ஒரே தராசில்...
குற்றச் செயல்களில் சிக்கி சிறையில் இருந்தால் பிரதமர், அமைச்சர்களின் பதவியைப் பறிக்கும் மசோதா வரவேற்கத்தக்கதே. சாதாரண மனிதன் குற்றச் செயலில் ஈடுபட்டு தண்டனை பெற்றால் அவருக்கு அரசு வேலை கிடையாது. அரசு ஊழியர் மீது குற்றம் சுமத்தப்பட்டால் முதலில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார். பின்னர், தண்டனை உறுதியானால் அவர் பணிநீக்கம் செய்யப்படுவார். இந்தச் சட்டத்தின்படி அரசு ஊழியர்களும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருப்பவர்களும் சமமானவர்களே.
க.சிவக்குமார், பி.அக்ராகரம்.
ஆட்சி செய்யும் இடமல்ல சிறை
பிரதமரோ அமைச்சர்களோ யாராக இருந்தாலும் அரசுப் பதவி வகிக்கும் போது, குற்றச் செயல்களில் சிக்கி சிறைக்குச் சென்றால், அவர் அந்தப் பதவிக்கு தகுதியில்லாதவர் என்றுதான் பொருள். நாட்டை ஆளும் இடமாக சிறையை மாற்றுவது ஏற்கத்தக்கதல்ல. சிறை என்பது குற்றவாளிகளுக்கு உரியது. அதனால், இந்த மசோதா பாராட்டுக்குரியது. இந்த மசோதா அரியணையின் புனிதத்தைப் பறைசாற்றுவதாக அமையும் வகையில் இருப்பதால் காலத்தின் தேவையாகும்.
சின்னஞ்சிறு கோபு, சிகாகோ.
இருப்பவையே போதும்
இது அராஜக போக்கு எனப் புலப்படும். அவசரகால நிலைக்கு ஒப்பானது. குண்டர் தடுப்புச் சட்டம் போன்று தமக்கு வேண்டாதவர் யாரையும் வீழ்த்திவிடலாம். மாற்றாரை சரணாகதி அடையச் செய்வதற்கு இதைவிட மாற்று இல்லை. கத்தியைக் கையாளத் தெரியாமல் பயன்படுத்தினால், அது அதைப் பயன்படுத்தியவரையே பதம் பார்க்கும். எனவே, இருக்கும் சட்டங்களே போதும். இல்லையேல், வலை விரித்தவர்களையே அது காவு கொண்டுவிடும். வேண்டாதவரைத் தண்டித்தப் பிறகு நிரபராதி என்று சொல்வதில் என்ன பயன்?
எஸ்.வேணுகோபால், சென்னை.
நியாயமானதுதான்; ஆனால்...
குற்றச் செயல்களில் சிக்கி சிறையில் இருந்தால் பிரதமர், அமைச்சர்களின் பதவியைப் பறிக்கும் மசோதாவை மேலோட்டமாகப் பார்த்தால் அவசியமானதாகவே தோன்றும். ஆனால், இன்றைய அரசியலில் அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, புலனாய்வு அமைப்புகள் எதிர்க்கட்சியினரைக் குறிவைத்து வழக்குப் பதிந்து விசாரணையின்றி பல மாதங்கள் சிறைவைப்பதும் வாடிக்கையான நடவடிக்கை என்பதே நிதர்சனமான உண்மை. இன்னும் சில வழக்குகள் எதிர்க்கட்சியினர் மீது பதிவு செய்யப்பட்டு பல ஆண்டுகள் கிடப்பில் போடப்படும்.
பொன் மனோகரன், திருநகர்.
பாராட்டுகள்
அமைச்சர் பதவி என்பது அவர்களுக்குப் பெருமை சேர்ப்பது என்று தெரியாமல் குற்றச் செயலில் சிக்கி சிறைக்குச் செல்வது அவர்களுக்கு அவமானம் இல்லை. அதனால், அவர்களின் அமைச்சர் பதவியைப் பறிக்கும் ஓர் அருமையான மசோதாவைக் கொண்டு வந்தது பாராட்டுக்கு உரியது. தங்களது அமைச்சர் பதவி பறிபோகும் என, அந்த மசோதா குறித்த எண்ணம் வந்தாலே குற்றம் செய்யும் உணர்வே வராது. இப்படியெல்லாம் அமைச்சர்களைப் பயமுறுத்தி குற்றம் புரியாமல் செய்ய வேண்டி உள்ளதே என்பதுதான் வருந்தத்தக்கது.
நந்தினி கிருஷ்ணன், மும்பை.
தார்மிக அரசியல்
ஜனநாயக நாட்டில் அரசமைப்பு எவ்வளவு முக்கியமோ, அதேபோல் தார்மிக அரசியல் மரபுகளும் முக்கியம். சொல்லப்போனால் தார்மிக அரசியல் மரபுகள்தான் அரசமைப்புக்கு வலிமையையும் ஆரோக்கியத்தையும் தரும். தன்னலத்தை ஒதுக்கி பொது நலத்துக்கு வலுவூட்டுவதே தார்மிக மரபுகளின் அடிப்படை. குற்றம் புரிந்தவர்கள் தலைவர்களாகி பதவி பெற்று, செய்த குற்றத்துக்குத் தண்டனையும் பெற்று சிறை சென்றாலும் பதவிகளில் தொடர்வது என்ற நிலை மிகவும் அசிங்கமானது. பிரதமர் மோடி அரசு பரிந்துரைத்துள்ள இந்த மசோதா நியாயமானது.
அமிர்தநேயன், உடுமலைப்பேட்டை.
தேவை இல்லை
குற்றச் செயல்களில் சிக்கி சிறையில் இருந்தால் பிரதமர், அமைச்சர்களின் பதவியைப் பறிக்கும் மசோதா குறித்து மத்திய பாஜக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளின் பின்புலத்தில் உள்நோக்கம் இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மை செய்வதுபோல் தோன்றும்; ஆனால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மீது மட்டுமே அந்தச் சட்டங்கள் பாயும். ஏற்கெனவே இருக்கின்ற சட்டங்களை பாரபட்சம் பார்க்காமல் செயல்படுத்தினாலே போதும்; புதிய சட்டங்கள் தேவையில்லை.
உதயா ஆதிமூலம், திருப்போரூர்.
தேவையான ஒன்று
அரசியலில் காணப்படும் குற்றங்களும் ஊழலும் மக்களாட்சியின் அவலத்தையும் வெளிப்படுத்தி விடுகின்றன. குற்றச் செயல்களில் சிக்கி சிறைக்குச் சென்றவர்கள் பலர் மக்கள் பிரதிநிதிகளாகவும் அமைச்சர்களாவும் முதல்வர்களாகவும் வலம்வரும் நிலை இருப்பதால் அரசியலை கேலிக்கூத்தாகவே பலரும் எண்ணி வந்தனர். பதவிகளில் இருப்பவர்கள் குற்றமற்றவர்களாக இருப்பதே அரசியலுக்கு அழகு. ஆட்சியாளர்கள் முடிந்தவரையிலும் சமூகத்துக்கு முன்மாதிரியாக இருப்பதே நலம் பயக்கும்.
முனைவர் வீ.வேணுகுமார், கண்ணமங்கலம்.
அச்சம் நியாயமானதே...
எதிர்க்கட்சிகளை அடக்குவதற்கு இந்த மசோதாவை ஆளுங்கட்சி தவறாகப் பயன்படுத்தக்கூடும் என எதிர்க்கட்சியினர் அச்சப்படுவதை அலட்சியப்படுத்த முடியாது. ஊழல் வழக்குகளில் தொடர்புடைய ஒருவர், தான் இருந்த கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்ததும் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளிலிருந்து விடுபட்ட நிகழ்வுகளும் நிகழ்ந்திருக்கின்றன. எனவே, இது குறித்து தீவிரமாகப் பரிசீலித்து எதிர்க்கட்சிகளின் சம்மதத்தோடு இந்த மசோதாவை நிறைவேற்ற அரசு முயல வேண்டும்.
க.ரவீந்திரன், ஈரோடு.
துஷ்பிரயோகத்துக்கு வாய்ப்பு
இந்தப் புதிய மசோதாவின்படி பிரதமர், முதல்வர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் ஆகியோர் ஐந்து ஆண்டுகள் தண்டனை வழங்கக்கூடிய குற்ற வழக்குகளில் சிக்கி நீதிமன்றத்தால் தண்டனை பெற்று 30 நாள்கள் சிறையில் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் பதவி விலக வேண்டும் அல்லது பதவிநீக்கம் செய்யப்படுவார்கள் அல்லது 31-ஆவது நாள் பதவி காலாவதியாகிவிடும். இந்த மசோதா ஆளும் அரசுகளால் அதிகார துஷ்பிரயோகம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது என எதிர்க்கட்சிகள் கூறுவதைப் புறம்தள்ளிவிட முடியாது.
ரமிலா ராஜேந்திரன், திருப்பரங்குன்றம்.
லோக்பால் எங்கே?
இந்த மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது உயர் நிலையில் ஊழலை வேரறுக்கவே என்கிறது மத்திய அரசு. ஊழல் ஒழிப்பு என்பது ஊராட்சி உறுப்பினரில் தொடங்கி மக்கள் பிரதிநிதிகள் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஊழலை ஒழிப்பதற்காகவே "லோக்பால்' சட்டத் திருத்தத்தைக் கொண்டுவர வேண்டும் என்று போராடியவர்கள் இன்று அதை மறந்துவிட்டு புதிய மசோதாவை அறிமுகம் செய்திருப்பது உள்நோக்கம் கொண்டது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டில் நியாயம் இருக்கிறது.
குமரி கிருஷ்ணன், கன்னியாகுமரி.
மூக்குக் கயிறு
சுதந்திர இந்தியாவின் பெரும்பாலான முதல் தலைமுறை தலைவர்கள் அரசியல் அறநெறி, தார்மிகப் பொறுப்புணர்வுடன் செயல்பட்டதால் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருந்ததோ இல்லையோ விசாரணையைச் சந்தித்து, தங்களது நேர்மை நிரூபிக்கப்படும்வரை பதவியிலிருந்தும் அதிகாரத்திலிருந்தும் ஒதுங்கி இருந்தனர். பதவியும் பணமும், அதிகார மமதையுமே இன்றைய அரசியல் தலைவர்களின் முகமாக மாறிப்போன பிறகு அவர்களைக் கட்டுப்படுத்தும் மூக்குக் கயிறாக வந்திருக்கும் பதவிப் பறிப்பு மசோதா என்பது நிச்சயம் தேவையான ஒன்று.
வெ.க.சந்திரசேகரன், வெள்ளக் கிணறு.
அரசுப் பணியாளர்களே...
இந்தியாவில் குற்றச் செயல்களில் ஈடுபடும் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆட்சியாளர்களே
குற்றவாளிகளாக இருப்பது ஏற்புடையதல்ல. குற்றச் செயல்களில் சிக்கி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டாலே அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர். ஆட்சியாளர்களுக்கு ஒரு நியாயம்; பணியாளர்களுக்கு ஒரு நியாயம் என்ற நிலைப்பாடு ஏற்புடையதல்ல. எனவே பிரதமர், அமைச்சர்களின் பதவிப் பறிப்பு மசோதா வரவேற்கத்தக்கதே!
பா.சிதம்பரநாதன், கருவேலன்குளம்.
தட்டையான வாதம்
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளைப் பயன்படுத்தி எந்தவித விசாரணையுமின்றி 30 நாள்கள் சிறையிலடைத்து மிக எளிதாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களின் பதவியைப் பறித்துவிட இந்த மசோதா வழிவகை செய்கிறது.
குற்றவாளிகள்தானே அச்சப்பட வேண்டும் என்று சிலர் வாதிடுவது நடைமுறை எதார்த்தம் புரியாதவர்களின் தட்டையான வாதம். எதிர்க்கட்சி அமைச்சர்களில் பலர் மாதக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டு, விசாரணை முடிவில் குற்றமற்றவர்கள் என விடுதலையான சமீபத்திய உதாரணங்கள் ஏராளம் உண்டு.
க.சக்திவேல், கும்பகோணம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.