பெண் உழைப்பால் பெருகும் குடும்பவளம்

 சங்க இலக்கியம் ஆண், பெண் வாழ்க்கை முறையை வெளிப்படுத்தும்போது ஆண்களைப் போர் முதலான தொழில்களில் ஈடுபடுபவர்களாகவும், பெண்களை இல்லத்தில் தலைவன் வருகைக்காகக் காத்திருப்பவர்களாகவும் காட்டுகி

 சங்க இலக்கியம் ஆண், பெண் வாழ்க்கை முறையை வெளிப்படுத்தும்போது ஆண்களைப் போர் முதலான தொழில்களில் ஈடுபடுபவர்களாகவும், பெண்களை இல்லத்தில் தலைவன் வருகைக்காகக் காத்திருப்பவர்களாகவும் காட்டுகிறது. பெண்களின் உழைப்பை வெளிப்படையாகக் காட்டும் பாடல்கள் அரிதாகவே காணப்படுகின்றன. சில இடங்களில் உப்புவிற்றல், மோர்விற்றல், ஆநிரை மேய்த்தல் முதலான தொழில்களில் ஈடுபடும் பெண்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இவ்வகையில் குறுந்தொகை 295-ஆம் பாடல் பெண் உழைப்பை வெளிப்படுத்துவதாக உள்ளது.

 தலைவியை விட்டுப் பிரிந்த தலைவன், பரத்தையரோடு சென்று காலம் கடந்து மீண்டும் தலைவியிடம் வருகிறான். அப்போது தலைவனின் பண்புநலனை இடித்துரைக்கும் தோழி கூறுவதாக இப்பாடல் அமைகிறது.

  ""உடுத்தும் தொடுத்தும் பூண்டும் செரீஇயும்

 தழையணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி

 விழவொடு வருதி நீயே யிஃதோ

 ஓரான் வல்சிச் சீரில் வாழ்க்கை

 பெருநலக் குறுமகள் வந்தென

 இனிவிழவு ஆயிற்று என்னும்இவ் வூரே''

 என்பது அப்பாடல். உடுத்தும் தொடுத்தும் பூண்டும் செருகியுமாகிய தழையாடை அணிந்த உன் ஆயத்தாரோடு (பரத்தையரோடு) கூடித் தற்பொழுது விழாக்கோலம் பூண்டு வருகிறாய். இதற்குமுன் ஒரேயொரு பசுவை மட்டும் கொண்ட வறுமையான நிலையில் வாழ்ந்த நீ, பெரிய நலமுடைய தலைவி வந்தநாள் தொட்டு, விழாக்கோலம் பூண்டவனாகத் திகழ்கிறாய் என இவ்வூர் மக்கள் கூறுகின்றனர் என்று தோழி குறிப்பிடுவது இப்பாடலின் பொருளாகும். தலைவியால் குடும்பத்தின் செல்வவளம் பெருகுகிறது என்பது இப்பாடல் உணர்த்தும் செய்தி.

 தலைவியால் செல்வவளம் பெருகுவது என்பது மூன்று நிலைகளில் நிகழ்ந்திருக்க வாய்ப்பு உண்டு. அவை, தலைவி "பாக்கியவதியாக' இருத்தல், தலைவியின் பெற்றோர் வரதட்சிணை கொடுத்தல், தலைவியின் உழைப்பு.

 இப்பாடலின் செல்வப்பெருக்குக் குறித்து விளக்கும் குறுந்தொகை உரையாசிரியர்கள், தலைவியைப் "பாக்கியவதி' என்று குறிப்பிட்டு, அத்தகையவள் தலைவன் இல்லத்துக்கு வந்ததால் செல்வவளம் பெருகியது எனக் கூறுகின்றனர். ஒரு பெண் பாக்கியவதியாக இருந்தால், அவள் புகுந்த வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இந்நம்பிக்கையின் அடிப்படையிலேயே, தலைவி பாக்கியவதியாக இருப்பதே காரணம் என அறிஞர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இந்த விளக்கத்தை மரபுவழிப்பட்ட கருத்து விளக்கம் எனலாம்.

 தோழியின் வாயிலாகத் தலைவியைப் பற்றிக் கூறவரும் உ.வே.சா., ""நின் செல்வத்துக்குக் காரணமாகிய தலைவி'' எனக் குறிப்பிடுகிறார். இங்கு வறுமையான வாழ்வு வளமுடையதாக மாறத் தலைவனுக்கு வரதட்சிணை கொடுக்கப் பட்டிருக்குமோ என்ற எண்ணம் தோன்றுவது இயல்பாகிறது. ஆனால் அக்காலத்தில் பெண்வீட்டார் வரதட்சிணை கொடுத்ததாகச் சங்கப் பாடல்களில் குறிப்பேதும் இல்லை. இருப்பினும் மணமகன் பொருள் கொடுத்து மணமகளைத் திருமணம் செய்துகொண்ட வழக்கம் குறிக்கப்பட்டுள்ளது.

  ""விலைவேண்டார் எம்இனத்து ஆயர் மகளிர்

 கொலையேற்றுக் கோட்டிடைத் தாம்வீழ்வார் மார்பின்

 முலையிடைப் போலப் புகின்''

 (கலி,103,71-73)

 என்ற இவ்வடிகளின் முதலடியில் வரும் "விலைவேண்டார்' எனும் சொல் தலைவன் ஏறுதழுவினால், தலைவியைத் திருமணம் செய்யப் பொருள் கொடுக்கவேண்டிய தேவையில்லை என்பதை விளக்குகிறது. இதனால் ஆண்கள் பொருள் கொடுத்துப் பெண்களை மணந்துகொண்ட செய்தியினை உணரமுடிகிறது. திருமணத்துக்குப் பின் தலைவி, தன் கணவனோடு வறுமையுற்று வாழும் காலத்திலும் தன் பெற்றோரிடம் பொருள் கேட்டல் என்பது அக்கால வழக்கில் இல்லை. இதனை,

  ""அறிவும் ஒழுக்கமும் யாண்டுஉணர்ந் தனள்கொல்

 கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்

 கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்

 ஒழுகுநீர் நுணங்கறல் போலப்

 பொழுதுமறுத்து உண்ணும் சிறுமது கையளே''

 (நற்.110: 9-13)

 என்ற நற்றிணைப் பாடலடிகள் தெளிவாக்குகின்றன. இதனால் பெண்வீட்டார் வரதட்சிணை கொடுத்தல் என்பது அக்கால வழக்கில் இல்லை என்பதை அறியலாம்.

 முதற்கண் செல்வவளமின்றி, ஒரேயொரு பசுவை மட்டும் கொண்டு வறுமையுடன் வாழ்ந்த தலைவன், திருமணத்துக்குப் பின் விழாக்கோலம் பூண்ட அளவிற்குச் செல்வவளம் உடையவனாக உயர்கிறான் என்பது இப்பாடலின் மூலம் பெறப்படும் செய்தியாகும். செல்வவளப் பெருக்குக்குக் காரணமான கருத்துகளில் "பாக்கியவதி' என்பது மரபுவழிப்பட்ட கருத்து என்பதினாலும் பெண்வீட்டார் வரதட்சிணை கொடுத்தல் அக்கால வழக்கில் இல்லை என்பதினாலும் செல்வ வளத்துக்குக் காரணம் தலைவியின் உழைப்பு எனலாம். ஏனெனில் இப்பாடலில் குறிக்கப்பட்டுள்ள தலைவனும் பொருள் ஈட்டுதலில் குறிக்கோளின்றி பரத்தமை ஒழுக்கம் மேற்கொள்பவனாகத் திகழ்கிறான்.

 சங்க இலக்கியத்தில் உணக்கல் (கருவாடு) தயாரித்து அதனைப் பதப்படுத்தும் தலைவியும்(அகம் 20:1-2) ஆநிரை மேய்க்கும் தலைவியும் (கலி.116:16-17) மோர்விற்கும் தலைவியும் (கலி.19:16-17) குறிக்கப்பட்டுள்ளனர். மேலும் "உன் செல்வ வளத்தைப் பெருக்கிய (நின் செல்வத்துக்குக் காரணமாகிய-உ.வே.சா.) தலைவியை விடுத்துச் செல்வத்தை அழிக்கும் பரத்தையரை நாடிச் செல்வதினால் ஊரார் பழித்தூற்றுகின்றனர்' எனத் தோழி குறிப்பிடுவதும் தலைவியின் உழைப்பை வெளிப்படுத்துவதாக அமைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com