போபால் விஷவாயுக் கசிவுச் சம்பவம் நடந்தபோது நாட்டின் வெளியுறவுச் செயலராக இருந்த எம்.கே.ரஸ்கோத்ரா, பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு அண்மையில் அளித்திருக்கும் பேட்டி அதிர்ச்சி அலைகளை எழுப்பி இருக்கிறது. அன்றைய ராஜீவ் அரசு யூனியன் கார்பைடு நிறுவனத்தைப் பாதுகாக்க என்னவெல்லாம் வரம்பு மீறல்களையும், சட்ட மீறல்களையும் நிகழ்த்தியது என்பதை அந்தப் பேட்டி வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
போபால் விஷவாயுக் கசிவால் ஏற்பட்ட பேரழிவால் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறவும், இழப்பீடு வழங்குவது பற்றி ஆலோசிக்கவும் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் அப்போதைய தலைவர் வாரன் ஆன்டர்சன் இந்தியாவுக்கு வர விரும்பியதாகவும், அவரது பாதுகாப்பான பயணத்துக்கு மத்திய அரசு உத்தரவாதம் அளித்திருந்ததாகவும் அந்தப் பேட்டியில் ரஸ்கோத்ரா கூறியிருக்கிறார்.
அது மட்டுமல்லாமல், ஆன்டர்சன் இந்தியாவுக்குள் பாதுகாப்பாக வந்து செல்லும் திட்டத்துக்கு அப்போதைய உள்துறை அமைச்சர் பி.வி.நரசிம்ம ராவ் ஒப்புதல் அளித்திருக்கக்கூடும் என்றும் ரஸ்கோத்ரா கூறினார். இதுபற்றி அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் தெரிந்திருக்கலாம் என்றும் அவர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
ஆன்டர்சனுக்கு ஏதாவது நடந்தால், இந்தியாவுக்கு வரும் அந்நிய முதலீட்டு வாய்ப்புகள் பாதிக்கப்படு ம் என்பதால், தேச நலன் கருதியே இந்தியாவுக்கு வரும்போது அவரைக் கைது செய்வது போன்ற சட்ட நடைமுறைகளிலிருந்து பாதுகாப்பு அளிப்பதென முடிவு செய்யப்பட்டதாகவும் ரஸ்கோத்ரா கூறியிருக்கிறார்.
ரஸ்கோத்ராவின் இந்தக் கருத்துகள் தொடர்பாக பல்வேறு கேள்விகளும் விவகாரங்களும் எழுகின்றன. அவற்றில் சில உண்மையிலேயே நம்மைக் கவலையுறச் செய்கின்றன. இந்தியப் பயணத்துக்கான "பாதுகாப்பான வழியை' ஏற்படுத்தித் தருவது என்பதன் அர்த்தம்தான் என்ன? ஆன்டர்சனின் உயிருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் அவரைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்வது என்கிற பொருளில் சொல்லப்பட்டதா? அல்லது ஆன்டர்சன் மீதான வழக்கு நடவடிக்கைகளைப் பலவீனப்படுத்துவதையும் சேர்த்துச் சொல்லப்பட்டதா?
சரி, பாதுகாப்பு வழங்குவதென்றால், யாரிடமிருந்து பாதுகாப்பு என்கிற கேள்வியும் கூடவே எழுகிறது. நக்சல் தாக்குதல், நெடுஞ்சாலைக் கொள்ளைகள், பயங்கரவாத அச்சுறுத்தல், கண்ணிவெடித் தாக்குதல்கள் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு அளிப்பதைக் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? இந்தியாவுக்கு வருகைதரும் ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணிக்கும் இப்படியொரு பாதுகாப்பு உத்தரவாதம் கொடுக்க முடியுமா, என்ன?
இவையில்லாமல், குற்றச் செயல்களுக்கு சட்டப்படியான நடவடிக்கைகளிலிருந்து பாதுகாப்பு வழங்குவதென்றால், அரசுமுறை பாஸ்போர்ட் இல்லாத ஒருவருக்கு அப்படி ஒரு பாதுகாப்பை வழங்கும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது? யார் அந்த அதிகாரத்தை அந்த நபருக்கு வழங்கினார்? போபால் சம்பவத்துக்குப் பிறகு, ஆன்டர்சன் இந்தியாவுக்கு வந்தபோது அரசுமுறை பாஸ்போர்ட் வைத்திருந்தாரா இல்லையா என்பது தனியொரு விவகாரம்.
1984-ல் இந்தியா எந்தப் போரிலும் ஈடுபடவில்லை. தில்லியும் போபாலும் யாருடைய ஆக்கிரமிப்பிலும், எந்தவொரு நெருக்கடியிலும் இருக்கவில்லை. "பாதுகாப்பான வழி' என்பது உயிருக்குப் பாதுகாப்பு என்கிற பொருளில் சொல்லப்பட்டிருக்குமானால், தலைவர்களுக்கும், வெளிநாட்டுக் கிரிக்கெட் வீரர்களுக்கும், பிரபலங்களுக்கும் அளிக்கப்படுவது போன்ற "கருப்புப் பூனை' பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி எதுவும் தரப்பட்டதாகத் தெரியவில்லை.
ஆன்டர்சன் தனி விமானத்தில் தனியாளாகத்தான் போபாலிலிருந்து தில்லிக்கு வந்தார். தில்லியில் அவரை டிரைவரைத் தவிர வரவேற்க வேறு ஆளில்லை. டிரைவர்தான் ஆன்டர்சனை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தார். ஆக, "பாதுகாப்பான வழி' என்பதை உயிருக்குப் பாதுகாப்பு அளிப்பது என்ற பொருளில் எடுத்துக் கொள்ள முடியாது. உண்மையில் சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு எதிரான பாதுகாப்பைத்தான் ரஸ்கோத்ரா குறிப்பிட்டிருக்கிறார்.
இப்படியொரு பாதுகாப்பை ஒருவருக்கு வழங்கும் அதிகாரம் நம் நாட்டில் யாருக்கு இருக்கிறது. அரசியல் சட்டத்தின் தலைவரான குடியரசுத் தலைவருக்கா? உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அல்லது உச்ச நீதிமன்றத்தின் ஏதாவது பெஞ்சுக்கா? பிரதமருக்கா, அமைச்சரவைக்கா, முதல்வருக்கா?
சட்டமே எல்லாவற்றுக்கும் தலையாயது எனக் கொண்டிருக்கும் நமது நாட்டில், சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை வலுவிழக்கச் செய்யும் இப்படிப்பட்ட ஓர் அதிகாரம் எப்படி இருக்க முடியும்? வெளியுறவுத்துறைச் செயலரிடமா அல்லது உள்துறை அமைச்சரிடமா? அல்லது பிரதமரிடம் இருப்பதாகச் சொல்ல முடியுமா? அல்லது ஆன்டர்சன் இந்தியாவுக்கு வந்தபோது இந்தியக் குற்றவியல் சட்டமே தாற்காலிமாக முடக்கி வைக்கப்பட்டதா?
உண்மையில், நக்சல் விவகாரம் உள்ளிட்ட எந்தவொரு சட்டம் ஒழுங்குப் பிரச்னையானாலும், அது மாநிலங்களின் உள்விவகாரம் எனக்கூறி நழுவி விடுவதுதான் மத்திய அரசின் வழக்கம். அப்படியிருக்கையில் தேவையில்லாமல், எந்த உரிமையும் இல்லாமல், ஆன்டர்சன் விவகாரத்தில் மத்திய அரசு நுழைந்து சட்டப்படியான நடவடிக்கைகளை முடக்கத் துணிந்தது ஏன்?
அன்றைய மத்திய அரசின் இந்தத் தேவையில்லாத தலையீடு மன்னிக்க முடியாத பெருங்குற்றம். ஒரு நகரமே விஷவாயுவால் தாக்கப்பட்டிருக்கிறது. பல்லாயிரம் அப்பாவி மக்கள் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய நலனைவிடப் பெரியதாக அந்த நிறுவனத்தின் தலைவருக்கான பாதுகாப்பு இருந்துவிட முடியாது. ரஸ்கோத்ரா முன்வைக்கும் தேச நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு என்கிற வாதத்தையும் ஏற்க முடியாது. அதுவும் வெளியுறவுச் செயலர் போன்ற உயர் பதவியில் இருப்பவர்கள், தேச நலனுக்காகச் சட்டம் முடக்கப்பட்டது என்கிற பொருளில் கருத்துக் கூறுவது சரியல்ல. "பாதுகாப்பான வழி' வழங்குவது என்கிற இல்லாத ஓர் உரிமையை ஆன்டர்சனுக்கு அளித்திருப்பது என்பது, ஹெüரா பாலத்தை ஒரு வர்த்தகருக்கு வந்த விலைக்கு விற்றுவிடுவதற்குச் சமம்.
போபால் சம்பவம் நடந்தபோது நாட்டின் உள்துறை அமைச்சராக இருந்தவர் மிகவும் எச்சரிக்கையாக நடந்துகொள்ளக்கூடியவர். சம்பவம் தொடர்பான எல்லா நகர்வுகளும் உள்துறை அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகக் கோப்புகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
ஆன்டர்சன் குறித்து அமெரிக்கா ஏதாவது கோரிக்கை விடுத்திருந்தால், அது வெளியுறவு அமைச்சக கோப்புகளிலும் இடம்பெற்றிருக்கும்.
இந்த விவகாரத்துக்கு இணையான இன்னொரு பரிந்துரையையும் சிலர் கூறிவருகின்றனர். கத்தாரில் வசிக்கும் ஓவியர் எம்.எஃப்.ஹுசைன் "நல்ல' குடிமகனாக நாட்டுக்குத் திரும்ப அனுமதிக்க வேண்டும் என்பதே அவர்களின் எண்ணம்.
ஹுசைன் மீது நீதிமன்றங்களில் இருக்கும் வழக்குகளைத் தள்ளுபடி செய்வது அல்லது சட்டரீதியான பாதுகாப்பு வழங்குவது தொடர்பான திட்டம் ஏதும் இல்லை. அந்த வழக்குகளெல்லாம் நியாயமானவையா, ஆதாரப்பூர்வமானவையா என்பதும் தெரியவில்லை. இருந்தாலும் இப்படியொரு எண்ணம் அதிகார மட்டத்திலிருப்பவர்களுக்கு இருக்கிறதே என்பதுதான் பிரச்னை.
அண்மையில், இலங்கை அதிபருடன் அந்நாட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தியா வந்தபோது இங்கு சட்டத்தின் நிலைமை என்னவென்பது வெட்ட வெளிச்சமானது. அந்த அமைச்சர் இந்திய மண்ணில் நடந்த குற்றச் செயலுடன் தொடர்புடையவர். அவர் மீது வழக்கு நிலுவையில் இருப்பது மறைக்க முடியாத உண்மை.
இந்த விவகாரம் பற்றி ஊடகங்கள் முக்கியத்துவம் தந்து செய்தி வெளியிட்டபோதும், அந்த அமைச்சர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பேருக்குக் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவது போன்ற சம்பிரதாயம் கூட நடக்கவில்லை. மாறாகச் சகல மரியாதைகளும் அவருக்கு வழங்கப்பட்டன. அவ்வளவு ஏன், இந்திய உள்துறை அமைச்சரைக் கூட அவரால் எந்தப் பிரச்னையுமில்லாமல் சந்திக்க முடிந்தது. நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு நமது அதிகார வர்க்கமே களங்கம் ஏற்படுத்திய சமீபத்திய நிகழ்வு இது.
அந்தக் காலம் இருக்கட்டும், இப்போது அமெரிக்காவில் குற்றம் செய்த ஒருவர் மீண்டும் அந்த நாட்டுக்குள் நுழைந்துவிட முடியுமா? அல்லது அங்கு விருந்தினர் போன்ற உபசரிப்புத்தான் கிடைக்குமா? அதெல்லாம் இங்கு மட்டும்தான்.
நாம் விடுதலையடைந்து 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. இன்னமும் நாட்டை, சட்டத்தை மதிக்கும் நாடாக மாற்றும் அளவுக்கு நாம் பக்குவப்படவில்லை. சட்டம், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் இழுக்கும் இழுப்புக்கெல்லாம் தன்னை அலைபாய விடுகிறது. பல்லாயிரம் இந்தியக் குடிமக்களை ஒரே நாளில் மீளாத்துயரில் ஆழ்த்திய சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு நபர், அதிகார மையத்தில் இருக்கும் சிலரால் - அது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியா, அவரது குடும்பத்தாரா, நண்பர்களா, அமைச்சரவை சகாக்களா பாதுகாப்பாக இந்தியாவுக்கு வந்துவிட்டுப்போக, மனசாட்சியே இல்லாமல் அன்றைய அரசு அனுமதித்திருக்கிறதே, அதுவே மரண தண்டனைக்கு உள்படுத்த வேண்டிய குற்றமாகத் தெரியவில்லையா? இதற்குப் பெயர் சட்டத்தின் ஆட்சி என்று சொன்னால், கேட்பவர்கள் சிரிக்க மாட்டார்களா?
நாட்டின் உயர் அதிகாரத்தில் இருப்பவர்களே சட்டத்தை மீறும்போது, சாதாரண மக்கள் மட்டும் அதை மதிக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? பிறகு என்ன சட்டத்தின் ஆட்சி? "சட்டம் தன் கடமையைச் செய்யும்' என்று வசனம் பேசினால் மட்டும் ஆயிற்றா? ஆன்டர்சன்களைத் தப்பவிட்டவர் யார்? அந்த உண்மை தெரிந்தாக வேண்டும்...
(கட்டுரையாளர்: முன்னாள் அமைச்சரவைச் செயலர்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.