தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்களின் தலைவிதியை திரை மறைவில் நிர்ணயிக்கும் நிழல் அமைப்புகளாக மாறியுள்ளன இன்றைய பெற்றோர் ஆசிரியர் கழகங்கள்.
பெற்றோரையும் ஆசிரியரையும் கொண்டு செயல்படுவதாக இவை கூறிக்கொண்டாலும் இதில் இடம்பெற்றுள்ளவர்களோ தங்கள் அந்தஸ்தை உயர்த்திக் கொள்ளவும், சுய விளம்பரம் தேடிக்கொள்ளவும் கழகத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் முதலீடு இல்லாத தொழிலதிபர்கள்தான் என்று இப்போது பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாணவர்களின் சமூக, பொருளாதார மற்றும் கலைத் திறன்களை ஊக்குவிக்கவும், ஆசிரியர்-பெற்றோர் பிணைப்பை, உறவை மேம்படுத்தவும், அதன் மூலம் மாணவர்களின் கல்வி நலன்கள் உயர்ந்திட வேண்டும் என்ற உயரிய நோக்கில் 1960-ல் பெற்றோர் ஆசிரியர் கழகம் தோற்றுவிக்கப்பட்டது.
முதலில் பஞ்சாப் மாநிலப் பள்ளிகளில் மட்டும் தோற்றுவிக்கப்பட்ட இந்த சங்கம், 1964-களில் தமிழகத்திலும் தொடங்கப்பட்டது. பெற்றோர் - ஆசிரியர் கழகம் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கட்டாயப்படுத்தியது தமிழகத்தில்தான்.
மாநில அளவில் கல்வி அமைச்சரை தலைவராகவும், பள்ளிக் கல்விச் செயலர், பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி, மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர்களை துணைத் தலைவர்களாகவும் கொண்டு செயல்படும் இந்த சங்கத்துக்கு ஒரு செயலரும் உள்ளார்.
இந்தச் சங்கம் பள்ளிகள் அளவில் பெற்றோரைத் தலைவராகவும், தலைமை ஆசிரியரை செயலராகவும் கொண்டு செயல்படுகிறது.
கல்வி ஆண்டுத் தொடக்கத்தில் மாணவர்களிடம் இருந்து பெற்றோர் ஆசிரியர் சங்க பதிவுக் கட்டணமாக ரூ. 25 வரை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற விதி உள்ளது.
இதேபோல் ஒவ்வொரு பி.டி.ஏ.வும் மாநில சங்கத்துக்கு, அந்தந்தப் பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப இணைப்புக் கட்டணம் செலுத்த வேண்டும்.
இதைச் சங்கத்தின் நிதியில் இருந்தோ அல்லது மாணவர்களிடம் இருந்து பெறப்படும் வசதிக் கட்டண நிதியிலிருந்தோ செலுத்தலாம்.
மாணவர்களிடம் இருந்து இதைத் தவிர வேறு கட்டணம் ஏதேனும் வசூலிக்க வேண்டும் என்றால் என்ன காரியத்துக்காக என்று திட்டமிட்டு கல்வி அலுவலர்களின் முன் அனுமதி பெற்ற பின்னரே வசூலிக்க வேண்டும்.
இதே போல் பள்ளி தொடங்கிய முதல் 6 மாதத்துக்கு மாணவர், பெற்றோரிடம் இருந்து எந்த நன்கொடையும் பெறக் கூடாது.
ஆனால் மேற்கண்ட விதிகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு இப்போது பெரும்பாலான பி.டி.ஏ.க்கள் வசூல் வேட்டைகளில் ஈடுபட்டுள்ளன.
பி.டி.ஏ.க்கள் பிழைப்புக்கு வழியே தவிர, மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உதவுவதற்கான வழி அல்ல என்ற நிலை இப்போது உள்ளது.
முக்கியமாக பி.டி.ஏ.வில் உறுப்பினராக இருக்க அப் பள்ளி மாணவரின் தந்தையாக இருக்க வேண்டும் என்ற விதி பெரும்பாலான பள்ளிகளில் பின்பற்றப்படவில்லை என்பதே உண்மை.
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பள்ளிக்கு அருகில் உள்ள ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவரே அப்பள்ளிக்கு பி.டி.ஏ. தலைவராகிவிடுவதும், அதன் மூலம் தலைமை ஆசிரியரை மடக்கி, மாணவர் சேர்க்கையில் வசூல் வேட்டையில் ஈடுபடுவதும் வாடிக்கையாகிவிட்டது.
பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலராக இருந்தாலும், பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்கள் உறுப்பினர்களாக இருந்தாலும் கழகத்தைப் பகைத்துக் கொண்டால் இடமாற்றம் செய்யப்பட்டு விடுவோம் என்ற பயத்தில், பி.டி.ஏ.வின் செயல்களுக்குத் துணைபோகும் தலைமை ஆசிரியர்கள் ஏராளம்.
மேலும் ஆங்கில வழிக் கல்வி இருந்தால்தான் (சுயநிதிப் பிரிவு) மாணவர் சேர்க்கைக்கு கட்டணம் வசூலிக்கலாம் என்பதால், பல பள்ளிகளில் ஆங்கில வழியை ஊக்குவித்து வளர்க்கின்றனர் பி.டி.ஏ.வினர்.
இதனால்தான் பள்ளி வளர்ச்சி நிதி என்ற பெயரில் முதலில் கட்டணம் வசூலிக்கத் தொடங்கிய இவர்கள், இப்போது கட்டட நிதி என்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் அளிக்க நிதி என்றும் பல்வேறு பெயர்களில் சூட்டி வசூலில் ஈடுபடுகின்றனர்.
இதனால் கட்டாய இலவசக் கல்வி என்ற நிலை மாறி கட்டாயக் கட்டணக் கல்வி என்ற நிலை தமிழகத்தில் தோன்றியுள்ளது. தனியார் பள்ளிகள்தான் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுகின்றனர் என்று அங்கிருந்து தப்பிப் பிழைத்து அரசுப் பள்ளிகளில் நுழையும் பெற்றோர், இப்போது தனியார் பள்ளிகளுக்கு சற்றும் இளைத்தவனில்லை என்று கறார் கட்டண வசூலில் ஈடுபடும் பி.டி.ஏ.க்களைக் கண்டு விழிபிதுங்கி நிற்கின்றனர்.
அரசாங்கமும் இவர்களை ஊக்குவிக்கும் விதமாகவே சுயநிதிப் பிரிவுகளை அவர்கள் இஷ்டப்படி ஆரம்பித்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டது. மேலும் கட்டடம், ஆசிரியர் கேட்கக் கூடாது என்று நிபந்தனை வேறு.
மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் பொறுப்பை இனியும் அரசு தட்டிக் கழிக்காமல், கல்விக்கு ஒதுக்கும் நிதியின் அளவைக் கூட்டி, அரசு, உதவி பெறும் தனியார் பள்ளிகளில் அனைத்துச் செலவுகளையும் ஏற்க வேண்டும்.
பெற்றோர் ஆசிரியர் கழகங்களை அவை என்ன நோக்கத்துக்காக ஏற்படுத்தப்பட்டனவோ அந்த லட்சியத்தை அடைய மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
அதற்காக பி.டி.ஏ. விதிகளைக் கடுமையாக்க வேண்டும். சங்க வரவு-செலவுக் கணக்குகளை முறையாகத் தணிக்கை செய்ய வேண்டும்.
பெற்றோர் அல்லாதோர் இந்தச் சங்கத்தில் இடம்பெறத் தடை விதிப்பதுடன், சுழற்சி முறையில் பதவி பெறச் செய்ய வேண்டும் என்பதே எதிர்காலத்தின் தேவையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.