ஜிஎஸ்டி விகித மாற்றத்தால் பொருளாதாரம் வேகம் எடுக்குமா? என்பது குறித்து...வாசகர்களிடம் இருந்து வந்த கருத்துகளில் சில...

Published on
Updated on
3 min read

முன்னேற்றம் சாதகமாகும்

வரி விதிப்பு நான்கு அடுக்கிலிருந்து இரண்டடுக்காக மாற்றம் செய்யப்பட்டு ஏழை, எளியோர், வசதி படைத்தவர்கள், வர்த்தகர்கள் என அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜிஎஸ்டி 2.0 பொருளாதார முன்னேற்றத்துக்கு சாதகமாக அமையும். பொருள்கள் விலை குறைவதால் நுகர்வோர் எண்ணிக்கை அதிகரித்து, பணப்புழக்கமும் அதிகரிக்கும். உள்நாட்டுப் பொருள்களின் உற்பத்தி அதிகரித்ததுடன், வர்த்தகர்களுக்கு வரி செலுத்தும் வழிமுறைகள் எளிதாகும்.

கே.ராமநாதன், மதுரை.

தற்சார்பே தன்னிறைவு

மக்களின் வாங்கும் சக்தி குறைவாக உள்ளது. வேலைவாய்ப்பற்றோர், வேலை இழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தனியார் நிறுவனங்களில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் பெறுகிற ஓய்வூதியம் உணவுக்கே போதாது. ஜிஎஸ்டி விகித மாற்றத்தால், பொருள்களின் விற்பனை சிறிது அதிகரிக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக மகாத்மா காந்தி அறிவுறுத்திய கிராமிய தற்சார்பு பொருளாதாரமே தன்னிறைவைத் தரும்; அதுவே நிரந்தரத் தீர்வு.

ஆ.லியோன், மறைமலைநகர்.

பணம் மிச்சமாகும்

ஜிஎஸ்டி மாற்றத்தால் அத்தியாவசியப் பொருள்களான பால், மருந்துப் பொருள்களின் விலையில் மாற்றம் வரும்போது, அதைப் பயன்படுத்துபவர்களின் பொருளாதாரம் மேம்படும். இப்போது பலர் ஹோட்டல்களில் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். ஜிஎஸ்டி மாற்றத்தால் விலை குறைந்து விலையில் மாற்றம் அதிகமாக உள்ளதால், வாடிக்கையாளர்களின் பணம் மிச்சமாகிறது. இது அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்த உதவும்.

இப்படி எந்தக் கோணத்தில் பார்த்தாலும் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் வரும்.

உஷா முத்துராமன், மதுரை.

சற்றே ஆறுதல்...

ஜிஎஸ்டி என்ற முறையைக் கொண்டுவந்து பல்வேறு குறு, சிறு, நடுத்தரத் தொழில்களை முடக்கிய சம்பவங்களை நாம் மறந்துவிட்டோம். பேக்கரிக்கு சென்று வரி குறைத்ததற்கு நன்றி கூறச் சொல்வது ஒருபக்கம் இருக்கட்டும், வரியை கொண்டு வந்தது யார்? ஜிஎஸ்டி வரி விதிப்பால் தொழில் துறை பல்வேறு இன்னல்களைச் சந்தித்தது. தற்போது, இந்த வரி சீரமைப்பால் சற்று ஆறுதல்.

உத்தமன்ராசா, தென்காசி.

வரவேற்கத்தக்கது

ஜிஎஸ்டி சீரமைப்பு அல்லது குறைப்பு என்பது வரவேற்கத்தக்கது. ஜிஎஸ்டி குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் தேவை. வரி என்றாலே மக்கள் பயப்படும் வகையில் இல்லாமல் அதை ஏற்றுக் கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். சென்னிமலையில் தயாராகும் போர்வை காஷ்மீர் மக்களும், காஷ்மீரில் உற்பத்தி ஆகும் ஆப்பிளை ராமேசுவரம் மக்கள் வாங்கும் வகையிலும் ஜிஎஸ்டி இருக்க வேண்டும் . சீரமைப்பு என்பது ஒரு தாய் தன் குழந்தைக்கு உணவைப் பகிர்வதுபோல் இருக்க வேண்டும்.

சதாசிவம் கந்தசாமி, சத்தியமங்கலம்.

தேர்தலுக்குப் பிறகு தெரியும்

சுமார் எட்டு ஆண்டுகளாக ஜிஎஸ்டி மூலம் லாபம் அடைந்த பிறகு; வரி விதிப்பில் மாற்றம் செய்திருப்பது பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது போகப் போகத்தான் தெரியும். அதே நேரத்தில் பிகார் மற்றும் தமிழ்நாடு போன்ற சில மாநிலத் தேர்தல்களை முன்னிட்டு வரி விதிப்பில் மாற்றம் கொண்டு வரப்பட்டிருக்கிறதா என்பதும் ஆறு மாதங்களில் தெரிந்து விடும். மேலும், மாநில அரசுக்கு அளிக்க வேண்டியதிலிருந்து அதிகமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எம்.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்.

பொருளாதாரம் வேகமெடுக்கும்

ஜிஎஸ்டி விகித மாற்றத்தால் வர்த்தகத்தில் எழுச்சி ஏற்பட்டு பொருளாதாரம் வேகம் எடுக்கும். வாங்கும் சக்தி அதிகரிப்பதால் விற்பனை அதிகரிக்கும். ஜிஎஸ்டி வரிக் குறைப்பு அமலான முதல் நாளில் கார், ஏ.சி., டிவி மற்றும் வீட்டு உப யோகப் பொருள்களின் விற்பனை அதிகரித்துள்ளன. ஜிஎஸ்டி வரிக் குறைப்பால் நிறுவனங்களின் விற்பனை இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 % குறைந்ததால் மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து பொருளாதாரம் வேகமெடுக்கும்.

எஸ்.ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

சேமிப்பே ஸ்திரம்

ஜிஎஸ்டி சீர்திருத்தம் வெறும் விலை குறைப்பாக மட்டும் இல்லாமல் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் வழிவகுக்கும். நடுத்தர மக்களின் சேமிப்பு உயரும். இதனால், ஒட்டுமொத்த பொருளாதாரம் உத்வேகம் பெறும். அனைத்துப் பிரிவு மக்களுக்கும் நேரடியான பலனை அளிக்கும்; மக்களின் அன்றாடச் செலவுகள் பொதுவாகக் குறையும். இதனால், சேமிப்பு உயரும் நாட்டின் பொருளாதாரத்தின் தரம் உயர்வு பெறும். இந்தியப் பொருளாதாரத்தின் அஸ்திவாரமாக உள்ளது நமது மக்களின் சேமிப்பு பழக்கமே. அதுவே இதுவரை நமது பொருளாதாரத்தை ஸ்திரமாக வைத்துள்ளது.

க.அருச்சுனன், செங்கல்பட்டு.

திருப்பித் தருமா?

ஜிஎஸ்டி வரி விகித மாற்றத்தால் பொருளாதாரம் வேகம் எடுக்காது. ஏறிய விலை மீண்டும் குறைந்ததாக வரலாறு கிடையாது.

விவசாயம், தொழில் ஆகியவற்றின் வளர்ச்சியால்தான் பொருளாதாரம் உயரும். பேரவைத் தேர்தல்களில் பாஜக வெற்றிபெற நான்கடுக்கு ஜி.எஸ்.டி.யை நீக்கியுள்ளது. இது தேர்தலுக்காகத்தானே தவிர மக்களுக்காக அல்ல; பா.ஜ.க. அரசு ஏழு ஆண்டுகளில் நான்கு அடுக்கு ஜிஎஸ்டி மூலம் ரூ.55 லட்சம் கோடி வசூல் செய்ததை நடுத்தர ஏழை மக்களுக்கு திருப்பித் தர முடியமா?

இரா.கோவிந்தராஜன், சென்னை.

வாக்குகளை பெற்றுத் தரும்

ஜி.எஸ்.டி. விகித மாற்றம் என்றால் என்ன என்றே பலருக்கும் தெரியாத ஒன்றாக உள்ளது. இதற்கு முன்பு எவ்வளவு ஜி.எஸ்.டி. கொடுத்தோம் என்றே தெரியாது. கடையில் சொல்லும் விலையைக் கொடுத்து பொருள்களை வாங்கிக் கொண்டு செல்வார்கள். இப்போது, விலையில் மாற்றம் என்று தெரிந்தாலும், அது ஜிஎஸ்டி விகித மாற்றம்தான் என்று புரிந்து கொள்ளாத நிலையில் பலர் உள்ளனர். இதனால், இது பொருளாதாரத்தில் என்ன மாற்றத்தைக் கொண்டுவந்துவிடப் போகிறது? வாக்குகளுக்கு வழி கொடுக்கலாமே தவிர வேறொன்றுமில்லை.

நந்தினி கிருஷ்ணன், மும்பை.

புதிய வணிகங்கள்...

ஜிஎஸ்டி விகித மாற்றத்தால் பொருள்களின் விலை குறையும். மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும். வணிகங்களுக்கான வரிவிதிப்பு நடைமுறைகளை எளிதாக்கும். உற்பத்தி, சேவைகளில் கவனம் செலுத்த உதவும். புதிய வணிகங்களை ஊக்குவிக்கும். தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் மக்களிடையே பணப் புழக்கம் ஏற்பட்டு தாரளமாக செலவழிக்கத் தொடங்குவார்கள். மொத்தத்தில் ஜிஎஸ்டி வரி விகித குறைப்பு நுகர்வோரின் வாங்கும் சக்தியை அதிகரித்து பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் உதவும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை.

டி.ஆர்.பிரதாப் சந்திரன், மதுரை.

வாய்ப்பில்லை

ஜிஎஸ்டி விகித மாற்றத்தால் பொருளாதாரம் வேகம் எடுக்குமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். மக்கள் தேவை அதிகரித்தால் பொருள்களின் விலை உயர்ந்தாலும் விற்பனை அதிகமாகும்; பணப் புழக்கமும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. தங்கம் விலை ஏறினாலும் விற்பனையில் குறைவு இல்லை. மக்களின் தேவைக்கேற்பதான் பொருள்களின் விற்பனை கூடவும், குறையவும் செய்யும். வரி விகிதமாற்றத்தால் விலை குறைந்து விற்பனை அதிகரிப்பது, மக்களின் வாங்கும் திறனைப் பொருத்துத்தான் அமையும். ஜிஎஸ்டி விகித மாற்றம் காரணமாக அரசு எதிர்பார்க்கும் அளவுக்கு பொருளாதாரம் மேன்மையடைய வாயப்பில்லை.

கே.அனந்தநாராயணன், கன்னியாகுமரி.

சேமிப்பை மேம்படுத்தும்

8 ஆண்டுகளாக மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த வரிச் சுமையிலிருந்து மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட இந்த வரி சீர்திருத்தங்கள் உதவும். அதே நேரம் மக்களின் நுகர்வுக் கலாசாரம் அதிகரித்து பொருள்களை வாங்கிக் குவிக்கும் பழக்கமும் அதிகரிக்கும். கார்கள், இரு சக்கர வாகனங்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்டவற்றின் விலை கணிசமான அளவு குறைந்துள்ளது. மருந்துப் பொருள்கள், விவசாய உபகரணங்கள் உள்ளிட்டவற்றின் மீதான வரியும் குறைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்தச் சீர்திருத்தங்கள் மக்களின் செலவுத் திறனையும், சேமிப்புத் திறனையும் ஒருங்கே மேம்படுத்தும். அதேநேரத்தில் வரிக் குறைப்பை வணிகர்கள் வாடிக்கையாளர்களுக்கு முறையாக வழங்குகிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.

க.சக்திவேல், கும்பகோணம்.

மக்களுக்கு கிடைக்க...

நான்கடுக்கு ஜிஎஸ்டி விகிதத்தால் தொழில்கள் நசிந்து பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது எனும்போது, விகித மாற்றத்தால் பொருளாதாரம் உயரும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஜிஎஸ்டி சீர்திருத்தத்துக்குப் பிறகு ஏ.சி., குளிர்சாதனப் பெட்டி போன்ற பொருள்களின் விலை குறைந்து அதிகம் விற்பனையானதை செய்தியாகப் பார்க்கிறோம். ஜிஎஸ்டி விகிதத்தைவிட குறைவான லாபத்தில் வியாபாரம் செய்பவர்கள் அதன் பலனை மக்களுக்கு கொடுக்க மாட்டார்கள். இந்த ஜிஎஸ்டி மறுசீரமைப்பு பலன் மொத்தமாக பொதுமக்களை சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தி சேகர், பீர்க்கன்கரணை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com