கடந்தகாலங்களில் அரசு செய்த தவறு மீண்டும் அரங்கேறப் போகிறது. ஏழைகளின் உண்மை நிலையைப் பதிவு செய்யாமல், அதிகமானோரை ஏழைகளாகக் கணக்குக் காட்ட, நடைபாதையில் வசிப்போரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை "வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோர்' கணக்கெடுப்பு மூலம் நாடு முழுவதும் கேட்டு வைத்ததன் விளைவு பல புதிய ஏழைகள் உருவாக்கப்பட்டார்கள். இந்தக் கணக்கெடுப்பு மீண்டும் நடத்தப்பட உள்ளது.
ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை மாற்ற பல நலத்திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. இவற்றுக்கான இலக்கு ஏழைகள். இவர்களை அடையாளம் காண்பதற்காக, "வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோர்' கணக்கெடுப்பு நடத்துகிறது அரசு.
ஏற்கெனவே 2002-ல் ஒரு முறையும், 2008-ல் மறு முறையும் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 52 மதிப்பெண்களுக்கு 13 கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் 17 மதிப்பெண்கள், அதற்குக் குறைவான மதிப்பெண் பெற்றவர்களை, "வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோர்' என வகைப்படுத்தியது.
அந்தக் கணக்கெடுப்பின்படி, "2-க்கும் குறைவான உடைகள், ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு கூட கேள்விக்குறி, வீடு கிடையாது, எவ்வித எரிவாயு, தொலைக்காட்சிப் பெட்டி, இரு சக்கர வாகனங்களும் கிடையாது, பொதுக் கழிப்பிடத்தைப் பயன்படுத்துகிறோம். வீட்டில் குழந்தைகள் வேலைக்குச் செல்கிறார்கள். படிக்க வைப்பதில்லை. கொத்தடிமைத் தொழிலாளர்களாக உள்ளோம். மின் இணைப்புக் கிடையாது' எனப் பதில் அளித்தவர்கள் மட்டுமே வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியலில் உள்ளனர்.
இதன்படி, தமிழகத்தில் 36.32 லட்சம் குடும்பத்தினர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வந்தவர்கள். இவர்களில், மாத வருவாய் ரூ.250-க்கும் குறைவாக ஈட்டுவோர் 7.21 லட்சம் குடும்பத்தினர். ரூ.500-க்கு குறைவாக ஈட்டுவோர் 14 லட்சம் குடும்பத்தினர்.
4 உடைகளுக்கும் குறைவாக வைத்திருப்போர் 17.66 லட்சம் குடும்பத்தினர். இரு உடைகளுக்கும் குறைவாக வைத்திருப்போர் 5.59 லட்சம் குடும்பத்தினர்.
தினசரி ஒரு வேளையும், அதற்குக் குறைவாகவும் உணவு பெறுவோர் எண்ணிக்கை மட்டும் 14 லட்சம் குடும்பங்கள்.
கொத்தடிமைகளாக இருக்கும் குடும்பங்கள் 5.92 லட்சம். குழந்தைத் தொழிலாளர்கள் கொண்ட குடும்பங்கள் 4.83 லட்சம்.
இந்தக் கணக்கெடுப்பின்படி தமிழக மக்கள் தொகையில் 25 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளதாகக் காட்டப்பட்டுள்ளது.
அப்படியெனில், இவர்கள் அனைவரும் சாலையோர நடைபாதைகளில் மட்டுமே வசித்துக் கொண்டிருக்க வேண்டும். வாடகை வீட்டில் வசிப்பதாக இருந்தாலும், அந்தக் குடும்பத்தின் மாத வருவாய் ரூ.500-ஐ கடந்துவிடும்.
தற்போதைய சூழலில், அரசே இலவச தொலைக்காட்சிப் பெட்டி, 2 ஏக்கர் நிலம், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, சமையல் எரிவாயு இணைப்பு எனப் பலவற்றையும் வழங்கியிருக்கிறது. ஒவ்வொரு கிராமத்திலும் ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் மூலம் ரூ.50 முதல் ரூ.80 வரை தினசரி ஊதியம் வழங்கப்படுகிறது. அப்படியிருக்க 25 சதவீதம் பேர் பரம ஏழைகளாக இருக்க வாய்ப்புக் கிடையாது. கணக்கெடுப்பில் எங்கோ அரசு சறுக்கியிருக்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோர் பட்டியல் படி "10-க்கும் அதிகமான உடைகள், ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு, தனி கழிப்பறை, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, தொலைபேசி, இரு சக்கர வாகனம், சிறிதேனும் நிலம், வேலைக்குச் செல்லாமல் பள்ளி செல்லும் குழந்தைகள் இருந்தால் இந்தப் பட்டியலில் இடம் கிடையாது.
மேற்கூறியவற்றைப் பதிலாக அளித்தவர்கள் 17 மதிப்பெண்களைக் கடந்திருப்பார்கள். ஆனால், இன்றைய விலைவாசி உயர்வுக்கு மத்தியில் இவர்களும் ஏழைகளாகத்தான் வாழ்ந்து வருகின்றனர்.
ஏழை, நடுத்தரக் குடும்பத்தினரின் வாழ்க்கை முறையில், இவை அனைத்தும் அத்தியாவசியத் தேவைகளாக உருமாறிவிட்டன.
அத்தியாவசியத்தையும் ஆடம்பரம் எனக் கருதி, கேட்கப்படும் இதுபோன்ற கேள்விகள், போலியான ஏழைகளை உருவாக்குமே தவிர, உண்மையான ஏழைகளுக்குப் பலனளிக்கப் போவதில்லை.
நடப்பாண்டின் முடிவில் மீண்டும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோர் கணக்கெடுப்பு நடத்த அரசு தயாராகி வருகிறது.
இன்றைய நிலையில், விலைவாசி உயர்வால் சிரமப்படும் ஏழைகள், நடுத்தர மக்களின் வாழ்க்கை நிலை, இவர்களது உண்மையான வருவாய், இவர்களுக்குத் தேவைப்படும் உதவிகள், வாழ்வாதாரத்தைப் பெருக்குவதற்கான வழிகள், வேலைவாய்ப்புகள் போன்றவற்றைக் கவனத்தில் கொண்டு, முறையான கேள்விகளைக் கேட்டு கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இதற்கேற்ப வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோர் வரையறைக்கான மதிப்பெண்களை உயர்த்த வேண்டும்.
இவ்வாறு உயர்த்தினால், ஏழைகள், மத்திய நடுத்தரக் குடும்பத்தினரும் கூட இப் பட்டியலில் இடம் பெறுவார்கள்.
அரசு எதிர்பார்த்தபடி, இப் பட்டியலில் அதிகமானோரும் இடம் பிடிப்பார்கள். ஆனால், வருவாயைக் குறைத்தும், வாழ்வாதாரத்தைக் கீழ் நிலையிலும் காட்ட வேண்டிய சூழல் மக்களுக்கு ஏற்படாது.
மீண்டும், "டிவி இருக்கிறதா? 2 உடைகள் இருக்கிறதா? ஒரு வேளையாவது சாப்பிடுகிறீர்களா?' என்பன போன்ற கேள்விகளைக் கேட்டு, கணக்கெடுப்பு நடத்துபவர்களே சுயமாக மதிப்பெண்களை எழுதி, சம்பந்தமே இல்லாதவர்களை வறுமைக் கோட்டுக்குக் கீழ் வரவழைக்கும் வித்தையைக் கையாண்டால், அரசின் நலத்திட்ட உதவிகள் முறையானவர்களைச் சென்றடையாது. ஏழைகள் பற்றிய கணக்கெடுப்பும் உண்மையானதாக இருக்காது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக இருக்கும் வரை காவிக்கொடி பறக்காது: முதல்வர் ஸ்டாலின்
தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!

மகாராஷ்டிரத்தில் தேசிய கல்விக் கொள்கையின்கீழ் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்களுக்கும் கட்டாய பயிற்சி!

போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

