கண்ணில் குத்தும் தங்க ஊசி..!

வருங்காலத் தூண்கள், தேசத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள்'' }இவையெல்லாம்  மாணவர்களுக்கு நாம் சூட்டியும், போற்றியும் வருகிற புகழாரங்கள். ஆனால் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்கள், எரிநட்சத்திரங்களாக விழுகின
Updated on
2 min read

வருங்காலத் தூண்கள், தேசத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள்'' }இவையெல்லாம்  மாணவர்களுக்கு நாம் சூட்டியும், போற்றியும் வருகிற புகழாரங்கள்.

ஆனால் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்கள், எரிநட்சத்திரங்களாக விழுகின்றன. தேசத்தைத் தாங்கும் தூண்களாக விளங்க வேண்டிய மாணவர் சமுதாயம், துருப்பிடித்த சிந்தனையால் திசைமாறிப் போகிறதோ என அஞ்சும் வகையிலான நிகழ்வுகள் சமீபகாலமாக நடந்தேறி வருகின்றன.

திருட்டு, கொலை, கொள்ளைச் சம்பவங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்படுவது அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில், கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற குற்றச் சம்பவங்கள் தொடர்பாகக்  கைது செய்யப்பட்டவர்களில் 20 சதவிகிதத்துக்கும் மேலாக பள்ளி, கல்லூரி மாணவர்கள்  இருப்பதாக, ஒரு திடுக்கிடும் தகவலைக் காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மாணவப் பருவம் மகத்தானது. எதிர்கால வாழ்வுக்கு அடித்தளமாக அமையும் பருவம்  என்பதால், அடித்தளம் சரியில்லாத கட்டடம்போல வாழ்க்கை அமைந்துவிடக் கூடாது  என்பதாலேயே, மாணவப் பருவத்தினரை அரசியல் உள்ளிட்டவற்றில் ஈடுபடக் கூடாது என முன்னோர் வலியுறுத்தினர்.

ஆனால், சுதந்திரத்துக்குப் பிறகு மாணவர்களைத் தங்களது போராட்டத்தின் கேடயமாக அரசியல் கட்சியினர் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துவிட்டது.

சுதந்திரப் போராட்டத்தில்கூட ஈடுபடாத மாணவர்கள் ஹிந்தி எதிர்ப்பு, ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டங்களில் அதிகமாக ஈடுபடுத்தப்பட்டனர்.

உரிமைகளுக்காகப் போராடுகிறோம் எனக் கூறி உருவாக்கப்பட்ட மாணவர்அமைப்புகள், இப்போது அரசியல் கட்சியினரின் ஊதுகுழலாகவே மாறிவிட்டன.

அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு என்ற நிலையைத் தாண்டி, ஜாதிய அமைப்புகளின் கிளைகளாகவும், மாணவர் அமைப்புகளின் எல்லை இப்போது விரிவாகி உள்ளதைக் காண முடிகிறது.

மாணவர் அமைப்புகள் பல அரசியல் தலைவர்களை உருவாக்கின என வாதிடலாம்.  ஆனால், இந்த அமைப்புகளால் சிறந்த பேராசிரியர்களை, சிந்தனைமிக்க எழுத்தாளர்களை இழந்துவிட்டோம் என்கிற கருத்தையும் ஒதுக்கிவிட முடியாது.

கல்லூரிக் காலத்தில் எழுத்தாளர்களாக, பேச்சாளர்களாக சிறந்து விளங்கியவர்கள்  குறிப்பிட்ட கட்சியின் மாணவர் அமைப்பில் இடம்பெற்றதால், குறுகிய வட்டத்தில் அடைபட்டு விட்டனர்.

அவர்களது சிந்தனைமிக்க பேச்சும், எழுத்தும் அரசியல் கண்ணோட்டத்துடனே பார்க்கப்பட்டதால், அவர்களது அற்புதமான படைப்புகளும், அனைத்துத் தரப்பினராலும் அங்கீகரிக்கப்படாமலே போய்விட்டன.

இப்படியாக, தனிமனித திறமைகள்கூட மாணவர் அமைப்புகளால் திசைமாறிப் போன நிலையில், அவ்வமைப்பின் போராட்டங்களும் நன்மை ஏற்படுத்துவதற்குப்  பதிலாக அதிகமாக தீமையை விளைவிக்கும் பாதையிலே சென்றுவிட்டன.

கல்லூரிகளில் எழும் பிரச்னைகளுக்குக்கூட பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு என்ற நிலை மாறி, அரசியல்கட்சி ஆதரவுடன் வன்முறை, கல்லூரிக்குள் பொருள்களைச் சேதப்படுத்துதல், சாலை மறியல், பேருந்துகளைத் தீக்கிரையாக்குதல் என வன்முறைக் களங்களாக்கப்பட்டு விட்டன.

வன்முறையில் ஈடுபடும் மாணவர்களது பெற்றோர்களில் பெரும்பாலானோர் அரசியல் கட்சி பின்புலத்தில் இருப்பதால், தங்களது பிள்ளைகளின் தவறுகளை நியாயப்படுத்தும் நிலையிலே அவர்கள் இருப்பதையும் காண முடிகிறது.

மாணவர்களுக்குக் கல்லூரியில் ஓர் பிரச்னை எனில் ,பெற்றோர்தானே கவனித்து தீர்வுகாண முன்வர வேண்டும். ஆனால், பெற்றோரை மாணவர்கள் தங்களுக்கான பிரச்னைகளுக்கு தீர்வுகாண்பவர்களாகக் கருதுவதில்லையே ஏன்?

கல்வி நிறுவனங்களும் பிரச்னை என வந்ததும், சம்பந்தப்பட்ட மாணவர்களது பெற்றோருக்கு உரிய விளக்கம் தந்து அவர்களை உடனே வரவழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை.

ஆனால், அனைத்துக் கல்வி நிலையங்களிலும் பெற்றோர்}ஆசிரியர் சங்கங்களை அமைத்திருப்பதாக கூறுகின்றன. இந்த அமைப்புகள் கல்வி நிலையங்களுக்குக் கட்டணம் வசூலிப்பதற்கு பயன்படும் வகையிலே செயல்படுத்தப்படுகின்றன.

கல்வி நிலையங்களில் பொருள்களைச் சேதப்படுத்தும் மாணவர்கள், தங்களது வீடுகளில் பொருள்களைச் சேதப்படுத்தினால் அதைப் பெற்றோர் அனுமதிப்பார்களா?

 கல்வி நிலையங்களில் சேதமாகும் பொருள்களுக்கான கட்டணத்தையும் சம்பந்தப்பட்ட மாணவர்களிடமிருந்தே, கல்வி நிறுவனங்களால் வசூலிக்கப்படுகிறது என்பதையும் பெற்றோர் கவனத்தில் கொள்ளவேண்டும்.

குறிப்பிட்ட மாணவர் கும்பலே வன்முறையில் ஈடுபடுவதால், படிப்பில் சிறந்துவிளங்கும் பலரது கல்வியும் பாதிக்கப்படுகிறது என்பதையும் சம்பந்தப்பட்டோர் உணரவேண்டும்.

மாணவப் பருவம் தங்க ஊசியைப் போன்றது. அந்த ஊசிகள் நூல்கள் மூலம் தேசத்தின் வருங்காலம் வளமையாகும் வகையில் சிந்தனையை வடிவமைப்பாளர்களாக மாற வேண்டும். அதைவிடுத்து, தேசத்தின் கண்ணைக் குருடாக்கும் செயலில் ஈடுபடுவதை எப்படி ஏற்க முடியும்? ஆம்.. தங்க ஊசி என்பதால் கண்ணைக் குத்திக் கொள்ள முடியுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com