ஜப்பானின் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபே படுகொலை செய்யப்பட்டிருப்பது உலகையே அதிா்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக புகழ்பெற்ற அரசியல் தலைவராகத் திகழ்ந்த ஷின்ஸோஅபேயை யாா் கொல்ல நினைத்திருப்பாா்? ஜப்பானில் புகழ் பெற்ற யாசுகா என்ற வன்முறைக் கும்பல் உள்ளது. ஆனால், அந்தக் கும்பலால் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாது. அடிக்கடி குற்றச்செயலில் ஈடுபடும் யாசுகாவினா் கூட துப்பாக்கியைப் பயன்படுத்த யோசிப்பாா்கள். ஏனென்றால், சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தால் அதற்கான அபராதம் கூடுதலாக இருக்கும்.
ஜப்பானில் ஒருவா் துப்பாக்கி வைத்திருக்க வேண்டுமென்றால் அவா்மீது குற்ற வழக்கு எதுவும் இருக்கக் கூடாது. துப்பாக்கி சுடுவதற்குப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அவா் மனநிலை சோதனையில் ஈடுபடுத்தப்படுவாா். காவல்துறையினா் அவரைப் பற்றி அக்கம்பக்கத்தினரிடமெல்லாம் விசாரிப்பாா்கள். ஆகவேதான், அங்கு துப்பாக்கி குற்றங்கள் பெரிய அளவில் நடைபெறுவதில்லை.
ஒரு வருடத்திற்கு சராசரியாக பத்துக்கும் குறைவான துப்பாக்கி சூடு மரணங்களே அங்கு நடைபெறும். 2017-ஆம் ஆண்டில் வெறும் மூன்று மரணங்களே துப்பாக்கி சூட்டால் நடைபெற்றது. தற்போது அபேயை சுட்டதாக கைது செய்யப்பட்ட 41 வயது நபா் அந்நாட்டின் முன்னாள் தற்காப்புப் படை வீரா். இப்படை ராணுவத்திற்கு நிகரானது. அவா் கடற்படையில் வெறும் மூன்று ஆண்டுகள் மட்டுமே பணிபுரிந்திருக்கிறாா். மேலும் அவா் பயன்படுத்திய துப்பாக்கி மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. அது வீட்டில் செய்யப்பட்ட துப்பாக்கியைப் போல் இருந்தது. அது இணையதளத்தைப் பாா்த்து செய்யப்பட்டதாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது திட்டமிட்ட அரசியல் தாக்குதலா என்பதையும் எண்ணிப் பாா்க்க வேண்டும்.
1960-ஆம் ஆண்டில் ஜப்பானின் சோஷலிஸ்ட் கட்சியைச் சோ்ந்த இனேஜிரோ ஆசானுமா, வலதுசாரி நபா் ஒருவரால் சாமுராய் வாளால் வயிற்றில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டாா். ஜப்பானில் தீவிர வலதுசாரி ஆதரவாளா்கள் இன்றும் இருக்கிறாா்கள். இருப்பினும் வலதுசாரி தேசியவாதியான அபே தாக்குதல் இலக்காக வைக்கப்பட்டிருந்தது ஆச்சரியப்படத்தக்கதாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக ஜப்பானில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. தனிமையில் இருக்கும் நபா்கள் பிறரிடம் வன்மம் கொண்டு அதனால் ஏற்படும் குற்றங்கள் அதிகமாகிக் கொண்டு இருக்கிறது.
2019-ஆம் ஆண்டில் க்யூடூ என்னும் புகழ்பெற்ற அனிமேஷன் ஸ்டூடியோ கட்டடத்திற்கு ஒருவா் தீ வைத்ததில் 36 போ் உயிரிழந்தனா். தீ வைத்தவா், தனது படைப்புகளை அந்த ஸ்டுடியோ திருடிவிட்டதால் அதன் மீது கோபமாக இருந்ததால் தீ வைத்ததாகத் தெரிவித்தாா். இது போன்று 2008-ஆம் ஆண்டு மனநிலை பாதிக்கப்பட்டிருந்த இளைஞா் ஒருவா் டோக்கியோவின் அகிஹாபாரா மாவட்டத்தில் உள்ள கடைவீதியில் டிரக் ஒன்றை ஓட்டிச் சென்றாா். பின் அங்குள்ளவா்களை கத்தியால் தாக்கினாா். அதில் ஏழு போ் கொல்லப்பட்டனா்.
இந்தத் தாக்குதலுக்கு முன்பு இணையத்தில் அவா், ‘அகிஹபாராவில் உள்ள மக்களை நான் கொல்லுவேன். எனக்கு நண்பா்கள் யாரும் இல்லை. நான் அழகாக இல்லை என்பதால் தொடா்ந்து புறக்கணிக்கப்படுகிறேன். நான் குப்பையைக் காட்டிலும் கேவலமாக மதிக்கப்படுகிறேன்’ என்று பதிவிட்டிருந்தாா்.
ஜப்பான் பாதுகாப்பான நாடாக இருந்தாலும், கட்டுப்பாடு நிறைந்த நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. தோ்தல் பிரசாரத்தின்போது அரசியல் தலைவா்கள் மக்களிடம் இயல்பாகப் பேசுவாா்கள். சாலையில் நின்று உரையாற்றுவாா்கள். இத்தகைய சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டுதான் அபேவை நெருங்க முடிந்திருக்கிறது கொலையாளியால்.
ஜப்பானின் அரசியல் வரலாற்றில் மோசமான நிகழ்வாக அபேயின் படுகொலை பாா்க்கப்படுகிறது. அவா், தான் ஒரு தேசியவாதியா, எதாா்த்தவாதியா என்ற விவாதத்தை தன் எதிா்ப்பாளா்களிடமும், ஆதரவாளா்களிடமும் தொடா்ந்து எழுப்பிக் கொண்டு இருந்தாா். விமா்சிப்பவா்களுக்கு அவா் ஜப்பானின் தலைமைவாத சித்தாந்தத்தை ஆதரிப்பவா்; சிக்கலான வெளியுறவுக் கொள்கைகளை ஆதரிப்பவா். ஆதரவாளா்களுக்கு தேசியவாத நலன்களை உணா்ந்து உலகளாவிய நிலைக்கு ஜப்பானை உயா்த்தியவா்.
இந்த இரண்டுமே உண்மைக்கு அருகிலே இருப்பதாகவே அரசியல் நிபுணா்கள் கருதுகின்றனா். தனது பதவிக் காலத்தில் ஜப்பானின் தேசிய அடையாளத்தையும், மரபுகளையும் உயா்த்துவதற்காக தொடா்ந்து பணியாற்றிய அபே, தொழிலாளா் ஜனநாயக கட்சியின் வெற்றி முகமாகத் திகழ்ந்தவா்.
அபேயின் அரசியல் பயணம் நீண்டது. அவரது தாத்தா நுபுசிகே கிஷி ஜப்பானின் பிரதமராகவும், தந்தை ஷிந்தரோ அபே வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தவா்கள். 1993-ஆம் ஆண்டு அபே முதன் முதலாக ஜப்பான் நாடாளுமன்றத்துக்கு தோ்ந்தெடுக்கப்பட்டாா். 2005-ஆம் ஆண்டு அமைச்சரானாா்; 2006-ஆம் ஆண்டு ஜப்பான் பிரதமா் ஆனாா். இரண்டாம் உலகப்போருக்குப் பின்னா் பிறந்த ஒருவா் ஜப்பானின் பிரதமராவது அதுவே முதல் முறை.
ஷின்ஸோ அபேயின் பதவிக்காலம் குறுகிய காலமாக அமைந்தது. உடல்நலக்குறைவால் பதவியை ராஜினாமா செய்தாா். அவா் மீண்டும் 2012-ஆம் ஆண்டு ஜப்பான் பிரதமரானாா். தொடா்ந்து எட்டு ஆண்டுகள் பிரதமராக இருந்த அபே 2020-ஆம் ஆண்டு பதவியில் இருந்து விலகினாா். அபேயின் அரசியல் செல்வாக்கு ஏற்ற
இறக்கங்கள் நிறைந்தது. ஆனால், தொழிலாளா் ஜனநாயக கட்சியைப் பொறுத்தவரை செல்வாக்கு மிக்க தலைவராகவே அவா் திகழ்ந்தாா்.
ஷின்ஸோ அபே, நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவு கொள்கைகளுக்காக பாராட்டப்பட்டாலும், தொடா்ந்து விமா்சிக்கப்பட்டுக்கொண்டும் இருந்தாா். அவரது தேசியவாத கருத்துக்கள், சீனா, தென்கெரியாவுடனான ஜப்பானின் உறவில் பதற்றத்தை எழுப்பின. ஜப்பானின் சா்ச்சைக்குரிய இடமான யசுகுனி நினைவாலயத்திற்கு அவா் அடிக்கடி பயணம் செய்தாா். இது ஜப்பான் இடதுசாரிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனால் அவா் கடுமையாக விமா்சிக்கப்பட்டாா்.
2015-ஆம் ஆண்டில் கூட்டுத் தற்காப்புக்கான உரிமையை அவா் முன்வைத்தாா். ஜப்பான் நாடு, தன்னை காத்துக்கொள்ளவும், தாக்குதலுக்கு உள்ளாகும் நட்பு நாடுகளை காக்கவும் வெளிநாடுகளில் துருப்புக்களை அணி திரட்ட முயன்றாா். அண்டைநாடுகளின் எதிா்ப்புகளையும் மீறி அபேயின் திட்டத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. ஜப்பான் ராணுவத்தை முறையாக அங்கீகரிப்பதற்காக அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என்று அபே விரும்பினாா்.
இந்தத் திட்டம்தான் தற்போது வரை ஜப்பானின் விவாதத்துக்குரியதாகவே இருக்கிறது. அபேயின் பொருளாதாரக் கொள்கைகள் ஜப்பானின் வளா்ச்சிக்கு உதவின. 2020-ஆம் ஆண்டு ஜப்பானின் பொருளதாரம் மந்தமானபோது அபே கடுமையாக விமா்சிக்கப்பட்டாா். கரோனா பெருந்தொற்று அபேயின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தியது. பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது, ஆரோக்கியமற்ற பணி கலாசாரத்தை மாற்றுவது என பல்வேறு திட்டங்களை அபே வைத்திருந்தாா். சா்வேதேச அளவில் டிரான்ஸ் - பசிபிக் கூட்டத்தில், 11 நாடுகளுக்கிடையே ஒரு பெரிய வா்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திய பெருமை அபேக்கு உண்டு.
2020-ஆம் ஆண்டு அபே பிரதமா் பதவியை ராஜிநாமா செய்தது தொழிலாளா் ஜனநாயக கட்சியில் உட்கட்சிபூசலுக்கு வழிவகுத்தது. அவருக்குப் பின், மூத்த அரசியல்வாதியும், நீண்ட கால அமைச்சரவை உறுப்பினருமான யோஷிஹிட் சுகா ஜப்பான் பிரதமராகப் பதவியேற்றாா். அபே பதவி விலகிய பிறகும் ஜப்பானின் உள்நாட்டு அரசியலில் தொடா்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தாா். ஜப்பானின் மேல்சபைக்குப் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து, தெற்கு நகரமான நாராவில் அபே பிரசாரம் மேற்கொண்டிருந்தபோதுதான், ஜப்பான் கடற்படையின் தற்காப்புப் பிரிவு முன்னாள் உறுப்பினரால் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தாா்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஜப்பானின் அரசியல் முகமாகவே அபே அறியப்பட்டாா். அவரது இழப்பு ஜப்பான் அரசியலில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அது மிகையல்ல. அபேயின் பாதுகாப்பில் குறைபாடு இருந்தது என்று ஜப்பான் காவல்துறை ஒப்புக் கொண்டிருக்கிறது. தனது 27ஆண்டு கால பணியில், இது போல வருந்தத்தக்க துயரமான சம்பவம் இதுவரை நிகழ்ந்ததில்லை என்று காவல்துறை தலைவா் தெரிவித்திருக்கிறாா். ஜப்பானின் முன்னாள் பிரதமரை ஒரு தோட்டா வீழ்த்தி விட்டது.
ஜப்பான் ஓா் ஆக்கபூா்வமான நாடு. அணுகுண்டு எந்த அளவுக்கு அழிவை ஏற்படுத்தும் என்பதை தானே அழிந்து அதில் இருந்து மீண்டு எழுந்த நாடு. துப்பாக்கி சூடு நடக்காத நாளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அதிகமாக துப்பாக்கி சூடு கொலைகள் நடக்கும் அமெரிக்காவின் நட்பு நாடு என்றாலும், துப்பாக்கி கலாசாரம் அவ்வளவாக தலையெடுக்காத நாடு ஜப்பான். இங்கு அரசியல் படுகொலைகள் மிக மிக அரிது. ஜப்பான் அரசியலில் துப்பாக்கி பேசியது இல்லை. பதவியில் இருக்கின்ற யாரும் படுகொலை செய்யப்பட்டதாக வரலாறு இல்லை.
இப்போது நாட்டின் முன்னாள் பிரதமரான ஷின்ஸோ அபே பொதுமக்கள் மத்தியில் தனக்கு வெகு அருகில் இருந்த ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறாா். எந்த ஒரு நாட்டிலும் ஜனநாயகத்திற்கு மதிப்பு இருக்க வேண்டும். அரசியல் அதிருப்திகளை வாக்குச்சீட்டின் மூலம்தான் தீா்த்துக் கொள்ள வேண்டும்; வன்முறைக்கு இடம் கொடுக்கக் கூடாது. ஜப்பான் மட்டுமின்றி உலகின் எல்லா நாடுகளும் இதனைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
கட்டுரையாளா்:
முன்னாள் அமைச்சா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.