பொருட்குற்றம் தவிர்ப்போம்

அருந்தமிழில் உள்ள சொற்கள் அனைத்தும் ஆழமான பொருள் உடையவை. அத்தகைய சொற்களுள் ஒன்று "அல்குல்' என்பது. இச்சொல் பெண்ணின் உறுப்புகளுள் ஒன்றைக் குறிக்கிறது. ஐந்து தமிழ் அகரமுதலிகளில் அல்குல் என்னும் சொல்லுக்
Published on
Updated on
2 min read

அருந்தமிழில் உள்ள சொற்கள் அனைத்தும் ஆழமான பொருள் உடையவை. அத்தகைய சொற்களுள் ஒன்று "அல்குல்' என்பது. இச்சொல் பெண்ணின் உறுப்புகளுள் ஒன்றைக் குறிக்கிறது. ஐந்து தமிழ் அகரமுதலிகளில் அல்குல் என்னும் சொல்லுக்கு "பெண்குறி' என்று பொருள் தரப்பட்டுள்ளன. இப்பொருள் மிகவும் தவறானது.

உரைவேந்தர் ஒüவை.சு.துரைசாமிப்பிள்ளை, புறநானூறு 344-ஆம் பாடலுக்கு எழுதியுள்ள உரையில், ""அல்குல் என்பது இடைக்கும் முழந்தாளுக்கும் இடைப்பகுதி ஆகும்'' என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள "சங்க இலக்கியப் பொருட் களஞ்சியம்' என்னும் நூலிலும் இச்சொல்லுக்கு "இடுப்பு உறுப்பு' என்றே பொருள் கூறப்பட்டுள்ளது.

உலகுக்கே அன்னையாக விளங்கும் உமையம்மையைப் பற்றிக் கூறும்போது, மாணிக்கவாசகர், "பைந்நாகப் படவேரல்குல் உமை' என்றும், சுந்தரர், "இழைநுழை துகில் அல்குல் ஏந்திழை' என்றும் திருநாவுக்கரசர், "துடியிடை பரவை அல்குல் கொண்டை கொப்பளித்த கோதை' என்றும் குறிப்பிடுவதால், அல்குல் என்னும் சொல்லுக்கு முன்பு கூறிய பொருள் முற்றிலும் பொருந்தாது.

தலைவன், தலைவி அணிந்துகொள்ள மலர்களையும் தழைகளையும் தோழியிடம் கொடுக்கிறான். ""இத்தழைகள் எம் ஊரில் இல்லாததால் இவற்றைத் தலைவி தன் அல்குலில் அணிந்து கொண்டிருப்பதை எங்கள் வீட்டார் பார்த்தால் பல குற்றம் வரும்'' என்று கூறி தோழி ஏற்க மறுக்கிறாள்.

""மல்குற்ற தண்புனல் சூழ்தஞ்சை வாணன் மலய வெற்பா

  நல்குற் றவையிந்த நாட்டுள வன்மையின் நன்னுதலாள்

  அல்குற் றடத்தெமர் கண்டால் அயிர்ப்பர் அதுவுமன்றி

  பல்குற் றமும்வரும் யாங்கள் வாங்கேம் பசுந்தழையே!''

(தஞ்சைவாணன் கோவை-98)

  இல்லத்தில் உள்ளவர்கள் சாதாரணமாகப் பார்க்கக் கூடிய உறுப்பாக இங்கு அல்குல் குறிக்கப்படுவதால், அது பெண்ணின் இடுப்புறுப்பு என்பது தெள்ளத்தெளிவு.

  அகலிகையை ஏமாற்றி இன்பம் துய்த்த இந்திரனைச் சபித்த கெüதம முனிவர்,

  ""ஆயிரம் மாதர்க் குள்ள

  அறிகுறி உனக்குண் டாக''

என்றுதான் கூறினாரே தவிர, அல்குல் என்று கூறவில்லை.

திருமணக்கோலத்தில் வந்த ராமனைக் காணப் பெண்கள் திரண்டிருக்கின்றனர். பின்னால் நின்று கொண்டிருக்கும் பெண்களுக்கு முன்னால் நிற்கும் பெண்களின் கூந்தலும் கொங்கைகளும் அல்குலும் ராமனை மறைக்கின்றன. அவற்றுக்கு இடையே இருந்த வழியாக அவர்கள் ராமனைக் கண்டு களித்தனர் என்று கம்பர் கூறுவதும் இக்கருத்தினையே வலியுறுத்துகிறது.

  ""கருங்குழல் பாரம் வார்கொள்

  கனமுலை கலைசூழ் அல்குல்

  நெருங்கின மறைப்ப ஆண்டோர்

  நீக்கிடம் பெறாது விம்மும்

  பெருந்தடங் கண்ணி காணும்

  பேரெழில் ஆசை தூண்ட

  மருங்குலின் வெளிக ளூடே

  வள்ளலை நோக்கு கின்றாள்''

  ஒரு தலைவியிடம் அவளது தோழி வினவுகிறாள், ""வானத்தில் ஆடும் மயிலைப்போல் நீ ஆடுதற்கு நீ அமர்ந்துள்ள இந்த ஊஞ்சலை உன் அல்குலைப் பற்றி வேகமாக ஆட்டி விடட்டுமா?'' என்கிறாள்.

  ""விசும்பாடு ஆய்மயில் கடுப்ப யானின்று

  பசுங்கால் அல்குல் பற்றுவனன் ஊக்கி

  செலவுடன் வருகோ தோழி''               (நற்றிணை-222)

ஊஞ்சலை ஆட்டுவோர், பின்னிருந்து ஊஞ்சலில் அமர்ந்திருப்பவரின் இடுப்புப் பகுதியைப் பிடித்து உந்துவதுதான் இயல்பானது. இவ்விடத்திலும் அல்குல் என்னும் சொல் இடுப்பு என்னும் பொருளில் ஆளப்பட்டுள்ளது.

வையை ஆற்றை வருணிக்கும் போது இளங்கோவடிகள், ""கொடுங்கரையாகிய அல்குலையும், வாலுகமாகிய முலையினையும் இதழாகிய சிவந்த வாயினையும், கயலாகிய கண்ணினையும், அறலாகிய கூந்தலினையும் முல்லையாகிய நகையினையும் உடைய பூங்கொடி'' (புறஞ்சேரியிறுத்த காதை-159-169) என்று கூறுகிறார். அல்குலை ஆற்றின் கரைகளுக்கு ஒப்பிட்டதால் அது இரண்டு பக்கங்களிலும் இருக்கக் கூடிய பகுதி என்பது தெளிவு. இச்சொல், பெண்ணின் இடையில் இருந்து முழந்தாள் வரையிலும் உள்ள பக்கவாட்டுப் பகுதியைக் குறிப்பது.

மன்னனுக்குக் கொடுப்பதற்காக கள்ளைப் பொற்கலத்திலே சுமந்து வருகிறாள் ஒரு பெண். கள் குடத்தின் சுமையைத் தாங்க முடியாமல் அவள் அல்குல் தளர்ந்தது என்று கூறப்பட்டுள்ளது. பெண்கள் குடம் சுமந்து வரும்போது அச்சுமை அவர்களது இடையை ஆதாரமாகக் கொண்டு தன் பாரத்தை அவர்களது இடுப்பில் இறக்கும் என்பது அனைவரும் அறிந்த செய்தி.

 ""நாவஞ்சும் முள்ளெயிற்று மகளிர்

  அல்குல் தாங்கா அசைஇ மெல்லென

  கலங்கலந் தேறல் பொலங்கலத் தேந்தி

  அமிழ்தென மடுப்ப மாந்தி''  (புற-361)

  சீதையைத் தன் தாயாகவே ஏற்றுக்கொண்ட அனுமனிடம் சீதையின் அங்க அடையாளங்களைக் கூறும்போது, ராமன் கூறியதாக ஒரு பாடல் உள்ளது.

  ""வார்ஆழிக் கலசக் கொங்கை

  வஞ்சிபோல் மருங்கு லாள்தன்

  தாரஆழிக் கலைசார் அல்குல்

  தடங்கடற் குவமை தக்கோய்!

  பார்ஆழி பிடரில் தாங்கும்

  பாந்தளும் பனிவென் றோங்கும்

  ஓர்ஆழித் தேரும் ஒவ்வா

  உனக்குநான் உரைப்பது என்னோ?''

ஒரு பெண்ணுக்குரிய அடையாளமாக, அதுவும் ஒரு பக்தனிடம், "அல்குல்' என்ற சொல் கூறப்படுவதால் அது பெண்குறி என்று கொள்ள முடியாது. இதுகாறும் கூறியவற்றால், அல்குல் என்பது பெண்ணின் இடுப்புப்பகுதி என்பது சந்தேகத்துக்கு இடமின்றி தெள்ளத் தெளிவாகிறது. இனி தமிழ் அறிஞர்களும், எழுத்தாளர்களும், கவிஞர்களும் தங்கள் படைப்புகளில் பெண்ணின் இடுப்புப் பகுதியை அல்குல் என்றே குறிப்பிட்டு அச்சொல்மீது படிந்துள்ள மாசினை நீக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com