புத்தகப் பதிப்பு, "சி.டி., கேசட்' துறைகளில் பெரும் இழப்பை ஏற்படுத்தி வரும் "பைரசி', சில ஆண்டுகளாக மென்பொருள் துறையிலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
÷இந்தியாவில் உள்ள 85 சதவிகித கம்ப்யூட்டர்களில் "ஆபரேட்டிங் சிஸ்டமாக மைக்ரோசாஃப்ட்' நிறுவனத்தின் "வின்டோஸ்'களே பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக "வின்டோஸ் 98, விஸ்டா, எக்ஸ்.பி., வின்டோஸ் 7' ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.
÷இந்த மென்பொருளை கம்ப்யூட்டர் வாங்கும் ஒருவர், முறையாகப் பணம் செலுத்தி வாங்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் பலர் அதைக் கண்டுகொள்வது இல்லை.
÷கம்ப்யூட்டர் வாங்கும்போது, அந்தக் கடையிலேயே அனைத்து மென்பொருள்களையும் இந்தியக் காப்புரிமைச் சட்டத்தையும், பல்வேறு விதிமுறைகளையும் மீறி பைரசியாகத் தனது கம்ப்யூட்டரில் பதிவு செய்கின்றனர். இவ்வாறுதான் மென்பொருள் துறையில் பைரசி தொற்றுநோயாகப் பரவி வருகிறது. இந்தியாவில் உள்ள 87 சதவிகித கம்ப்யூட்டர்களில் அனைத்து மென்பொருள்களும் முறையான உரிமம் பெறாமல் திருட்டுத்தனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
÷இதன் காரணமாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு ஆபரேட்டிங் சிஸ்டம் மென்பொருள்களால் மட்டும் இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் ரூ.200 கோடி நஷ்டம் ஏற்படுவதாக அந் நிறுவனத் தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலைமை நீடிக்கும்பட்சத்தில் வருங்காலங்களில் மேலும் பல ஆயிரம் கோடிகளை இழக்க நேரிடும் என மென்பொருள் நிறுவனங்கள் அஞ்சுகின்றன. இதன் காரணமாக பைரசியை சட்டரீதியாகக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மென்பொருள் நிறுவனங்கள் எடுத்தன, ஆனால் அவை பலனளிக்கவில்லை.
÷இந்தியாவில் மட்டுமன்றி உலகம் முழுவதிலும் இப் பிரச்னை இருப்பதாகக் கூறிக் கொண்டாலும், அமெரிக்காவில் 20 சதவிகிதம், ஜெர்மனியில் 12 சதவிகிதம் என பைரசியின் பாதிப்பு குறைவாக உள்ளது. இதற்கு பைரசி சட்டத்துக்கு எதிரானது என மக்களிடம் முழுமையாக விழிப்புணர்வு உள்ளதே காரணமாகக் கூறப்படுகிறது. ஆனால், இப்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் வளர்ந்து வரும் நாடுகளில் மக்களிடம் இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதால், இப் பிரச்னை பூதாகரமாகக் கிளம்பி வருகிறது.
÷குறிப்பாக, இந்தியாவுக்கு இணையாகத் தகவல் தொழில்நுட்பத் துறையில் வளர்ந்து வரும் சீனாவில் 90 சதவிகித கம்ப்யூட்டர்களில் பைரசிகளாகவே அனைத்து மென்பொருள்களும் பதிவு செய்யப்படுகின்றன. உலகிலேயே இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் ஆகிய தெற்காசிய நாடுகளில்தான் பைரசியின் தாக்கம் அதிகம் உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
÷அண்மையில் சென்னை உயர் நீதிமன்றம் மென்பொருள்துறையில் பைரசியைக் கட்டுப்படுத்த வேண்டும் என கடுமையான உத்தரவிட்டதன் விளைவாக, அரசு இது தொடர்பான நடவடிக்கைகளில் இப்போது தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் இந்த நடவடிக்கை கடலில் கரைத்த பெருங்காயமாகத்தான் இருக்கிறது என மென்பொருள் துறையினர் தெரிவிக்கின்றனர்.
÷கம்ப்யூட்டர் விற்பனையில் அதிக போட்டி நிலவும் இன்றைய சூழ்நிலையில், விற்பனையை அதிகரிப்பதற்காக சில விற்பனையாளர்கள் மென்பொருள்களை ஒரிஜினலாகப் பணம் வாங்கி முறையாகப் பதிவு செய்து கொடுப்பதைவிட, வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக மென்பொருள்களை பைரசியாகப் பதிவு செய்கின்றனர்.
÷இந்த ஏமாற்று வேலை, மென்பொருள் நிறுவனங்களுக்குத் தெரிந்தும், அவர்கள் விற்பனையாளர்களை முழுமையாகச் சார்ந்து இருப்பதால், கடுமையான நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
÷அதேவேளையில் சில மென்பொருள் நிறுவனங்கள், தங்களது மென்பொருளை மக்களிடம் பிரபலப்படுத்தவும், தங்களது எதிர் நிறுவனங்களின் போட்டியைச் சமாளிக்கவும், முதலில் தாங்களாகவே பைரசியாக மென்பொருளை இலவசமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றனர்.
÷பின்னர் தங்களுக்கென்று ஓர் இடத்தை நிலையாகப் பிடித்த பின்னர் அந்த நிறுவனம், பைரசியின் தாக்கத்தில் இருந்து விடுபட அதைக் கட்டுப்படுத்த நினைக்கின்றன. ஆனால், அது காலம் கடந்த நடவடிக்கையாகத்தான் இருக்கிறது.
÷அதேநேரத்தில் பைரசியாகத் தனது மென்பொருள்களை விற்பனை செய்யும் விநியோகஸ்தர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மென்பொருள் நிறுவனங்கள் தொடங்கியுள்ளன. வட மாநிலங்களில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முக்கிய விநியோகஸ்தராக இருந்த தில்லியைச் சேர்ந்த கே.கே. சாஃப்ட்வேர் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்து, சி.பி.ஐ. போலீஸôர் மூலம் கடந்த 24-ம் தேதி சோதனையிடச் செய்தது மைக்ரோசாஃப்ட் நிறுவனம். இந்த நிறுவனத்தால் மட்டும் ஆண்டுக்கு ரூ. 55 கோடி நஷ்டமடைந்ததாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கூறுகிறது.
இதன் தாக்கத்தை முழுமையாக உணர்ந்துள்ள நிறுவனங்கள், இனி அறிமுகப்படுத்தும் மென்பொருள்களை பைரசியாகப் பதிவு செய்ய முடியாதபடி நவீன தொழில்நுட்பத்துடன் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்திய "விண்டோஸ் 7'ஐ பைரசியாகப் பதிவு செய்தால், அது 30 நாள்களில் அதன் செயல்பாட்டை நிறுத்திவிடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
÷இத்தகைய தொழில்நுட்பத்தின் மூலம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் , தனது வாடிக்கையாளர்களை முழுமையாக பைரசியில் இருந்து மீட்டெடுக்க நினைத்துள்ளது. இதில் மைக்ரோசாஃப்ட் பெறும் வெற்றியைப் பொறுத்து, இதர மென்பொருள் நிறுவனங்கள் தங்களது மென்பொருள்களை வடிவமைக்கும்.
÷அதேவேளையில் இப் பிரச்னையை மக்களிடம் எடுத்துச் செல்வதன் மூலம் அவர்களிடம் முழுமையான விழிப்புணர்வை ஏற்படுத்தி, வெற்றி பெற முடியும் என மென்பொருள் நிறுவனங்கள் கருதுகின்றன. இதற்கு வலுசேர்க்கும் விதமாக, இப்போது மக்களிடம் ஏற்படுத்தி வரும் விழிப்புணர்வால் பைரசியாகப் பதிவு செய்வோரின் எண்ணிக்கை ஓராண்டுக்குள் 2 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
÷இதன் விளைவாக, மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆரம்பகட்ட பணிகளைத் தொடங்கியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.