

மக்களாட்சித் தத்துவம் ஆட்சிபுரியும் நாடுகளில் சமூக ஒழுக்கத்தைப் பராமரிக்கவும் மக்களின் மேம்பாடுகளுக்காகவும் புதிய சட்டங்கள் இயற்றப்படுகின்றன. நாட்டில் உள்ள சூழ்நிலை மற்றும் காலத்தின் தேவைக்கேற்ப இச்சட்டங்கள் சட்டம் இயற்றும் நாடாளுமன்றத்தில் உருவாக்கப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட கருத்திற்கேற்ப சட்டம் இயற்ற வேண்டுமென்று அந்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள், சமூக நல அமைப்புகள் போன்றவை அழுத்தம் கொடுக்கும்போதும் புதிய சட்டங்கள் உருவாகின்றன. இதைப்போலவே சர்வதேச மாநாடுகளில் கொண்டு வரப்படும் தீர்மானங்களின் அடிப்படையில் அதனை ஏற்றுக்கொண்ட நாடுகள் புதிய சட்டங்களை இயற்றுகின்றன.
உலகளாவிய மனித உரிமை பிரகடனமானது 1948, டிசம்பர் 10 அன்று ஐக்கிய நாடுகள் சபையில் அறிவிக்கப்பட்ட பின்பு இந்தியா உள்பட பெரும்பாலான ஐ.நா. உறுப்பு நாடுகள் அதனை ஏற்று கையொப்பம் செய்தன. இதன் அடிப்படையில் பல நாடுகள் தமது அரசியலமைப்பில் மனித உரிமைகளை ஓர் அங்கமாக ஏற்படுத்திக் கொண்டன. வேறு சில நாடுகள் மனித உரிமைகளுக்கு என்று பிரத்யேகமான சட்டத்தைக் கொண்டு வந்தன. ஆனால் இந்தியாவில் சர்வதேச மனித உரிமைகளில் பிரகடனம் ஏற்படுத்தப்பட்டு 45 ஆண்டுகள் கழித்து 1993-ம் ஆண்டில்தான் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது.
1991-ம் ஆண்டு ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மனித உரிமை ஆணையங்களுக்கான வழிகாட்டு நெறிகளை உருவாக்க ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் முக்கியமான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மனித உரிமை அமைப்புகள் குறித்த பல்வேறு நெறிமுறைகள் வகுக்கப்பட்டன. மேலும் மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்படாத நாடுகளில் உடனடியாக மனித உரிமை ஆணையங்கள் அமைக்கப்பட வேண்டுமென்று இக்கூட்டம் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளை வற்புறுத்தியது. இக்கூட்டத்தில் இந்தியாவின் சார்பிலும் பிரதிநிதிகள் கலந்துகொண்டு பாரீஸ் தீர்மானங்களை ஒப்புக்கொண்டு கையொப்பம் செய்தனர். இவ்வாறான சர்வதேச மாநாட்டின் வற்புறுத்தல் காரணமாகவும் அதேசமயத்தில் இந்தியாவில் இயங்கி வந்த பல்வேறு மனித உரிமை அமைப்புகளின் தொடர் வேண்டுகோளின் காரணமாகவும் இந்தியாவில் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
இச்சட்டம் இயற்றப்பட்டு 15 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இந்திய மனித உரிமை பாதுகாப்புச் சட்டம் குறித்து மறு ஆய்வு செய்வதும் காலத்தின் சூழ்நிலைக்கேற்ப புதிய அம்சங்களைச் சேர்ப்பதும் மிக அவசியமானதாகும். இச்சட்டத்தின் விளைவாக சட்டம் உருவாக்கப்பட்ட சில மாதங்களிலேயே தேசிய மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால் 1993 முதல் தற்போது வரை 18 மாநிலங்களில் மட்டுமே மாநில மனித உரிமை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களில் மாநில மனித உரிமை ஆணையங்களை அந்தந்த மாநில அரசுகள் இதுவரை ஏற்படுத்தவில்லை. மாநில மனித உரிமை ஆணையங்களை அமைப்பது மாநில அரசுகளின் அதிகாரத்தில் உள்ளதால் மாநில அரசுகள் தம்மீது ஏற்படும் புகார்களை விசாரிப்பதற்கு தாமே ஓர் ஆணையத்தை உருவாக்கத் தயங்குவதுதான் இக்கால தாமதத்திற்கு காரணமாகும்.
மாநில மனித உரிமை ஆணையங்கள் தற்போது 18 மாநிலங்களில் செயல்பட்டு வந்தாலும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தற்போதைய இணையதள தகவலின்படி சத்தீஸ்கர், இமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மாநில ஆணையத்தின் தலைவர் பதவி காலியாக உள்ளது. இதைப்போலவே மாநில ஆணையங்களில் தமிழ்நாடு, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் முழுமையாக உறுப்பினர் பதவிகள் நியமனம் செய்யப்படாமல் காலியாக உள்ளன. இவ்வாறு மாநில ஆணையம் அமைக்கப்படாமல் உள்ளது மற்றும் தலைவர், உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளது போன்ற காரணங்களால் மனித உரிமை நீதி நிர்வாகம் முழுமையாக நடைபெறவில்லை எனலாம்.
மாநில அரசுகள் மாநில மனித உரிமைகள் ஆணையத்தை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அமைக்கத் தவறினால் மாநில ஆணையங்களை மத்திய அரசே அமைப்பதற்குத் தக்க அதிகாரம் வழங்கும் வகையிலும் மாநில ஆணையங்களில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகள் காலியாகும்போது 3 மாதத்திற்குள்ளாக மாநில அரசு புதிய நியமனங்கள் செய்ய நடவடிக்கை எடுக்கத் தவறினால் மத்திய அரசே இப்பதவிகளை நியமனம் செய்யும் வகையிலும் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டும்.
மனித உரிமை ஆணையங்களின் தலைவராக அல்லது உறுப்பினராகப் பதவி வகிப்பவர் அப்பதவியிலிருந்து வெளியேறிய பின்பு அரசின் எந்த ஒரு பதவியையும் வகிக்க தகுதியற்றவர் என மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆணையத்தில் பணியாற்றும் காலத்தில் தமது பதவிக்காலம் முடிந்த பின்பு அரசாங்கத்திடம் வேறு பதவிகள் பெற வேண்டும் என்பதற்காக அரசுக்குச் சாதகமாக எவரும் செயல்படக் கூடாது என்ற கொள்கையை இத்தகைய அம்சம் சட்டத்தை உருவாக்கியவர்களால் கொண்டு வரப்பட்டது. ஆனால் இப்பதவியிலிருந்து விலகிய பின்பு மாநில ஆளுநர் போன்ற பதவிகளுக்கு அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். இதுகுறித்து பிரச்னைகள் எழுந்தபோது அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ள பதவிகள் அரசின் பதவிகளல்ல என்று விளக்கங்கள் கொடுக்கப்பட்டன. இத்தகைய குறைபாடுகளை நீக்கி மனித உரிமை ஆணையங்களின் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவியிலிருந்து வெளிவருபவர் அரசு மற்றும் அரசியலமைப்புப் பதவிகள் உள்பட எந்த ஒரு பதவியையும் வகிக்கக் கூடாது என்று சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும். அப்போதுதான் அரசிடமிருந்து எந்த ஒரு பதவியும் பிற்காலத்தில் கிடைக்காது என்ற அடிப்படையில் அவர்கள் ஆணையங்களில் மனச்சாய்வின்றி செயல்பட முடியும்.
மனித உரிமை மீறல் குறித்த புகார்களை ஆணையம் விசாரித்து வழங்கும் முடிவினை ஏற்று மத்திய, மாநில அரசுகள் அல்லது அரசு சார்ந்த அமைப்புகள் செயல்பட வேண்டும் என மனித உரிமை ஆணையம் கட்டுப்படுத்த முடியாது. மனித உரிமை ஆணையங்களின் பரிந்துரைகளை அரசு அமல்படுத்தத் தவறினால் ஆணையமானது தமது பரிந்துரைகளை அமல்படுத்த உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டி உள்ளது. இந்நிலையை மாற்றி மனித உரிமை ஆணையங்கள் தன்னாட்சி பெற்ற நீதிமன்றங்களைப்போல செயல்பட வழி காண வேண்டும்.
மனித உரிமை தொடர்பான ஒரு பிரச்னையில் மத்திய அல்லது மாநில அரசு விசாரணை ஆணையங்கள் சட்டப்படி ஓர் ஆணையத்தை அமைத்துவிட்டால் மனித உரிமை ஆணையங்கள் அப்பிரச்னையை எடுத்துக்கொண்டு விசாரணை நடத்த இயலாது. சட்டப்படி மத்திய, மாநில அரசுகள் சில நேரங்களில் மனித உரிமை தொடர்பான பிரச்னைகளுக்காக விசாரணை ஆணையங்களை அமைக்கின்றன. இவ்வாறு மனித உரிமை ஆணையங்களின் விசாரணையிலிருந்து தப்பித்துக் கொள்ளும் செயல்பாட்டினைத் தவிர்க்க மனித உரிமைகள் தொடர்பான பிரச்னைகளில் மனித உரிமை ஆணையம் மட்டுமே விசாரணை செய்ய முடியும் என்ற வகையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும்.
மனித உரிமை ஆணையங்களுக்கு அலுவலர்கள், பணியாளர்கள், புலனாய்வுக்கான காவல் அதிகாரிகள் ஆகியோரை போதுமான அளவில் அளிக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும். அவர்கள் மாநில அரசு பணியாளர்களாகவே உள்ளனர். இந்நிலையை மாற்றி மனித உரிமை ஆணையங்களுக்கான பணியாளர்களை மனித உரிமை ஆணையமே நேரடியாகத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வகையில் ஆள்சேர்ப்பு அதிகாரத்தை மனித உரிமை ஆணையங்களுக்கு வழங்க வேண்டும். மனித உரிமை ஆணையங்களுக்கான நிதியானது தற்போது அரசின் ஒரு துறையிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்நிலையை மாற்றி தேர்தல் ஆணையம் போன்ற தன்னாட்சி அமைப்புகளுக்கு நேரடியாக நிதி ஒதுக்கீடு செய்வதுபோல மத்திய, மாநில அரசுகளின் வரவு, செலவுத் திட்டத்தில் மனித உரிமை ஆணையங்களுக்கு நேரடியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
1991-ம் ஆண்டில் நடைபெற்ற ஐ.நா. சபையின் தேசிய மனித உரிமை ஆணையங்களுக்கான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளே பாரீஸ் கொள்கைகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்தக் கொள்கைகள் சுதந்திரம், தேவையான அதிகாரங்கள், எளிதில் அணுகும் தன்மை, கூட்டுறவு தத்துவம், செயல்திறன் மற்றும் பொறுப்புடைமை முதலானவை தேசிய மனித உரிமை ஆணையங்களுக்கு வழங்க வேண்டுமென தெரிவிக்கின்றன. தேசிய மனித உரிமை ஆணையங்களுக்கான பாரீஸ் கொள்கைகளை முழுமையாகப் பின்பற்றும் வகையில் மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும்.
மனித உரிமை ஆணையங்களில் தாக்கல் செய்யப்படும் புகார்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று எந்தவிதமான நெறிமுறையும் தற்போது இல்லை. இதனை மாற்றி மனித உரிமை மீறல்கள் குறித்த புகார்களை ஓராண்டு காலத்திற்குள் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்ற நெறிமுறையை மனித உரிமை பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தத்தின் மூலம் கொண்டுவர வேண்டும்.
தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்களின் தலைவர், உறுப்பினர்களை நியமனம் செய்யும்போது மனித உரிமைகளில் சிறப்பு நிபுணத்துவம் பெற்ற சிந்தனையாளர்களைத் தேர்ந்தெடுத்து நியமனம் செய்ய வேண்டும். மாறாக அரசாங்கத்திலிருந்து ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகளை ஆணைய உறுப்பினராக நியமனம் செய்யும் வழக்கத்தைக் கைவிட வேண்டும். தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும் மாநில மனித உரிமை ஆணையங்களுக்கும் நேரடியான ஒருங்கிணைப்பு தற்போது இல்லை. இதனை மாற்றி மாநில மனித உரிமை ஆணையங்களில் வழங்கப்படும் தீர்ப்புகளை எதிர்த்து தேசிய மனித உரிமை ஆணையத்தில் மேல்முறையீடு செய்யும் உரிமை மனித உரிமை மீறலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். இத்தகைய மேல் முறையீடும் 6 மாத காலத்திற்குள் முடிவு காணப்படும் வகையில் மனித உரிமை ஆணையங்களின் உள்கட்டமைப்பு பலப்படுத்தப்பட வேண்டும்.
மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டப்படி பல மாநிலங்களில் மாவட்ட அளவில் மனித உரிமை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பல மாநிலங்களில் இத்தகைய மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்கள் 15 ஆண்டுகளாக அமைக்கப்படாமல் உள்ளன. மனித உரிமை மாவட்ட நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ள மாநிலங்களில்கூட மனித உரிமை மீறல் குறித்த வழக்குகள் மிகக் குறைவாகவே தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை மிகக் குறைந்த வழக்குகளே தீர்வு காணப்பட்டுள்ளன. இதற்குக் காரணம் மனித உரிமை விழிப்புணர்வு பொதுமக்களிடம் குறைவாக இருப்பதோடு மனித உரிமை நீதிமன்றங்களில் முறையான விதிகள் இதுவரை ஏற்படுத்தப்படாததே ஆகும். இக்குறைபாடுகளை நீக்கி இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட மனித உரிமை நீதிமன்றங்கள் சிறப்பாகச் செயல்படுவதற்கு வழி காண வேண்டும்.
இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரும் மனித உரிமைகளை மதிக்கவும் மனித உரிமை மீறல்களை எதிர்க்கவும் தகுந்த மனித உரிமை கலாசாரத்தை தங்களிடயே வளர்த்துக் கொள்ள வேண்டிய தருணம் இதுவாகும். அதேநேரத்தில் மனித உரிமைகளின் மறுபக்கத்தையும் கவனிக்க வேண்டியது அவசியமாகும். உரிமைகளை எதிர்பார்க்கும் நேரத்தில் ஒவ்வொரு குடிமகனும் தமது கடமைகளைச் செவ்வனே செய்ய வேண்டும். மேலும் மனித உரிமைகள் பாதுகாப்புச் சங்கங்கள் தற்போது நாட்டில் பல்லாயிரக்கணக்கில் செயல்படுகின்றன. இச்சங்கங்களில் சில சங்கங்கள் சட்டப்படி பதிவு செய்யாமலும் சில பதிவு செய்த சங்கங்கள் முறையாக நிகழ்ச்சிப் பதிவேடு, கணக்குப் பதிவேடு ஆகியவற்றைப் பராமரிக்காமலும் இன்னும் சில சங்கங்கள் பொது மக்களிடமிருந்து புகார்களைப் பெற்றுக் கொண்டு எதிர்தரப்பினர்களுக்கு தாங்களே அறிவிப்பு அனுப்பி தங்களிடம் விசாரணைக்கு வர அவர்களை வற்புறுத்துகின்றன. இத்தகைய சட்டவிரோதமான செயல்பாடுகளைத் தவிர்க்க தேசிய மனித உரிமை ஆணையம் மனித உரிமைகள் பாதுகாப்புச் சங்கங்களை நெறிப்படுத்தி அதற்கென ஆணையத்தில் மனித உரிமைச் சங்கங்களுக்கான வழிகாட்டுக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். மேலும் குற்றவாளிகளும் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தை தங்களுக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளும் சூழ்நிலைகளைத் தவிர்க்க தேசிய ஆணையம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
15 ஆண்டுகளாக மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டம் தகுந்த பங்களிப்பைச் செய்து வருகிறது. இச்சட்டத்தில் நிலவும் சில குறைகளை நீக்கியும் சட்டம் வலுவாகச் செயல்பட சில புதிய அம்சங்களை இணைத்தும் மனித உரிமை நீதி நிர்வாகம் சிறப்பாகச் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய தருணம் இதுவாகும். இவ்வாறு தற்போதைய மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தை மறு ஆய்வு செய்து தக்க சீரமைப்பைச் செய்வதற்கு கல்வியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்துப் பொதுமக்களும் சிறப்பாகப் பங்களிப்பை வழங்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.