கடந்து முடிந்த தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிகமாகப் பேசப்பட்ட விஷயங்களில் முதலிடம் பிடித்தது பணப் பட்டுவாடா.
ஜனநாயகத்தை விலைகொடுத்து வாங்கும் அரசியல்வாதிகளைக் கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையம், வாக்குகளை விலைபேசி விற்கத் துணிந்து அலைந்த மக்களைக் கண்டு அதிர்ந்து போய்விட்டது என்பதே உண்மை.
மதுரை நகர், புறநகர் எனப் பெரும்பாலான இடங்களில் செல்போன், வங்கிக் கணக்கு எண்களைக்கூட அரசியல் கட்சியினரிடம் கொடுத்து நூறு, இருநூறு என வாக்குக்குப் பணம் எதிர்பார்த்தவர்கள் ஏராளம்.
இரவில் திடீரென மின்சாரம் நின்றால் போதும். வாசலுக்கு யாராவது வந்து பணம் தரமாட்டார்களா என்று காத்திருந்தோர் பலர்.
யாராவது தெருவில் நோட்டுடன் புதிய ஆள் தென்பட்டால் போதும். பணம் கொடுக்க வந்த கட்சிக்காரரா என விசாரித்து அவரிடம் எங்களுக்கு இத்தனை வாக்குகள் உள்ளன என்று தாமாகவோ வலுக்கட்டாயமாகப் போய், விவரம் தெரிவித்தவர்கள் ஏராளம்.
கோயில் விழாக்கள், திருமணச் சடங்குகள், காதணி விழாக்கள், துக்க வீடுகள் என எங்கெங்கு மக்கள் கூடுவதற்கு வாய்ப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது என்பதே உண்மை.
மாவட்டத் தேர்தல் அதிகாரியும், போலீஸ் அதிகாரிகளும் நேர்மையுடன் செயல்பட்டுப் பணப் பட்டுவாடாவைத் தடுக்கச் சட்டரீதியான பல நடவடிக்கைகளை எடுத்தார்கள். ஆனால், எத்தனை அதிகாரிகள் அவர்களுக்கு ஒத்துழைத்தார்கள்? சே.. சும்மா கிடைக்கும் பணத்தையல்லவா கிடைக்காமல் தடுக்கிறார்கள்... எனச் சலித்துக் கொண்டவர்களே அதிகம். வாக்குக்காகப் பணத்தை எதிர்பார்த்தவர்கள், பசி பட்டினியால் வாடியவர்கள் அல்ல.
பசிக்கும் முன்பே சாப்பாடு, படுக்க நல்ல மெத்தை, இடம் விட்டு இடம் செல்ல ஏ.சி. வாகனம் என வசதி படைத்தவர்களும்தான்.
இப்படியாக, நூறு, இருநூறு எனக் கிடைத்ததுவரை லாபம் என வாக்குக்காகப் பணத்தை வாங்க முன்வந்தவர்கள் மத்தியில் உடுக்கச் சரியான உடையில்லாமலும், ஊர்போய்ச் சேரக்கூட ஓசி பயணம் மேற்கொள்ளும் கட்டாயத்திலும் இருக்கும் மக்கள் "வாக்கை விற்கமாட்டோம் 'என நேர்மையாகத் தங்களது வாக்கை இஷ்டப்பட்டவருக்கு அளித்துள்ளார்கள் என்றால் நம்ப முடிகிறதா?
நம்பித்தான் ஆக வேண்டும். ஆம்... இதுவே உண்மையும்கூட. உணவுக்காக ஊசிகளை விற்றும், உடலை மறைக்க வேண்டி, ஆடைகளுக்காகப் பாசிகளை விற்றும் தங்கள் வாழ்க்கையைக் கழித்துவரும் நரிக்குறவ மக்கள்தான் தேர்தலில் தங்கள் வாக்கு, விற்பனைக்கு அல்ல என்று அரசியல் கட்சியினரிடம் தைரியமாகக் கூறிப் பணம் வாங்க மறுத்துள்ளனர்.
மதுரை கருப்பாயூரணி போலீஸ் நிலைய எல்லைக்கு உள்பட்டது சக்கிமங்கலம். இந்தப் பகுதியில் சுமார் 500 நரிக்குறவ குடும்பங்கள் உள்ளன. பல ஆண்டுகளாக வாழ்ந்துவரும் இந்த மக்கள் அடிப்படை வசதிகூட இல்லாத நிலையிலேயே இருக்கிறார்கள்.
இங்கு வசிப்போரில் சுமார் 800 பேருக்கு மதுரை கிழக்குச் சட்டப்பேரவைத் தொகுதிக்குள் வாக்களிக்கும் வாய்ப்பு இருந்தது. இதைத் தெரிந்து கொண்ட ஆளும் கட்சி, எதிர்க்கட்சியினர் இவர்களை அணுகி எவ்வளவு வேண்டும் எனக் கேட்டுள்ளனர்.
எங்களுக்கு எதுவும் வேண்டாம். நாங்கள் பிழைப்புக்காக ஊசி, பாசி விற்போமே தவிர, எங்கள் உரிமையை ஒருபோதும் விற்கமாட்டோம் எனத் தெரிவித்துவிட்டனர்.
வாக்குக்குப் பணம் வாங்க மறுத்த அந்த நரிக்குறவ மக்களிடம் பேசியபோது, இப்போது இருநூறுக்கும், ஐநூறுக்கும் ஆசைப்பட்டால், அப்புறம் ஐந்தாண்டுகளுக்கு அவர்களிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது. வாக்குகளை விற்பதும் வாழ்க்கையை விற்பதும் ஒன்றுதான். ஊசி, பாசி விற்றால்கூட அதை நியாயமான விலைக்குத்தான் விற்போம். கூடுதல் விலை கொடுத்தாலோ, ஓசியில் பணம் கொடுக்க முன்வந்தாலோ வேண்டாம் என மறுத்துவிடுவோம் என்கின்றனர்.
நரிக்குறவ மக்களிடம் உங்களுக்குப் பிடித்த அரசியல் தலைவர் யார் எனக் கேட்டால்... சற்றும் தாமதிக்காமல் எங்களுக்குப் பிடித்த தலைவர் எம்.ஜி.ஆர். மட்டும்தான் என்கிறார்கள்.
வயதான பல நரிக்குறவர்கள் தங்கள் மார்பு, கைகளில் எம்.ஜி.ஆர். படத்தை பச்சை குத்தியிருப்பதையும் காண முடிகிறது. நவீன நாகரிகத்துக்கு ஏற்ப அவர்களது உடை மாறியிருந்த போதிலும், தோளில் தொங்கும் உடைந்த வானொலி, பறவைகளைக் குறிபார்த்து அடிக்கப் பயன்படும் கவட்டை என்ற கோலத்திலேயே பலரும் வசிக்கின்றனர்.
அந்த மக்களிடமிருந்து விடை பெற்றபோது, ""ஊசிமணி பாசி எல்லாம் விப்போமுங்க.. ஆனால், காசுக்காக மானத்தையே விக்கமாட்டோம்'' என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன.
சேற்றில் செந்தாமரை முளைப்பதுபோல, வாக்குகளைக் கூட வர்த்தக நோக்கில் விலைபேசத் துணிந்துவிட்ட சுயநலம்மிக்க மக்களுக்கு மத்தியில் செந்தாமரையாகவே அந்த நாடோடி மக்கள் காட்சியளிக்கிறார்கள். நம் தேசியமலர்கூட தாமரைதானே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.