சீனாவின் அடுத்த இலக்கு

இலங்கை விவகாரத்தில் சீனாவின் அரசியல் நிர்பந்தங்களுக்கு இந்தியா அடிபணிந்தது. அருணாசலப் பிரதேச எல்லை விவகாரத்தில் சீனாவை எதிர்த்து எதுவும் பேசாமல் மெüனமாயிருக்கிறது.   இந்தியாவில் சீனாவுக்கு எதிராக அவ்வ
Updated on
2 min read

இலங்கை விவகாரத்தில் சீனாவின் அரசியல் நிர்பந்தங்களுக்கு இந்தியா அடிபணிந்தது. அருணாசலப் பிரதேச எல்லை விவகாரத்தில் சீனாவை எதிர்த்து எதுவும் பேசாமல் மெüனமாயிருக்கிறது.

  இந்தியாவில் சீனாவுக்கு எதிராக அவ்வப்போது எழுப்பப்படும் குரல்கள் தொடர்ந்து அடக்கப்படுகின்றன.

  பாகிஸ்தானை எதிரிநாடு என்று சொல்லுவோர்கூட சீனாவை நண்பனா, எதிரியா என்று தெளிவாகச் சொல்லத் தயங்குகின்றனர்.

  இப்படிப் பல வகையிலும் நம்மை மடக்கிவிட்ட சீனா, இப்போது ஈரானிலிருந்து வரும் எரிவாயுக் குழாய் மீது கண் வைத்திருக்கிறது.

  இந்தியாவுக்கு அகோர எரிசக்திப் பசி. உள்நாட்டு இயற்கை வளங்களால் இந்தப் பசியைப் போக்கவே முடியாது. போதாக்குறைக்கு, சில வளங்களைத் தனியாருக்கு எழுதிக் கொடுத்தாயிற்று. மாற்று எரிசக்திக்குப் பெரிய அளவில் திட்டமிடவில்லை.

  வேறு வழியே இல்லாமல் எதிர்காலத் தேவைகளுக்காக வெளிநாடுகளைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கிறது.

   அணுகுண்டுகளை வெடித்து, பிராந்திய அளவில் அச்சுறுத்திய இந்தியாவை, இந்த எரிசக்தி தேவையைக் காட்டித்தான் அமெரிக்கா மடக்கியது.

  வருங்கால எரிசக்தித் தேவைக்காக 20 ஆண்டுகளுக்கு முன்பே பேசப்பட்டதுதான் ஈரான்-பாகிஸ்தான்-இந்தியா எரிவாயுக் குழாய்த் திட்டம்.

  இந்தத் திட்டத்தில் "பூகோளம் சார்ந்த அரசியல்' முக்கியப் பங்கு வகிக்கிறது. அதாவது பூமியில் ஒரு நாட்டின் அமைவிடத்தைப் பொருத்த அரசியல். ஈரானிலிருந்து எரிவாயு பெறுவதில் விலை தொடர்பான தொடக்ககட்டப் பேச்சுகளை இந்தியா திறம்படக் கையாண்டது. அதில் வெற்றியும் பெற்றது. ஆனால், எரிவாயுக் குழாய் பாகிஸ்தான் வழியாக வருகிறது என்பதில்தான் சிக்கல்.

  இந்தக் குழாய் பராமரிப்புக் கட்டணமாக இந்தியாவிடம் ஒரு தொகையைக் கேட்டிருக்கிறது பாகிஸ்தான். இதில் ஒத்த கருத்து எட்டப்படாததால், பேச்சுகளில் இருந்து இந்தியா தாற்காலிகமாக ஒதுங்கிக் கொண்டது.

  இந்தத் திட்டத்தில் இந்தியா இப்போது இருக்கிறதா, இல்லையா என்பதை யாருமே தெளிவுபடுத்தவில்லை.

  எரிவாயுவை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதற்கு பாகிஸ்தான் கேட்கும் கட்டணத்தைப் பற்றிக்கூட இந்தியா கவலைப்படவில்லை.

   இந்தியாவின் கவலையெல்லாம் வருங்காலத்தில் பாகிஸ்தானைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடுமே என்பதுதான். இதுதான் பூகோள அரசியல்.

  இந்தியாவின் இந்த இரண்டுங்கெட்டான் நிலையை எதிர்பார்த்துத்தான் சீனா காத்திருந்தது. இந்தியா விலகும்பட்சத்தில் தன்னைச் சேர்த்துக் கொள்ளுமாறு சீனா ஏற்கெனவே விருப்பம் தெரிவித்தது. இது இந்தியாவுக்குப் புதிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

  அமெரிக்க ஆதரவு என்பதைத் தவிர, வேறெந்த அரசியல் நோக்கமும் இல்லாமல் அணுசக்திக் கழகத்தில் ஈரானுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது.

   அப்போது ஏற்பட்ட வெறுப்பைக்கூட எரிவாயுக் குழாய் விஷயத்தில் ஈரான் காட்டவில்லை. தொடர்ந்து பேச்சுகளில் பங்கேற்குமாறு இந்தியாவை அழைத்தது. அதற்குக் காரணம் இந்த எரிவாயுக்குழாய் வருங்காலத்தில் மாபெரும் அரசியல் குழாயாக மாறப் போகிறது; அது தமக்குச் சாதகமாக அமைப்போகிறது என்பதுதான்.

  ஈரான் பலமுறை அழைத்த பிறகும், பாகிஸ்தானுடனான எரிவாயுக் குழாய் பேச்சுகளில் இந்தியா பங்கேற்கவில்லை. இதனால், இந்தியாவைச் சீண்டும் விதமாக சீனாவுடன் கைகோர்க்கப் போவதாக ஈரான் இப்போது அறிவித்திருக்கிறது.

  ஏற்கெனவே பல வகையிலும் சீனாவால் நெருக்கடிகளுக்கு ஆளான இந்தியா, இப்போது இன்னொரு அரசியல் நிர்பந்தத்துக்குள் தள்ளப்பட்டிருக்கிறது.

  எரிவாயுக் குழாய் விஷயத்தில் இந்தியாவுக்கு முன் இரண்டே வாய்ப்புகள் இருக்கின்றன.

   ஒன்று, பாகிஸ்தான் கேட்கும் பராமரிப்புச் செலவைக் கொடுத்துவிட்டு திட்டத்தைச் செயல்படுத்துவது அல்லது முடியாது எனத் தெளிவாகச் சொல்லி விடுவது. இந்த இரண்டு முடிவுகளுமே இந்தியாவுக்குச் சாதகமற்றவைகள்தான்.

  சீனாவைக் காட்டி, இப்போதே இந்தியாவை மிரட்டத் தொடங்கியிருக்கிறது ஈரான். எரிவாயுக் குழாய்த் திட்டம் முழுமையடைந்த பிறகு, பாகிஸ்தானுக்கும் ஈரானுக்கும் அரசியல் ரீதியாகக் கட்டுப்பட வேண்டிய நிலை இந்தியாவுக்குக் கண்டிப்பாக வரும்.

   எரிவாயுக் குழாய் தேவையில்லை என்று ஒதுங்கிக் கொண்டால், 20 ஆண்டுகால கனவுத் திட்டத்தை இந்தியா இழக்க வேண்டும்.

   பிற்காலத்தில் எரிசக்திச் சிக்கலையும் சந்திக்க நேரிடும். உலக அரசியலில் இந்தியாவுக்கு எதிராக ஈரான் செயல்படும் நிலையும் ஏற்படும்.

  இந்த விஷயத்தில் யோசிக்கும் காலம் முடிந்து விட்டது. இனிமேலும் இந்தியா மெüனமாக இருக்க முடியாது.   இன்னும் திட்டத்தில் இருந்து வெளியேறிவிடவில்லை என்று கூறிக்கொண்டு, பேச்சுகளில் பங்கேற்காமல் இருக்கவும் முடியாது. திட்டத்தை தள்ளிப்போடவும் முடியாது.

   மேற்சொன்ன இரண்டு வாய்ப்புகளில் குறைந்த அளவு மோசமான விளைவைத் தரும் ஏதாவதொரு முடிவை இந்தியா எடுக்க வேண்டும். அதுவும் உடனடியாக அல்லது சீனாவைப் பின்வாங்கச் செய்ய ஏதாவது உபாயத்தைக் கையாள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com