வில்லாகும் உடம்பு: யோகக் கலையில் அசத்தும் சிறுமி சஹானா!

மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று இந்திய அளவில் யோகக் கலையில் சாதனை புரிய வேண்டும் என்பதே இலக்கு என்கிறார் சிறுமி சஹானா. 
 யோகக் கலையில் அசத்தும் சிறுமி சஹானா
 யோகக் கலையில் அசத்தும் சிறுமி சஹானா
Updated on
1 min read

குழந்தையையும், தெய்வத்தையும் பிரித்தலாகாது, நேரில் காண முடியாத தெய்வத்தை குழந்தை வடிவில் காணலாம். குழந்தைகளின் மழலை மொழியையும், துறுதுறு விளையாட்டையும், வேடிக்கை காட்டும் அழகையும் ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. அவ்வாறான குழந்தைகளைக் கொண்டாடும் தினமே நவ.14.

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்ததால் அவரது பிறந்த தினமான நவ.14 குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் யோகக் கலையில் சாதிக்கத் துடிக்கும் நாமக்கலைச் சேர்ந்த சிறுமி சஹானாவை சந்தித்தோம். தன்னம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற வரிகளுடன் நம்மிடையே பேசத் தொடங்கினார் சஹானா. 

சிறுமி சஹானா
சிறுமி சஹானா

'தந்தை சங்கரநாராயணன், தாய் பிரியாகெளசல்யா. சகோதரன் ஆதித்யபிரசன்னா. சுமார் 6 வயதில் யோகா பயிற்சிக்கு அப்பா, அம்மா அனுப்பி வைத்தனர். அதன் மீதான ஆர்வம் நாளாக நாளாக அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் காலை, மாலை இரு வேளைகளிலும் தவறாமல் யோகா பயிற்சி பெறச் சென்றேன்.

சாதாரண யோகக் கலைகளை காட்டிலும், உடலை வில்லாக வளைத்து காலால் தரையைத் தொடுவது, இடது காலை ஊன்றி வலது காலை ஒரே நேர்கோட்டில் தூக்கி நிறுத்துவது, இரு கைகளை தரையில் ஊன்றி உடலை மட்டும் வளைப்பது போன்ற யோகப் பயிற்சியை செய்வது எனது வேடிக்கையாகவும், வாடிக்கையாகவும் மாறிவிட்டது.

மாவட்ட அளவில் சிறு, சிறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகள், பதக்கங்களை பெற்றுள்ளேன். தற்போது தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறேன். படிப்பு ஒருபுறமிருக்க, மறுபுறம் யோகா பயிற்சியை விடாமல் செய்து கொண்டிருக்கிறேன். பரத் என்ற பயிற்சியாளர் எனக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறார். உடல் ஆரோக்கியம் மேம்படவும், மனது மகிழ்ச்சியாக இருக்கவும் ஒவ்வொருவரும் யோகாவை கற்க வேண்டும்.

ஆண்டுதோறும் ஜூன் 21–ஆம் தேதி உலக யோகா தினத்தையொட்டி பல்வேறு ஆசனங்களை செய்து இணைய வழியில் வெளியிடுவேன். மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று இந்திய அளவில் சிறந்த யோக ராணியாக வலம் வர வேண்டும் என்றார் மகிழ்ச்சி கலந்த புன்னகையுடன் சிறுமி சஹானா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com