தன்னலமற்ற தலைவர் மூதறிஞர் ராஜாஜி! அரசியல், இலக்கியம், ஆன்மிகம் என பன்முகத் தன்மை கொண்டவர் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார். மூத றி ஞர் ராஜாஜி என்று அனைவராலும் அழைக்கப்பட்ட அவர், சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டுச் செயல்பட்டவர். இது, அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்கும், தொடர்புடையவர்களுக்கும் நன்றாகவே தெரியும்.
அவரை நேரில் சந்திக்காமலேகூட, கடிதம் மூலம் தொடர்புகொண்டு அவர் பற்றிய அருமைகளை உணர்ந்தவர்கள் பலரும் உள்ளனர்.
1942}ல், நான் எஸ்.எஸ்.எல்.சி. படித்துக் கொண்டிருந்தபோது, விடுதலை வேள்வியில் ஈடுபட்டிருந்த குலசேகரபட்டினம் காசிராஜன், ராஜகோபால் ஆகியோரை பிரிட்டிஷ் போலீஸôர் கைதுசெய்து தூக்குத் தண்டனை விதித்திருந்தனர்.
அவர்கள் இருவரையும் வெளியே கொண்டுவர ம.பொ.சிவஞான கிராமணி, ராஜாஜி உள்ளிட்டோர் தீவிர முயற்சி மேற்கொண்டிருந்தனர். அவர்களுக்கு இயன்ற பண உதவியைச் செய்யுமாறு எங்கள் வகுப்புத் தமிழாசிரியர் சிவஞானம் கேட்டுக்கொண்டார். இதேபோலத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அவரவர் தகுதிக்கேற்ப பண உதவி செய்தவர்கள் பலர். நானும், பிற மாணவர்களும் எங்கள் பங்குக்கு ம.பொ.சி.க்கும், ராஜாஜிக்கும் தனித்தனியாகப் பணத்தை மணியார்டர் செய்தோம். அவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களது விடுதலைக்கு ராஜாஜிதான் காரணம் என்பது ஏனோ மறக்கப்பட்ட உண்மையாகத் தொடர்கிறது.
மற்றொரு சம்பவமும் உண்டு. அதாவது, 1930}களில் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற ராமநாதபுரத்தைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவர், 1948}ம் ஆண்டில் தொழுநோயால் பாதிக்கப்பட்டு மிகவும் அவதிப்பட்டார். வறுமை காரணமாக போதிய சிகிச்சை வசதியைப் பெறமுடியாமல் நலிவுற்று, இறக்கும் தருவாயில் இருந்தார்.
இவரது நிலை குறித்து அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜிக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில், தேவேந்திரனுக்குப் பண உதவியும், சிகிச்சையும் செய்யுமாறு கேட்டிருந்தேன்.
நான் எழுதிய கடிதத்துக்கு ராஜாஜி உடனடியாக நடவடிக்கை எடுத்தார். செங்கல்பட்டில் உள்ள ஒரு மருத்துவருக்கு ராஜாஜி தபால் எழுதியுள்ளார். அதில், தேவேந்திரனுக்குப் பண உதவி செய்து அவரது நோயைக் குணப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து, தேவேந்திரனை செங்கல்பட்டுக்கு வரவழைத்து அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. 6 மாதம் கழித்து அவர் முழு நலத்துடனும் கைச் செலவுக்குப் பணம், மற்றும் புதிய கதர் ஜிப்பாக்களுடனும் ஊர் திரும்பினார்.
நேர்மை, ஒழுக்கத்துக்குப் பெயர் பெற்றவராக விளங்கியவர் ராஜாஜி. பொதுவாழ்வில் அப்பழுக்கற்ற மனிதரான அவர், சமூக ஏற்றத் தாழ்வுகளைக் களையப் பாடுபட்டவர். மதுவிலக்குக் கொள்கையில் ராஜாஜி காட்டிய தீவிரம், ஏழைகள் மீது அவர் கொண்ட நேசத்தையே காட்டுவதாக அமைந்துள்ளது.
ராஜாஜி தமிழக முதலமைச்சராக இருந்தபோது மதுவிலக்கு முழுமையாக அமல்படுத்தப்பட்டது. பின்னர், தமிழகத்தில் 1967}ல் காங்கிரஸ் ஆட்சி போய் திமுக ஆட்சிக்கு வந்தபோது அண்ணாதுரை முதல்வராகப் பொறுப்பேற்றார். அவரிடம் அதிகாரிகள் சிலர் மதுவிலக்கை ரத்து செய்தால் ரூ.600 கோடி வருவாய் கிடைக்கும் என்று கூறினர். ஆனால், அண்ணா அதற்கு மறுத்துவிட்டார்.
மேலும், அந்த வருவாயானது புழுத்துப்போன தொழுநோயாளி கையில் உள்ள வெண்ணெயை வாங்குவதற்குச் சமம் என்று கூறி மறுத்துவிட்டார். ஆனால், அண்ணாவின் வழியில் ஆட்சி செய்வதாகக் கூறிக்கொள்ளும், தற்போதைய முதல்வர் கருணாநிதி மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் மதுவிலக்குக் கொள்கையைப் பின்பற்றாதது ஏன்?
1972}ல் தமிழக முதல்வராக கருணாநிதி பதவியேற்றபோது மதுவிலக்கை ரத்துசெய்ய அவர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் கிடைத்தது. உடனே மூதறிஞர் ராஜாஜி, கொட்டும் மழையில் குடைபிடித்தபடி கருணாநிதி வீட்டுக்குச் சென்று, ""மதுவிலக்கை ரத்துச் செய்யக்கூடாது'' என்று கேட்டுக் கொண்டார். ஆனால், அதற்கு கருணாநிதி செவிசாய்க்கவில்லை. அப்போது, ""நான் சூடமாக இருக்கிறேன்: என்னைச் சுற்றி நெருப்பு (அண்டை மாநிலங்களில் மது விற்பனை) இருக்கிறது; நான் என்ன செய்வது'' என்று அவர் காரணம் சொன்னார். இன்றும் மதுவிலக்குக் கொள்கையைப் பின்பற்ற திராவிடக் கட்சிகளின் ஆட்சியாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
அன்று தீர்க்கதரிசனத்துடன் மதுவிலக்கை கொண்டு வந்து, அதனால் ஏற்படும் வருவாயைச் சமாளிக்க விற்பனை வரியை ஏற்படுத்திய ராஜாஜி எங்கே, இப்போதுள்ள ஆட்சியாளர்கள் எங்கே? ஒப்பிடக்கூட மனம் மறுக்கிறது.
மூதறிஞர் ராஜாஜியிடம் ஒரு மிக நல்ல பழக்கம். யார் கடிதம் எழுதினாலும் தமது கைப்பட பதில் எழுதிவிடுவார். இதுபற்றி விசாரித்தபோது, ராஜாஜியிடம் நெருங்கிப்பழகிய ஒருவர் ராஜாஜியே அதற்குக் கூறிய காரணத்தைக் கேட்டு வியந்தேன்.
""யாராவது நேரில் வந்தா பதில் சொல்லாம இருக்கோமா? டெலிபோனில் கூப்பிட்டா உடனே பதில் சொல்லாமல் இருக்கோமா? நேரில் வரவோ, டெலிபோனில் தொடர்பு கொள்ளவோ வசதிப்படாதவர்களும், வாய்ப்பில்லாதவர்களும் கடிதாசி போடறப்போ, அதையும் நேரில் வந்ததாகப் பாவித்து பதில் சொல்றதுதானே நியாயம்?'' என்கிற மூதறிஞர் ராஜாஜியின் விளக்கத்தை இப்போது நினைத்தாலும் வியப்பும் மரியாதையும் மேலிடுகிறது.
பெரியார் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம். அந்தக் காலத்திலேயே, அதாவது இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னாலேயே, காங்கிரஸில் கோஷ்டிகள் உண்டு. பெரியார், திரு.வி.க. போன்றவர்கள் ராஜாஜிக்கு மிகவும் நெருக்கமானவர்கள்.
ஒருதடவை ஒரு கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அதில் ராஜாஜியும், பெரியாரும் கலந்து கொண்டிருக்கும்போது, எதிர்கோஷ்டியைச் சேர்ந்த ஒருவர், ராஜாஜிக்கு உடன்பாடில்லாத ஒரு கருத்தைத் தெரிவித்தார். உடனே ராஜாஜி அந்தக் கருத்தை விமர்சித்துப் பேசும்படி பெரியாரிடம் கேட்டுக் கொண்டார்.
மைக்கைப் பிடித்த பெரியார் அந்தக் கருத்தைத் தகர்த்தெறிவதுபோலத் தனது பிரசங்கத்தில் வாதங்களை முன்வைத்துப் பேசிமுடித்துவிட்டு அமர்ந்தார். பிறகு ராஜாஜியிடம், ""ஆச்சாரியாரே, ஏன் என்னை அதற்கு எதிராகப் பேசச் சொன்னீங்க...?'' என்று கேட்ட பெரியாருக்கு, மூதறிஞர் சொன்ன பதில் ""அதைத்தான் நீங்கள் உங்க பிரசங்கத்தில் பிட்டுப் பிட்டு வைத்துவிட்டீர்களே.. நான் என்னவெல்லாம் சொல்ல நினைத்தேனோ அதையெல்லாம் என்னைவிட ஆணித்தரமா நீங்க சொல்லிட்டேள். நம்ம ரெண்டு பேருடைய சிந்தனையும் ஒரே மாதிரி இருக்கு பார்த்தீங்களா...?''
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.