முத்துராமன், மதுரை.

வாய்ப்புகள் அதிகம்

இஸ்ரேல் - ஹமாஸ் மோதலை முடிவுக்கு கொண்டு வரும் டிரம்ப்பின் திட்டம் வெற்றி பெறும். இரு தரப்பையும் ஒப்புக் கொள்ள செய்யலாம் என்ற நம்பிக்கையில்தான் அவர் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரது திட்டம் வலுவானது என்பதால் அது வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இரு தரப்பினரும் டிரம்ப்பின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து மோதலை முடிவுக்கு கொண்டு வருவார்கள் என்றே தோன்றுகிறது.

பிரகதாம்பாள், கடலூர்.

தற்காலிகத் தீர்வு....

டிரம்ப்பின் திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஏற்றுக் கொண்டார் என்றே தெரிகிறது. டிரம்ப்பின் சில கோரிக்கைகளுக்கு ஹமாஸ் அமைப்பும் செவி சாய்த்துள்ளது. பிணைக் கைதிகளை விடுவிக்க, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் போய் சேர, சீரமைப்பு நடவடிக்கைளுக்கு இந்தத் திட்டம் தற்காலிக தீர்வைத் தரும். அதே நேரத்தில் முழுமையான வெற்றி பெறுமா என்பது இஸ்ரேலும் ஹமாஸும் நடந்துகொள்ளும் விதத்தில் உள்ளது.

முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்.

விட்டுக் கொடுத்தால் சாத்தியம்

இரண்டு ஆண்டுகளைக் கடந்து காஸா போர் தொடர்வதற்கான காரணம் இரு தரப்பிலும் விட்டுக் கொடுக்கும் மனநிலை இல்லாததுதான். இஸ்ரேல் காஸாவில் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் எண்ணிக்கையை அறியும் போது நெஞ்சம் பதறுகிறது. டிரம்ப் முன்வைத்துள்ள 20 அம்சத் திட்டம் உடனடியாக வெற்றி பெற வேண்டுமானால், இரு நாடுகளும் சுய பலத்தை தூக்கி வீசிவிட்டு பிணைக் கைதிகள் பரிமாற்றத்தை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து ஒப்பந்த ஷரத்துகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி மோதலை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்.

என்.வி.சீனிவாசன், புது பெருங்களத்தூர்.

நடுநிலையுடன்...

ஹமாஸ்-இஸ்ரேல் மோதல் மத- இன உணர்வு மோதலாய் நெடுங்காலமாகத் தொடர்வதால் இணக்கம் இல்லாமல் போகிறது. அதிபர் டிரம்ப்பின் சமாதான நடவடிக்கை ஒருபுறமிருந்தாலும், அவரது தடித்த வார்த்தைகள் அதிகார தோரணையைக் காட்டுகிறது. இதனால்தான் அமைதிப் பேச்சுவார்த்தையின் போதும் இஸ்ரேல் மோதலைத் தொடர்வதாக எண்ணத் தோன்றுகிறது. ஹமாஸ் சில நிபந்தனைகளை மட்டுமே ஏற்கிறது. அப்பாவிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் நடுநிலையான பேச்சுவார்த்தை தொடர்ந்தால் மோதல் முடிவுக்கு வரும்.

அ.யாழினிபர்வதம், சென்னை.

முதல் ஒளி

போர் இல்லாத அமைதியான சூழலை உருவாக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சிப்பது பாராட்டுக்குரியது. யார் சொன்னாலும் கேட்காத இஸ்ரேல் அமெரிக்காவின் 20 அம்சத் திட்டத்துக்கு ஒப்புக் கொண்டது இருளான விஷயத்துக்கு முதல் ஒளியைப் போன்றது. ஹமாஸ் தங்களது கோரிக்கைகள் சிலவற்றை விட்டுக் கொடுத்து, அப்பாவிகளின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும். இந்த நேரத்தில் இரு நாடுகளும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டதை வெளிச்சம் பரவி விட்டதாகக் கருதலாம்.

ச.ராமகிருஷ்ணன், திருநெல்வேலி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com