செல்வத்துப் பயனே ஈதல்

   சங்க இலக்கியங்களுள் ஒன்றான புறநானூற்றுப் புலவர்கள் பெரும்பாலும் அரசர்களின் வீரம், கொடை, புகழ் போன்றவைகளைப் பற்றிப் பாடியுள்ளனர். ஒரு சிலர் அரசர்களையே இடித்துரைக்கும் பாடல்களை யாத்துள
Updated on
2 min read

 சங்க இலக்கியங்களுள் ஒன்றான புறநானூற்றுப் புலவர்கள் பெரும்பாலும் அரசர்களின் வீரம், கொடை, புகழ் போன்றவைகளைப் பற்றிப் பாடியுள்ளனர். ஒரு சிலர் அரசர்களையே இடித்துரைக்கும் பாடல்களை யாத்துள்ளனர். சிலரோ, மக்கள் எல்லார்க்கும் பொதுவான நீதிகளை விளக்கியுள்ளனர். மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரனாரின் பொது நீதி தொடர்பான பாடல் ஒன்றை ஈண்டு காண்போம்.

 ""தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி

 வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்

 நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்

 கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்

 உண்பது நாழி; உடுப்பவை இரண்டே;

 பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே;

 அதனால் செல்வத்துப் பயனே ஈதல்;

 துய்ப்பேம் எனினே, தப்புந பலவே''

 (புறம்-189)

 எல்லாத் திணைகளுக்கும் பொதுவான இலக்கணங்களைக் கூறும் "பொதுவியல்' திணையாகவும், தெளிந்த பொருளை எடுத்துச் சொல்லும்-உயிர்க்கு உறுதிதரும் பொருள்களை எடுத்துரைக்கும் பொருண்மொழிக் காஞ்சித் துறையாகவும் இப்பாடல் பகுக்கப்பட்டுள்ளது.

 உலகம் முழுவதும் அனைவருக்கும் பொதுவானது அன்று; என் ஒருவனின் தனி உரிமையாகும் என்று பலர் தவறாக நினைப்பதாகப் புலவர் கூறுகிறார். இக்கூற்று, வள்ளுவரின் பின்வரும் குறட்பாவை நினைக்க வைக்கிறது.

 ""அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்

 என்பும் உரியர் பிறர்க்கு'' (குறள்-72)

 பெருநிலத்தை ஒரு குடையின்கீழ் ஆட்சி செய்யும் அரசர்க்கும், இரவும் பகலும் தூங்காது விலங்குகளை வேட்டையாடக் காத்திருக்கும் கல்லாத ஏழைக்கும் உண்ணப்படும் பொருள் நாழி அளவு தானியம்; உடுக்கப்படுபவை அரை ஆடை, மேலாடை என இரண்டே. இவைபோலப் பிற உடல், உள்ளத் தேவைகளும் ஒன்றே என்று புலவர் சுட்டிக் காட்டுகிறார்.

 பிற்கால ஒüவையாரின் பின்வரும் பாடலையும் ஈண்டு காண்பது நன்று.

 ""உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்

 எண்பது கோடிநினைந் தெண்ணுவன - கண்புதைத்த

 மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்

 சாந்துணையும் சஞ்சலமே தான்''

 (நல்வழி-28)

 அதனால், செல்வத்துப் பயனே, செல்வமற்றவர்க்கு உவந்து கொடுத்தல் என்று புறநானூற்றுப் புலவர் கூறுவதையும் காணலாம். அப்படி உவந்து அளிக்காதவர்களை வள்ளுவர்,

 ""ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை

 வைத்திழக்கும் வன்கண் அவர்''

 (கு-228)

 என்று சாடுகிறார். மேலும் ஈகையின் புகழை,

  ""ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

 ஊதியம் இல்லை உயிர்க்கு''

 (குறள்-231)

 என்றும் கூறுகிறார். செல்வத்தைப் பிறர்க்கு உவந்து கொடுக்காமல் யாமே துய்ப்போம் என்று எண்ணித் தாமும் துய்க்கத் தவறியவர் வாழ்நாளே இவ்வுலகில் பலவாகும் என்கிறார் நக்கீரனார். புலவரின் இக்கூற்றுக்குப் பொருந்துவதாய் பின்வரும் குறட்பா அமைகிறது.

 ""ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப

 கோடியும் அல்ல பல''

 

 (கு-337)

 இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புறநானூற்றுப் புலவரும், திருவள்ளுவரும் மற்றும் பிற்கால ஒüவையாரும் கூறியுள்ள அறிவுரைகள், இன்றுள்ள மக்களுக்கும் பொருந்துவதாய் உள்ளன. ஆனாலும், பலர் இதுபோன்ற அறிவுரைகளைப் படிக்காததாலும், படித்தவர்களில் பலபேர் அவ்வறிவுரைகளின் படி நடக்காததாலும் இன்று நம் நாட்டில் செல்வம் ஒரே இடத்தில் முடங்கிக் கிடக்கிறது. இதுபோன்ற பாடல்களைப் படித்து அதன்படி வாழ முன்வந்தால் தாமும் இன்பம் துய்த்து, மற்றவர்களையும் இன்பம் துய்க்கச் செய்ய முடியும். அதுமட்டுமல்ல, தாம் எடுத்துள்ள கிடைத்தற்கரிய மானுடப் பிறப்பின் நோக்கத்தையும் நிறைவேற்ற முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com