குழந்தைகள் நாள்: நேருவும் குழந்தைகளும் 

நாளைய உலகை ஆளப் போகும் இன்றைய குழந்தைகளைக் கொண்டாடவும் அவர்களுக்குத் தேவையான கல்வி, உரிமைகளைப் பெற்றுத் தரவும் உலகம் முழுவதும் 'குழந்தைகள் நாள்' கொண்டாடப்படுகிறது.
குழந்தைகளுடன் ஜவாஹர்லால் நேரு.
குழந்தைகளுடன் ஜவாஹர்லால் நேரு.

நாளைய உலகை ஆளப் போகும் இன்றைய குழந்தைகளைக் கொண்டாடவும் அவர்களுக்குத் தேவையான கல்வி, உரிமைகளைப் பெற்றுத் தரவுமே உலகம் முழுவதும் 'குழந்தைகள் நாள்' கொண்டாடப்படுகிறது. 

1857 இல் அமெரிக்காவின் செல்சியாவில் ரெவரெண்ட் டாக்டர் சார்லஸ் லியோனர்ட் என்பவரால்தான் முதன்முதலில் குழந்தைகள் நாள் கொண்டாடப்பட்டது. 

1924 ஆம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற குழந்தைகள் நல மாநாட்டில் குழந்தைகளின் கல்வி மற்றும் உரிமைகளை வழங்கப் பல்வேறு நாடுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. குழந்தைகளின் நலனுக்காக எடுக்கப்பட்ட முதல் முன்னெடுப்பு இதுவே. 

இதையடுத்து, 1954 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவை, நவம்பர் 20 ஆம் தேதியைக் குழந்தைகள் நாளாக ஏற்றுக்கொண்டது. அப்போதிருந்து, 'உலக குழந்தைகள் நாள்' நவம்பர் 20 அன்றே கொண்டாடப்பட்டு வருகிறது.  

எனினும், ஒவ்வொரு நாடுகளுக்கும் குழந்தைகள் நாள் வேறுபடுகிறது. பெரும்பாலான நாடுகளில் ஜூன் 1 ஆம் தேதி குழந்தைகள் நாள் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவில் முதலில், நவம்பர் 20 ஆம் தேதியே குழந்தைகள் நாள் கொண்டாடப்பட்ட நிலையில், நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு வின் மறைவிற்குப் (1964) பிறகு அவரது பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் தேதி தான் குழந்தைகள் நாளாக அறிவிக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டு வருகிறது. 

நேருவும் குழந்தைகளும் 

'நவீன இந்தியாவின் சிற்பி' என்று அழைக்கப்படும் ஜவாஹர்லால் நேரு 1889 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் (தற்போது பிரயாக்ராஜ்) பிறந்தார். 

லண்டனில் சட்டம் பயின்று நாட்டு மக்களுக்காகப் பணியாற்ற வந்த நேரு பின்னர் மாபெரும் அரசியல் தலைவராக உருவெடுத்தார். 

சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றது முதல் 17 ஆண்டுகள் (1947-1964) பிரதமராக இருந்து நவீன இந்தியாவை உருவாக்கியது வரை அவரது பணிகள் மற்றும் சாதனைகள் ஏராளம். 

அந்த வகையில், நேரு குழந்தைகளின் மீது கொண்டிருந்த அன்பும், அவர்களின் வளர்ச்சிக்குப் பாடுபட்டதும் குறிப்பிடத்தக்கவை. 

கடும் பணிச் சூழலுக்கு இடையேயும் நேரு, குழந்தைகளிடம் உரையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். குழந்தைகள் அவரை 'நேரு மாமா' என்றே அழைத்தனர். அவரும் குழந்தையைப் போன்ற இளகிய மனம் கொண்டவர் என்றே கூறப்படுகிறது. 

அவர் குழந்தைகள் மீது கொண்டிருந்த அதீத அன்பின் காரணமாகவும், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் நலன், கல்வி மற்றும் மேம்பாட்டிற்காக அவர் தனது வாழ்நாளை அர்ப்பணித்ததைக் கௌரவிக்கும் பொருட்டும் அவரது மறைவுக்குப் பிறகு, அதாவது 1964 முதல் நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் நாள் கொண்டாடப்படுகிறது. 

'இன்றைய குழந்தைகள்தான் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள். அவர்களை வளர்க்கும் விதம்தான் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்' என்று குறிப்பிட்ட அவர், குழந்தைகளின் கல்விக்காக ஆயிரக்கணக்கான பள்ளிகளைக் கட்டியதுடன், ஊட்டச்சத்துக் குறைபாட்டை போக்கக்  குழந்தைகளுக்கு இலவசமாக பால் மற்றும் உணவு வழங்குதல் போன்ற முயற்சிகளையும் மேற்கொண்டார். 

குழந்தைகளின் கல்வி மற்றும் வளர்ச்சி குறித்தே அவரது பல திட்டங்கள் அமைந்திருந்தன. சினிமாவில் குழந்தைகளுக்கென பிரத்யேகமாக 1955 ஆம் ஆண்டு இந்திய குழந்தைகள் திரைப்படச் சங்கத்தை உருவாக்கினார். 

நேரு, தன்னுடைய மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள், குழந்தைகள் மீது அவர் கொண்டுள்ள அன்பை உலகிற்குக் காட்டின. இன்று வரையிலும் இறவாப்புகழுடன் நிலைத்திருக்கின்றன, குழந்தைகளால் மட்டுமின்றிப் பெரியவர்களாலும் படிக்கப்படுகின்றன. 

ஐந்தாண்டுத் திட்டங்களில் அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய ஆரம்பக் கல்வியை வழங்கும் உறுதிப்பாட்டை முன்வைத்தார். நாட்டில் தலைசிறந்து விளங்கும் எய்ம்ஸ், ஐஐடி மற்றும் ஐஐஎம் உள்ளிட்ட முக்கிய கல்வி நிறுவனங்கள் உருவாகக் காரணமாக இருந்தவர் நேரு. 

குழந்தைகளின் மீது அன்பு காட்டியதுடன் குழந்தைகளுக்குக் கல்வி எவ்வளவு முக்கியம் என்பதையும் நேரு பல வழிகளில் சுட்டிக்காட்டியுள்ளார். 

அந்த வகையில், நேருவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் குழந்தைகளின் நலன், கல்வி, வளர்ச்சியை உறுதிசெய்யும் பொருட்டும் நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் நாளாகக் கொண்டாடுகிறோம்.  

அவர்வழி நின்று, இன்று குழந்தைகளைக் கொண்டாடுவதோடு பள்ளிகளில் குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அவர்களின் திறமைகள் வெளிக்கொணரப்படுகின்றன. 

'சரியான கல்வி மூலம் மட்டுமே சமுதாயத்தில் நல்லதொரு ஒழுங்கை உருவாக்க முடியும்'

'குழந்தைகள் தோட்டத்தில் உள்ள மொட்டுகள் போன்றவர்கள், அவர்கள் தேசத்தின் எதிர்காலம் மற்றும் நாளைய குடிமக்கள் என்பதால் கவனமாகவும் அன்பாகவும் வளர்க்கப்பட வேண்டும்'

'குழந்தைகளை சீர்திருத்த ஒரே வழி அவர்களை அன்பால் வெல்வதுதான். ஒரு குழந்தை நட்பின்றி இருக்கும் வரை அவர்களது வழிகளை உங்களால் சரிசெய்ய முடியாது'

'ஒட்டுமொத்த சமூகத்திற்கும் சேவை செய்ய வேண்டும் என்ற விருப்பத்தை உருவாக்குவதும், பெற்ற அறிவை தனிமனித நலனுக்காக மட்டுமின்றி பொதுநலனுக்காக பயன்படுத்துவதுமே கல்வியின் நோக்கம்' ஆகியவை குழந்தைகள் மற்றும் கல்வி குறித்த நேருவின் பொன்மொழிகள். 

குழந்தைகளுக்கான உரிமைகள் 
 
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குழந்தைகளுக்கான உரிமைகள்: 

♦ 6-14 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய தொடக்கக் கல்வி

♦எந்தவொரு அபாயகரமான வேலையிலிருந்தும் குழந்தைகள் பாதுகாக்கப்படுவதற்கான உரிமை

♦ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வி

♦துன்புறுத்தலில் இருந்து குழந்தைகள் பாதுகாக்கப்படுவதற்கான உரிமை

♦குழந்தைகளின் வயது அல்லது வலிமைக்கு பொருந்தாத தொழில்களில் ஈடுபடும் பொருளாதாரத் தேவையிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கான உரிமை

♦ஆரோக்கியமான முறையில் வளர்ச்சிக்கான சம வாய்ப்புகள், வசதிகள் வழங்கும் உரிமை

♦சுதந்திரம், கண்ணியத்திற்கான உரிமை மற்றும் சுரண்டலுக்கு எதிராக குழந்தைகளின் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்.

எதிர்கால சமுதாயத்தை சிறந்த முறையில் உருவாக்கும் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. உணவு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல்வேறு காரணங்களால் பல குழந்தைகளுக்கு இன்றும் கிடைக்காத நிலை இருக்கிறது.

பொருளாதார சூழ்நிலையால் குழந்தைத் தொழிலாளர்களும், சட்டங்கள் இருந்தும் குழந்தைகளிடையே பாலியல் துன்புறுத்தலும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. 

குழந்தைகளின் வளர்ச்சிக்கு எதிரான அனைத்து காரணிகளும் களையப்பட்டு அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தர ஒவ்வொருவரும் முயற்சிக்க இந்நாளில் உறுதிமொழி எடுக்க வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com