அரசு பள்ளிகளில் மழலையர் கல்வி

மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்கல்வி பயில தங்கள் குழந்தைகளை அரசு கல்லூரிகளில் சேர்க்க முதலிடம் கொடுக்கும் பணக்காரப் பெற்றோர்கள், தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை அரசுப் பள்ளிகளை நாடும் வகை
Updated on
2 min read

மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்கல்வி பயில தங்கள் குழந்தைகளை அரசு கல்லூரிகளில் சேர்க்க முதலிடம் கொடுக்கும் பணக்காரப் பெற்றோர்கள், தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை அரசுப் பள்ளிகளை நாடும் வகையில், அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டியதன் இன்றியமையாமை தமிழக அரசுக்கு ஏன் புரியாமல் இருக்கிறது என்பதுதான் புதிராகத் தொடர்கிறது.

குறிப்பாக 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள தொடக்கப் பள்ளிகளின் நிலை இன்று கேள்விக்குறியாகி உள்ளது.

தற்போதைய நிலை தொடர்ந்து நீடித்தால் சில ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளும் மாணவர்கள் இன்றி ஆசிரியர்களை மட்டுமே கொண்டு இயங்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதற்குக் காரணம் பெற்றோர்களின் ஆங்கில மோகம் மட்டுமே என்று கூறிவிட முடியாது.

தொடக்கப் பள்ளிகளின் தரமும், கற்பிக்கும் முறையும்கூட இதற்கு முக்கியக் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.

மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்துவிட்டதால் தங்கள் ஊரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியை தக்கவைக்க விழுப்புரம் மாவட்டம், கே.அகரம் கிராம மக்கள் வித்தியாசமான முடிவை எடுத்துள்ளனர்.

அதாவது தங்கள் ஊரைச் சேர்ந்த குழந்தைகள் யாரையும் வெளியூரில் உள்ள பள்ளிகளிலோ அல்லது அருகில் உள்ள மெட்ரிகுலேஷன், நர்சரி பள்ளிகளிலோ சேர்க்கக் கூடாது என்று ஊர்க் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

இதையும் மீறி அருகில் உள்ள ஆங்கிலப் பள்ளியில் தங்கள் குழந்தைகளைச் சேர்த்த அந்த கிராமத்தைச் சேர்ந்த இரு குடும்பத்தினரை ஊரைவிட்டு விலக்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கட்டுப்பாடு சரி என்று வாதிட முடியாது. அதேநேரத்தில் தங்கள் ஊரில் தொடர்ந்து அரசு தொடக்கப் பள்ளி இயங்க வேண்டும் என்கிற கிராம மக்களின் முனைப்பைப் பாராட்டாமலும் இருக்க முடியாது.

நடுத்தர வர்க்கத்தினர் தங்களது குழந்தைகள் பெரும்பாலும் 5-ம் வகுப்புவரை மட்டும் ஆங்கில வழியில் படித்தால் போதும் என்று விரும்புகின்றனர்.

அதற்குள் குறிப்பிட்ட அளவு பணத்தை பள்ளி நிர்வாகங்கள் கறந்துவிடுவதால் இதற்குமேல் தங்களால் தாக்குப்பிடிக்க முடியாது என்று கருதி ஒரு தரப்பினர் 6-ம் வகுப்பு முதல் தங்கள் குழந்தைகளை தமிழ் வழிக்கல்வியில் சேர்த்துவிடுகின்றனர்.

மற்றொரு தரப்பினர் தங்கள் குழந்தை 5-ம் வகுப்புவரை ஆங்கில வழியில் படித்துள்ளதால் அடிப்படை ஆங்கில அறிவு ஏற்பட்டிருக்கும். இதை வைத்து அவன் முன்னேறிவிடுவான் என்று கருதி 6-ம் வகுப்பு முதல் தமிழ் வழியில் சேர்க்கின்றனர்.

இதனால், 6-ம் வகுப்பு முதல் அரசு, அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டதால், சில ஆண்டுகளுக்கு முன்புவரை கல்வி வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்த இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் இன்று காற்றாட ஆரம்பித்துவிட்டன.

கடந்த ஆண்டு சில தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் போதிய அளவு மாணவர்கள் சேரவில்லை என்பதால் அப் பள்ளிகளை நிர்வாகத்தினரே இழுத்து மூடிய சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.

ரூ. 2 லட்சம் வரை விலைபோன ஆசிரியர் பயிற்சிப் படிப்பு இன்று ஆண்டுக்கு ரூ. 25 ஆயிரம் கட்டினால் போதும் என்று கூவிக்கூவி அழைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னர் கல்லூரியில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் கூட இளநிலை ஆசிரியர் பயிற்சியைவிட (பி.எட்.) இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் (டி.டி.இ.) விரும்பிச் சேர்ந்தனர்.

தற்போது தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால் இடைநிலை ஆசிரியை பயிற்சியை விட, இளநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பி.எட். படிப்புக்குத் தற்போது ஓரளவு வரவேற்புக் கிடைத்துள்ளது. இருந்தபோதும் கல்விச் சந்தையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ரூ. 1 லட்சம் வரை விலைபோன பி.எட். படிப்பு இன்று ரூ. 50 ஆயிரமாகக் குறைந்துள்ளது.

அரசியல் மட்டுமல்லாமல் அரசின் திட்டங்களையும் தமிழகத்தைப் பார்த்தே நிறைவேற்றிவரும் நமது அண்டை மாநிலமான புதுச்சேரி அரசு, தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்துவருவதைத் தடுக்கும் நடவடிக்கையில் தமிழக அரசை முந்திக்கொண்டுவிட்டது.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே அந்த மாநில முதல்வராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த என். ரங்கசாமி அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளைத் தொடங்க உத்தரவிட்டார்.

தற்போது பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்தத் திட்டம் மூலம் புதுச்சேரியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைவது தடுக்கப்பட்டுள்ளது.

இதைப் பின்பற்றி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் மழலையர் கல்வியை (எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளை) அரசு உடனே தொடங்கவேண்டும்.

இதற்கு தமிழ் உணர்வு என்ற முறையில் எதிர்ப்பு ஏற்படலாம்.

ஆனால், இலங்கையில் தமிழ் இனமே அழிவதை வேடிக்கை பார்த்ததோடு மட்டுமல்லாமல் அதற்கு உதவியும் செய்தவர்கள்தானே நாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com