மகாவித்துவான் கோ.வடிவேலு செட்டியார்

தமிழ் இலக்கிய வரலாற்றில் சைவ சித்தாந்த நூல்கள் தனி இடம் பெற்றதைப் போல, "அத்வைதம்' பேசும் நூல்களும் பெருமளவில் எழுதப்பட்டன. "தத்துவராயர்' திரட்டிய சிவப்பிரகாசப் பெருந்திரட்டில், தமிழில் அத்வைதம் பேசும்
மகாவித்துவான் கோ.வடிவேலு செட்டியார்

தமிழ் இலக்கிய வரலாற்றில் சைவ சித்தாந்த நூல்கள் தனி இடம் பெற்றதைப் போல, "அத்வைதம்' பேசும் நூல்களும் பெருமளவில் எழுதப்பட்டன. "தத்துவராயர்' திரட்டிய சிவப்பிரகாசப் பெருந்திரட்டில், தமிழில் அத்வைதம் பேசும் நூல்கள் ஏராளமாக இருப்பதாக தெ.பொ.மீ. கூறுகிறார்.

இந்தியாவில் வழங்கும் மொழிகளிலேயே தமிழ் மொழியில்தான் முதல்முதலாக பகவத்கீதை மொழிபெயர்க்கப்பட்டது. ஸ்ரீபட்டர் என்பவர் மொழிபெயர்த்த அந்த நூலுக்கு "பரமார்த்த தரிசனம்' என்று பெயர். இத்தகைய  நூல்கள் தத்துவச் செறிவு மிக்க வடமொழியில் மட்டும்தான் இருக்கும் என்கிற கருத்தைப் பொய்ப்பிக்கும் விதமாக நாம் நம்புவதற்கு மாறாக, அஞ்ஞவதைப் பரணி, மோகவதைப் பரணி என்று இலக்கிய நடையிலும் தச்சன் பாட்டு, பள்ளிப் பாட்டு, மெய்ஞானக் கொம்மி, ஞானக் குறவஞ்சி என்று பாமர மக்களுக்கும் புரியும்படி நாட்டுப்புற மொழியிலும் வேதாந்தக் கருத்துகள் எழுதப்பட்டுள்ளன.

கைவல்ய நவநீதம், ரிபுகீதை, பிரபோத சந்திரோதயம் போன்ற புகழ்பெற்ற நூல்களுடன் அத்வைதத்தை முதன்முதலில் பயிலத் தொடங்கும் மாணவர்களுக்கான "நானா சீவ வாதக் கட்டளை' போன்ற எளிய நூல்களும் தமிழ் மொழியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய அத்வைத பாரம்பரியத்தை மாணவர்களுக்குப் போதித்துவந்த பல பெரும் புலவர்கள் 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் புகழுடன் விளங்கி வந்தனர். மறைமலை அடிகளின் ஆசிரியர் சூளை சோமசுந்தர நாயகர் போன்று புகழ்பெற்ற மற்றுமொரு பேராசிரியர் கோ.வடிவேலு செட்டியார். இவர் அத்வைத வேதாந்தம் மட்டுமல்லாது தமிழ் இலக்கண, இலக்கியங்களிலும் தர்க்கத்திலும் பெரும் புலமை பெற்றவராக விளங்கியதால் "மகாவித்துவான்' என்று அறிஞர்களால் அன்புடன் அழைக்கப்பட்டார்.

1863-ஆம் ஆண்டு சென்னை கோமளேசுவரன்பேட்டை வெங்கடாசல ஆச்சாரி தெருவில் மளிகைக்கடை வைத்திருந்த சுப்பராயச் செட்டியார்-தனகோட்டி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து பத்தாம் வகுப்பு வரை கல்வி கற்றார். பின்னர் 20-ஆம் வயது வரையிலும் தம்முடைய தந்தையாருக்கு உதவியாக மளிகைக் கடையின் வியாபாரத்தைக் கவனித்து வந்தார். 20-ஆம் வயதிலேயே இவருக்குத் திருமணம் நடந்தது. 26-ஆம் வயதுவரை வியாபாரம் செய்துகொண்டே தம்முடைய குடும்பத்தைக் கவனித்து வந்தார்.

ராமானுஜ நாயக்கர் என்ற ஒரு புதிய வாடிக்கையாளர் அவரது கடைக்கு வந்தார். அவர் தாம் ஏற்றிருந்த ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்று, அந்தத் தெருவில் புதிதாகக் குடியேறியவர். தமிழில் பெரும் புலவரான அவர், கடைக்கு வரும்போதெல்லாம் தமிழ்மொழியின் சுவை மிகுந்த பாடல்களைச் செட்டியாரிடம் சொல்லி மகிழ்ந்து வந்தார். அப்பாடல்களைக் கேட்டுச் சுவைத்து வந்த செட்டியாருக்கு தமிழ் இலக்கியங்களின் மீது பெரும் காதல் ஏற்பட்டது.

ராமானுஜ நாயக்கர் வரும் வேளைகளில் இலக்கணம், இலக்கியம், புராணங்கள் என்று அன்றைய நிலையில் புகழ் பெற்றிருந்த எல்லா வகையான நூல்களும் நாயக்கரின் சொற்பொழிவில் வந்து வடிவேலு செட்டியாரின் அறிவை நிறைத்தன. இந்தக் கல்வியை செட்டியார் ஏழு ஆண்டுகள் பெற்றார்.

தமிழ்க் கல்வியின் மீதான விருப்பம் என்பது, செட்டியாரிடத்தில் வணிகத்தின் மீதான விருப்பத்தைக் குறைக்கத் தொடங்கியது. இதன் விளைவாக, குடும்ப உறுப்பினர்கள் அவரைக் கண்டித்தும் தடைகள் பல உண்டு பண்ணியும், அவர் உள்ளத்தை வியாபாரத் துறையில் இழுத்து நிறுத்த பல முயற்சிகள் செய்து தோல்வி அடைந்தனர்.

கடைக்குத் தேவையான சரக்குகளைக் கொள்முதல் செய்ய கொத்தவால் சாவடிக்கு இருமுறை செல்வார் வடிவேலு செட்டியார். அப்போது ராமானந்த யோகிகள் என்னும் மகாவித்துவான் ராமசாமி நாயுடு, சுப்பன் செட்டியார், மயிலை சண்முகம் பிள்ளை போன்றவர்களிடம் தொடர்பு கொண்டு தமிழ் இலக்கண, இலக்கியங்களில் தமக்கு ஏற்பட்ட ஐயங்களைப் பெருமளவில் நீக்கிக்கொண்டார். இதுவும் குடும்பத்தினரிடையே கசப்பை ஏற்படுத்தியது.

இவர் கொள்முதலுக்குச் செல்லும்போது சிவப்பு நிற வேட்டியுடன்தான் செல்வார். உறவினர்களும் இவர் வியாபார வேலையாகச் செல்கிறார் என்று திருப்தி கொள்வர். ஆனால் கொள்முதலுக்கு எடுத்துச் செல்லும் சாக்குப்பையில் வெள்ளை வேட்டியையும் தேவையான புத்தகங்களையும் மறைத்து எடுத்துச் செல்வார். கூவம் ஆற்றைக் கடந்தவுடன் வெள்ளை வேட்டியை உடுத்திக்கொண்டு, மேற்கூறப்பட்ட பெரும் புலவர்களிடம் பாடம் கேட்கச் சென்றுவிடுவார். பின்னர் சரக்கைக் கொள்முதல் செய்துகொண்டு கடைக்குத் திரும்புவார்.

தமிழ்மீது ஆறாத பற்றுக்கொண்டிருந்த வடிவேலு செட்டியாருக்கு உறவுகளும் வியாபாரமும் தீராத துன்பத்தைத் தந்தன. இந்த நேரத்தில் ரிப்பன் அச்சக உரிமையாளராகவும் வேதாந்த சாஸ்திரத்தில் பெரும் புலவராகவும் விளங்கிய சை.ரத்தினச் செட்டியாரின் தொடர்பு வடிவேலு செட்டியாருக்குக் கிடைத்தது. இவருக்கு வேதாந்தம் பயிற்றுவிப்பதில் குருவாக விளங்கிய அவர், குடும்பச் சூழ்நிலையால் செட்டியாருடைய கல்விக்கு இடையூறு ஏற்படுவதை அறிந்து 1896-இல் தங்கசாலைத் தெருவில் தொடங்கப்பட்ட இந்து தியாலஜிகல் உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியர் பதவியை இவருக்கு வாங்கித் தந்தார். அப்போது இவருக்கு வயது 33.

இந்த நிகழ்ச்சி வடிவேலு செட்டியாரின் வாழ்க்கைப் பதையை முற்றிலும் மாற்றி அமைத்துவிட்டது.

பள்ளியில் மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதுடன் மற்ற நேரங்களில் தன்னை நாடி வருகின்ற தமிழ் ஆர்வலர்களுக்குத் தமிழும் தத்துவமும் போதித்து வந்தார். அத்தகையவர்களுள் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், மொ.அ.துரை அரங்கனார், மு.வரதராசனார் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். "செட்டியாருக்கும் தெ.பொ.மீ.க்கும் இடையே அமைந்த உறவு, ராமகிருஷ்ணருக்கும் விவேகானந்தருக்கும் உள்ள உறவைப் போன்றதாகும்' என்று துரை அரங்கனார் குறிப்பிட்டுள்ளார்.

வடிவேலு செட்டியார், நாற்பத்தைந்து நூல்களுக்கும் மேல் எழுதியுள்ளார். அதில், திருக்குறள் பரிமேலழகர் உரைக்கான விளக்கம், கைவல்ய நவநீதம் மூலம், மூலத்துக்கு இயைந்த வசன வினா-விடை, மேற்கோளுடன் விரிவுரை, பகவத்கீதை, மூலத்துக்கு இயைந்த வசனமும் விருத்தியுரையும், சர்வ தரிசன சங்கிரகம் ஆகியவை அடங்கும். இந்தியத் தத்துவத்தைப் பற்றிய நூல்கள் எழுதியுள்ள அறிஞர்கள் அனைவரும் தவறாது குறிப்பிடுகின்ற நூல் "சர்வ தரிசன சங்கிரகம்', இந்திய தத்துவ தரிசனங்களைப் பதினாறு தலைப்புகளில் பகுத்து விளக்கியுள்ள இந்த வடமொழி நூலை ராமச்சந்திர சாஸ்திரியார் என்பவரைக்கொண்டு மொழிபெயர்த்து நல்ல முன்னுரையுடனும் குறிப்பிடத்தக்க குறிப்புகளுடனும் 1910-ஆம் ஆண்டு வெளியிட்டார்.

வேதத்துக்கு உரை வகுத்த சாயனருடன் பிறந்த வித்யாரண்யர் இந்நூலின் ஆசிரியர் ஆவார். இதேபோன்று திருக்குறள் பரிமேலழகர் உரையிலுள்ள இலக்கண நுட்பங்களையும் தத்துவக் குறிப்புகளையும் தெளிவாக விளக்கி இவரால் எழுதப்பட்ட குறிப்புகள், அறிஞர்களால் பாராட்டப்படுகின்றன. இந்தத் திருக்குறள் நூலில் எல்லா குறள்களுக்கும் ஆங்கில மொழிபெயர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

செட்டியாரின் நண்பர் ஒருவர் இந்த மொழிபெயர்ப்பைச் செய்துகொடுத்து தன் பெயரை வெளியிட வேண்டாம் என்று சொன்னதாகச் செட்டியார் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்த மொழிபெயர்ப்புப் பகுதிகளில் பெரும்பாலானவை துரு பாதிரியாருடைய மொழிபெயர்ப்பு ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர், 1936-ஆம் ஆண்டு இவ்வுல வாழ்வை நீத்தார். சரியான வாய்ப்புகள் கிடைக்கும் பட்சத்தில் எத்தனை இடையூறுகள் ஏற்பட்டபோதும் துறைசார்ந்த ஆர்வம் கொண்ட ஒருவர் அறிஞராக மலர்ச்சி பெறமுடியும் என்பதற்கு வடிவேலு செட்டியாரின் வாழ்க்கையே சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com