‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஜாதி வளையத்துக்குள் சரித்திரங்கள்

தேசத்துக்காக உழைத்தவர்களை, தன் ஜாதிக்குச் சொந்தக்காரர்கள் எனக் கூறி, அவர்களைக் குறிப்பிட்ட வட்டத்துக்குள் அடைத்துவரும் கொடும்செயல் அண்மைக்காலமாக அரங்கேறி வருகிறது.  தேச விடுதலைக்காகப் ப

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 4:55 pm

வை. இராமச்சந்திரன்

தேசத்துக்காக உழைத்தவர்களை, தன் ஜாதிக்குச் சொந்தக்காரர்கள் எனக் கூறி, அவர்களைக் குறிப்பிட்ட வட்டத்துக்குள் அடைத்துவரும் கொடும்செயல் அண்மைக்காலமாக அரங்கேறி வருகிறது.

 தேச விடுதலைக்காகப் போராடியபோதும், சுதந்திரம் அடைந்தபோதும் இல்லாத பிரிவினையை, இன்றைய அரசியல்வாதிகளும், இந்தியாவின் வருங்காலத் தூணாம் நம் இளைஞர் சமுதாயமும், தேசத்தலைவர்கள் மீது ஜாதி முலாம் பூசி, தங்களை அடையாளப்படுத்தும் நோக்கில் அந்தத் தலைவர்களுக்கு மிகப்பெரிய அவமரியாதையை ஏற்படுத்தி வருகின்றனர்.

 சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட வ.உ. சிதம்பரனார், பூலித்தேவன், அழகுமுத்துக்கோன், மருது சகோதரர்கள், ஒண்டிவீரன், முத்துராமலிங்கத்தேவர், வாஞ்சிநாதன், கட்டபொம்மன், ஊமைத்துரை, தியாகி விஸ்வநாததாஸ் உள்ளிட்ட சுதந்திரப் போராட்டத் தியாகிகள் எல்லாம், தாங்கள் போராடியபோது ஜாதி, மொழி, இன வேறுபாடுகளைக் கடந்து, தேச விடுதலை ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு போராடினர்.

 அப்படிப்பட்ட தேசத் தலைவர்கள் அனைவரையும் இன்றைய தலைமுறையினர் ஜாதி முலாம் பூசி, சுவரொட்டிகளிலும், டிஜிட்டல் பதாகைகளிலும் சாலையோரங்களில் அலங்கரிக்கின்றனர்.

 அம்பேத்கர், காமராஜ், அண்ணாதுரை ஆகியோர் மட்டுமல்ல, வெகுகாலமாக ஜாதி முலாம் பூசப்படாமல் இருந்த மகாத்மா காந்தியைக்கூட விட்டுவைக்கவில்லை. சிலப்பதிகார காப்பிய நாயகி கண்ணகியும், இந்துக் கடவுளான கிருஷ்ணனையும்கூட ஜாதி வளையத்துக்குள் சிக்க வைத்துவிட்டனர்.

 ஒருபுறம் சரித்திரத் தலைவர்கள்; மறுபுறம் சினிமா நடிகர்கள், உள்ளூர் தாதாக்கள் ஆகியோரின் படங்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும். இதைப் பார்த்தாலே நெஞ்சம் குமுறும்.

 அரசியல்வாதிகளே வாக்குவங்கியைக் கணக்கில் வைத்துக்கொண்டு இதை ஆதரிக்கும்போது என்ன செய்வது? "நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்' என்ற பாரதியின் கவிதைதான் நினைவுக்கு வருகிறது. இந்திய மானம் காக்கத்தான் வ.உ.சி. கப்பல் ஓட்டினார்; அவர் சார்ந்த ஜாதியினருக்காக அல்ல. வாஞ்சிநாதன் உயிர் நீத்தது தேசநலனுக்குத்தான், அவர் சார்ந்த ஜாதி நலனுக்கல்ல. மகாத்மா காந்தி ஹரிஜன் பத்திரிகை நடத்தியதுகூட அவர் சார்ந்த ஜாதிக்காரர்களுக்காக அல்ல, இந்தத் தேசத்தினருக்காகத்தான். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசியப் படைக்கு சிங்கப்பூருக்குப் படை திரட்டி அனுப்பியது அவர் சார்ந்த ஜாதியின் அரணைக் காப்பதற்கு அல்ல, இந்தத் தேச நலனுக்காகத்தான்.

 இதை இன்றைய அரசியல்வாதிகள், இளைஞர்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த சமுதாயமும் புரிந்து கொள்ள வேண்டும். தனக்காக வாழ்கிற சுயநலமிக்க நடிகர்களின் படங்கள், அடாவடி, கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடும் தாதாக்கள், இன்றைய அரசியல்வாதிகள் படங்கள் ஆகியவற்றோடு, இந்த தேசத்துக்காகப் போராடியவர்களை இணைத்து சுவரொட்டிகள் ஒட்டுவது, டிஜிட்டல் பதாகைகள் வைப்பது தவிர்க்கப்பட வேண்டும். தேவை ஏற்பட்டால் தேசநலனுக்காக உழைத்த, அனைத்துத் தலைவர்களையும், ஜாதி ரீதியாகச் சித்திரித்துப் பயன்படுத்துவதற்கு அரசு தடை விதிக்க வேண்டும்.

 ஜாதியத்தை விரிவுபடுத்த எண்ணும் தலைவர்கள், வருங்காலச் சந்ததியினருக்கு வழிகாட்டியாக இருங்கள். ஒரு காந்தியாகட்டும், வ.உ.சி ஆகட்டும், காமராஜ் ஆகட்டும், அவர்களைப்போன்று சுயநலம் இன்றி பொதுநலம் பேணக்கூடிய இளைஞர்களை இனம்கண்டு பெருந்தலைவர்களாக உருவாக்க முற்படுங்கள். இதுதான் அந்தத் தலைவர்களுக்கு நீங்கள் செய்யும் மரியாதை.

 இளைய சமுதாயமே...! வெள்ளைக்காரர்களுக்கே விலை போகாத நம் தேசத் தலைவர்களை, உள்ளூர் கொள்ளைக்காரர்களின் சுயநலத்துக்காகப் பலிகடா ஆகாதீர்கள். தேசநலனில்தான் நமது வீட்டு நலன் அடங்கியிருக்கிறது என்பதை உணருங்கள்.

 அரசியல்வாதிகளே...! வாக்குவங்கியை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு, ஜாதிவாரியாகத் தொகுதி ஒதுக்கீடு செய்தல், வாக்கு சேகரிக்கும்போது சுவரொட்டிகளில் தேசத் தலைவர்களை ஜாதிய தலைவர்களாகச் சித்திரிப்பது ஆகியவற்றைத் தவிருங்கள்.

 சிறப்பாகச் செயல்படும் ஐஏஎஸ் அதிகாரிகள், துணைவேந்தர்கள் மற்றும் நீதித்துறையினர் உள்பட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு ஏற்படும் சிற்சில பிரச்னைகளுக்குக்கூட ஜாதி முலாம் பூசாதீர்கள். சாதித்த தலைவர்களை எல்லாம் ஜாதீய தலைவர்களாக்காதீர்கள்.

 இதேநிலை நீடித்தால் வருங்கால இளைஞர் சமுதாயம் தேசநலன் என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாத அளவுக்கு, தங்களுக்கு வழிகாட்டியாக ஒரு தலைவரைக் காண முடியாத சூழல் நிச்சயம் உருவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.