பாணர் சங்க காலத்தில் வாழ்ந்த நாடோடிக் கூட்டத்தைச் சார்ந்த ஒரு வகையினர். இவர்கள் இசையிலும் பாட்டிலும் வல்லவர்களாக இருந்துள்ளனர். குறுநிலத் தலைவர்களையோ மன்னர்களையோ சந்தித்துத் தங்கள் திறமையை வெளிப்படுத்திப் பரிசில் பெற்று வாழ்வதே பாணர்களின் வாழ்க்கை முறையாகும். தொல்காப்பியர், ஆற்றுப்படைக்கு உரியோராகப் பாணரையும் குறிப்பிட்டுள்ளார். சங்க இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது தலைமக்களின் அக, புற வாழ்வில் பாணர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவு இருந்துள்ளது.
அகத்திணையில் மருதத்திணைப் பாடல்கள் பாணர்கள் பற்றிப் பேசியுள்ளன. இப்பாடல்களில் தலைவர்களைப் பரத்தையரிடம் கூட்டுவிப்போராகக் காட்டப்பட்டுள்ளனர். இதனால் மகளிரால் இகழப்படுவோராகவே பாணர்கள் இருந்துள்ளனர். அதே நேரத்தில் முல்லைத்திணைப் பாடல்களில் பாணர்களின் செயல்பாடு பாராட்டும்படி இருந்துள்ளது. முல்லைத்திணைப் பாடல்களில் அவர்கள் தலைவர்களைப் பரத்தையரோடு கூட்டுவிப்பவர்களாகக் காட்டப்படவில்லை. வினைமேற் சென்றிருக்கும் தலைவர்களிடம் தூது செல்வோராகவே காட்டப்பட்டுள்ளனர்.
அகநானூற்றில் 40 முல்லைத்திணைப் பாடல்கள் உள்ளன. இதில் இடம்பெற்றிருக்கும் தலைவர்கள் போர்மேற் செல்லும் தலைவர்களாவர். போருக்குச் சென்ற தலைவர்கள் திரும்பி வரும்வரை காத்திருக்க வேண்டியது தலைவியின் கடமையாகும். அந்த அடிப்படையில், "இருத்தலும் இருத்தல் நிமித்தமும்' முல்லைத்திணைக்கு உரிய உரிப்பொருளாகக் கூறப்பட்டுள்ளது. அகநானூற்றில் உள்ள முல்லைப் பாடல்கள் பருவம் கண்டு தலைவி வருந்துதல், வருத்தமுற்றிருக்கும் தலைவியைத் தோழி தேற்றுதல், போர்ப் பாசறையில் இருக்கும் தலைவன் தன் நெஞ்சுக்குக் கூறுதல், திரும்பி வரும் தலைவன் பாகனிடம் பேசுதல், தலைவனின் வரவு கண்டு உழையர்கள் வாழ்த்துதல், தலைவனின் வருகைக்குக் காரணமான மழையைத் தோழி பாராட்டுதல் என்ற அடிப்படையிலேயே அமைந்துள்ளன. ஒரே ஒரு பாடல் மட்டும் பாணன் தன் அருகில் இருப்போரிடம் பேசுவதாக உள்ளது. அப்பாடல் வருமாறு:
""அரக்கத்து அன்ன செந்நிலப் பெருவழி
காயாஞ் செம்மல் தாஅய், பலஉடன்
ஈயல் மூதாய் வரிப்பப், பவளமொடு
மணி மிடைந்தன்ன குன்றம் கவைஇய
அம்காட்டு ஆர்இடை, மடப்பிணை தழீஇத்
திரிமருப்பு இரலை புல்அருந்து உகள
முல்லை வியன்புலம் பரப்பிக் கோவலர்
குறும்பொறை மருங்கின் நறும்பூ அயரப்
பதவு மேயல் அருந்து மதவுநடை நல்ஆன்
வீங்குமாண் செருத்தல், தீம்பால் பிலிற்ற
கன்றுபயிர் குரல, மன்றுநிறை புகுதரும்
மாலையும் உள்ளார் ஆயின், காலை
யாங்கு ஆகுவம் கொல் பாண என்ற
மனையோள் சொல்எதிர் சொல்லல் செல்லேன்
செவ்வழி நல்யாழ் இசையினென், பையெனக்
கடவுள் வாழ்த்திப் பையுள் மெய்ந் நிறுத்து
அவர்திறம் செல்வேன் கண்டனென், யானே
விடுவிசைக் குதிரை விலங்குபரி முடுகக்
கல்பொருது இரங்கும் பல்ஆர் நேமிக்
கார்மழை முழக்கு இசை கடுக்கும்
முனை நல் ஊரன் புனைநெடுந் தேரே!''
(அகம்-14)
குன்று சூழ்ந்த நிலம். ஒன்றை ஒன்று தழுவி மான்கள் புற்களை மேயும் நேரம். ஆயர்கள் இறைவனை வழிபடும் நேரம். "மாலையில் தலைவன் வரவில்லை, காலையில் நான் என்னாகுவேன்?' என்றாள் தலைவி. ""நான் எதிர்மொழி சொல்ல முடியாமல் அந்த சோகத்தை யாழில் மீட்டி, கடவுளை வாழ்த்திப் பாடினேன். அதோடு தலைவன் இருக்கும் இடத்திற்குச் செல்லவும் கருதினேன். அதற்குள் இடிபோன்று ஒலி எழுப்பும் தேர் எதிர்வரக் கண்டேன்'' என்று பாணன் கூறுவதாகப் பாடலின் பொருள் அமைந்துள்ளது. இப்பாடலில் தலைவியின் வருத்தமோ தலைவனின் வருகையோ பெரிதாகப் பேசப்படவில்லை. இவர்கள் இருவருக்கும் இடையே பாணனின் மனநிலைதான் பெரிதாகப் பேசப்பட்டுள்ளது.
""மாலையும் உள்ளாராயின் காலை
யாங்காகுவம் கொல் பாணா''
என்பதுதான் தலைவியின் வினா. இதற்கு விடை கூற முடியாத பாணன் வருந்துகிறான். பிறகு சோக கீதத்தை யாழில் மீட்டிப் பாடுகிறான். பிறகு கடவுளை வாழ்த்துகிறான். பிறகு தலைவன் இருக்கும் இடம் செல்ல முனைகிறான். தலைவி கேட்ட வினாவையும் பாணனின் எதிர்விளைவையும் ஒப்பிட்டு நோக்க, தலைவிக்காகப் பாணன்பட்ட வேதனையே மிகுதியாகத் தெரிகிறது. அவனுடைய வேதனையைப் போக்கும் வகையில் தலைவனின் தேர் வருவது அவனுக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுப்பதாக உள்ளது. இதிலும் தலைவனின் தேர் மிகுந்த ஒலியோடு வருவது குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர தலைவனின் விரைவு மனம் பற்றிக் குறிப்பிடப்படவில்லை.
தலைவியின் வருத்தத்தை அறிந்த பாணன், தலைவன் இருக்கும் இடத்திற்குச் சென்று இவளது வருத்தத்தைக் கூறி விரைவில் வரத் தூண்டுவதற்கு உடனே புறப்பட்டான். எதிர்பாராத விதமாக அவனே வந்துவிட்டான். தலைவி பாணனிடம், ""நீ சென்று தலைவனை உடனே வரச்சொல்'' என்று எதுவும் சொல்லவில்லை. ஆயினும் பாணன் செல்லத் தயாராகிறான். அந்த அளவிற்குத் தலைமக்களோடு நெருக்கம் உடையவனாகப் பாணன் காட்டப்பட்டுள்ளான்.
"பாணன் தன் பாங்காயினார் கேட்கச் சொல்லியது' என்பதுதான் இப்பாடலுக்கான துறைக் குறிப்பாகும். பாங்காயினார் என்பதற்கு உறவினர், அருகில் இருப்பவர் என்ற பொருள் உண்டு. அந்த வகையில் தன் அருகில் இருக்கும் தம் இனத்தாரிடம்தான் இச்செய்தியை அவன் கூறியிருக்கிறான் என்பது புலனாகிறது. தன் அருகில் இருப்பவர்களிடம் தான் அவன் பேசினான் என்பதற்கு நேரடியான சான்று எதுவும் பாடலுள் இல்லை. ஆயினும் "மனையோள் சொல்லெதிர் சொல்லல், செல்லேன்' என்ற அவனது கூற்று மேற்சுட்டிய துறையை நினைவுறுத்துவதாகவே உள்ளது. மற்றொன்று, வேறு யாரிடமும் பாணன் பேசியிருக்கவும் முடியாது.
தலைவி தன் வருத்தத்தைச் சொன்னவுடன் அவளைத் தேற்றியிருந்தாலோ, தலைவனிடம் "நீ விரைவில் கிளம்பு' எனச் சொல்லியிருந்தாலோ பாணனின் செயல் இயல்பானதாக இருந்திருக்கும். அவ்வாறின்றி அவள் வருத்தத்தைத் தன் வருத்தமாகக் கொண்டு அவன் செயல்படத் துவங்கியதுதான் இப்பாடலைத் தனித்துக் காட்டுவதாக உள்ளது. மேலும் பாணன் தன் பாங்காயினாரிடம் பேசியதாக வேறு பாடல் எதுவும் இல்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.