பதியப்படாத குற்றங்கள்

சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் காவல்நிலையங்களில் கொடுக்கப்படும் புகார்கள் மீது மூன்று தினங்களுக்குள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.  
Updated on
3 min read

சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் காவல்நிலையங்களில் கொடுக்கப்படும் புகார்கள் மீது மூன்று தினங்களுக்குள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

 ஹரியாணா மாநில முன்னாள் டிஜிபி மீது தொடரப்பட்ட பாலியல் வழக்கில் தண்டனை வழங்கிய நீதிமன்றம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததில் தாமதத்தைப் பற்றிக் குறை கூறியுள்ளதையடுத்து இந்தச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

 குற்றவியல் சட்டம் 154 பிரிவின்படி காவல் நிலையங்களில் கொடுக்கப்படும் புகார்கள் சட்டப்படி விசாரிக்கக்கூடிய குற்றங்களில் காலதாமதமின்றி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நகல் நீதிமன்றத்துக்கு அனுப்புவதோடு புகார் கொடுத்தவருக்கு நகல் சான்று உடனடியாக வழங்கப்பட வேண்டும்.  ஆனால், நடைமுறையில் புகார்கள் உடனடியாகப் பதிவு செய்யப்படுவதில்லை என்ற புகார்தான் மேலோங்கியுள்ளது. இந்த நிலைமை இந்தியாவில் உள்ள 13,513 காவல் நிலையங்களுக்கும் பொருந்தும். இந்தியா சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகளுக்கு மேலாகியும், இந்த நிலை தொடர்வதற்கு ஆங்கிலேய ஆட்சியின் போலீஸ் அடக்குமுறையால் வந்த விளைவு என்று எவ்வளவு காலம்தான் காரணம் காட்ட முடியும்?

 நடைபெறும் குற்றங்கள் தவறாமல் பதிவு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. ஆனால், இவ்வாறு தடையின்றிக் குற்றங்களைப் பதிவு செய்வதால் குற்றங்கள் அதிமாகிவிட்டன என்று காவல்துறையின் குற்றத்தடுப்பு நடவடிக்கையைக் குறை கூறக்கூடும் என்பதற்காகக் குற்றங்கள் பதிவு செய்வது தவிர்க்கப்படுகிறது என்பதை மறுக்கமுடியாது.

 குற்றங்கள் அதிகமாகிவிட்டன என்று கூக்குரலிடுபவர்கள் குற்றங்கள் உண்மையாகப்  பதியப்படுவதால் ஏற்பட்ட விளைவு என்ற விளக்கத்தை ஏற்கமாட்டார்கள். ஆனால், தமக்கு ஒரு பாதிப்பு ஏற்பட்டால் வழக்கு உடனே பதிவு செய்யப்பட்டு துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்துவார்கள்.

 1970-ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் சக்úஸனா என்பவர் காவல்துறையில் தலைமை ஏற்ற பிறகு குற்றங்கள் தவறாமல் பதிவு செய்யவேண்டும் என்று அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் உத்தரவு பிறப்பித்தார். அப்போது மாநில முதலமைச்சராக இருந்தவர் செüத்ரி சரண்சிங். 1969-ல் 2.23 லட்சம் புலன்கொள் வழக்குகள் பதிவாகின.  அதுவே 1970-ல் 3.14 லட்சமாக உயர்ந்தது. இந்திய தண்டனைச் சட்டப்படி 1969-ல் 1.38 லட்சம்  பதிவாயின. தடையின்றி வழக்குகள் பதிவு செய்யப்பட்டதால் 1970-ல் 2.34 லட்சமாக உயர்ந்தது.  கொலை வழக்குகள் 3,147-ல் இருந்து 3,503 ஆகவும், கொள்ளை வழக்குகள் 3,406-ல் இருந்து 9,436 ஆகவும், கன்னக்களவுகள் 32,884-ல் இருந்து 53,699 ஆகவும் 1969-70-ல் உயர்ந்தன. மொத்தத்தில் தடையின்றி வழக்குகள் பதிவு செய்யப்பட்டதால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் முந்தைய ஆண்டைவிட 50 சதவிகிதம் உயர்ந்தது.  இந்த நிலை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது.

 ஆனால், காவல்துறை தலைமை மாறிய பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சுருதி குறைந்தது.  எல்லா வழக்குகளையும் பதிவு செய்யும் நிலை மாறியது.  1975-76-ல் அவசரநிலை பிரகடனமாகியபோது பொதுவாகவே குற்ற நிகழ்வுகள் குறைந்தன. காரணம், அவசர நிலையில் குற்றவாளிகள் ஓடிஒளிந்தனர்.

 தடையில்லா வழக்குப்பதிவுப் பிரச்னை நமது நாட்டில் மட்டுமல்ல, மேலைநாடுகளிலும் உள்ளது.  ஆனால், அங்கு பிரச்னையை அணுகித் தீர்வு கண்டுள்ளார்கள். நியூயார்க் நகரத்தின் மேயராக ருடால்ப் குலியானி  இருந்தபோது மோசமான நிலையில் இருந்த காவல்துறையைச் சீர்படுத்த ப்ராட்டன் என்பவரை காவல் ஆணையராகக் கொண்டு வந்தார். ப்ராட்டன் கணினி மூலமாக வழக்குகள் பதிவு செய்யப்படுவதை மேற்பார்வையிடும் முக்கிய சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தினார்.

 அந்தந்த வட்டார காவல்துறை அதிகாரிகள் தமது சரகத்தில் குற்ற நிகழ்வுகள் குறைவு என்பதைக் குறிப்பதற்காக குற்றங்களைப் பதிவு செய்யாமல் மெத்தனமாக இருந்தநிலை மாறி, நேர்மையான குற்றப்பதிவின் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் நியூயார்க் நகரம் பாதுகாப்பான நகரம். அதில் குற்ற நிகழ்வுகள் குறைவு என்று காண்பிப்பதற்காக குற்ற ஆவணங்கள் திருத்தப்பட்டன என்ற குற்றச்சாட்டு நியூயார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியில் வெளியாகியுள்ளது.

 குற்றங்களைப் பதிவுசெய்து புலன் விசாரணை மேற்கொள்வதுதான் காவல்துறையின் முதன்மையான பணி என்று இருந்தாலும் ஏன் இவ்வாறு குற்றங்கள் பதிவு செய்வதில் சுணக்கம் என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. மத்திய காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் இதனை ஆராய்ந்தது. முக்கிய காரணம் ஆள் பற்றாக்குறை, பல்வேறு பணிகள் இருப்பதால் 6 சதவிகித காவலர்கள்தான் புலனாய்வுக்காக அமர்த்தப்படுகிறார்கள்.

 சராசரி காவல் நிலையங்களில் வழக்குகள் விசாரணை செய்யக்கூடிய வசதிகள் போதிய அளவில் இருப்பதில்லை. வழக்குப் பதிவு செய்வதற்கு பல காவல்நிலையங்களில் உரிய படிவங்கள், எழுதுபொருள்கள், வாகனவசதி இல்லை. புலன் விசாரணையில் ஆதாரங்களைக் கைப்பற்றுதல், பல இடங்களுக்குச் சென்று சாட்சிகளை விசாரித்தல், ஆவணங்களைக் கைப்பற்ற மேல்நடவடிக்கை, நீதிமன்றங்களுக்கு ஆவணங்களை அனுப்புதல், எதிரியைக் கைது செய்ய நடவடிக்கை, அதன் தொடர்பாக எழக்கூடிய நீதிமன்ற ஜாமீன், முன் ஜாமீன் சம்பந்தப்பட்ட அலைச்சல் என்று அடுக்கடுக்காக ஒவ்வொரு வழக்குப் பதிவிலும் வேலைப்பளு காவல்நிலையத்துக்குச் சுமையாக விழும்.  இந்த சுமையைப் பார்த்து மருத்துவ விடுப்பில் செல்பவர் பலர். மனசாட்சிக்கு விரோதமில்லாமல் பணி செய்ய வேண்டும் என்ற சுய உந்துதலில் பணி செய்பவர்கள் இருப்பதால்தான் கச்சேரி நடக்கிறது என்பது  நாட்டில் உள்ள பல காவல் நிலையங்களின் உண்மைநிலை.

 காவல் நிலையம் நடத்துவது ஒரு பெரிய குடும்பத்தை நிர்வகிப்பதுபோல் என்று கொள்ளலாம்.  எழக்கூடிய நிர்வாகப் பிரச்னைகளால் காவல்நிலைய அதிகாரிகள் கையேந்தும் நிலைக்கு ஆளாகிறார்கள். இதைப் பயன்படுத்தி காவல்நிலையம் மூலமாக ஆதாயம் பார்க்கும் நேர்மையற்றவர் பலர். காவல் நிலையங்களில் புலனாய்வு மேற்கொள்வதில் ஏற்படும் சில்லறைச் செலவுகளுக்காக முன்பணம் கொடுக்கப்படுகிறது. ஆனால், இதிலிருந்து செலவு செய்து ரசீதுகளைச் சமர்ப்பித்து ஈடு செய்வதில் உள்ள சிக்கல்களால் பல காவல் நிலையங்களில் முன்பணத்தை உபயோகிப்பதில்லை.

 காவல்நிலையங்களுக்குப் பலம் சேர்த்தால்தான் குற்றப்புலனாய்வு சீரடையும் என்பதை உணர்ந்து 1977-ல் அமைக்கப்பட்ட நேஷனல் போலீஸ் கமிஷன் பல பரிந்துரைகளை அளித்துள்ளது. அதில் முக்கியமான ஒன்று, காவல்நிலையங்களில் புலனாய்வுக்கென்று தனியே அதிகாரிகள் நியமிக்க வேண்டும் என்பதாகும். இதையேதான் மாநில போலீஸ் கமிஷன்களும் வலியுறுத்தியுள்ளன.

 மேற்குவங்கத்தில் ஜல்பைகுரி மாவட்டத்தில் 2007-ம் ஆண்டு திருப்புராரி என்ற இளம் கண்காணிப்பாளர் பலாத்காரம் அற்ற காவல்பணி  என்ற ஒரு புதிய முயற்சியைத் தொடங்கினார். வழக்குகளைத் துரிதமாகத் தடையின்றிப் பதிவுசெய்தல், தேவை இருந்தால் மட்டும் கைது செய்வது, எதிரிகளைக் கண்ணியமாக நடத்துவது, சட்டத்தில் உள்ள உரிய பாதுகாப்பு அளித்தல், வழக்கு விசாரணை விரைவில் முடித்து நீதிமன்றத்தில் முடிவு அறிக்கை தாக்கல் செய்தல், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்புத் தருதல் என்ற ஒருங்கிணைந்த அணுகுமுறை பொதுமக்களாலும் நீதித்துறையாலும் பெரிய வரவேற்பைப் பெற்றது.

  2007 ஜனவரி மாதம் அந்த மாவட்டத்தில் பதிவாகிய வழக்குகள் 226. அதுவே புதிய முயற்சி தொடங்கி ஓராண்டுக்குப் பிறகு ஜனவரி 2008-ல் 974 ஆக உயர்ந்தது.  இந்த அதிகரிப்பும் சில்லறை வழக்குகள், சிறு திருட்டு வழக்குகள் சம்பந்தப்பட்டது.  கொலை, கொள்ளை வழக்குகளில் மாற்றம் இல்லை.  சட்டத்திலும் சட்டநடைமுறையிலும் உள்ள சிக்கல்களைச் சொல்லிப் புலம்பாமல் சட்டதிட்டங்களுக்கு உள்பட்டு சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதைச் செய்துகாட்டினர் ஜல்பைகுரி போலீஸôர்.

 காதர்யூசப் என்ற பச்சிளம் குழந்தை சமீபத்தில் மதுரையிலிருந்து கடத்தப்பட்டு தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் கொடூரமாய் நரபலியிட்டு கொல்லப்பட்ட சம்பவம் காவல்துறையினரால் சிறப்பாகப் புலானய்வு செய்யப்பட்டது. அதற்கு முக்கியக் காரணம் குழந்தை காணாமல்போன முதல் தகவல் அறிக்கையை உடனடியாகப் பதிவு செய்து மேல் விசாரணை மேற்கொண்டதால்தான் முடிந்தது என்பதில் ஐயமில்லை.

 சாதாரணமாக காணாமல் போனவர்கள் பற்றிய புகார்களை காவல்துறை அவ்வளவு தீவிரமாக விசாரிப்பதில்லை. ஆனால், இத்தகைய வழக்குகள் சீராக விசாரணை செய்ய வேண்டும் என்றும், இதைக் குற்றப்புலனாய்வுத்துறை மேற்பார்வையிட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் அறிவுறுத்தியுள்ளது.

 காவல்துறை மீது உள்ள குறைபாடுகள் குறித்து தில்லியில் மேற்கொண்ட ஆய்வில் முதன்மையாகக் கூறப்பட்ட குறை காவல் நிலையங்களில் புகார் கொடுக்க வருபவர்களை அவமதித்தல், அவர்களது புகார்களைப் பதிவு செய்யத் தவறுதல் என்பது காவல்துறை ஆளுமையைச் சிந்திக்கவைக்க வேண்டும்.

  காவல்பணி ஒரு சேவை மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆற்றக்கூடிய தொண்டு என்பதை உணரவேண்டும். அதைத் தாமாக முன்வந்து அளிக்க வேண்டும். கேட்டு, வேண்டி வாங்கிப்பெறும் சேவை அல்ல. சுயநலமும்,பணம் நாடலும் அறவே ஒழிக்கப்பட வேண்டும். நேர்மையாகப் புகார்களைப் பதிவு செய்தால்தான் மக்கள் மதிப்பைப் பெறமுடியும்.

 நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பது  நியாயநிலை. அதேசமயம் குற்றம்புரிந்தவர்கள் மீது வழக்குகள் பதியாத நிலை சமுதாயத்துக்கு ஆபத்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com