அரவிந்தர் என்றொரு தவமுனிவர்

ஸ்ரீஅரவிந்தர் திருச்சரிதம், பாரதியாருக்கு ரிக்வேதம் போதித்த பெருமகனின் தேதிவாரியான அண்மைக்கால வரலாறு. வ.வே.சு. ஐயருடன் தியானம் பழகிய தவமுனிவரின் வாழ்க்கை. சுதந்திரப்போரில் சிறையில் நேரில் கண்ணனைத் தரி
அரவிந்தர் என்றொரு தவமுனிவர்
Updated on
3 min read

ஸ்ரீஅரவிந்தர் திருச்சரிதம், பாரதியாருக்கு ரிக்வேதம் போதித்த பெருமகனின் தேதிவாரியான அண்மைக்கால வரலாறு. வ.வே.சு. ஐயருடன் தியானம் பழகிய தவமுனிவரின் வாழ்க்கை. சுதந்திரப்போரில் சிறையில் நேரில் கண்ணனைத் தரிசித்த மகானின் அனுபவத் தொகுப்பு. வாழ்நாள் முழுவதும் இறை சக்தி என்னும் அதிமனத்தைத் தன்னில் கீழிறக்கிக் கொள்ள முனைந்த ஆன்மிகச் சாதனையாளரின் வியத்தகு விடாமுயற்சியின் விளக்கம். சித்தியடைந்த பிறகும் நூற்றுப் பதினோரு மணிநேரம் உடலில் காலமானதற்கான புற அறிகுறிகளே தென்படாதது கண்டு பிரெஞ்ச் அரசின் தலைமை மருத்துவர் இது ஓர் அறிவியல் விந்தை எனச் சான்றுரைத்த ஆன்மிக உலகின் அதிசயம்.

 பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டமாக மனிதனிலிருந்து அதிமனிதன் தோன்றுவான் என்றார் ஸ்ரீஅரவிந்தர். மரணம் என்னும் விதி மாறிவிடும் என்றும், பசி, தாகம், பாலுணர்ச்சி முதலியவைகளும் மாறும் என்றும், உடல் ஒளிமயமாகும் என்றும் அரவிந்தர் யோக திருஷ்டியில் கண்டு அறிவித்தார்.

 பாரதியாருக்கு ஸ்ரீஅரவிந்தர்மேல் இருந்த மதிப்பு அபரிமிதமானது. ஸ்ரீஅரவிந்தரது ஆங்கிலக் கவிதையை மொழிபெயர்த்த பாரதியார், இந்தியா இதழில் எழுதிய குறிப்பு இதோ:

 "தாய் நல்லுணவு சமைப்பதைப் பின்பற்றிக் குழந்தை மணற்சோறாக்கி விளையாட்டுச் சமையல் செய்வதைப்போல் அந்த மகானுடைய செய்யுளை நான் அன்பினால் மொழிபெயர்க்க நேர்ந்தது' (ஆதாரம் - பெ.சு.மணி எழுதிய "பாரதி இலக்கியத்தில் வேத இலக்கியத்தின் தாக்கம்').

 சுதந்திரப் போர் விறுவிறுவென வேகம் கண்ட காலம் அது. பிரிட்டிஷ் அரசாங்கம் வங்கப் பிரிவினைக்கு வழிவகுத்தது. அந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளை மக்கள் துக்க நாளாய் அனுசரித்தார்கள். பெண்கள் சமைக்கவில்லை. கடைகள் திறக்கவில்லை. தாகூர் முஸ்லிம்களின் மசூதிகளுக்குச் சென்று, "இந்துக்களும் முஸ்லிம்களும் சகோதரர்களே' என்று ராக்கி கட்டினார்.

 அக்காலகட்டத்தில் தான், அரவிந்தர் சுதந்திரப் போராளியாக எழுச்சியுடன் இயங்கலானார். விதேசித் துணிகள் கொளுத்தப்பட்டன. மணமகனோ மணமகளோ விதேசித் துணி அணிந்திருந்தால் புரோகிதர்கள் திருமணச் சடங்கை நடத்த மறுத்தார்கள். இதற்கெல்லாம் தூண்டுகோலாக இருந்தது அரவிந்தரின் மேடைப் பேச்சு. சுதந்திரப்போரில் ஓர் அங்கமாக அரவிந்தர் மாறிவிட்டார். அவரது பெருமைகள் எங்கும் பேசப்படலாயின.

 அரவிந்தரை அவர் வாழ்ந்த காலத்திலேயே கொண்டாடிய மகாகவிகள் இருவர். ஒருவர் தமிழை உயர்த்திய தங்கக் கவி பாரதி. இன்னொருவர் நோபல் பரிசு பெற்ற வங்கக் கவி தாகூர். புதுவை வந்த அரவிந்தரை வரவேற்றுப் போற்றியது தமிழ் மகாகவியின் குணம். புதுவைக்கே அவரைத் தேடி வந்தது வங்க மகாகவியின் மனம். அரவிந்தர் குறித்து தாகூர் எழுதியுள்ள வரிகள் இதோ:

 "ஸ்ரீஅரவிந்தர், மோனம் நிறைந்த அருளாவேச சக்தியைத் தம்மில் திரட்டி வைத்திருக்கிறார். உள்ளொளி அவர் திருமுகத்தில் பிரகாசிக்கிறது. பழைய ரிஷிகளின் வாக்கு அவர் மூலமாக ஒலிக்கிறது'.

 அரவிந்தர் சுதந்திரப் போரில் பொய்க்குற்றச்சாட்டின் மூலம் கைதானார். சிறையில் தவம்செய்து கண்ணனை நேரில் கண்டார். விடுதலையான பின் உத்தர்பாராவிலிருந்த தர்மரட்சணி சபையில் பேச அவருக்கு அழைப்பு வந்தது. சுமார் பத்தாயிரம் பேர் கூடியிருந்தனர். அரவிந்தர் நிதானமாக, தெளிவாக, கணீரென்று பேசினார். அவரது சிறை அனுபவங்களை தெய்வம் பேசுவதாகவே கருதி மக்கள் ஆடாமல் அசையாமல் சித்திரப் பாவை போல் கேட்டனர். கண்ணனைக் கண்டதை உள்மனக் காட்சி என அரவிந்தர் கூறவில்லை. நிதரிசனமாக நேருக்கு நேர் சக மனிதரைக் காண்பதுபோல் கண்டேன் என்று உறுதிபடக் கூறினார்.

 செய்தித்தாள்களில் இச்செய்தி வெளியானபோது பாரதியார் புதுச்சேரியில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தார். அவர் செய்தியின் உண்மையை அறிய இந்தியா பத்திரிகை நிருபரைக் கோல்கத்தாவுக்கு அனுப்பினார். அதன்பின் பாரதியார் எழுதியது:

 "இந்தக் கலியில் பரமாத்ம தரிசனம் கிடைப்பது துர்லபமாதலால் சிறிது ஐயம்கொண்டு பரமாத்ம தரிசனம் ஒருவேளை கனவிலேற்பட்டிருக்குமோ என்று சங்கிப்பாராயினர். அரவிந்தரின் மறுமொழியைக் கேட்டவுடனே ஐயங்களெல்லாம் தீர்ந்து போயின. அவர் மறுமொழி கூறும்போது அவர் முகத்திலே தோன்றிய அடக்கத்தையும் அமைதியையும் சிரத்தையையும் நிஷ்கபடத் தன்மையையும் ஒளியையும் கண்டவுடனே அரவிந்தர் மகாசித்தரென்பது தெளிவாய்விட்டது'.

 அரவிந்தர்கூறியது: ஆம். நான் நாராயணனைக் காணப்பெற்றேன். எனக்கு நிகழ்ந்த தரிசனங்களெல்லாம் விழிப்பு நிலையில் தோன்றின. கனவுகளல்ல'. (சீனி. விசுவநாதன் தொகுத்த "அரவிந்தர் மகிமை').

 சிறையிலிருந்து விடுதலையான சிறிது காலத்தில் ஸ்ரீஅரவிந்தர் வாழ்வை முழுமையாக ஆன்மிகப் பணிகளில் அர்ப்பணிக்கும் வகையில் புதுச்சேரியில் குடியேறினார். அரவிந்தர் முன்போல் அரசியலில் ஈடுபட வேண்டும் என மகாத்மா தன் புதல்வர் தேவதாஸ் மூலம் அழைத்தார். லாலா லஜபதிராய் அரவிந்தரை நேரில் சென்று அழைத்தார்.

 இனி கண்ணன் காட்டிய ஆன்மிக வழியில் தான் முழுமையாக ஈடுபடப்போவதாக அரவிந்தர் அறிவித்துவிட்டார். அதுமட்டுமல்ல. தியான ரீதியாக சுதந்திரத்திற்காகத் தாம் உழைத்து வருவதாகவும் அந்த உண்மை புலப்படும் வகையில் கண்ணன் சுதந்திர வரலாற்றில் தன்பெயர் நிலைக்கும்படி ஏதேனும் முத்திரை பதிப்பான் என்று தாம் நம்புவதாகவும் அரவிந்தர் சுதந்திரம் கிட்டுவதற்குப் பல ஆண்டுகள் முன்னதாகவே எழுதினார். என்ன ஆச்சரியம்! அரவிந்தரது பிறந்த தினத்தில் தான் பாரதம் சுதந்திரம் பெற்றது.

 "அரவிந்தர் அனுஷ்டித்து வரும் யோகம் இதுவரை யாரும் அனுஷ்டிக்காத புத்தம் புதுமுறையில் அமைந்தது. அச்சிறந்த முறையை அனுஷ்டித்தே தமது தேகத்தைப் பொன்மயமாக்கி அமிர்தகலசம் போல் விளங்குவார். அவரது பாதத்தில்தான் இன்னும் சிறிது கருமை நிறம் இருக்கிறதாம். அதுவும் பொன்மயமாகிவிட்டால் அருள்ஞானம் பெற்றவராய் விடுவாராம். அரவிந்தரைத் தரிசித்தவர்கள் ஒவ்வொருவரும் அவரது சாந்தமயமான முகாரவிந்தத்திலும் கருணை பொழியும் கண்களிலும் லயித்துப் போகின்றனர்' என்று எழுதினார், அரவிந்தரது சமகாலத்தில் வாழ்ந்தவரும் பிரசண்ட விகடன் இதழின் ஆசிரியரும் நா.பா. லட்சுமி போன்றோரின் முதல் சிறுகதைகளைத் தம் இதழில் வெளியிட்டவருமான நாரண துரைக்கண்ணன்.

 ஸ்ரீஅரவிந்தரால் ஈர்க்கப்பட்ட இன்னொருவர் அறிஞர் வ.ரா. பின்னாளில் தன்னை நாத்திகர் என்று இனங்காட்டிக் கொண்டவர். ஆனால் தன் வாழ்வின் கடைசிச் சில மாதங்களில் இறைநம்பிக்கையோடு வாழ்ந்தவர். "அக்கிரகாரத்தில் பிறந்த அதிசயப் பிறவி' என்று வேறு குழாமைச் சேர்ந்தவர்களால் புகழப்பட்டவர். பாரதியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய வ.ரா., அரவிந்தரையும் பாரதியாரையும் ஒப்பிட்டு எழுதியுள்ள வரிகள் இலக்கியநயம் நிறைந்தவை.

 "பாரதியார் உயரத்தில் பெரியவர். அரவிந்தர் உருவத்தில் சிறியவர். பாரதியாரின் சொற்கள் முல்லை மலரின் தாக்கும் மணம் கொண்டவை. அரவிந்தரின் சொற்கள் செந்தாமரை மலரின் பரந்துவிரிந்த அழகைத் தாங்கியவை. இருவர் சொற்களிலும் கவிச்சுவை நிறைந்திருக்கும். பாரதியாரைப் போலவே அரவிந்தரும் கலகலவென்று விடாமல் சிரிப்பார்'.

 மகான்களில் எழுத்தாளர்களாகவும் அமைந்த ஆதிசங்கரர், சதாசிவப் பிரம்மேந்திரர், வள்ளலார் போன்றோர் வரிசையில், அண்மைக் காலத்தில் தோன்றியவர் அரவிந்தர். அவர் உலகப் பொதுமொழியான ஆங்கிலத்தில் எழுதியதால் எல்லா நாடுகளிலும் அவரது இலக்கியம் வியப்போடு பயிலப்படுகிறது. மொழியில் அடங்கமறுக்கும் நுண்ணுணர்வுகளைக்கூட மொழிக்கட்டுக்குள் கொண்டுவரும் சொல்லாற்றல் அவரது தனித் தேர்ச்சி.

 மகாபாரதத்தில் எழுநூறு வரிகளில் இடம்பெறும் சாவித்ரி சரிதத்தை புதிய பரிமாணத்தில் இருபத்து நாலாயிரம் வரிகளில் பிரகாசப்படுத்திக் காட்டுகிறார் அரவிந்தர்.

 பாரதி, திலகர், காந்தி, வினோபா போல அரவிந்தரும் கீதைக்கு உரை எழுதியிருக்கிறார். அர்ச்சுனன் போல், அரவிந்தரும் நேரடியாகவே கிருஷ்ணரிடம் கீதோபதேசம் பெற்றவர்தானே! அர்ச்சுனனுக்குக் கீதை சொன்ன தலம் போர்க்களம். அரவிந்தருக்கு கீதை சொன்ன தலம் சிறைக்களம். அர்ச்சுனன் பங்குபெற்றது பாரதப் போர். அரவிந்தர் பங்குபெற்றது சுதந்திரப்போர்.

 அரவிந்தர் சித்தி அடைந்துவிட்டாலும், அதிமனத்தை மண்ணில் இறக்கும் பணி முடிந்துவிடுமா என்ன? அவரது பொன்னுடல் வைக்கப்பட்டிருந்த பெட்டி மண்ணில் புதையுண்ட தருணத்தில் ஒரு சாதகருக்கு மனதில் திடீரென ஒரு பிரார்த்தனை உதித்ததாம். "தாங்கள் விட்டுச்சென்ற வேலை தொடர்ந்து நடக்கும் என்பதற்கு உறுதிமொழி கொடுங்கள்' என்று பிரார்த்தித்தாராம். வங்காளியில் மிக உறுதியான குரலில் "ஹபே, ஹபே, ஹபே!' (நடக்கும், நடக்கும், நடக்கும்) என்று அரவிந்தர் கூறியதை அவர் கேட்டாராம். இப்படி ஒரு தகவல் "அது ஒரு பொற்காலம்' என்று நீரத்பரன் எழுதிய ஆங்கில நூலின் தமிழாக்கத்தில் விஜயா சங்கரநாராயணனால் பதிவாகியுள்ளது. நாமும் சொல்வோம். ஹபே, ஹபே, ஹபே! ஸ்ரீஅரவிந்தரின் கனவுகள் அனைத்தும் கட்டாயம் நடக்கும், நடக்கும், நடக்கும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com