தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அண்மையில் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான காலியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் அனுப்பக் கோரியிருந்தது.
தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் விண்ணப்பங்கள் தட்டுப்பாடு காரணமாக அஞ்சலகங்களுக்கு நாள்தோறும் அலைந்தவர்கள் ஏராளம். அன்றாடப் பணிகள்கூட பாதிக்கப்படும் அளவுக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதிவரை அஞ்சலகங்கள் இளைஞர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
கடிதப் போக்குவரத்தும், மணியார்டர் அனுப்புவதும் குறைந்துபோனதால் எப்போதும் ஆள்அரவமற்றுக் காணப்படும் அஞ்சலகங்களுக்கு இதுபோன்ற நாள்கள் திருவிழா காலம்தான்.
சுமார் 2,500 காலியிடங்களுக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பித்தது ஆட்சியாளர்களையே திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது. கடந்த 1997-ம் ஆண்டு கிராம நிர்வாக அலுவலர் பதவிக்குத் தேர்வு நடந்தபோது விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சம். ஆனால், இப்போது இருமடங்கு ஆகியுள்ளது.
இவ்வளவு பேர் விண்ணப்பிக்க ஒரே காரணம் இந்தப் பணிக்கான குறைந்தபட்சக் கல்வித் தகுதி 10-ம் வகுப்பு என்பது மட்டுமல்ல. ஏனெனில் விண்ணப்பித்தவர்களின் பெரும்பான்மையினர் பட்டதாரிகள்.
தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை இதன்மூலம் நாம் கண்கூடாகப் பார்க்கலாம். மேலும், கிராமத்தினர் தங்களின் ஜாதி, இருப்பிடம், வருமானம், நிலம் உள்ளிட்டவை தொடர்பான சான்றிதழ்களின் தேவைகளுக்கு முதலில் செல்வது கிராம நிர்வாக அலுவலரிடம்தான்.
ஒரு மாவட்டத்துக்கு ஆட்சியர் செயல்படுவதுபோல ஓர் ஊராட்சிக்கு ஆட்சியராகச் செயல்படுபவர் கிராம நிர்வாக அலுவலர்தான்.
கல்வித் தகுதி 10-ம் வகுப்பு என்றாலும் வயது வரம்பு 21 முதல் 35 வரை என்று நிர்ணயித்திருந்தனர். அதிலும் 5 ஆண்டுகள் வேலை நியமனத் தடைச் சட்ட சலுகையைச் சேர்த்தால் பொதுப் பிரிவினர் தவிர, மற்ற பிரிவினருக்கு வயது வரம்பு 40 ஆகும்.
வேலை நியமனத் தடைச் சட்ட சலுகை, வரும் 2011 ஜூலையுடன் முடிவடைகிறது. எனவே 35 வயதை நெருங்கியவர்கள் மற்றும் இந்த வயதைக் கடந்தவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வை எழுதுவது என்பது இனிமேல் முடியாது.
ஆனால், பட்டதாரிகள் குரூப்-2, குரூப்-1 தேர்வு எழுத வயது வரம்பு இல்லை என்பது ஆறுதல் அளிக்கிறது. டிசம்பர் கடைசி அல்லது ஜனவரி முதல்வாரத்தில் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்வுகள் நடைபெறும் என்று அனைத்துத் தரப்பினராலும் நம்பப்படுகிறது.
ஆனால், விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அந்த எண்ணிக்கையை அப்படியே தங்களுக்குச் சாதகமான வாக்குகளாக மாற்றும் எண்ணத்தில், மே 2011-ல் நடைபெறும் சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தேர்வுகள் நடத்தப்படுமோ என்ற அச்சம் விண்ணப்பதாரர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஒருவேளை தேர்வுகள் முன்கூட்டியே நடந்தால்கூட தேர்தலுக்குப் பின்னர்தான் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் முன்னர் தமிழ் மொழி, இலக்கியம் தொடர்பாக சில கேள்விகள் மட்டும் இடம்பெற்றிருக்கும்.
ஆனால், இப்போது பொது அறிவுக் கேள்விகளைவிட தமிழ் மொழி, இலக்கியம், இலக்கணம் தொடர்பான கேள்விகள் அதிகம் இடம்பெறுவது தமிழ் ஆர்வலர்களை உள்ளபடியே மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.
போட்டித் தேர்வுகளுக்காக இப்போது தனியாக வகுப்புகள் நடத்தப்படுவது தமிழ் மொழிக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும்.
பொதுவாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளைப் பொறுத்தவரை விண்ணப்பம் அனுப்ப நிர்ணயிக்கப்பட்ட கடைசித் தேதியில் இருந்து 90 நாள்களுக்குள் தேர்வுகளை நடத்துவது நடைமுறை. இதுவரை இந்த நடைமுறையே கடைப்பிடிக்கப்பட்டு வந்ததாகவும் கூறுகின்றனர்.
இப்போதும் அந்த வகையில் தேர்வுகளை நடத்தி முடிக்கும் எண்ணத்தில்தான் தேர்வாணையத்தினர் இருந்தனர். ஆனால், இந்தத் தேர்வுக்கு இருக்கும் வரவேற்பை ஆளும் தரப்பு வாக்குகளாக மாற்ற நினைக்கிறதோ என்ற அச்சம் விண்ணப்பதாரர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஒருவேளை இந்தத் தேர்வு இந்த ஆண்டு டிசம்பர் அல்லது 2011 ஜனவரியில் நடந்தால்கூட தேர்வு முடிவுகள் சட்டப்பேரவைத் தேர்தல் (2011 மே) முடிவுகளுக்குப் பின்னர்தான் வெளியிடப்படும் என்று தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் தேர்வு முதலில் வருகிறதா? தேர்தல் முதலில் வருகிறதா என்று.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.