அதிகரித்துவரும் ஆணவக் கொலைகளை சட்டத்தால் தடுக்க முடியுமா?என்பதுகுறித்து...வாசகர்களிடம் இருந்து வந்த கருத்துகளில் சில...

அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளை சட்டத்தால் தடுக்க இயலும். ஆணவக் கொலை என்று தெரிந்தும், அதைக் கட்டுப்படுத்த தனிச் சட்டம் இல்லாததால் குற்றவாளிகள் எளிதில் தப்பி விடுகின்றனர்.
Published on
Updated on
3 min read

கடுமையான சட்டம்

அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளை சட்டத்தால் தடுக்க இயலும். ஆணவக் கொலை என்று தெரிந்தும், அதைக் கட்டுப்படுத்த தனிச் சட்டம் இல்லாததால் குற்றவாளிகள் எளிதில் தப்பி விடுகின்றனர். தனியாக சட்டம் இருப்பின் தப்ப இயலாது என்று தெரிந்தால், ஆணவக் கொலைகள் குறையும். சட்டம் கடுமையாக்கப்பட்டால், ஆணவக் கொலை குறித்து தமக்குத் தாமே வருந்தி, இனி தாமும் தன்னைச் சார்ந்தவர்களும் எக்காரணம் கொண்டும் ஆணவக் கொலையில் ஈடுபடும் எண்ணத்தை அறவே மறப்பர். ஆணவக் கொலை படிப்படியாக குறையும்.

ப. தாணப்பன், தச்சநல்லூர்.

மனிதாபிமானத்தின் கல்லறை

சட்டம் தண்டனை வழங்கினாலும் மனது மாறினால் மட்டுமே மனிதன் மாறுவான்.

ஆணவக் கொலை என்பது மனிதாபிமானத்தின் கல்லறை. இன்று சட்டங்கள் பலம் பெற்றுள்ளன. கொலை செய்தால் ஆயுள் தண்டனையோ அல்லது மரண தண்டனையோ வழங்கப்படுகிறது. ஆனாலும், ஆணவக் கொலைகள் தொடர்ந்து நடப்பது, அது சட்டத்தின் பலவீனம் அல்ல; சமூகத்தின் பார்வையில் உள்ள நோயே காரணம். பிறப்பால் யாரும் உயர்ந்தோ தாழ்ந்தோ இல்லை என்பதைப் புரிந்து கொள்வதே உண்மையான கல்வி. சட்டம் தடுத்தாலும் சமூகம் விழிக்க வேண்டும்.

சா.முஹம்மது ஹுசைன், அறந்தாங்கி.

தொடர் விழிப்புணர்வு

ஆணவக் கொலைகளை சட்டத்தால் மட்டும் தடுக்க முடியாது. மக்களிடம் ஏற்படும் மனமாற்றமே ஆணவக் கொலைகளைத் தடுக்கும். அதே நேரத்தில், சட்டமும் அவசியம். மேலும், அது தொடர்பாக விழிப்புணர்வையும் ஏற்படுத்த முடிகிறது. இந்திய அரசமைப்பின் முகப்புரை, அடிப்படை உரிமைகள் மற்றும் அடிப்படைக் கடமைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

அவ்வாறு மேற்கொள்ளும் விழிப்புணர்வு நடைமுறைகள் ஒரு தொடர் ஓட்டம் போன்று இருக்க வேண்டும். இந்திய அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்புகளில் ஒன்றான "மனிதம்' வளர்க்கப்படுதல் அவசியம்.

வ.லோ. சந்தோஷ், ஈரோடு.

மனம் விட்டுப் பேசவும்

ஆணவக் கொலைகளை சட்டத்தால் தடுக்க முடியுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. தனி மனிதன் திருந்தாதவரை இப்படியான தவறுகள் குறைய வாய்ப்பே இல்லை. சின்ன வயதில் இருந்தே தனிமனித ஒழுக்கத்தையும், அனைவரும் சமமென்ற சமூக நீதியையும் கற்றுத்தர வேண்டும். பிள்ளைகளிடம் மனம் விட்டுப் பேச வேண்டும். ஜாதி, மதம் பார்க்காமல் பிள்ளைகளுக்கு திருமணம் செய்தவர்களின் வாழ்க்கையும் சிறப்பாகவே அமைந்துள்ளது. ஜாதி தலைவர்களில் பலரும் கலப்புத் திருமணம் செய்தவர்களே. ஜாதியத் தலைவர்களின் இரட்டை வேடத்தைத் தெரிந்துகொள்ளுதல் அவசியம்.

ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

சட்டமே காவல்

குடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை என்கிற சட்டம் வந்த பிறகு, பெண்களும் தங்கள் சகோதரருக்கு சமமாக சொத்தில் உரிமை பெற முடிகிறது. சமூக உணர்வாளர்களின் அறிவுறுத்தலை ஏற்று, ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முன்வந்து இருப்பது வரவேற்கத்தக்கது. தனிச் சட்டம் நடைமுறைக்கு வரும் போது, வன்முறையாளர்கள அச்சம் கொள்வர். கல்வியில் வளர்ச்சி காணப்படுவதால் மிரட்டல் வரும்போதே, சட்டத்தின் துணை கொண்டு, காவல் துறையின் பாதுகாப்பில், இணையர்கள் திருமணம் செய்து கொள்ள முடியும்.

ஆ.லியோன், மறைமலைநகர்.

மனமாற்றம் தேவை

மக்கள் மனங்களில் மாற்றம் உருவானால் மட்டுமே ஆணவக் கொலைகளைத் தடுக்க முடியும். ஆணவக் கொலைகளை சட்டத்தால் மட்டுமே தடுத்து விடுவதாக இருந்தால், அவை ஏன் நடைபெறுகின்றன. மக்கள் சிந்தித்து செயல்பட கற்றுக்கொள்ள வேண்டும். மனிதர்களாக பிறந்த யாரையும் பழிவாங்கக் கூடாது. ஆணவக் கொலைக்கு அடிப்படைக் காரணம் காதல் திருமணங்கள். அதுவும் இரு வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டால் ஆணவக் கொலைகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. சட்டத்தின் மூலம் ஆணவக் கொலைகளை முழுமையாக தடுத்து விட இயலாத சூழலே நிலவுகிறது.

மா. பழனி, கூத்தப்பாடி.

முழுவதுமாக முடியாது

ஆணவக் கொலைகள் நிகழ்வதற்குக் காரணமே வெறுப்பு, பழி வாங்குதல், குரோதம் போன்றவைதான். இவற்றைத் தடுக்க சட்டம், காவல் நிலையம் என்று ஏற்கெனவே இருந்தாலும் மக்கள் அவற்றை மதிப்பதில்லை.

ஆணவக் கொலைகளைச் சட்டத்தால் தடுக்க முடியும் என்று நினைப்பது மேற்கே சூரியன் உதிப்பது போலதான். இப்போது நடைமுறையில் உள்ள சட்டத்தை கடுமையாக்கினால் ஓரளவு தடுக்கலாம்; முழுவதுமாக நிறுத்த முடியாது.

உஷா முத்துராமன், மதுரை.

கூடுதல் அபராதம்

கலப்புத் திருமணம் செய்வோருக்கு வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்பு மற்றும் பாதுகாப்பு போன்ற அம்சங்கள் சட்டத்தில் இடம்பெற்றால் ஆணவக் கொலைகள் குறைவதற்கு வாய்ப்புள்ளது. ஆணவக் கொலையில் ஈடுபட்டோரிடமிருந்து பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் வரை நிவாரணம் பெற்றுத் தர வேண்டும். இதையும் தாண்டி ஜாதிகளை மறந்து நடைபெறும் திருமணத்தை இரு வீட்டாரும் அனுமதிக்கும் பட்சத்தில் ஆணவத்தின் கவனம் அமைதியாக மாறிவிடக் கூடும்!

எஸ்.எல்.ஜார்ஜ் அருண், தூத்துக்குடி.

சட்டத்தால் மட்டுமே முடியாது

ஜாதி, மத துவேஷங்களையும் தாக்குதல்களையும் ஆணவக் கொலைகளையும் சட்டத்தால் மட்டும் தடுத்துவிட முடியாது. மக்கள் மனமாற்றம் ஒன்றே வழி. தற்போது அந்த மாற்றம் வேகமாக நடந்து வருகிறது. பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் திருமணத்துக்கு வரன் பார்ப்பவர்கள் எனது மகனுக்கு வேறு ஜாதியாக இருந்தாலும், நல்ல பெண்ணாகப் பாருங்கள் என்று கூறத் தொடங்கிவிட்டனர். இந்த மன மாற்றம் நீடித்தால் ஜாதி பாகுபாடு குறையும். நாட்டில் ஆணவக் கொலைகள் அறவே மறையும்.

வளர்மதி ஆசைத்தம்பி, தஞ்சாவூர்.

கல்வியால் முடியும்

சட்டத்தால் ஓரளவு கட்டுப்படுத்த முடியுமே தவிர முழுமையாக தடுக்க முடியாது. ஆணவப் படுகொலைகளின் அடிப்படையே கண்மூடித்தனமான ஜாதிய உணர்வுதான். சமூகத்துக்கு கல்வி புகட்டுவதும், தொடர்ச்சியாக அறிவை ஊட்டுவதும் மட்டுமே இதற்கான நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச் சட்டத்தை இயற்றி அதுகுறித்த விழிப்புணர்வை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். மொத்தத்தில் மனமாற்றம் ஒன்றே நிரந்தர தீர்வு.

க. சக்திவேல், கும்பகோணம்.

வேகத் தடைகள்

வருமுன் காப்பது சிறந்தது என்றாலும், கடுமையான சட்டங்கள் தேவை என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. அதன்மூலம் இந்தத் தீவினைகளைத் தடுக்க இயலும் என்பதை நமக்கு முந்தைய படிப்பினைகள் அறிவுறுத்துகின்றன. வரதட்சிணைக் கொடுமைகள் இன்று ஓரளவு கட்டுப்பாட்டில் இருப்பதற்கு சட்டங்களே காரணம். அதி வேகமாகச் செல்லும் வாகனங்களின் வேகங்களை கட்டுப்படுத்துவதில் வேகத்தடைகள் எவ்வாறு செயல்படுகின்றனவோ, அதேபோல் சட்டங்கள் செயலாற்றும்.

சோ.உலகநாதன், ராமேசுவரம்.

பாதுகாப்பும், சமரசமும்

கலப்புத் திருமணம் செய்யும் காதல் ஜோடிகள் ஆணவப் படுகொலைக்கு உள்ளாவது சில ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றன. அரசு சட்டம் இயற்றினாலும், அதில் உள்ள சில ஓட்டைகளைப் பயன்படுத்தி வெளியே வந்து விடுவார்கள். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்; சட்டம் சரியான முறையில் அமல்படுத்த வேண்டும்; கலப்புத்

திருமணம் செய்வோருக்கு முடிந்த அளவு பாதுகாப்பு கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்; மேலும் இரு வீட்டாரும் சமரசம் ஆகும் வழிமுறைகளையும் காண வேண்டும்.

க.அருச்சுனன், செங்கல்பட்டு.

சீர்திருத்தப் பரப்புரைகள்

ஆணவக் கொலைகள் நிகழும் போது அது தொடர்பான வழக்குகள் அனைத்திலும் கடுமையான பிரிவுகள் இருந்தாலும், குற்றவாளிகள் எப்படியாவது வெளியே வந்து விடுகின்றனர். சட்டத்தின் மூலம் தடுக்க ஒரு புறம் முயற்சிகள் மேற்கொண்டாலும் சமுதாயத்தில் ஜாதி வேற்றுமை, ஆதிக்க மனப்பான்மைக்கு எதிராக அனைவரும் பேசுவதோடு சீர்திருத்த பரப்புரைகளையும் முன்னெடுக்க முயற்சி எடுக்க வேண்டும். பள்ளிகளிலேயே ஜாதி அடையாளங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டால்தான் சட்டத்தின் நோக்கம் நிச்சயம் நிறைவேறும்.

என்.வி.சீனிவாசன், புது பெருங்களத்தூர்.

அதிகபட்ச தண்டனை

ஆணவக் கொலைகளுக்கு சட்டத்தால் மட்டுமே தீர்வு காண இயலாது. அதையும் பிற கொலைக் குற்றங்களைப் போல விசாரித்து அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை வழங்க வேண்டும். மேலும் ஜாதி, மத பிரிவினைகளைத் தூண்டும்படி பேசும் ஜாதித் தலைவர்களைக் கைது செய்து தக்க நடவடிக்கை எடுத்தாலே ஆணவக் கொலைகளை ஒழித்து விடலாம். தனது மதத்துக்காக, ஜாதிக்காக தனது வாரிசு என்றும் பார்க்காமல் கொன்றார் என்று பெருமை பேசும் சமூகம் முழு முதல் காரணம்.

ஆ.ஜூடு ஜெப்ரிராஜ், கோவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com