த.வெ.க. தலைவர் விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறுமா? என்பது குறித்து...வாசகர்களிடம் இருந்து வந்த கருத்துகளில் சில...

த.வெ.க. தலைவர் விஜய்யைப் பார்க்க கூடும் கூட்டம் ஒரு திரை நட்சத்திரத்தைப் பார்க்க ஆவலுடன் கூடும் கூட்டமாகத்தான் தெரிகிறது.
Published on
Updated on
3 min read

கேள்விக்குறிதான்

த.வெ.க. தலைவர் விஜய்யைப் பார்க்க கூடும் கூட்டம் ஒரு திரை நட்சத்திரத்தைப் பார்க்க ஆவலுடன் கூடும் கூட்டமாகத்தான் தெரிகிறது. அவை வாக்குகளாக மாறுமா என்பது கேள்விக்குறியே. முறைப்படுத்தப்படாத, அரசியல் முதிர்ச்சியற்ற, கட்டுக்கடங்காத, பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவிக்கும் கூட்டத்தை தேர்தலின்போது வாக்குகளாக மாற்றுவது அவர்களை அரசியல்படுத்துவதில்தான் உள்ளது. இது தானா சேர்ந்த கூட்டமாகவே இருந்தாலும், விஜய் தன்னை எம்.ஜி.ஆராக கற்பனை செய்துகொள்ளக் கூடாது.

பா.சிதம்பரநாதன், கருவேலன்குளம்.

வென்றவர்கள் குறைவே...

கூடும் கூட்டம் வாக்குகளாக மாறும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், கூட்டத்தில் அதிகம் இருப்பவர்கள் இளைஞர்கள், ரசிகர்களாக உள்ளனர். நடுத்தர வயதினரையும், முதியோர்களையும் பெரும்பாலும் கூட்டத்தில் காணமுடியவில்லை. த.வெ.க. தலைவர் விஜய்யின் ரசிகர்கள் வேட்பாளர்களாகப் போட்டியிடும் நிலையில், கிடைக்கும் வாக்குகள் பெரிய அளவில் மாறுதல் இருக்காது. அதே சமயம், விஜய் ரசிகர்களின் வாக்குகள் வெற்றி வாய்ப்பை ஏற்படுத்துமா என்பது கேள்விக்குறியே. நடிகராக இருந்து அரசியலில் வெற்றி பெற்றவர்கள் குறைவானவர்களே.

ம.ஆனந்தி, சேலம்.

மாற்றத்தை விரும்புகிறார்கள்

கடந்த 58 ஆண்டுகால திராவிட ஆட்சிகள் குறித்த அனுபவமோ, ஆர்வமோ இளைய தலைமுறை (புதிய) வாக்காளர்களுக்குக் கிடையாது. அவர்களுக்குத் தெரிந்த தலைவர்கள் சீமானும், விஜய்யும்தான். தொடரும் திராவிட ஆட்சிகளால் சலித்துப்போன வாக்காளர்களும் மாற்றத்தை விரும்புகிறார்கள். இத்தகையவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத்தான் விஜய் திகழ்கிறார். அவரது மாநாட்டுக்கு தானாக சேர்ந்த கூட்டமே இதற்கு சாட்சியாகும். விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது என்பது பாதிக்கப்படும் கட்சிகள் பொறாமையால் சொல்லும் பொய்யாகும்.

ஜ.அ.யாழினி பர்வதம், சென்னை.

உத்தரவாதமில்லை

த.வெ.க. தலைவர் விஜய்க்கு கூடும் கூட்டம் முழுமையும் வாக்குகளாக மாறும் என்பதில் எந்தவித உத்தரவாதமும் இல்லை. அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே எம்ஜிஆர், விஜயகாந்த் போன்றோர் தங்கள் வீட்டில் ஏழைகளுக்கு உணவளித்தும், தேவையான உதவிகளையும் செய்து வந்தனர்.

அப்படி அவர்கள் செய்த தான-தர்ம செயல்கள், ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் அவர்களுக்கான வாக்கு வங்கியாக மாறியது. ஆனால், விஜய் தனது திரைப்பட வெளிச்சத்தை மட்டுமே வாக்கு வங்கியின் மூலதனமாக மாற்ற நினைக்கிறார்.

அ.பட்டவராயன், திருச்செந்தூர்.

எளிதல்ல

த.வெ.க. தலைவர் விஜய்க்கு கூட்டம் கூடுவது உண்மைதான். தமிழகத்தில் பல்வேறு திரை நட்சத்திரங்கள் கட்சி தொடங்கி மாநாடுகள் நடத்திய வரலாறு உண்டு. ஆயினும்,

அரசியலில் தடம் பதித்த திரை நட்சத்திரங்கள் அரிதினும் அரிது. பலமான நெடிய அரசியல் பின்னணியுடன் முழுநேர அரசியலில் குதித்தவர்களாக இருந்தாலும், தேர்தலில் பிரகாசிக்க முடியவில்லை. திரையில் மட்டுமே பார்த்த நடிகர், நடிகைகளை நேரில் காண பெரும் கூட்டம் கூடுவது இயல்பானதே. அந்தக் கூட்டம் தேர்தலில் வாக்குகளாக மாறுவது எளிதல்ல.

முனைவர் வீ.வேணுகுமார், கண்ணமங்கலம்.

முதல் முறை வாக்காளர்கள்...

விஜய்க்கு முதல்முறை வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வாய்ப்புள்ளது. ஆனால், அவர் மிகப் பெரிய வெற்றியை பெற முடியாது. கூடும் கூட்டம் முழுவதும் வாக்குகளாக மாறுமா என்பது விஜய்யின் செயல்பாடுகளைப் பொருத்தே முடிவாகும். ஏனெனில், இன்று இளம் வாக்காளர்கள் பெரும்பாலானோர் ஜாதிய கட்சிகளில்தான் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் த.வெ.க.வுக்கு தங்களது வாக்குகளைப் பதிவு செய்வார்களா என்பது மிகப் பெரிய கேள்வி.

அ.குணசேகரன், புவனகிரி.

சிறிது காலமாகும்

திரைப்படக் கவர்ச்சியால் வந்த ஈர்ப்பு, அரசியல் செல்வாக்காக பரிணமித்து வாக்குகளாக மாற சிறிது காலம் பிடிக்கும். தெளிவான கொள்கைகள், செயல் திட்டங்கள், மாற்று யோசனைகள் ஆகியவற்றை விஜய் முன்வைக்க வேண்டும். மக்களுக்கு த.வெ.க. என்ன செய்யப் போகிறது என்பதை விளக்கிச் சொல்ல வேண்டும். திரைப்படத் துறையில் இருந்து அரசியலுக்குள் நுழைந்து, வெற்றி பெறாமல் போன எத்தனையோ நடிகர்களைப் பார்த்திருக்கிறோம். விஜய்யின் வெற்றி குறித்து காலம்தான் பதில் சொல்லும்.

க.மா.க.விவேகானந்தம், அப்பன்திருப்பதி.

தேர்தலில்தான் தெரியும்

திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகளுக்கு அடிப்படைக் கட்டமைப்பு பலமாக உள்ளது. திமுகவில் முன்னணித் தலைவராக இருந்து வெளியேறியவர் எம்.ஜி.ஆர்.; அவருடன் கட்சித் தொண்டர்களும் வெளியேறியதால் புதிதாக கட்டமைப்பை ஏற்படுத்த அவருக்குத் தேவை ஏற்படவில்லை. சீமான் தேர்தலில் 8% வாக்குகள் பெற்றது தொடர் முயற்சியால்தான். விஜய்யின் ரசிகர்கள் இன்னும் ரசிகர்களாகவே உள்ளார்கள். அவர்கள் தொண்டர்களாக மாறும் போதுதான் வாக்கு உறுதி செய்யப்படும். விஜய் திரைப் பிரபலமாக இருப்பதால் கூட்டம் கூடுவது என்பது பெரிதல்ல.

ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

குறைத்து மதிப்பிடமுடியாது

தனது அபாரத் திறமையால் திரையுலகில் உச்சத்தைத் தொட்ட விஜய் அரசியலிலும் புகுந்து, ஏராளமான மக்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார் என்பதற்கு திருச்சி த.வெ.க. மாநாட்டுக்குக் கூடிய கூட்டமே சான்று. குறுகிய காலத்தில் பலம் வாய்ந்த திமுக, அதிமுக கட்சிகளுக்கு எதிராகப் பேசப்படுவது, த.வெ.க.வுக்கு மக்களிடையே பெருகிவரும் செல்வாக்கைக் காட்டுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ள நிலையில், விஜய்க்கு கூடும் கூட்டத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. பெரிய கட்சிகளுக்கு எதிரான வாக்குகளை த.வெ.க. பெறும் என்பதில் ஐயமில்லை.

கே.ராமநாதன், மதுரை.

வாக்காளர்கள் அல்ல!

எம்.ஜி.ஆர். தனிக் கட்சி தொடங்கி, தமிழகம் முழுவதும் பரப்புரைகள் மேற்கொண்டார். பெரும் திரளான மக்கள் மத்தியில் நடந்து சென்றே மேடையை நெருங்கினார். எனினும், பெரும் திரளாக வந்தவர்கள் எல்லோரும் அவருக்கே வாக்களித்தனர் எனக் கூற முடியாது. மேடைக்கு பாதுகாவலர்களுடன் செல்லும் விஜய் மக்கள் தலைவர் அல்ல; நடிகராக அரசியலில் இறங்கியுள்ள அவரையும், அலங்கார மேடைகளையும் காண வருகிற மக்கள் அனைவரும், அவரது கட்சிக்கு வாக்களிக்கும் வாக்காளர்கள் அல்ல.

ஆ. லியோன், மறைமலைநகர்.

சிரஞ்சீவிக்கு கூடிய கூட்டம்

பிரசாரத்தின் போது, கூடும் கூட்டத்தை வாக்குகளாக மாற்றும் வித்தையை விஜய் செய்தால் மட்டுமே அது சாத்தியமாகும். ஆந்திரத்தில் சிரஞ்சீவிக்கு கூடாத கூட்டமா? ஆனால், முடிவு அவருக்கு சாதகமாக இல்லை. எம்.ஜி.ஆருக்கு கூடிய கூட்டம் வாக்குகளாக மாறியது உண்மை. அவர் கட்சி தொடங்கும் முன்பாகவே அரசியலில் பலகாலம் பயணித்து மக்களைச் சந்தித்து இரண்டு முறை பேரவை உறுப்பினராக அனுபவம் பெற்றிருந்தார். விஜய் கூட்டத்தை வைத்து முக்கியக் கட்சிகளுக்கு எதிராக வாக்கு சேதாரத்தை மட்டுமே ஏற்படுத்துவார்.

செய்யது முகம்மது, மேலப்பாளையம்.

கனவாகவே அமையும்

விஜய் இரு மாநாடுகளை நடத்தி உள்ளார். அவை ரசிகர் பட்டாளத்துடன் மாபெரும் திரைப்பட விழாபோல்தான் நடைபெற்றன. இதில், தன் ரசிகர்களைக் கவர ஏற்கெனவே பல கட்சிகள் முன்னெடுத்த குடும்ப ஆட்சி எதிர்ப்பு, சநாதான ஒழிப்பு, சமூக நீதி போன்ற பழைய பல்லவியையே பாடியுள்ளார். ரசிகர்களின் வாக்குகள் அவருக்குக் கிடைக்கும். ஆனால், கூடும் கூட்டம் எல்லாம் வாக்குகளாக மாற வாய்ப்பு இல்லை. விஜய் தமிழக முதல்வர் என்பது கனவாகவே அமையும்.

க.அருச்சுனன், செங்கல்பட்டு.

தீர்மானிக்கும் சக்தி

விஜய்க்கு கூடும் கூட்டம் கணிசமான அளவு வாக்குகளாக மாறும். ஆனால், அது வெற்றிக்கோட்டை எட்டும் அளவில் போதுமானதாக இருக்காது. அரசியல் தெளிவும், புரிதலும் இல்லாத கூட்டத்தின் அதிகபட்ச எதிர்பார்ப்பு என்பது, தங்களின் ஆதர்ச நாயகனை நேரில் பார்த்துக் கொண்டாடுவது என்பதாகத்தான் இருக்க முடியும். அதைத்தாண்டி, கொள்கை தெளிவும், செயல் திட்டமும் கொண்ட ஒரு கூட்டம் மட்டுமே வாக்குகளாக முழுமையாக மாற முடியும். விஜய் கணிசமான வாக்குகளைப் பெற்று இந்தத் தேர்தலில் வெற்றி-தோல்வியை தீர்மானிக்கக் கூடிய சக்தியாக இருக்கவே வாய்ப்புள்ளது.

க.சக்திவேல், கும்பகோணம்.

தேர்தலில் தெரியும்

நடிப்புத் துறையின் உச்சத்திலிருக்கும்போதே மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் அரசியலுக்கு வந்துள்ள நடிகர் விஜய்யைப் பாராட்டலாம். தமிழக வெற்றிக் கழகம் என்று தன் கட்சிக்குப் பெயரிட்டு பிரம்மாண்டமாக இரண்டு மாநாடுகள் நடத்தியிருக்கிறார். அன்று முடியாட்சி என்பது வாள் வீச்சில்! இன்று குடியாட்சியோ தாள் வீச்சில் என்பதுபோல் போய்க்கொண்டிருக்கிறது. இதைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் விஜய்க்கு கூடிய கூட்டம் பார்வையளிக்கவா அல்லது வாக்களிக்கவா என்பது தேர்தலில் தெரியும்.

நா.ஜெயராமன், பரமக்குடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com